Published:Updated:

``மிஸஸ் ஜானகி டீச்சருக்கு அந்தச் சம்பவம்தான் இன்ஸ்பிரேஷன்!'' - வைரல் வீடியோ அபிஷேக் குமார்

மிஸஸ் ஜானகி; அபிஷேக் குமார்
மிஸஸ் ஜானகி; அபிஷேக் குமார்

"சென்னையில் நிறைய ஸ்டாண்ட் அப் காமெடியன்ஸ் இருக்காங்க. ஆனா, வெளியில தெரிஞ்சது அலெக்ஸ், அரவிந்த், கார்த்திக் குமார் மாதிரி சில பேர்தான்." - `மிஸஸ் ஜானகி டீச்சர்' அபிஷேக் குமார்.

இணையத்தில் சமீபத்திய வைரல் மிஸஸ் ஜானகி. இவரின் குரலும் மாடுலேஷனும் இவரது வீடியோக்களைத் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிறது. இந்த மிஸஸ் ஜானகி கேரக்டரை உருவாக்கியவர், ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் குமார். மிஸஸ் ஜானகியைப் பற்றி தெரிந்துக்கொள்ள அபிஷேக் குமாரிடம் பேசினேன்.

உங்களுக்கு ஸ்டாண்டப் காமெடி மீது எப்போது ஆர்வம் வந்தது?

அபிஷேக் குமார்
அபிஷேக் குமார்

"வி.ஐ.டி காலேஜ்ல படிச்சிட்டு இருந்தப்போ எனக்கு டிராமால ரொம்ப ஆர்வம் இருந்தது. நாலு வருஷ படிப்புல மூணு வருஷம் எல்லா காலேஜ் கல்சுரல்ஸுக்கும் போயிருக்கேன். அதனால, காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறமும் என்னால டிராமாவைவிட முடியலை. படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சாலும், ஸ்கூல் பசங்களுக்கு டிராமா சொல்லிக் கொடுக்கிற ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். சரியா மூணு வருஷத்துக்கு முன்னாடி நான் வேலை பார்த்த கம்பெனியில் ஸ்டாண்ட் அப் காமெடி பண்றவரால ஷோ பண்ண முடியாத நிலைமை. ரெண்டு நாள் முன்னாடிதான் என்கிட்ட அந்த ஷோவைப் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. நானும் ஓகே சொல்லி, அதுவரைக்கும் என் வாழ்க்கையில் நடந்த காமெடிகளை எல்லாம் தொகுத்து ஒரு ஷோவா பண்ணேன். அந்த ஷோக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதுனால, டிராமாவை விட்டுட்டு தொடர்ந்து ஸ்டாண்ட் அப் காமெடியனா ஷோஸ் பண்ணிட்டு இருக்கேன். நடிப்பு மேல ஆர்வம் அதிகமா இருந்ததுனால, அதையும் விட்டுடக் கூடாதுனு சில விளம்பரங்களில் நடிச்சிட்டு இருக்கேன். விஜய் தேவரகொண்டா நடிச்ச விளம்பரத்தில் நடிச்சிருக்கேன்.

நீங்க எதிர்பாராத விதமா ஸ்டாண்ட் அப் காமெடிக்குள்ள வந்தாலும், உங்களோட அடுத்தடுத்த ஷோக்களை எப்படி கொண்டுபோனீங்க?

