சிலர் தங்கள் வாழ்வில் சில பழக்க வழக்கங்களைத் தொடர்ச்சியாக வைத்திருப்பார்கள். உலகமே இடிந்தாலும் அந்த பழக்கத்தை மாற்ற மாட்டேன் என இருப்பார்கள். இத்தகைய பழக்க வழக்கங்கள் அரச குடும்பத்திற்கும் விதிவிலக்கல்ல. இளவரசர் சார்லஸ் எப்போதும் தன்னுடன் ஒரு பெட்டியை வைத்திருப்பார். இந்த பெட்டியை எந்த நாட்டுக்குச் சென்றாலும் கொண்டு செல்வார் என கூறுகின்றனர்.

அப்படி என்ன இருக்கும் அந்த பெட்டியில் என வியக்கிறீர்களா. அது காலை உணவுக்கான சிற்றுண்டி இருக்கும் பெட்டி. இதில் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகள் இருக்குமாம்.
அந்த உணவு அடங்கிய பெட்டியை குறித்து முன்னாள் அரச ஊழிய சமையல் காரர், கிரஹாம் நியூபோல்டு கூறுகையில் ``இளவரசர் சார்லஸுக்கு ஆரோக்கியத்தின் மீது விருப்பம் உண்டு. அவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரட், கிண்ணம் நிறைய ஃபரஷ் பழங்கள் மற்றும் ஃபரஷ் பழச்சாறுகள், ஆறு வகையான தேன், மியூஸ்லி என அழைக்கப்படும் பாரம்பர்ய ஓட்மீல் உணவு, உலர் பழங்கள் ஆகியவற்றை அதில் வைத்திருப்பார்'' எனத் தெரிவித்துள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் இளவரசர் சார்லஸ் சில விஷயங்களை விநோதமாக பின்பற்றி வந்துள்ளார். இது குறித்து முன்னாள் சமையல் காரரான டேரன் மெக்ராடி கூறுகையில், ``இரண்டு பிளம்ஸ் மற்றும் கொஞ்சம் பழச்சாறு கிண்ணத்தில் வைத்து அவருக்குக் காலை உணவுக்கு அனுப்ப எனக்கு அறிவுறுத்தப்பட்டது. தினமும் நான் இரண்டு பிளம்ஸ்களை அவருக்கு அனுப்புவேன். அவர் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வார். மீதம் அனுப்பப்படும் பிளம்ஸை ஜாடியில் வைத்து விடுவேன். ஒருநாள் அவர் ஒன்றை மட்டும்தானே உண்கிறார் என ஒரு பிளம்ஸை மட்டும் வைத்து அனுப்பினேன். ஆனால் பணியாளர் வந்து இளவரசருக்கு இரண்டு பிளம்ஸை தர முடியுமா எனக் கேட்டார். அதன் பிறகு நான் இரண்டு பிளம்ஸ்களையே வைத்து அனுப்புவேன்'' என கூறியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களை எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து கடைப்பிடிக்கிறார் இளவரசர் சார்லஸ். உதாரணத்துக்குப் பயணம் செய்கையில் ஷூ லேஸ் அயர்ன் செய்யப்பட்டிருப்பதோடு, டாய்லெட் பேப்பரையும் கொண்டு செல்வாராம். குளியல் பிளக் ஒரு குறிப்பிட்ட நிலையில் தான் வைக்கப்பட்டிருக்க வேண்டுமாம். நீரானது மிதமான வெப்பநிலையைக் கொண்டிருக்க வேண்டுமாம். இன்னும் சொல்லப்போனால் தினமும் காலையில் தன்னுடைய டூத்ப்ரஷில், ஒரு இன்ச் பேஸ்டை போடக் கூட ஒரு பணியாளை வைத்திருந்தார் என 2015 - ஆம் ஆண்டில் வெளியான டாக்குமெண்டரி (Serving the Royals: Inside the Firm) படத்தில் காட்டப்பட்டுள்ளது.