Election bannerElection banner
Published:Updated:

``தாய் தன் குழந்தையை கண்டிப்பது தவறா?!'' - `க்யூட்டீஸ்' சர்ச்சையும் நெட்ஃப்ளிக்ஸ் மன்னிப்பும்!

க்யூட்டீஸ்
க்யூட்டீஸ்

ஆண்டாண்டு காலமாக, திரைப்படங்கள் வயது வித்தியாசமின்றி மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. உடை ரசனையில் தொடங்கி, காதலுக்கான வரையறை வரை திரைப்படங்கள்தான் சமூகத்துக்கு நிறையப் பாடம்(?!) எடுத்திருக்கின்றன.

சினிமா மீதான மக்களின் விருப்பமும், மக்களின் வாழ்வியல் மீதான சினிமாவின் தாக்கமும் நூறாண்டுகள் கடந்தும் கொஞ்சமும் குறையவில்லை. ஒளித்திரையில் நகரும் படங்களின் மாயத்தில் மனிதனின் மயக்கம் தொடர்கிறது. மௌனப் படங்கள், கறுப்பு வெள்ளைப் படங்கள் எனப் பயணித்து தற்போது OTT வரை பல மாற்றங்கள் கண்டிருக்கிறது சினிமா.

cinema
cinema

அதனால்தான் திரைப்படங்களுக்கான ஆதரவோ, விமர்சனமோ, எதிர்ப்போ எப்போதும் சக்திவாய்ந்தவையாக இருக்கின்றன. இதற்கான சமீபத்திய உதாரணம்தான் 'க்யூட்டீஸ்'. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்திற்கான விளம்பரம் பெரும் எதிர்ப்பைப் பெற்றிருக்கிறது. இந்த 'க்யூட்டீஸ்' (மிக்நோநைஸ்) எனும் பிரெஞ்சு திரைப்படம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கிறது. அதற்கான விளம்பரமாக அந்த தளத்தில் ஒரு ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த படத்தின் விளம்பரத்திற்காக நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்திய புகைப்படமும் (Thumbnail), விளக்கக் குறிப்பும் (description) மிகவும் தவறாக, தரம் குறைந்ததாக இருப்பதாக எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கதைப்படி, ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டைச் சேர்ந்த 11 வயதான இஸ்லாமிய சிறுமி ஏமி, தன் குடும்பத்தினருடன் பிரான்ஸ் நாட்டிற்குக் குடிபெயர்கிறார். ஏமி மிகவும் கலாசாரக் கட்டுப்பாடுடைய குடும்பத்தைச் சார்ந்தவர். அவருக்குப் பிரெஞ்சு நாட்டில் உள்ள ஒரு சிறுமிகள் நடனக் குழுவில் இணைய ஆசை. அது 'ட்வர்க்கிங்' எனும் கவர்ச்சியான ஒருவகை நடனம். ஒரு பதின்பருவ சிறுமி தன்னுடைய பாலினப் பண்புகளை உணரத் தொடங்கி, அதன் மீதான சந்தேகங்களோடு வாழ்க்கையை அணுகுவதே படம். சிறுமிகளுக்கு இன்றைய நவீன ஊடக உலகம் கற்றுத்தரும் விஷயங்கள் அவர்களின் குழந்தைத்தனத்தை வேகமாக மறக்கடித்துவிடுகிறது என்ற நுட்பமான விஷயங்களை இந்தப் படம் கையாண்டிருக்கிறது.

க்யூட்டீஸ் (மிக்நோநைஸ்)
க்யூட்டீஸ் (மிக்நோநைஸ்)

மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மிக லாகவமாகக் கையாண்டு, நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருப்பதாக இந்த படம் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக 'சன்டேன்ஸ் திரைப்பட விழாவில்' நடுவர்களின் சிறப்பு விருதையும் பெற்றது. அப்படியிருக்கையில் ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

அதற்குக் காரணம் நெட்ஃப்ளிக்ஸ்தான். படத்தின் விளம்பரத்திற்காகச் சிறுமிகள் மிகச் சிறிய உடையில் கவர்ச்சியான நடனம் ஆடுவது போன்ற புகைப்படத்தைப் பயன்படுத்திவிட்டது. இந்தப் படம் எதை எதிர்ப்பதாகச் சொல்கிறதோ, அதை வைத்தே இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டதாகப் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக அவலச் சூழலில், இம்மாதிரியான காட்சியமைப்பும், படமும் சிறுவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை ஊக்கப்படுத்துவது போல அமைந்துள்ளது என்பதே எதிர்ப்புகளுக்கான காரணம்.

