சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சாக்லேட் பாய்ஸுக்கு அட்வெஞ்சர் பாய்ஸின் சவால்!

சாக்லேட் பாய்ஸுக்கு அட்வெஞ்சர் பாய்ஸின் சவால்!
பிரீமியம் ஸ்டோரி
News
சாக்லேட் பாய்ஸுக்கு அட்வெஞ்சர் பாய்ஸின் சவால்!

எப்படியும் கி.பி.2040-லாவது முதல்வர் பதவி கிடைக்குமா என்று வலையோடு காத்திருக்கிறார்.

சாக்லேட் பாய், பிளேபாய், கௌபாய் என்று அமைச்சர் ஜெயக்குமாரும் உதயநிதியும் அடித்துப்பிடித்து ஐஸ்பால் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசியலில் சிலருக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என யோசித்தால், அகில உலக சூப்பர் ஹீரோக்களுக்கே சவால் விடுக்கிறது அவர்களின் சாதனைகள். அந்த சாதனைப் பட்டியல் இதோ...

அயர்ன் மேன் - எடப்பாடி பழனிசாமி

ஆடி போய் ஆவணி வந்தா ஆட்சி கவிழ்ந்திடும் என்கிற பொதுப்புத்தியைத் தன் புத்திசாலித்தனத்தால் தகர்த்தெறிந்த அயர்ன்மேன். என்ன ஒன்று, கட்சிக்காரர்களுடன் மல்லுக்கட்ட மட்டும்தான் தன் அறிவைச் செலவிடுகிறார். அந்த அயர்ன்மேன் சொல்வதைக் கேட்க ஒரு ஜார்விஸ் என்றால் இங்கே ஒரு கொங்கு அமைச்சரவை. ஸ்டாலின் என்றால் பறந்து பறந்தடிக்கும் அயர்ன்மேனுக்கு மத்திய அரசு என்றால் மட்டும் பியூஸ் போய்விடுகிறது. ரொம்பத் தப்புங்க!

சாக்லேட் பாய்ஸுக்கு அட்வெஞ்சர் பாய்ஸின் சவால்!

தோர் - ஸ்டாலின்

அறிக்கைப்போர் நடத்தும் அறிவாலய தோர். அப்பா நாட்டின் அரசர். அண்ணன்தான் வில்லன். அப்பாவிற்குப் பின் அரியணை ஏறப்போகும்போது சில தடைகள் என தளபதிக்காகவே எழுதிய கதை போல இருக்கிறது மார்வெல்லின் தோர். அவருக்கு ஆலோசனைகள் கொடுக்கும் நிக் ஃப்யூரியாக சமீபத்தில் சேர்ந்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

ஸ்பைடர்மேன் - அன்புமணி

கட்டடம் விட்டுக் கட்டடம் தாவுவார் ஸ்பைடர்மேன் என்றால் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி தாவுவார் இந்தச் சிலந்தி சின்னய்யா. எப்படியும் கி.பி.2040-லாவது முதல்வர் பதவி கிடைக்குமா என்று வலையோடு காத்திருக்கிறார்.

ஹல்க் - சீமான்

பச்சைத்தமிழனுக்குப் பச்சை ஹல்க்தானே பொருத்தம்? ஹல்க் பீரங்கிகளை அடித்து நொறுக்கினால், அண்ணன் கப்பல்களையே வெறும்வாயால் வெடிக்க வைக்கிறார். அங்கே சயின்டிஸ்ட் ப்ரூஸ் பேனர் விலங்குகளின்

டி.என்.ஏவை வைத்து ஆய்வு நடத்தினால், இங்கே அண்ணன் ‘ஆமை ஓட்டை வைத்து மிதவை செய்வது, இடியின் சூட்டில் இட்லி உப்புமா சமைப்பது, சேவல்கொண்டையை வைத்து சாட்டிலைட் ஆன்டெனா தயாரிப்பது’ என பேன்டஸியில் அடுத்த லெவல் தொடுகிறார். தன் செட் பிராப்பர்ட்டி முப்பாட்டனைக் ஒரு கூட்டம் களவாடப் பார்ப்பதால் ஆத்திரத்தில் திரிகிறார் அண்ணன் ஹல்க்.

ஆன்ட்மேன் - வாஸ்ப் - விஜயகாந்த் - பிரேமலதா

பரபரப்பாகத் திரியும் ஆன்ட்மேன் திடீரெனக் காணாமல்போய் பலகாலம் கழித்துத் திரும்ப வருவார். அதேபோலத்தான் சமீபத்தில் திரும்பி வந்திருக்கிறார் விஜயகாந்த். அந்த வாஸ்ப் சைஸ் மாற்றி வித்தை காட்டுவார். ஆனால் அண்ணியாரோ அத்தாத்தண்டி கட்சியையே சட்டெனக் கரைத்துக் காணாமலாக்கிவிட்டார்.

கேப்டன் போர்வெல் - குஷ்பு

மற்ற சூப்பர்ஹீரோக்களாவது எதிரணிக்குத்தான் குண்டு வைப்பார்கள். ஆனால் குஷ்புவோ சொந்தக் கட்சிக்கே குழிதோண்டி அது போர்வெல் அளவுக்கு ஆழமாகப்போய்விட்டது.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் - கமல்

உலக அரசியலிலேயே, ‘இவரு என்னா ரகம்னே தெரியலையே’ வகை அரசியல் செய்வது உலக நாயகன்தான். ‘நீங்க எந்தப்பக்கம் சார்?’ என்றால், ‘வலதென்பது இடதாகும் எதிரில் நிற்போர்க்கு... இடதென்பது இடராகும் வலியோர்க்கு, மையமென்பது மையலாகும் சான்றோர்க்கு... மக்...’ என முடிப்பதற்குள், கேட்டவர் ஸ்பேஸ்ஷிப் ஏறி செவ்வாய்க்கே ஓடிவிடுவார். மார்வெல்லில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சும் புரியாத கணக்குகளையே பேசித் திரிவதால் நம்மவருக்கு இந்த டாக்டர் பட்டம்.

நோட்டா பீம் - பா.ஜ.க முருகன்

அவரின் மொத்தக் கட்சியுமே தமிழ்நாட்டில் சோட்டா சைஸுக்குத்தான் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு ஆளாக இழுத்து எப்படியாவது நோட்டாவைவிட ஒரு ஓட்டாவது அதிகம் வாங்கிவிட வேண்டும் என்கிற லட்சியதாகத்துடன் இப்போது ‘பா.ஜ.க வேட்பாளரை ஜெயிக்கவைத்தால் மாவட்டச் செயலாளருக்கு இனோவா பரிசு’ என்று மயக்க பிஸ்கெட்டுடன் அலைகிறார். இனோவா போ மாதவா!