
டோலிவுட்
தென்னிந்திய சினிமாக்கள் அனைத்தும் சென்னையை மையமாகக்கொண்டு இயங்கிய காலத்தில் ஜெமினி, ஏவி.எம்., பிரசாத் உள்ளிட்ட ஸ்டூடியோக்களில்தான் படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் என ஒட்டுமொத்த சினிமாவும் இயங்கிவந்தது. காலப்போக்கில் ஸ்டூடியோக்களில் படப்பிடிப்பு செய்வதை நிறுத்திவிட்டு நிஜ இடங்களில் லைவாக எடுக்கத் தொடங்கினர். அதற்காகப் பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் செல்வது வழக்கமாகி, தொடர்ந்துவருகிறது. இந்தச் சூழலில், `அதிக பரப்பளவுள்ள ஸ்டூடியோ’ என கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது ஹைதராபாத்திலுள்ள `ராமோஜி பிலிம் சிட்டி.’ பல இந்திய சினிமாக்களின் படப்பிடிப்பு இங்கேதான் நடக்கிறது. அப்படி என்ன ஸ்பெஷல் என்றறிய ராமோஜி பிலிம் சிட்டிக்கு ஒரு விசிட் அடித்தோம்.
காடுகளைத் தாண்டி... கட்டடங்கள்!

இன்றைக்கு ஹைதராபாத்தின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இது, 2,000 ஏக்கர்களைக்கொண்டது. அதில் சில பகுதிகள் காடுகள் என்றாலும், மீதமுள்ள பகுதிகள் முழுக்கக் கொண்டாட்டத்துக்கானவை. ஹைதராபாத் சிட்டிக்குள் நுழைவதற்குச் சில கிலோமீட்டர்களுக்கு முன்னால் அமைந்திருக்கும் இந்த இடம், பிரமாண்டத்தின் உறைவிடம். இதன் நுழைவாயிலே அதை உணர்த்தும். அங்கு நின்று பார்த்தால், பல கிலோமீட்டர்கள் தாண்டி மலைகளுக்கு நடுவிலிருக்கும் `ராமோஜி பிலிம் சிட்டி' என்ற எழுத்துகள் நிச்சயம் நம்மை அங்கே நின்று ஒரு புகைப்படம் எடுக்கவைக்கும். கோலிவுட்டின் ஏவி.எம் உருண்டைபோல டோலிவுட்டின் அடையாளங்களில் அது முக்கியமானது. உள்ளே நுழைந்ததும், பல வித்தியாசமான பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதே இடத்தில்தான் டிக்கெட் கவுன்ட்டரும் இருக்கிறது. பெரியவர்களுக்கு ரூ.1,250; சிறியவர்களுக்கு ரூ.950. அங்கே தங்குவதாக இருந்தால் மட்டுமே நம் வாகனங்களுக்கு உள்ளே அனுமதி.




டிக்கெட் எடுத்துக்கொண்டு அந்தப் பேருந்தில் ஏறினால், ராமோஜி பிலிம் சிட்டி முழுக்க நமக்குச் சுற்றிக்காட்டி, ஒவ்வோர் இடத்திலும் நாம் செலவழிக்க நேரம் கொடுத்து, நம்மை அழைத்துவருகிறார்கள். ஆரம்பத்தில் சில கிலோமீட்டர்களுக்கு ஆட்கள், கட்டடங்கள் இல்லாத வனப்பகுதி. பல படங்களில் நாம் பார்த்த காட்டில் நடக்கும் காட்சிகள், இதற்குள் எடுக்கப்பட்டவைதான். அது முடிந்ததும் திடீரென்று கலர்ஃபுல்லாக வரவேற்கின்றன, ஆடம்பரக் கட்டடங்களும் அற்புதமான செட்டுகளும். அழகிய சாலை... நடுவில் மரங்கள்... சாலை ஓரங்களில் பூச்செடிகள் என சொர்க்கவாசல்போலிருக்கும் இந்த (Kerala Palm Street) இடத்தைப் பல படங்களில் காலேஜ் சாலைகளாக நாம் பார்த்திருப்போம். அதன் இடப்பக்கத்தில் சில வீடுகள் இருக்கின்றன. அவை ஃப்ளக்ஸிபிள் செட் ஹவுஸ் (Flexible Set House). இந்த வீட்டுக்கு மூன்று வித்தியாசமான வாசல்கள் இருப்பதால், இந்த ஒரு வீட்டை ஹீரோவின் வீடு, ஹீரோயின் வீடு, வில்லன் வீடு என மூவரின் வீடாகப் படத்தில் நமக்குக் காட்டுவார்கள். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்', பவன் கல்யாண் நடித்த `அந்தரண்டிகி தாரேதி' உள்ளிட்ட படங்களில் வரும் வீடுகள் இந்த வீடுதான்!