நெட்ஃப்ளிக்ஸ்
நெட்ஃப்ளிக்ஸ்

ஆண்டாண்டு காலமாக, திரைப்படங்கள் வயது வித்தியாசமின்றி மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. உடை ரசனையில் தொடங்கி, காதலுக்கான வரையறை வரை திரைப்படங்கள்தான் சமூகத்துக்கு நிறையப் பாடம்(?!) எடுத்திருக்கின்றன. இந்நிலையில், திரைப்படங்கள் ஒரு தவறான விஷயத்தைப் பெரிதுபடுத்திக் காட்டினால், அதற்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வருவது சாதாரணமே. அது சரியும் கூட.

அப்படித்தான், Change.org எனும் இணையதளத்தில், 'க்யூட்டீஸ்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற மனுவில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் கையொப்பமிட்டனர். இதனைத் தொடர்ந்து நெட்அந்தத்ளிக்ஸ் அந்தப் புகைப்படத்தையும், விளக்கக் குறிப்பையும் நீக்கி மன்னிப்பு வெளியிட்டிருக்கிறது.

``ரஞ்சித்தின் `மெட்ராஸ்', வெற்றிமாறனின் `வடசென்னை', என் சென்னை!'' - நெகிழும் சமுத்திரக்கனி

ஆனால், இந்த எதிர்ப்புகள் குறித்து மற்றுமொரு விமர்சனமும் வைக்கப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்திய ஒரு புகைப்படத்தை எதிர்ப்பது வரை சரியே. ஆனால் அந்த திரைப்படம் என்ன, அது சொல்லும் கருத்து என்ன என்பதை அறியாமல் பலர் எதிர்க்கின்றனர். திரைப்படத்தைப் பார்க்காமல் அப்படத்தையே தடை செய்யவேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் சரியல்ல என்பதே மற்றோரு தரப்பினரின் கருத்து. ஒரு கலைஞன் தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தத் தடைசெய்வதன் மூலம், படைப்பு சுதந்திரத்தை அது கேள்விக்குறியாக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இதுமட்டுமல்ல, உண்மையில் விளம்பரங்கள் தொடங்கி, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் இம்மாதிரியான பிழையுடன் கூடிய காட்சி அமைப்புகள், வசனங்கள், சித்திரிப்புகள் இருக்கின்றன. இப்படி ஒரு திரைப்படத்திற்கான எதிர்ப்பு கூட, அந்தத் திரைப்படத்திற்கான விளம்பரமாகிப்போகும் சூழல் இது. உண்மையில், இந்த எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்தத் திரைப்படத்தைப் பார்ப்போர் எண்ணிக்கை அதிகரிக்கவே கூடும்.

TV
TV

சிறுவர்கள் இருப்பதால் இது சிறுவர்களுக்கான படமல்ல, சிறுவர்களை மையப்படுத்திய பெரியவர்களுக்கான படம் எனவும் கருத்துகள் வெளியாகின்றன. திரையரங்குகளிலாவது பேரன்ட்டைல் கைடன்ஸ், அலட்ஸ் ஒன்லி எனக் குழந்தைகளுக்கான வயது தடை உண்டு. ஆனால், வீட்டிற்குள் அமர்ந்து பார்க்கும் தொலைக்காட்சி ஓடிடி தளங்களில் நம் வீட்டுக் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என நாம்தான் சற்று கவனமுடன் இருந்து அவர்கள் சரியானப் படங்களைத்தான் பார்க்கிறார்களா என்பதை உறுதிசெய்யவேண்டும்.

படத்தின் டிரெய்லர் வீடியோவின் கமென்ட்டுகளில், "ஒரு தாய் தன் குழந்தையைக் கண்டிப்பது தவறா" எனக் கோபமாகக் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. உண்மையில் மொத்த படத்தையும் பார்த்தால் மட்டுமே இந்தப் படம் எதிர்க்கப்பட வேண்டியதா அல்லது ஆதரிக்கப்படவேண்டியதா என்கிற முடிவை எடுக்கமுடியும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு