தென் கொரிய இயக்குநர் கிம் கி-டுக் காலமானார்... கொரோனா கொண்டு சென்ற மற்றுமொரு சமகால சகாப்தம்!

சமகால படைப்பாளிகளில் மிக முக்கியமானவரான கிம் கி-டுக்-கின் மறைவு உலக சினிமா ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தென் கொரிய இயக்குநர் கிம் கி-டுக் கொரோனா தொற்றினால் காலமானார். கொரிய ஊடகங்கள் மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி 59 வயதான கிம் கி-டுக் லாத்வியா நாட்டின் தலைநகரான ரிகாவில் இன்று அதிகாலை 1.20 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
லாத்வியா நாட்டைச் சேர்ந்த ஊடகங்கள் மற்றும் தென் கொரியாவிலுள்ள லாத்வியா தூதரகம் கிம் கி-டுக்கின் இறப்பை உறுதி செய்துள்ளன. அவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கிம் கி-டுக், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர் தென் கொரியாவை விட்டு வெளியேறி லாத்வியாவுக்கு கடந்த மாதம் (நவம்பர் 20) வந்ததாகவும், அங்கேயே குடியுரிமைப் பெறவும், சொந்தமாக ஒரு வீட்டை வாங்கவும் விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. ஆனால், அதன்பின் அவரைக் காணாது தேடி அலைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கிம் கி-டுக்கை அந்த நாட்டிலுள்ள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டங்களால் கண்டுபிடிப்பது சிக்கலாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
1996-ல் 'க்ரோக்கடைல்' (Crocodile) படம் மூலம் திரையுலகில் தடம் பதித்த கிம் கி-டுக், 2000-ம் ஆண்டு வெளியான 'தி ஐல்' (The Isle) படம் மூலம் சர்வதேச கவனம் பெற்றார். 'ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், வின்டர் அண்டு ஸ்ப்ரிங்' (Spring, Summer, Fall, Winter... and Spring), 'சமரிட்டன் கேர்ள்' (Samaritan Girl), '3-அயர்ன்' (3-Iron), 'Pietà', உள்ளிட்ட படங்கள் அவரின் படைப்புகளில் முக்கியமானவை. கடைசியாக அவர் எடுத்த ரஷ்யப் படமான 'டிசால்வ்' (Dissolve) சென்ற வருடம் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
தென் கொரியா, ஆசியாவைத் தாண்டி பல ரசிகர்களை உலகளவில் சம்பாதித்து வைத்த இயக்குநர் கிம் கி-டுக். மிகவும் வித்தியாசமான கதை களங்களுடன் கூடிய கலைப் படைப்புகள், அதில் தனித்துவமான கதை சொல்லும் யுக்தி போன்றவற்றால் பரவலாகக் கொண்டாடப்பட்ட ஆளுமையான கிம், இயக்குநராக மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் எனப் பல பணிகளைச் செய்துள்ளார்.
ஐரோப்பாவின் மூன்று முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களான வெனீஸ், பெர்லின் மற்றும் கான்ஸ் திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்ற ஓரே தென் கொரிய இயக்குநர் கிம் கி-டுக்தான்!
கடந்த 2017-ம் ஆண்டு, '#MeToo' முன்னெடுப்பு உலகம் முழுவதும் பரவலாக இருந்த வேளையில், அவரின் 'மொபியஸ்' (Moebius) படத்தில் பணியாற்றிய பெயர் வெளியிட விரும்பாத நடிகை ஒருவர் கிம் மீது புகார் அளித்தார். தன் விருப்பத்தை மீறி, ஒப்பந்தத்தை மீறி நெருக்கமான காட்சிகளில் நடிக்கவைக்க வற்புறுத்தி தன் மேல் அவர் வன்முறையைக் கையாண்டதாக புகார் வாசிக்கப்பட்டது.

அதற்கு அடுத்த வருடம் மேலும் மூன்று பெண்கள் கிம் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் அளித்தனர். வழக்குப் பதியப்பட்டதில் முதல் புகாருக்கு கிம் அபாராதத் தொகையை கட்ட நேரிட்டது. ஆனால், அவர் மேல் சுமத்தப்பட்ட பாலியல் புகார் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தப் புகார்கள் தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி எனக் கூறி கிம் மானநஷ்ட வழக்குப் பதிந்தார். ஆனால், அதில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது.
சமகால படைப்பாளிகளில் மிக முக்கியமானவரான கிம் கி-டுக்-கின் மறைவு உலக சினிமா ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.