ஏர்போர்ட் மருத்துவமனை!
அதன் எதிரில் ஜப்பானியத் தோட்டம் இருக்கிறது. பாடல் காட்சிகளுக்காக ஜப்பான் போய் வீண் செலவு செய்யாமல், இந்த ஜப்பானியத் தோட்டத்திலேயே டூயட் பாடலாம். பார்ப்பதற்கு ஜப்பானிலுள்ள ஃபீல் கொடுக்கும். இதைச் சுற்றிவிட்டுக் கொஞ்ச தூரம் சென்றால், மொஹல் கார்டன் நம்மை அன்புடன் வரவேற்கிறது. வட இந்தியாவிலிருக்கும் முகலாயப் பேரரசர்களின் கோட்டையைப்போல மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் சின்ன தர்பார், சிறிய அறைகள், தோட்டம் என உண்மையான அரண்மனைக்கு வந்த உணர்வைக் கொடுக்கிறது. ஆங்காங்கே இருக்கும் செயற்கை நிரூற்றுகள் கண்ணைக் கவர்கின்றன. இந்தப் பசுமையான இடங்களைக் கடந்து விமான நிலையத்தை வந்தடைந்தோம். அச்சு அசலாக விமான நிலையத்தைப்போலவே இருக்கும் இந்த செட்தான் `ரா ஒன்' உட்பட பல படங்களில் பார்த்த ஏர்போர்ட். வெளித்தோற்றத்தில் அசந்த நமக்கு உள்ளே இருந்தது செம சர்ப்ரைஸ். கேன்டீன், போர்டிங் பாஸ் வைத்துக்கொண்டு நிற்க இடம், விமானத்துக்காகக் காத்திருக்க இடம், `ஸ்பைஸ் ஜெட்', `ஏர் இந்தியா' உள்ளிட்ட விமானப் பெயர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நிஜ ஏர்போர்ட்டுக்குள் நுழைந்ததுபோலவே இருந்தது. உள்ளே சென்றால், விமானம் நமக்காகக் காத்திருக்கிறது. அதனுள் நிஜ விமானத்தில் இருப்பது போன்ற இருக்கைகள், விமானியின் இடங்கள், ஜன்னல் என அசத்துகிறது. மக்கள் குடும்பத்தோடு விமானத்தில் ஏறி செல்ஃபிக்களைத் தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தனர்.

