சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“ஒன்மோர் ஷாட் தனுஷுக்குப் பிடிக்காது!”

வேல்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
வேல்ராஜ்

கேமராவுடைய நிழல் நடிகர்கள் மேல படுறது ஒரு கேமராமேனுக்குத் தெரியாமல் போயிடுமா என்ன? ஆனந்த விகடன் விமர்சனத்துல அதெல்லாம் குறிப்பிட்டிருந்தீங்க.

வேல்ராஜ்... கிராமத்துப் படங்களில் மண்வாசனையைத் தூக்கலாகவும் நகரத்துப் படங்களில் வண்ணங்களைத் தூக்கலாகவும் காட்டி தனக்கான தனித்துவத்தை நிறுவிய ஒளிப்பதிவாளர். இயக்குநராகவும் ‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் அடையாளம் காட்டியவரிடம் பேசினேன்.

``ஒளிப்பதிவாளர் திருவிடம் பணிபுரிந்த கதை?’’

“என் நண்பர் ஸ்ரீநிவாஸ்தான் திரு சார்கிட்ட அசோசியேட்டா வேலை செஞ்சுகிட்டிருந்தார். அவர்தான் என்னை திரு சார்கிட்ட சேர்த்துவிடுறேன்னு சொன்னார். நானும் காத்திட்டிருந்தேன். ஒருநாள், என்னை நேரடியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டார். திரு சார் என்னைப் பார்த்துட்டு, யார்னு கேட்டதும், ‘என் ஃப்ரெண்ட் சார். படத்துல அசிஸ்டென்டா வொர்க் பண்ணட்டும் சார்’னு சொன்னார். ‘நீ எப்படி கூட்டிட்டு வரலாம்? சாயங்காலம் அனுப்பிவிட்டுடு’ன்னு சொல்லிட்டார் திரு சார். ஆனா, இது எனக்குத் தெரியாது. நான் ரொம்ப கேஷுவலா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன். அன்னிக்கு ஷூட்டிங் முடிச்சுட்டு, ஸ்ரீநிவாஸ்கிட்ட ‘அந்தப் பையன் இருக்கட்டும்’னு சொல்லியிருக்கார். இதெல்லாம் நான் அவர்கிட்ட அசிஸ்டென்டா சேர்ந்து கொஞ்ச நாளுக்குப் பிறகுதான் தெரிஞ்சது. ‘மகளிர் மட்டும்’ படத்துல ஆரம்பிச்சு ஒன்பது வருடங்கள் அவர்கிட்ட அசிஸ்டென்டா வேலை பார்த்தேன். நான் ‘சாம்பியன்’னு ஒரு இந்திப் படத்துல அசிஸ்டென்டா வேலை பார்த்தேன். ‘மும்பை போறது, இந்திப் படத்துல வொர்க் பண்றது ரொம்ப ரொம்ப சந்தோஷம்’னு திரு சார்தான் எனக்குச் சொல்லி அனுப்பினார். அந்தப் படங்கள் எல்லாம் திரு சாருக்கு வந்த படங்கள்தான். அவர்தான் என்னை அவங்ககிட்ட பரிந்துரை செஞ்சு அனுப்பி வெச்சார்.”

``தனுஷுக்கு ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ படத்துல உங்களைப் பிடிச்சுதான் ‘பொல்லாதவன்’ படத்துக்கு உங்களை கமிட் பண்ணச் சொல்லி வெற்றிமாறன்கிட்ட பேசினாராமே?’’

“அந்தப் படத்துல அவ்ளோ சூப்பரா நான் ஒளிப்பதிவு பண்ணிட்டேன்னு எல்லாம் சொல்லமாட்டேன். தனுஷ் சாரை ஏதோ ஒரு விஷயம் இம்ப்ரஸ் பண்ணியிருக்கலாம். ‘வேல்ராஜைப் பாருங்க. அவரை வெச்சுப் போகமுடியுமா?’ன்னு என்னை வெற்றிமாறன் சார்கிட்ட சொன்னது தனுஷ் சார்தான். இப்போ வரை வெற்றிமாறன் படங்களுக்கு நான் ஒளிப்பதிவு பண்ணிட்டு வர்றேன்.”

`` ‘ஆடுகளம்’ வெளியாகிப் பத்து வருடங்களாகியும் கொண்டாடப்பட்டிட்டிருக்கு. வெற்றிமாறன் அந்தப் படத்துக்காக உங்களை எப்படித் தயார்படுத்தினார்?’’

“`பொல்லாதவன்’ முடிச்சவுடன், அடுத்த படத்துக்கான களம் மதுரைதான்னு நினைச்சு, நான், வெற்றிமாறன் சார், மணிமாறன், விக்ரம் சுகுமாறன் நாங்க நாலு பேரும் மதுரைக்குப் போனோம். வீடு எடுத்துத் தங்கி வேலை செய்ய ஆரம்பிச்சோம். கூடுதலா ஒரு லைட் வெச்சா கூட வெற்றி சாருக்கு உறுத்திடும். உடனே ‘வேல்ராஜ்’னு கூப்பிடுவார். நானும் ஆஃப் பண்ணிடுவேன். யதார்த்தத்துக்கும் சினிமாத் தனத்துக்கும் இடையே இருக்கிற மெல்லிய கோடு வெற்றி சாருக்குத் நல்லாத் தெரியும். அதுக்கு நானும் தயாராகிடுவேன். அவர் படத்துக்கு லென்ஸிங் முதற்கொண்டு எல்லாம் எப்படியிருக்கணும்னு அவரே கேட்டு வாங்கிப்பார்.”

`` ‘எதிர்நீச்சல்’ படத்துல ‘வெளிச்சப்பூவே வா’ பாடலுக்கான லொகேஷனைக் கண்டுபிடிக்க ரொம்ப சிரமப்பட்டீங்களாமே!’’

