Published:Updated:

Cannes Film Festival: ஹிட்லர், முசோலினி ஆதிக்கத்துக்கு எதிராக பிரான்ஸின் திரைப்பட விழா உருவான கதை!

கான் திரைப்பட விருது விழா (Cannes Film Festival)
கான் திரைப்பட விருது விழா (Cannes Film Festival) ( AP )

ஹிட்லர், முசோலினிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட கான் திரைப்பட விருது விழா (Cannes Film Festival), இரண்டாம் உலகப் போரால் தடைப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. அதன் வரலாறு இதோ...

சர்வதேச திரையுலகம் ஆவலோடு காத்திருக்கும் ஒரு புகழ்பெற்ற திரைப்பட விழா பிரான்சில் நடைபெறும் கான் திரைப்பட விழா (Cannes Film Festival). கடந்த ஆண்டு பெருந்தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த விழா தற்போது உலக நாடுகளில் பெருந்தொற்றின் தாக்கம் மங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஜூலை 6-ம் தேதி முதல் தொடங்கியிருக்கும் 74-வது கான் திரைப்பட விழா வரும் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கான் திரைப்பட விழாவில் படைப்பாளிகளின் படங்கள் திரையிடப்பட்டால் அது அவர்களின் திரையுலக வாழ்க்கையின் ஒரு சாதனை மைல்கல்லாகவே கருதப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த கான் திரைப்பட விழாவில் திரையிட சுமார் 2000 படங்கள் அனுப்பப்படுகின்றன. திரைப்படங்கள் மட்டுமல்ல கான் திருவிழாவில் குறும்படங்களும் திரையிடப்படும். ஒவ்வொரு வருடமும் திரையுலகைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இந்த கான் திருவிழாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நடுவர் குழு தேர்ந்தெடுக்கப்படுகிறது. சந்தேகத்துக்கு இடமின்றி சர்வதேச திரைப்படத் துறை கலைஞர்கள் நடுவர்கள் குழுவில் இடம் பெறுவர்.

கான் திரைப்பட விருது விழா (Cannes Film Festival)
கான் திரைப்பட விருது விழா (Cannes Film Festival)
Vianney Le Caer | AP

கான் திரைப்பட விழாவின் வரலாறு

இந்தச் சர்வதேச திரைப்பட விழாபிரான்ஸின் அழகிய கடற்கரை நகரமான கானில் (Cannes) நடைபெறுவதாலேயே இது கான் திரைப்பட விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஒரு கவர்ச்சிகரமான நிகழ்வாக இருந்தாலும் இது உலகின் இருபெரும் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் கொள்கைக்கும் எதிராகத் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.

தற்போது கான் திரைப்பட விழா புகழ்பெற்ற ஒன்றாக இருந்தாலும், இந்த விழா தொடங்குவதற்கு முன்பே அதாவது 1932-ம் ஆண்டில் இத்தாலியின் வெனிஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா ஒன்று நடைபெற்றது. அப்போதைய காலகட்டத்தில் புகழ்பெற்ற ஒரே சர்வதேச திரைப்பட விழாவாக இது இருந்தாலும் ஒரு சில வருடங்களில், அதாவது 1938-ம் ஆண்டின் வாக்கில் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா நாசிய, ஃபாசிச கொள்கையின் பிரசார களமாகப் பயன்படுத்தப்பட்டது.

இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினியும், ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரும் எந்தப் படங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எதற்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதில் ஆதிக்கம் செலுத்தினர் அல்லது அவர்கள் குறித்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன் உச்சகட்டமாக போருக்கு எதிரான பிரஞ்சு திரைப்படமான ‘லா கிராண்டே இல்லூஷன்’ (‘La Grande illusion’) நடுவர்கள் பலரின் விருப்பமான படமாக இருந்தாலும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ஒலிம்பியா என்ற திரைப்படத்திற்கும், இத்தாலியப் படமான 'Luciano Serra, Pilot' என்ற திரைப்படத்திற்கும் வெனிஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான ’கோப்பா முசோலினி’ விருது வழங்கப்பட்டது.

ஒலிம்பியா திரைப்படம் 1938-ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்ஸில் நாஜிகளின் வெற்றியை சொல்லும் திரைப்படம். Luciano Serra, Pilot என்ற திரைப்படம் முசோலினியின் மகனின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம்.

இதனால் கோபமடைந்த பிரான்ஸ், வெனிஸ் திரைப்பட விழாவிற்கு மாற்றாக ஒரு சர்வதேச திரைப்பட விழாவை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்ததது. பிரான்ஸை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பிரிட்டன், அமெரிக்காவைச் சேர்ந்த நடுவர் குழு உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெனிஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவிலிருந்து விலகிக் கொண்டனர். அதே வருடத்தில் அரசியல் சார்பற்ற ஒரு சர்வதேச திரைப்பட விழாவை பிரான்ஸில் நடத்த வேண்டும் என பிரான்ஸின் திரையுலகை சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர். அதற்கான முன்மொழிவுகளை பிரான்ஸ் அரசிடம் வழங்கினர்.