விமான நிலையத்தின் முன்புறம் நுழைந்து மருத்துவமனை வழியாக வெளியே வந்தோம். ஆம். அந்த செட்டின் முன் பகுதி ஏர்போர்ட் போன்றது; பின்பகுதி மருத்துவமனை போன்றது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு நடத்தலாம். ஏர்போர்ட்டிலிருந்து அடுத்த நிமிடம் மருத்துவமனைக்கு வந்தவுடன், `வேல்' படத்தில் சூர்யா பேசிய வசனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. அதிலிருந்து 300 மீட்டர் நடந்தால், ஃபாரினுக்கு வந்துவிடுகிறோம். லண்டன், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலுள்ள தெருக்களை அப்படியே செட் அமைத்திருக்கிறார்கள். அந்த ஊரில் இருப்பதுபோலக் கட்டடங்கள், தெருவிளக்குகள் என நம்மைச் சுற்றி இருப்பதால் ஃபாரின் ட்ரிப்பில் உள்ளதுபோல இருக்கிறது. வெளிநாட்டுக்குப் போக வேண்டும். ஆனால், விசா பிரச்னை, நடிகர்களின் கால்ஷீட் பிரச்னை என இருந்தால், இங்கேயே படப்பிடிப்பை நடத்தி, தயாரிப்பாளருக்கும் செலவை மிச்சப்படுத்திக் கொடுப்பதற்காகவே போடப்பட்டது. அந்தத் தெருவின் இறுதியில் தியேட்டரைப்போல ஒரு செட். பெரிய நடிகர்களை தியேட்டருக்கு அழைத்துச் சென்று படமாக்க முடியாது. காரணம், அவர்களைக் காணக் கூட்டம் அதிகமாகிவிடும். அதனால், தியேட்டர் வாசல் கொண்டாட்டங்கள், டிக்கெட் கவுன்ட்டர்கள், பாப்கார்ன் ஸ்டால் மாதிரியான சின்னச் சின்ன செட்டுகளை அமைத்துள்ளனர். கதைச் சூழலுக்கு ஏற்ப துணை நடிகர்களைவைத்துப் படமாக்கிவிடுகின்றனர்!
மத்திய சிறைச்சாலை
`மத்திய சிறைச்சாலை’ என்று போடப்பட்டிருக்கும் கதவு வழியே ஹீரோ, வில்லன் ஆகியோர் வெளியே வருவதை எண்ணற்ற சினிமாக்களில் பார்த்திருப்போம். அதனுள் சென்றால் உண்மைச் சிறையில் என்னவெல்லாம் இருக்குமோ அனைத்துமே இருக்கின்றன. சிறைகளுக்குள் குற்றவாளிகள் இருப்பதுபோல ஒவ்வோர் அறையிலும் ஒவ்வொரு குற்றவாளி இருப்பான். அந்தக் குற்றவாளி சிலை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அந்தச் சிறைகளை நாம் தாண்டும்போது, `நான் தவறு செய்யவில்லை. என்னை விட்டுவிடுங்கள்' எனக் கம்பியைப் பிடித்து ஆக்ரோஷமாக ஆட்டுகிறார்கள். அவர்களின் ஆக்ரோஷக் குரல்களைக் கேட்டுக் கொஞ்சம் மெர்சலாகிக் கடந்து போனால், ஒரு கைதி தூக்குத் தண்டனைக்குத் தயாராகிவிட்டான். அவன் பின் இன்னொரு தூக்குத் தண்டனைக் கைதி வரிசையில் நிற்கிறான். ஆங்காங்கே போலீஸ் இருக்கிறார்கள். கிணறு, முள்வேலி எனச் சிறையில் இருக்கும் இதர இடங்களும் `ஓ இதுதான் சென்ட்ரல் ஜெயிலா?' என்று நினைக்க வைக்கிறது.
ரயில் நிலையம்
தத்ரூபமான விமான நிலையத்தைப் பார்த்த நமக்கு, சாமர்த்தியமான கலை இயக்கத்தால் உருவான ரயில் நிலையம், `ஹாய்...’ சொல்கிறது. அசத்தலான ரயில் நிலைய வடிவமைப்பு, அங்கே இருக்கும் கடைகள், தடங்கள், மேம்பாலங்கள், ரயில் பெட்டிகள் எனக் கொஞ்சம்கூடப் பிசிரில்லாமல் இருக்கின்றன. கதைக்குத் தகுந்தாற்போல் அது எந்த ஊர் ரயில் நிலையம் என மாற்றிக்கொள்ளலாம். ரயிலின் இன்ஜினில் இருக்கும் உதிரி பாகங்கள், பட்டன்கள் எனச் சின்னச் சின்ன விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியுள்ளனர். `பாஸ்போர்ட் சைஸ் போட்டோதானே... அதனால பேன்ட்கூடப் போடாமல் உட்கார்ந்தேன்' என்ற காமெடி வசனத்துக்கு ஏற்ப இருந்தன ரயிலின் சக்கரங்கள். ரயில் நகர்வதற்காக லாரி டயர்களைப் பொருத்தியிருக்கிறார்கள். லாரி டயர் மூலமாக ரயில் நகர்வதைப் பார்க்கையில் நம்மையறியாமலேயே உதடு புன்னகைக்கிறது. `வீரம்', `சென்னை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட பல படங்களின் ரயில் நிலையக் காட்சிகள் இங்கேதான் படமாக்கப்பட்டிருக்கின்றன.
