இயக்குநர் ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' (RRR) திரைப்படத்தில் இடம்பெற்ற `நாட்டு நாட்டு' பாடல் உயரிய விருதாகக் கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருதினை வென்றது.
அதே சமயம், வரும் மார்ச் மாதம் நடைபெறும் 95-வது ஆஸ்கர் விருதுகள் போட்டியில், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் குஜராத்தித் திரைப்படமான 'Chhello Show' (The Last Film Show) அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது. இதில் 'RRR' திரைப்படம் தேர்வாகாமல் போனதால் அந்தப் படத்தை, தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் உட்படப் பல்வேறு சர்வதேச விருது நிகழ்வுகளில் இடம்பெறச் செய்யத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் ராஜமொளலி.
இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமெளலி ஹாலிவுட்டில் படம் எடுப்பது குறித்தும் `ஆர்.ஆர்.ஆர்' இந்தியாவின் அதிகாரபூர்வ பரிந்துரையாக ஆஸ்கருக்குத் தேர்வாகாமல் போனது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், "ஹாலிவுட்டில் திரைப்படம் எடுப்பதுதான் பலரின் கனவு. ஹாலிவுட்டில் படம் எடுக்க யாருக்குத்தான் ஆசையில்லை, எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் முயற்சி செய்து பார்ப்பேன்" என்று கூறினார். மேலும் `ஆர்.ஆர்.ஆர்' ஆஸ்கருக்குத் தேர்வாகாமல் போனது குறித்துப் பேசிய அவர், "இந்தியா சார்பில் `ஆர்.ஆர்.ஆர்' ஆஸ்கருக்குத் தேர்வாகாமல் போனது எனக்குப் பெரிய ஏமாற்றம்தான். ஆனால் அது பற்றிக் கவலைப்பட்டுச் சோர்ந்து உட்காருபவர்கள் அல்ல நாங்கள். நடந்தது நடந்துவிட்டது, முன்னோக்கிச் செல்வதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

இருப்பினும், சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் குஜராத்தித் திரைப்படமான 'Chhello Show' (The Last Film Show) அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சிதான். அதேசமயம் ஆஸ்கருக்குத் தேர்வாக `ஆர்.ஆர்.ஆர்' படத்துக்கும் தகுதிகள் இருந்தன. இங்கு அமெரிக்காவில் கூட பலர் இதைத்தான் கூறினார்கள். ஆனால் 'பிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா' எவ்வாறு செயல்படுகிறது, எதன் அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அது பற்றி நம்மால் கேள்வி கேட்க முடியாது" என்றார்.