“ஆமா. ரொம்ப சுவாரஸ்யமாகவும் இருந்தது. அந்தமானுக்குப் போயிருந்தோம். செம மழை. ஷூட்டிங் பண்ண முடியுமா முடியாதான்னு தெரியலை. ஆறு கிலோமீட்டர் நடந்தே போனோம். அந்த மாதிரி தேடுதல் இருக்கும்போதுதான் அந்தப் பாடல் பேசப்படும். முதல்ல பார்க்கும்போது வெளிச்சமா சூப்பரா இருந்தது. ஒவ்வொரு நிமிஷத்துக்கும் லைட் மாறிக்கிட்டே இருந்தது. அப்புறம், நாங்க எடுத்தபோதும் நல்லாதான் இருந்தது. ஆனா, ‘வெளிச்சப்பூவே’ பாடலை கொஞ்சம் வெளிச்சமா இருந்தபோதே எடுத்திருந்தா அப்படி இருந்திருக்கும்.”

``நிறைய கிராமத்துப் படங்கள் பண்றீங்களே?’’

“நான் பண்ணுன கிராமத்துப் படங்கள்ல எனக்கு ரொம்பப் பிடிச்சது ‘கொம்பன்.’ முத்தையா படங்கள்ல வெயில் தெரியணும்னு கேட்கிறார். அதனால, அதுக்குத் தகுந்த மாதிரி கலர் டோன் வெச்சுக்கிறேன். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துல கொஞ்சம் சாஃப்டா காட்டிருப்பேன்.”

வேல்ராஜ்
வேல்ராஜ்

``தனுஷ் இயக்கத்துல ஒளிப்பதிவு செய்த ‘ப.பாண்டி’ அனுபவம்?’’

“நான் வேறொரு படத்துல இருந்தேன். திடீர்னு போன் பண்ணி ‘சார் ஷூட்டிங் போகலாம். ரெடியா இருங்க’ன்னு சொன்னார். நானும் இன்னும் ஒரு மாசம் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு ஓகே சார்னு சொல்லிட்டேன். அப்புறம், ‘நாளை மறுநாள் கிளம்பலாம்’னு சொன்னார். எனக்கு செம ஷாக். உள்ளுக்குள்ள முடியுமா முடியாதான்னு பயம் இருந்தாலும் அவர்கிட்ட ‘போகலாம் சார்’னு சொல்லிட்டேன். தனுஷ் சார் செட்ல ரொம்ப வேகமா இருப்பார். ஒரு ஷாட்கூட தேவையில்லாததா இருக்காது. அதே மாதிரி ஒன் மோர் ஷாட் அவருக்கு இருக்கக்கூடாது. ‘முதல் ஷாட் நடிக்கும்போதுதான் யதார்த்தமா வரும். அடுத்தடுத்து பண்ணும்போது நடிக்கிறது தெரியும்’னு சொல்லிக்கிட்டே இருப்பார்.”

வேல்ராஜ், தனுஷ், வெற்றிமாறன்
வேல்ராஜ், தனுஷ், வெற்றிமாறன்

``உங்களுடைய படங்களை திரு பாராட்டியதுண்டா?’’

“இத்தனை படங்கள் பண்ணிருந்தாலும் ‘நல்லா பண்ணியிருக்க’ன்னு சொன்னது கிடையாது. ‘அசுரன்’ பார்த்துட்டு, ‘இன்னும் கொஞ்சம் பண்ணியிருந்தால், எல்லா விருதும் அடிச்சிடலாம்’னு சொன்னார். ஸ்பாட்ல சில பிராக்டிக்கல் பிரச்னைகள் இருக்கு இல்லையா? அதனால, அவர் சொன்னதை ஏத்துக்கிட்டேன்.”

`` ‘அசுரன்’ படத்துல கேமராவுடைய நிழல் தெரிஞ்சதுன்னு சமூக வலைதளங்கள்ல பேச்சுகள் இருந்ததே!’’

“கேமராவுடைய நிழல் நடிகர்கள் மேல படுறது ஒரு கேமராமேனுக்குத் தெரியாமல் போயிடுமா என்ன? ஆனந்த விகடன் விமர்சனத்துல அதெல்லாம் குறிப்பிட்டிருந்தீங்க. அவசரத்துக்கு அந்தச் சமயத்துல பண்ணும்போது வந்திடுச்சு. சரி அடுத்த டேக் போகலாம்னு பார்த்தா, ஆர்ட்டிஸ்டுடைய பர்ஃபாமென்ஸ் நல்லாருந் ததனால அந்த ஷாட்டை வெச்சிருக்கலாம். எத்தனையோ காரணங்கள் உண்டு. அது ஒரு பெரிய விஷயம் இல்லைன்னு நினைக்கிறேன். கேமராவுடைய நிழல் வந்ததனால என்ன இப்போ?”

தனுஷ்
தனுஷ்

``சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்கிற படத்துக்கு ஒளிப்பதிவு பண்ற அனுபவம்?’’

“மூணு பாடல்கள், ரெண்டு ஃபைட், பத்து சீன் முடிஞ்சிருக்கு. இன்னும் 50 நாள்கள் ஷூட்டிங் இருக்கு. பிரமாண்டமா செலவு பண்ணி எடுத்துட்டிருக்காங்க. ரொம்ப நல்லா நடிச்சிட்டிருக்கார்.”

`` ‘வேலையில்லா பட்டதாரி’, ‘தங்கமகன்’ படங்களைத் தொடர்ந்து படம் இயக்கிற ஐடியா இருக்கா?’’

“ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் படத்துக்கான ஐடியா இருக்கு, பார்ப்போம்.”