ரயில் நிலையத்திலிருந்து இறங்கியவுடன், `பாகவதம்' என்றொரு இடம் இருக்கிறது. அதில் கிருஷ்ணனின் எல்லா அவதாரங்களையும் அழகாக வடிவமைத்து அதுபற்றி விவரிக்கின்றனர். அதைக் கடந்து ஒரு பெரிய அறை வருகிறது. அங்கே கிருஷ்ணர் தன் அமைச்சர்களுடன் உரையாடுவதுபோல் ஒரு பிரமாண்ட செட் அமைத்துள்ளனர். அந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் தலையையும் வாயையும் அசைத்துப் பேசுவதுபோல் அவற்றை வடிவமைத்துள்ளனர். பின்னணியில் கிருஷ்ணரைப் பற்றிய வாய்ஸ் ஓவர், இசையுடன் வருகிறது. பயங்கர கலர்ஃபுல்லாக அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டில் இருக்கும்போது மன்னர் காலத்துக்குள் சென்று வந்த உணர்வு வருகிறது. பிரமாண்ட அரண்மனைத் தூண்கள், அதற்கேற்ற லைட்டிங் எனக் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது `பாகவதம்.' கிருஷ்ணருக்கும் அவரின் அமைச்சரவைக்கும், `டாட்டா’ சொல்லிவிட்டுக் கிளம்பினோம். அடுத்த சில நிமிடங்களில் வட இந்தியா வந்தடைந்தோம். ஆம்! வட இந்தியாவிலிருக்கும் தெருக்களை அப்படியே வடிவமைத்திருக்கிறார்கள். `விஸ்வாசம்' படத்தின் `அடிச்சுத் தூக்கு...' பாடலுக்கு அஜித் ஆடிய அசத்தல் நடனம் இந்தத் தெருக்களில்தான். அந்த மசூதியும் இங்கேதான் இருக்கிறது. இடைவெளி இல்லாமல் நெருக்கமாக இருக்கும் கட்டடங்கள், குறுகிய சாலை என இருக்கும் இந்த செட்டில் பல படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. கதைக்குத் தகுந்தாற்போல் இந்த செட்டை இன்னும் மெருகேற்றி, அதற்கு உயிர்கொடுத்து, நிஜ இடத்தைப்போலக் காட்டுவதுதான் கலை இயக்குநர்களின் சாமர்த்தியம். வட இந்தியா ஸ்டைலிலுள்ள கடைவீதியும் இருக்கிறது. அடகுக் கடை, எலெக்ட்ரானிக்ஸ் கடை, இறைச்சிக் கடை, ஸ்வீட் கடை எனக் கடைவீதிக் காட்சிகளுக்கும் இங்கே ஸ்டாக் உள்ளது.