’’இதுவரைக்கும் நான் பண்ண எல்லா ஷோக்களுக்கும் என்னோட கான்செப்ட், ஃபேமிலி அட்ராசிட்டீஸ்தான். குடும்பத்தில் நடக்கிற காமெடிகளை வெச்சுத்தான் ஷோ பண்ணிட்டு இருக்கேன். ஃபேமிலி ஜோக்ஸ் கண்டிப்பா எல்லாருக்கும் கனெக்ட் ஆகிடும். ரொம்பவே என்ஜாய் பண்ணுவாங்க. முக்கியமான விஷயம், ஃபேமிலியோட ஷோ பார்க்க வருவாங்க. அதெல்லாம் பிளான் பண்ணித்தான் அந்த கான்செப்ட்டை எடுத்து ஷோ பண்ண ஆரம்பிச்சேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. குறிப்பா, நான் படிச்ச வி.ஐ.டி காலேஜ்லயே என்னை ஒரு ஷோ பண்றதுக்கு கூப்பிட்டாங்க. ஒரு நார்த் இண்டியன் ஸ்டாண்ட் அப் காமெடியன் பண்ணுன ஷோவுக்கு முன்னாடி, 15 நிமிஷம் ஓப்பனிங் மட்டும்தான் நான் கொடுத்தேன். அதை கேட்டுட்டு அந்த ஷோவைப் பார்க்க வந்த 2,000 பேரும் எழுந்திரிச்சு நின்னு கைதட்டுனாங்க. இது எனக்கு மிகப்பெரிய லைஃப் சேன்ஜிங் மொமென்ட்.’’

ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதா?

Abishek Kumar
Abishek Kumar

’’சென்னையில் நிறைய ஸ்டாண்ட் அப் காமெடியன்ஸ் இருக்காங்க. ஆனா, வெளியில தெரிஞ்சது அலெக்ஸ், அரவிந்த், கார்த்திக் குமார் மாதிரி சில பேர்தான். ஏன்னா, இவங்க மாதிரி சில பேரோட வீடியோஸ் வைரலா ஹிட்டானதுலதான் அவங்களோட பெயர்கள் எல்லாம் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை நேரில் பார்க்க வராதவங்களுக்கும் ரீச்சாச்சு. அந்த மேஜிக் மற்ற காமெடியன்களுக்கு இன்னும் நடக்கலை. இப்போ எனக்கு மிஸஸ் ஜானகி வீடியோ வைரலாகி இருக்கு. ஆனால், நான் மிஸஸ் ஜானகியைவிட காமெடியான கான்செப்ட்டில் நிறைய ஷோஸ் பண்ணியிருக்கேன். அதெல்லாம் ரெகுலரா ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ பார்க்கிறவங்களுக்குத் தெரியும். `இவன் ஏன்டா இன்னும் ஃபேமஸாகாம இருக்கான்’னு மக்கள் நினைக்கிற அளவுக்கு திறமையான காமெடியன்ஸ் ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணிட்டு இருக்காங்க. அவங்க பண்ற ஷோக்களுக்கு நல்ல வரவேற்பும் இருக்கு.’’

மிஸஸ் ஜானகி கேரக்டரை எப்படி உருவாக்குனீங்க?

"எங்க பேமிலில ஒரு பொண்ணு பத்தாவது பப்ளிக் எக்ஸாம் எழுதுறதுக்கு படிச்சிட்டு இருந்தாங்க. நான் அந்தப் பொண்ணுகிட்ட பப்ளிக் எக்ஸாம்னா எப்படி இருக்கும்னு எனக்கு இருந்த அனுபவத்தை எல்லாம் சொல்லி வெச்சிருந்தேன். திடீர்னு எக்ஸாம் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு, எல்லோரும் பாஸ்னு கவர்மென்ட் சொன்னதும், எனக்கு போன் பண்ணி ‘பப்ளிக் எக்ஸாம்ல பாஸ் ஆகுறது கஷ்டம்னு பயம் காட்டுனீங்களே. எப்படி பாஸானோம் பாத்தீங்களா’னு ஓவரா பேசுனாங்க. 90'ஸ் கிட்ஸுக்குத்தான் பப்ளிக் எக்ஸாமோட பயம் எப்படி இருக்கும்னு தெரியும். இவங்க இவ்வளவு ஈசியா தப்பிச்சிட்டாங்களேனு யோசிக்கும்போதுதான் அந்த ஐடியா வந்துச்சு. அவங்க பேசுன ஒரு அரை மணி நேரத்தில் மிஸஸ் ஜானகி கேரக்டரை உருவாக்கிட்டேன். நானே அந்த கேரக்டருக்கான குரல், முகம்னு செட் பண்ணி அந்த வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டேன். அது செம ஹிட்டும் ஆகிடுச்சு.''