கான் திரைப்பட விருது விழா (Cannes Film Festival)
கான் திரைப்பட விருது விழா (Cannes Film Festival)
AP

அந்த முயற்சியின் விளைவாக பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு 1939-ம் ஆண்டு வெளியானது.

அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆகஸ்டு மாதம் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வரத் தொடங்கினர். ஆனால்ம் நிகழ்ச்சி துவங்கப்பட இருந்த செப்டம்பர் 1-ம் தேதி ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் போலாந்தின் மீது படை எடுத்தார். இயக்குநர் வில்லியம் டையட்டர்லேவின் ’தி ஹன்ச் பேக் ஆஃப் நோட்டெர் டாம்’ (The Hunchback of Notre Dame) என்ற ஒரே ஒரு படம் மட்டுமே திரையிடப்பட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஓரிரு நாள்களில் பிரான்ஸும் பிரிட்டனும் சேர்ந்து ஜெர்மனியின் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது.

இரண்டாம் உலகப் போரும் தடைப்பட்ட திரைப்பட விழாவும்!

1939 – 1945-ம் ஆண்டு என ஆறுவருட காலம் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு மீண்டும் கான் திரைப்பட விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் விழா தொடங்கப்பட்ட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டாலும் அதன்பிறகு விழாவை நடத்த பணம் இன்றி 1948 மற்றும் 1950ஆம் ஆண்டுக்கான கான்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால், அதன்பின்னர் கிட்டதட்ட 70 ஆண்டுகளாக சினிமா உலகின் முக்கிய திரைப்பட விழாவாகக் கோலோச்சி வருகிறது. நாளடைவில் இந்த விழா முக்கியத்துவம் பெறவே இதற்கான தேதி செப்டம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதமாக மாற்றப்பட்டது. இந்த விழாவின் உயரிய விருதான ’கோல்டன் பாம்’ (Golden Palm) விருது 1955-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவின் சிறந்த திரைப்படத்திற்கு இந்த விருது வழங்கப்படும்.

கான்ஸின் சிவப்பு கம்பளம்

கான்ஸ் திரைப்பட விழாவின் ஓர் அங்கமான அதன் சிவப்பு கம்பளம் என்பது ஒரு கவர்ச்சிகரமான நிகழ்வுகளின் அணிவகுப்பு. நடிகர்கள் சிவப்பு கம்பளத்தில் அணியும் ஆடைகளைக் கவனிக்க உலகம் முழுக்க பல ரசிகர்கள் காத்து கிடப்பர்.
கான் திரைப்பட விருது விழா (Cannes Film Festival)
கான் திரைப்பட விருது விழா (Cannes Film Festival)
Vianney Le Caer | AP

ஆனால், ஏதோ ஒரு டிசைனர் ஆடையை அணிந்து கொண்டு வந்து இந்த சிவப்பு கம்பளத்தில் நடிகர்கள் நடந்துவிட முடியாது. இதற்கு ஆண்கள், பெண்களுக்கென வெவ்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை படம் பிடிக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் ’டிரஸ் கோட்’ என்பது உண்டு.

பெண்கள் நீண்ட ஆடைகளுடன் ஹீல்ஸ் அணிந்திருக்க வேண்டும், ஆண்கள் சூட் மற்றும் டை அணிந்திருக்க வேண்டும். புகைப்பட கலைஞர்கள் கறுப்பு உடையில் இருக்க வேண்டும். விதிமுறைகள் என்று இருந்தால் அதை மீறுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். இந்தச் சிவப்பு கம்பளமும் அதற்கு விதிவிலக்கல்ல. முதன்முதலில் இந்தச் சிவப்பு கம்பளத்திற்கான விதிமுறை 1953-ம் ஆண்டே மீறப்பட்டது. அதுவும் புகழ்பெற்ற ஓவியர் பிகாசோவால். ஆண்களுக்கென குறிப்பிடப்பட்ட டக்செடோ (Tuxedo) சூட்டைத் தவிர்த்துவிட்டு கம்பளி ஜாக்கெட் ஒன்றை அணிந்து வந்தார் அவர்.

அதே போல பெண்கள் ஹீல்ஸ் அணிய வேண்டும் என்ற விதியை எதிர்த்து சமீபமாக பல குரல்கள் எழுந்தாலும் 2016-ம் ஆண்டு நடிகை ஜூலியா ரோபட்ஸ், 2018-ம் ஆண்டு நடிகை கிறிஸ்டன் ஸ்டூவார்ட் போன்ற நடிகைகள் வெறும் கால்களில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தனர். இதன் மூலம் நிகழ்ச்சியில் பெண்கள் கட்டாயம் ஹீல்ஸ் அணிய வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிராக அவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அடுத்த கட்டுரைக்கு