பட்டாம்பூச்சி - பறவைகள் பூங்கா
வட இந்தியாவைச் சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம். ஒரு மலையின் உச்சியில் ஒரு பிரமாண்ட வீடு நமக்குக் காட்சியளித்தது. அது என்னவென்று விசாரித்தால், அது இந்த பிலிம் சிட்டியின் நிறுவனர் ராமோஜி ராவின் வீடு என்பது தெரியவந்தது. இவ்வளவு நேரம் அசலைப்போலவே இருக்கும் நகல்களைப் பார்த்தோம். கொஞ்ச நேரம் அழகான உயிர்களைச் சந்திக்கலாம் என்று பட்டாம்பூச்சிப் பூங்காவுக்குச் சென்றோம். பட்டாம்பூச்சிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த இடத்தில் பல வகையான பட்டாம்பூச்சிகள் சுற்றித் திரிகின்றன. அவை வெளியே பறந்துபோகாமல் உள்ளேயே இருக்க அவற்றுக்குத் தேவையான இடமும் சுதந்திரமும் கொடுத்துப் பராமரித்து வருகின்றனர். `எஜமான்' படத்தில் ரஜினி பட்டாம்பூச்சியைப் பிடிக்க முயல்வதைப்போல நாமும் நிறைய செய்திருப்போம். ஆனால், இங்கு சென்றால் அதன் நடவடிக்கைகளை அதனருகே நின்று ரசிக்க மட்டுமே தோன்றுகிறது. `இப்படியெல்லாம்கூட பட்டாம்பூச்சி இருக்குமா?' என்று யோசிக்கவைக்கும் அளவுக்குச் சில அரிய வகைகளும் அந்த இடத்தை அலங்கரித்தன. பட்டாம்பூச்சிகளுக்கு `பை’ சொல்லியபடி அருகே உள்ள பக்ஷிராஜனின் இடத்துக்குச் சென்றோம். `பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்' என்பதுபோல நிறைய வெளிநாட்டுப் பறவைகள் இருந்தன. ஹார்ன்பில், வாத்துகள், பஞ்சவர்ணக் கிளி வகைகள், கொண்டைவைத்த பிரமாண்ட புறாக்கள், பேரலகுப் பறவைகள் (தூக்கான்), காக்கட்டூக்கள், நெருப்புக்கோழி, மயில் போன்ற பறவைகள் எனப் பல வெளிநாட்டுப் பறவைகள் ஜோடி ஜோடிகளாக ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தன. அதையும் ஓர் இடத்தில் அடைத்து வைக்காமல் அதற்குத் தேவையான இடத்தையும் உணவையும் கொடுத்துப் பாதுகாத்து வருகின்றனர். அந்தப் பறவைகளுக்காகச் சில பக்ஷிராஜன்களை நியமித்திருக்கிறார்கள். அவற்றை ரசித்துக்கொண்டே இருந்தால் பல இடங்களுக்குப் போய்ப் பார்க்க முடியாது என்பதால், அந்தப் பறவைகளிடமிருந்து பிரியா விடை பெற்றோம். குளங்கள், புல்தரை மேடுகள், நீரூற்றுகள் என டூயட் ஆட ஏதுவான இடமும் இங்கே இருக்கிறது.
க்ரிப்பாலு குகை
தரைக்கு அடியிலிருக்கும் இந்தக் குகையின் வாசலும் உள்ளே நிலவும் இருட்டும் கொஞ்சம் `த்ரில்' சேர்த்தது. உள்ளே நுழைந்து பாதி தூரம் வரை சென்ற பிறகுதான் தெரிந்தது, இதுவும் செயற்கை குகை என்று. அந்தளவுக்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இந்த குகையின் சுவரில் பல புத்தர்கள் இருக்கிறார்கள். இருளாக இருக்கும் அந்த இடத்தில் நாம் நடக்க நடக்க ஒரு சிறிய வெளிச்சம் நமக்கு வழிகாட்டுகிறது. குகையின் பாதி தூரம் சென்றவுடன் ஓர் அச்சுறுத்தும் சத்தம் கேட்கிறது. என்னவென்று யூகிப்பதற்குள் அருகேயுள்ள நாக சிலை திடீரென்று தலையசைத்து நம்மை மெர்சலாக்குகிறது. `இருள்கொண்ட வானில் இவன் தீப ஒளி' என்பதுபோல் குகையின் இறுதியில் பெரிய புத்தர் சாந்தமாக அமர்ந்திருக்கிறார். உள்ளேயே புரொஜெக்டர் வைத்து, சுவரிலிருக்கும் சிலை எழுந்து நடனமாடுவது போன்ற வீடியோக்களும் போடப்படுகின்றன. குகையின் இருளைக் கடந்த நமக்கு அடுத்து காத்திருந்தது கலர்ஃபுல் விருந்து.
ராமோஜி மூவி மேஜிக்
இது ராமோஜி பிலிம் சிட்டியின் ஓர் அங்கம். இதில் ஒரு சினிமா எப்படி உருவாகிறது என்பதை மக்களுக்குக் காட்டுவார்கள். ஓர் அரங்கத்தில் 200 பேர் அமர்ந்திருக்கிறார்கள். மேடையில் மூன்று பைக் பொம்மைகள் கிரீன் மேட்டுடன் இருக்கின்றன. ஒருவர் அங்கே என்ன நடக்கவிருக்கிறது என்பதை அறிவிக்கிறார். அந்த அரங்கத்தில் கேமரா, லைட்டிங் எல்லாமே இருக்கின்றன. கூட்டத்திலிருந்து மூன்று பெண்களை அழைத்து ஹெல்மெட் எல்லாம் போடச்சொல்லி அந்த பைக் பொம்மைகளில் அமரச் சொல்லி `உங்களை சிலர் துரத்துறாங்க. வேகமாகப் போங்க' எனக் கூறுகிறார். இவர்களும் நின்றுகொண்டிருக்கும் பைக் பொம்மைகளில் அமர்ந்து ஓட்டுவதுபோல நடிக்கிறார்கள். பேக் கிரவுண்டில் இருக்கும் திரையில் அவர்கள் நெடுஞ்சாலையில் பைக்கில் செல்வதாகத் தெரிகிறது. சினிமாவில் எப்படி கிராஃபிக்ஸ் செய்கிறார்கள் என்பதைச் சொல்லிவிட்டு, அடுத்த அரங்கத்துக்கு அழைத்துச் செல்கிறார். இங்கே அந்தக் காட்சிக்காக சவுண்ட் எஃபெக்ட்டைக் கொடுக்க, சில பொருள்கள் வைத்திருந்தார். பைக் சத்தத்துக்கு மிக்ஸி சத்தம், சண்டைக் காட்சியில் குத்தும்போது சத்தம் வருவதற்காக பாக்ஸிங் கிளவுஸால் மண் பையைக் குத்துதல் போன்ற ஃபாலி மெட்டீரியல்கள் பற்றிச் சொன்னார். இன்னோர் அரங்கத்தில் பதிவான சத்தத்தை அந்தக் காட்சியோடு பொருத்தி, மொத்தக் காட்சியாக எப்படி வருகிறது என்பதைக் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து, அருகே உள்ள `பிலிமி துனியா'வுக்குச் சென்றோம். கார்ட்டூன்களில் வரும் காட்சிகளை செட்டுகளாகச் செய்து அதை லைட்டிங், சவுண்ட் மிக்ஸிங் எல்லாம் சேர்த்து அந்தக் கார்ட்டூனில் வாழும் கேரக்டர்களின் உலகத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள். இது முழுக்க குழந்தைகளுக்கானது. தவிர, ஏழு உலக அதிசயங்களை தெர்மாக்கோலில் பிரமாண்டமாகச் செய்துவைத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஸ்பேஸ் யாத்ராவில் விண்வெளிக்குச் சென்ற உணர்வைக் கொடுக்கிறார்கள். இந்த மினி உலகில் ஆங்காங்கே அந்தக் காலத்தில் பயன்படுத்திய கார்கள், சார்லி சாப்ளின், லாரல்-ஹார்டி சிலைகள், சாலைகளின் ஓரத்திலிருக்கும் டெலிபோன் பூத், கட்டடங்களுக்கு இவர்கள் பயன்படுத்திய பெயின்ட் நிறம் ஆகியவை நாம் வெளிநாட்டில் இருக்கும் உணர்வைக் கொடுக்கின்றன.