நான் பண்ணுன வீடியோவை எனக்கே நிறைய பேர் வாட்ஸ்அப்ல அனுப்பி, `இது நல்லாயிருக்கு பாரேன்னு சொன்னாங்க. அப்போதான், இதை ஒரு சீரிஸா பண்ணலாம்னு ஐடியா வந்தது. முதல் வீடியோ பப்ளிக் எக்ஸாம் கேன்சல் ஆனதுக்கு போட்ட மாதிரி, அடுத்தடுத்த வீடியோக்களுக்கும் சூரிய கிரகணம், ஊர் பெயர்களை மாற்றியது, சீனாவோட ஆப்ஸை தடை பண்ணது, ஆன்லைன் க்ளாஸஸ்னு நல்ல நல்ல கான்செப்ட்கள் கிடைச்சது. அதெல்லாத்தையும் மிஸஸ் ஜானகியோட வாய்ஸில் வீடியோவா போட்டேன். நல்ல வரவேற்பும் கிடைச்சது.

குறிப்பா, சமீபத்தில் பண்ணின ஆன்லைன் க்ளாஸ் வீடியோவுக்கு செம ரீச். சின்னச் சின்ன குழந்தைங்க எல்லாரும் ஜானகி டீச்சர் பேசுன மாதிரியே அவங்களும் பேசி வீடியோக்கள் போட்டிருந்தாங்க. ஆனா, நான் பண்ண ஒரிஜினல் வீடியோவை பார்க்காமல் குழந்தைகளோட வீடியோக்களை முதலில் பார்த்தவங்க, ஜானகி கேரக்டரை அந்தக் குழந்தைகள்தான் கிரியேட் பண்ணியிருக்காங்கனு நினைச்சு ஷேர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது. அவங்களோட பெற்றோர்கள்தாம் இந்த வீடியோவை போடும்போது, அதோட ஒரிஜினல் கிரியேட்டரோட பெயரையும் மென்ஷன் பண்ணியிருக்கணும். அப்படி மென்ஷன் பண்ணாமல் போட்டதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இதையே என் வயசு பையன் பண்ணியிருந்தால், `அது என் கன்டென்ட்... ஏன்டா நீ வீடியோ பண்ணுன’னு கேட்கலாம். ஆனால், பண்றது எல்லாருமே குழந்தைங்க. அவங்ககிட்ட இதைக் கேட்கவும் முடியாது. இருந்தாலும், இது குழந்தைகள் வரைக்கும் ரீச்சானதில் எனக்கு சந்தோஷம்தான்.’’

இதைத் தொடர்ந்து பண்ணுவீங்களா?

’’நிச்சயமா தொடர்ந்து பண்ணிட்டுத்தான் இருப்பேன். இந்த லாக்டெளனில் அப்பப்போ கன்டென்ட் கிடைக்குது. அதெல்லாம் வெச்சு நல்லாவே காமெடியும் பண்ண முடியுது. அதனால, தொடர்ந்து மிஸஸ் ஜானகி வீடியோவை விடாமல் பண்ணிட்டு இருப்பேன். இனிமேல் பண்ணப் போற வீடியோக்களில் ஜானகியோட கணவர், பொண்ணு, ஜானகியோடு வேலை பார்க்கிற இன்னொரு டீச்சர்னு புது புது கேரக்டர்களையும் அறிமுகப்படுத்தலாம்னு ஐடியா பண்ணியிருக்கேன். அதுமட்டுமல்லாமல், இந்த லாக்டெளனில் ஆன்லைனிலும் ஷோ பண்ணிட்டு இருக்கேன். வீட்டில் இருந்தபடியே சில விளம்பரங்களிலும் நடிச்சிருக்கேன். என் ஷோவுக்கான ஸ்கிரிப்ட் வொர்க்கிலும் இருக்கேன்.’’

அடுத்த கட்டுரைக்கு