Published:Updated:

மணிரத்னம் போடும் `கே.பி' சுழி, அடுத்த ரஜினி, தாடியில்லா திருவள்ளுவர்... கே.பி. பிறந்தநாள் நிகழ்ச்சி ஹைலைட்ஸ்!

இயக்குநர் கே.பாலசந்தர்
இயக்குநர் கே.பாலசந்தர்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 89-வது பிறந்தநாள் விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. அந்த விழாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு இது.

தமிழ் சினிமாவில் நிறைய புதுமைகளைப் புகுத்தி சினிமா ரசிகர்களைத் தன்வசம் ஈர்த்தவர் இயக்குநர் கே.பாலசந்தர். அவரின் 89-வது பிறந்தநாள் விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. அந்த விழாவில் அவரின் குடும்பத்தினர், அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக இருக்கும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியும் இயக்குநர் வஸந்த்தும் தொகுத்து வழங்க, இனிதே தொடங்கியது பிறந்தநாள் விழா.

ராஜேஷ் வைத்யா
ராஜேஷ் வைத்யா

விழாவின் தொடக்கமாக வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்குநர் கே.பாலசந்தருக்கு மரியாதை செய்யும் விதமாக, அவர் இயக்கிய படங்களில் இடம்பெற்ற பாடல்களை நிமிடத்துக்கு ஒரு பாடல் வீதம் 30 நிமிடத்துக்கு 30 பாடல்களை வாசித்து அசத்தினார். அவரின் ஆரவாரமான இசை நிகழ்ச்சிக்குப் பிறகு, ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினர். இயக்குநர் சரண் பேசியபோது, "அவர்கிட்ட உதவி இயக்குநரா ஏழு வருடங்கள் இருந்தேன். அவர் நிழல் மாதிரி நாங்க நிறைய பேர் இருந்தோம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம், நாங்க அவருடன் இருப்போம். சினிமாவில் நிழல் நிஜமாகலாம். ஆனா, நிஜத்தில் எங்களைப் போன்ற நிழல்கள் யாரும் அவரைப்போல் நிஜமாக முடியாது. முதல் நாள் அவரைப் பார்க்கும்போது எவ்ளோ பயம் இருந்ததோ, அதே பயம் இப்போ அவர் படங்களைப் பார்க்கும்போதும் இருக்கு. அவர்கூட வேலை பார்த்தது எனக்குப் பெருமை" என்றார்.

புன்சிரிப்புடன் மேடை ஏறினார் ஆரவ். "இந்த நிகழ்ச்சியில நான் கலந்துக்கிறது எனக்கு சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. நான் ஸ்கூல் படிக்கும்போது அவருடைய படங்கள் நிறைய பார்த்திருக்கேன். அது மட்டுமல்லாமல், கமல் சார் கே.பி சாரைப் பற்றி நிறைய சொல்லியிருக்கார். ஜாம்பவானா இருக்கிறதே ரொம்பப் பெரிய விஷயம். ஆனா, அவர் பல ஜாம்பவான்களை உருவாக்கிட்டுப் போயிருக்கார். அவருடைய சிஷ்யரான சரண் சார் இயக்குற படத்துல நான் நடிக்கிறேன்னு ரொம்பப் பெருமையா இருக்கு" என்று விடைபெற்றார்.

கந்தசாமி, புஷ்பா கந்தசாமி, சுஹாசினி
கந்தசாமி, புஷ்பா கந்தசாமி, சுஹாசினி

நடிகர் பார்த்திபன் பேசியபோது, "கொஞ்சம் சினிமா, நாடகம், காதல், கவிதை, இசை, கோபம்... இவையெல்லாம் இருந்தால் உங்களுக்குள்ள கே.பாலசந்தர் இருக்கார்னு அர்த்தம். ஒரு பையன் கையில 5,000 ரூபாய் இருக்கு. அதுல அவன் அம்மா 2,000 கடன் கேட்டு மெசேஜ் அனுப்பியிருக்காங்க. அவன் நண்பன் 1,000 ரூபாய் கேட்டுருக்கான். இப்போ உன்கிட்டே எவ்ளோ இருக்கும்னு கேட்டா, 5,000 ரூபாயும் படிக்காத ரெண்டு மெசேஜும் இருக்கும்னு சொன்னானாம். அது மாதிரி, கே.பி சாரின் மறைவு எனக்குள்ளே இன்னும் படிக்காத மெசேஜைப்போலத்தான் இருக்கு. என் அப்பாவுடைய மறைவைக்கூட என்னால் தாங்கிக்க முடிஞ்சது. ஆனால், பாலசந்தர் சாருடைய மறைவைத் தாங்கிக்க முடியல. கே.பி - கமல்ஹாசன் காம்போ எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். இந்தக் கூட்டணியில் உருவான படங்களுடைய வசனங்களை மனப்பாடம் பண்ணிட்டுப் போய் சார் வீட்டு வாசல்ல நின்னுடுவேன். அவர் முன்னாடி இந்த வசனங்களைப் பேசி நடிச்சுக் காட்டிடணும்னு ஆசை. ஆனா, அவர் காரைப் பார்த்தாலே பயத்துல ஒளிஞ்சு நின்னுக்குவேன்.