யுரேகா
இந்த இடத்தில் லைவ் ஷோக்கள், நீரில்லா விளையாட்டு இடங்கள், ரெஸ்டாரன்ட்டுகள், ஷாப்பிங் செய்யக் கடைகள் ஆகியவை இடம்பெறும். `Spirit Of Ramoji' என்ற ஷோவில் இந்தியாவின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் நடனக் கலைஞர்களால் நடன நிகழ்ச்சி நடத்தப்படும். `The Wild West Stunt Show' என்ற நிகழ்ச்சியில் ஹாலிவுட்டில் 1960களில் வெளியான கெளபாய் படங்களில் இடம்பெற்ற ஸ்டன்ட் காட்சிகளை லைவ்லியாகச் செய்வார்கள். இதிலுள்ள மீனா பஜாரில் முகலாய காலத்தில், 1960களில் வெளிநாடுகளில் பயன்படுத்திய வின்டேஜ் பொருள்கள் விற்கப்படுகின்றன. `வின்டேஜ்’ என்ற வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு உண்டு. அதனால் இந்த பஜாரில் எப்போதும் கூட்டம் நிரம்பிவழிகிறது.
ஃபந்துஸ்தான்
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான உலகம். அவர்களுக்கான ஃபன் ஜோனில் அவர்களை என்கேஜ் செய்து அசத்துகிறது `ஃபந்துஸ்தான்.’ ஜாலியாக மட்டுமல்லாமல் கொஞ்சம் த்ரில்லாகவும் ஃபேன்டஸியாகவும் இருப்பதால், குழந்தைகளை மிகவும் ஈர்க்கிறது. இதன் மற்றொரு பாகமான போரசுராவில் மேஜிக் பர்ஃபாமென்ஸுகள் நடக்கின்றன.
சாஹாஸ்
`அட்வெஞ்சர் விரும்பிகளின் கோட்டை இது’ என்றே சொல்லலாம். அட்வெஞ்சர் விளையாட்டுகள் நிறைந்த இந்த இடத்துக்கு ராமோஜி பிலிம் சிட்டியில் தனி மவுசு உண்டு. இதற்கான இடத்தை வெளிநாட்டிலிருந்து வந்து ஒருவர் வடிவைத்திருக்கிறார். எந்த அளவுக்கு த்ரில் இருக்குமோ, அதே அளவுக்குப் பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன. கரடுமுரடான மலைப் பகுதிகளில் ஓட்டக்கூடிய பைக் ரேஸ், உயரத்தில் கயிற்றில் தொங்கியபடி பயணித்தல், ஸ்பைடர் மேனைப்போல அந்தரத்தில் வலையைப் பிடித்துப் பயணித்தல், பங்கி ஜம்பிங், மவுன்டெயின் பைக்கிங், ரைஃபிள் ஷூட்டிங், வில்வித்தை, பெயின்ட்பால் துப்பாக்கிச் சூடு, பிரமாண்டமான பந்துக்குள் அமர்ந்து பயணித்தல் (ஜார்பிங்), சுமோ, டெலி பாக்ஸிங் எனப் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. குடும்பத்தோடு, நண்பர்களோடு வந்தால் அதற்கேற்றாற்போல் குழு விளையாட்டுகளும் உள்ளன. நம் பாதுகாப்புக்காக முறையான பயிற்சி பெற்ற நபர்கள் இருப்பார்கள்.
மகிழ்மதி சாம்ராஜ்யம்



`பாகுபலி' - இந்த ஒற்றை வார்த்தை சொன்னதும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது அந்த பிரமாண்டமான இடம்தான். மகிழ்மதி சாம்ராஜ்யத்துக்கு நாம் அனைவரும் ரசிகர்கள் ஆகியிருப்போம். `பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களில் வரும் அனைத்துக் காட்சிகளும் நம் மனதில் ஆழமாகப் பதிந்ததற்கு அந்த பிரமாண்ட செட் முக்கிய காரணம். சாபு சிரிலின் கலை இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த செட் இத்தனை வருடங்கள் கழித்தும் ராமோஜி பிலிம் சிட்டியில் பராமரிக்கப்பட்டுவருகிறது. வரலாற்றில் இடம்பெற்ற, `மகிழ்மதி சாம்ராஜ்ய’த்தைக் காண ஏராளமானோர் வருகின்றனர். பல்வாள்தேவனின் பட்டாபிஷேகத்தில் `மகிழ்மதியின் சேனைகளும் புரவிகளும் பேரரச வணக்கம்; உயர் படையும் யானைகளும் வழங்கிடும் கோ வணக்கம்’ என பாகுபலி படைத் தளபதியாக ஆயிரக்கணக்கான பேருக்கு நடுவில் நடந்துவரும் அந்த இடம் இன்று வெறிச்சோடி இருக்கிறது. பாகுபலி படைத்தளபதியாகப் பதவி ஏற்கும்போது `பாகுபலி வாழ்க; பாகுபலி வாழ்க' என ஆர்ப்பரிக்கும் அந்த இடம், இப்போது பேரமைதியாக இருக்கிறது. தேவசேனாவின் கைவிலங்கு, அரியணை, பல்வாள்தேவனின் சிலை, காளகேயர்களுடனான போரில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், பாகுபலி தேவசேனாவை மகிழ்மதிக்கு அழைத்துவரும் கப்பல், பாகுபலி கட்டப்பாவை, `மாமா...’ என்றழைக்கும் ஆலமரம்... என அனைத்தையும் பார்த்து பிரமித்து, அவற்றோடு செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர், சுற்றுலாப் பயணிகள். `பாகுபலி' செட்டில் நாமிருக்கும் ஒவ்வொரு மணித்துளியிலும் அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் நமக்குள் வந்துபோகிறது. டோலிவுட்டில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய `பாகுபலி' செட்டை வெளிநாட்டவர் உட்பட பலரும் ரசித்து அதனோடு செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். இன்னொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், அங்குள்ள கேன்டீனின் மெனு கார்டில் `மகேந்திர பாகுபலி ஸ்பிரிங் ரோல்’, `கட்டப்பா எக் பஃப்ஸ்’, `சிவகாமி ஃப்ரூட் கேக்’, `தேவசேனா பனீர் பஃப்ஸ்’, `அவந்திகா வெஜ் பஃப்ஸ்’ என அச்சிடப்பட்டிருந்தன. தற்போது இந்த இடத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஜெய் மகிழ்மதி!
இவை தவிர, ராமோஜி பிலிம் சிட்டியின் உள்ளே சாதாரண ஹோட்டல் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை பல வசதிகள் இருக்கின்றன. இங்கிருக்கும் இடங்களில் பல திருமணங்களும் நடக்கின்றன. உள்ளே வந்து மூன்று நாள்கள் தங்கி இவை அனைத்தையும் சுற்றிப்பார்த்துவிட்டுக் கிளம்புவதற்காக, சில பேக்கேஜ் ஆஃபர்களும் உள்ளன. சமீபமாக வெளியாகும் அஜித்தின் எல்லாப் படங்களும் ராமோஜி பிலிம் சிட்டியில்தான் நடக்கின்றன. ஆம்! அஜித்தின் இன்னொரு வீடு ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள சித்தாரா ஹோட்டலில், ஏழாவது மாடியில், ராயல் சூட் அறை எண் 715-ல் என்பது நமக்கு ஆச்சர்யமான தகவலாக இருந்தது! ராமோஜி பிலிம் சிட்டி தொடங்கி 20 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. இதில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என ஆயிரக்கணக்கான படங்களின் படப்பிடிப்பு இங்கே நடைபெற்றுள்ளது. இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த இடத்தில் 7,000-க்கும் மேற்பட்டவர்கள் வேலைசெய்கிறார்கள். படப்பிடிப்புத் தளம், குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல், பறவைகள் - பட்டாம்பூச்சிகள் பூங்கா, அட்வெஞ்சர் விளையாட்டுகள், வின்டேஜ் பொருள்களின் பஜார் எனப் பல சுவாரஸ்யமான அனுபவத்தைக் கொடுத்தது ராமோஜி பிலிம் சிட்டி. வழக்கமான கோவா பிளான் மாதிரி இல்லாமல் மூன்று நாள்கள் குடும்பத்தோடு ஹைதராபாத் ட்ரிப்புக்குத் திட்டமிட்டு இந்தக் கொண்டாட்டத்தை அனுபவித்துவிட்டு வாருங்கள்!