'புதுக் கவிதை' படத்துல நான்கைந்து சீன்ல வர்ற மாதிரி ஒரு கேரக்டர் கிடைச்சது. நான் நடிச்சதைப் பார்த்துட்டு, 'யார் இந்தப் பையன், கண்ணு அழகா இருக்கு. நல்லா நடிக்கிறான்'னு சொன்னதா அவர்கூட இருந்தவங்க என்கிட்ட சொன்னாங்க. எனக்கு, 'சூப்பர், நாமதான் அடுத்த ரஜினிகாந்த்'னு நினைப்பு வந்திடுச்சு. படம் வெளியானப்போ நான் திருச்சியில இருந்தேன். நானும் தம்பியும் படம் பார்க்கப் போலாம்னு பிளான் பண்ணபோது, 'இந்தப் படத்துல முக்கியமான கேரக்டர்ல நான் வருவேன். நானும் உன்கூடப் படத்துக்கு வந்தா எல்லோரும் போட்டோ, ஆட்டோகிராப்னு வந்து நின்னிடுவாங்க. நீ பார்த்துட்டு வா. நான் சாயங்காலமா பார்க்கிறேன்'னு சொல்லிட்டேன். அவன் படம் பார்த்துட்டு வந்து, 'நான் பார்த்த மேட்னி ஷோவுல நீ வரல. ஒருவேளை சாயங்காலம் போடுற ஷோவுல இருக்கலாம்'னு சொல்லிட்டுப் போயிட்டான். நான் நடிச்சதெல்லாம் எடிட்ல போயிடுச்சு. சோர்ந்து போய் பாக்யராஜ் சார்கிட்ட சேர்ந்தேன். 'புதிய பாதை' படத்துக்கு தேசிய விருது அறிவிச்ச பிறகு, கே.பி சார்கிட்ட இருந்துதான் முதல் கடிதம் வந்தது. மனசுவிட்டுப் பாராட்டுறதுல இவரை மிஞ்ச ஆள் கிடையாது.

பார்த்திபன்
பார்த்திபன்

'குடைக்குள் மழை' படம் பார்த்துட்டு போன் பண்ணி உடனே பார்க்கணும்னு சொன்னார். 'ஷூட்டிங்ல இருக்கேன் சார். பிரேக்ல வரேன்'னு சொன்னேன். 'வந்தா எவ்ளோ நேரம் என்கூட இருப்ப'னு கேட்டார். அரை மணி நேரம்னு சொன்னேன். 'பத்தாது. நான் உன்கூட ரெண்டு மணி நேரம் பேசனும்'னு சொல்லிப் படத்தைப் பத்தி அவ்ளோ பேசினார். அவர் மகனுடைய மறைவுக்கு அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவருக்கு என்ன ஆறுதல் சொல்றதுனு தயக்கத்தோட அவர்கிட்ட போனேன். "'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் நல்லாயிருக்குனு எல்லோரும் சொன்னாங்க. நான் இன்னும் பார்க்கல, பார்த்துட்டு சொல்றேன்"னு சொன்னார். தான் பையன் இறந்து அவர் உடம்பு கண்முன்னே இருக்கு. ஆனா, அவர் படத்தைப் பற்றிப் பேசுறார். அவருக்குள்ளே சினிமா எப்படி ஊறியிருந்தா, இப்படிப் பேசியிருப்பார்னு தோணுச்சு" என்றவர்,

"இன்னும் என் மேற்கில் மறையா சூரியன்

உறையா என் நினைவுகளாய் என் உயிரோடு ஒட்டியிருக்கும் உயரிய முத்திரை!

சிறப்பாய் ஒரு நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் நான்...

வேரை வணங்கும் விழுது!" - என்ற கவிதையோடு முடித்தார். மேலும், பாலசந்தரை தாடி வைக்காத திருவள்ளுவர் என்று புகழ்ந்தார்.

சுஹாசினி பேசினார். "ரொம்ப சந்தோஷமா இருக்கு. கே.பி சாரைப் பற்றிப் பேச ஆரம்பிச்சா, மணிக்கணக்கா பேசலாம். நான் பார்த்த முதல் ஷூட்டிங் 'மூன்று முடிச்சு'தான். கமல் - ஶ்ரீதேவி துணி துவைக்கிற சீனை எங்க வீட்டுலதான் எடுத்தாங்க. அவர் கண்ல பட்டுடமாட்டோமானு ஏங்கிட்டு இருப்பேன். ஒருநாள் அவர் கண்ல பட்டேன். அப்போ 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' கமிட்டாகி இருந்தேன். 'இங்கே வா. நடிக்கணும்னு ஆசை வந்தா என்கிட்ட சொல்லமாட்டியா, அவ்ளோ திமிரா'னு கேட்டார். 'இல்லை. உங்க படத்துல...'னு இழுத்தேன். 'நடிக்கணும்னு தோணுச்சுனா வந்திட வேண்டியதுதானே... போ'னு சொல்லிட்டார். 'அக்னி சாட்சி' படம் பார்த்துட்டு ரொம்ப ரசிச்சு உருகி ஒரு கடிதம் எழுதினேன். 'yours truly'கூட தப்பில்லாம எழுதத் தெரியாதான்னு கேட்டார். 'சிந்து பைரவி' கதையைக் கேட்டவுடனே சந்தோஷம் கலந்த வருத்தமா இருந்தது. ஏன்னா, கல்யாணமானவரோட காதலியா நடிக்கணும். அந்தப் படத்துல எனக்குத் தெரியாமலே என்னை சூப்பரா நடிக்க வெச்சார். ஒரு ஜீனியஸ் நம்மளை இயக்குறது ரொம்ப சுகமான அனுபவம்.

சுஹாசினி
சுஹாசினி

'சிந்து பைரவி'தான் என் முதல் பாலசந்தர் படம்னு நினைப்பீங்க. ஆனா, 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் கன்னட வெர்ஷன்தான் கே.பி சார் இயக்கத்துல நான் நடிச்ச முதல் படம். ஏழு நாள்தான் அவர் இயக்கினார். அவருக்கு சிறுநீரகக் கல் பிரச்னை இருந்தது. அதனால, வேறொரு இயக்குநர் இயக்கினார். நானும் மணியும் ஒரு படத்துக்கு சீன் எழுதலாம்னு உட்காருவோம். அவர் ஆரம்பிக்கும்போதே 'இது பாலசந்தர் வசனம் மாதிரி எழுதணும். இந்த ஹீரோ கமல் மாதிரி நடிக்கணும்'னு சொல்வார். எல்லோரும் பிள்ளையார் சுழி போடுவாங்க. ஆனா, மணி கே.பி சுழி, கமல் சுழி போட்டுத்தான் ஆரம்பிப்பார். நானும் மணியும் கல்யாணம் பண்ணதே அவராலதான். அதுக்கு அவருக்கு ரொம்ப நன்றி. ஒவ்வொரு ஹீரோக்கள்மேல அவருக்கு அதீத காதல் இருக்கும். ரொமான்ஸ், சோஷியலிசம், முற்போக்குப் பார்வைனு அசத்திடுவார்" என்று கே.பாலசந்தர் இயக்கிய ஒவ்வொரு படங்களைப் பற்றியும் சிலாகித்துப் பேசி விடைபெற்றார் சுஹாசினி.

இறுதியில் பேசிய கே.பாலசந்தரின் மருமகன் கந்தசாமி, "கவிதாலயா நிறுவனத்தில் யூடியூப் சேனலை அறிமுகம் செய்ய உள்ளோம். முதற்கட்டமாக 'மர்மதேசம்' தொடரை யூடியூபில் ரிலீஸ் செய்திருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றைய தலைமுறையினர் பழைய விஷயங்களை ரசிக்கின்றனர். அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, காமெடி ஷோ ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். கவிதாலயா யூடியூப் சேனலில் இயக்குநர் சரண் இயக்கத்தில் '76 கட்ஸ்' என்ற ஷோவைத் தயாரிக்க உள்ளோம். இது சாருடைய 'மன்மதலீலை' படத்தை மையப்படுத்தி இருக்கும்.

கவிதாலயா யூ டியூப் அறிமுகம்
கவிதாலயா யூ டியூப் அறிமுகம்

இன்னொரு ஷோவை இயக்குநர் பிரியா இயக்குகிறார். அரசியல் சார்ந்த விஷயங்கள் நிறைந்த ஷோவை 'மான்கள் ஜாக்கிரதை' என்ற பெயரில் பிரவீன் ரகுநாத் இயக்குகிறார். விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'Yours Shamefully 3' ஆந்தாலஜி குறும்படம் தயாராக இருக்கிறது. இவை அனைத்தும் கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக இருக்கின்றன. தவிர, கவிதாலயா யூடியூப் சேனலில் கே.பாலசந்தர் சாரின் தொடர்கள், படங்கள் ஆகியவற்றைப் பார்க்க வழிவகை செய்யவும் இருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு