சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“என் முதல் இயக்குநர் திருமுருகன் காந்தி!”

தேனி ஈஸ்வர்
பிரீமியம் ஸ்டோரி
News
தேனி ஈஸ்வர்

மாரி செல்வராஜ், இயக்குநர் ராம்கிட்ட உதவி இயக்குநரா இருந்த சமயத்தில் இருந்தே எனக்கு நல்ல பழக்கம்.

‘கர்ணன்’, ‘ஏலே’, ‘பேச்சுலர்’ என தன் ஒளிப்பதிவில் உருவான படங்கள் வெளியாகக் காத்திருக்கிறார் தேனி ஈஸ்வர்.

நெட்ஃபிளிக்ஸின் ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜியில், விக்னேஷ் சிவன் இயக்கிய பகுதிக்கு ஒளிப்பதிவு செய்ததுடன், நரிக்குட்டி என்ற கேரக்டருக்கு டப்பிங் கொடுத்து சர்ப்ரைஸ் செய்திருந்தார். “ஷூட்டிங் முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு, ‘சார் அந்த நரிக்குட்டி கேரக்டருக்கு நீங்க டப்பிங் பேசணும். நான் சில சாய்ஸஸ் பார்த்தேன். ஆனா, எதுவுமே செட்டாகலை’ன்னு சொன்னார் விக்னேஷ் சிசன். நான் பேசினது அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சிரிச்சுக்கிட்டே ஜாலியா டப் பண்ணினேன்” என்று சொல்லும்போதே ஈஸ்வரின் குரலில் உற்சாகம்

``எனக்குப் பிடிச்ச ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்தான்னு கெளதம் மேனன் ஒரு பேட்டியில சொல்லிருந்தார். உங்களுக்கும் அவருக்குமான அறிமுகம்?’’

“ஒரு விளம்பரப்படத்துலதான் ரெண்டு பேரும் அறிமுகமானோம். அதிலேயே என் வொர்க் அவருக்குப் பிடிச்சிருந்தது. அடுத்தடுத்து நிறைய விளம்பரங்கள்ல சேர்ந்து வேலை செஞ்சோம். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துல ஒரு சின்ன போர்ஷன் நான் ஒளிப்பதிவு பண்ணினேன். அப்புறம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துல வொர்க் பண்ணக் கூப்பிட்டார். சில காரணங்களால அது நடக்கல. அவர்கூட தொடர்ந்து வொர்க் பண்ணணும்னு ஆசை. இனி வரும் காலங்கள்ல நடக்கும்னு நம்புறேன்”

``மாரி செல்வராஜ் இயக்கத்துல ‘கர்ணன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செஞ்ச அனுபவம்?’’

“மாரி செல்வராஜ், இயக்குநர் ராம்கிட்ட உதவி இயக்குநரா இருந்த சமயத்தில் இருந்தே எனக்கு நல்ல பழக்கம். ‘பரியேறும் பெருமாள்’ நான் பண்ண வேண்டிய படம்தான். அந்தச் சமயத்துல பாலா சாருடைய ‘நாச்சியார்’ பட வேலைகள் இருந்ததனால பண்ண முடியலை. அடுத்த படம் பண்ணலாம்னு சொல்லிருந்தேன். அவரும் அதே மாதிரி என்னை ‘கர்ணன்’ல ஒளிப்பதிவு பண்ணக் கூப்பிட்டார். என் கையில முழுக் கதையைக் கொடுத்துட்டார். அவ்ளோ பிரமாதமா எழுதியிருக்கார். ரொம்பத் திறமைசாலி. நிச்சயமா ‘கர்ணன்’ தமிழ் சினிமாவுல ரொம்ப முக்கியமான படமா இருக்கும். மாரி செல்வராஜ் என்ன எதிர்பார்க்குறார்னு தனுஷ் சாருக்கு நல்லாத் தெரியும். பெரும்பாலும் ஒரே டேக்தான். நடிக்கிறது தெரியாமல் நடிக்கிறார். ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. எனக்கு கமர்ஷியல் படம், ஆஃப் பீட் படம்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியாது. வெகுஜன மக்கள் எல்லாம் ரசிக்கிற படத்துக்குப் பெயர் கமர்ஷியல் சினிமான்னா, ‘கர்ணன்’ எல்லாரும் ரசிக்கிற பக்கா கமர்ஷியல் படமாதான் இருக்கும்.”

``மற்ற ஒளிப்பதிவாளர்கள் சினிமாவுக்குள்ள வந்த கதைகள்ல இருந்து உங்க கதை மாறுபடுது. அதை என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா?’’

“யார்கிட்டயாவது அசிஸ்டென்டா வேலை செஞ்சு, அப்புறம் சினிமாவுக்கு வர்றதுக்கான ஸ்பேஸ் எனக்குக் கிடைக்காமல் போயிடுச்சு. விகடன்ல ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபரா வொர்க் பண்ணிட்டு இருந்த சமயத்துல சினிமா தொடர்பான ஆர்ட்டிகிளுக்கு போட்டோ எடுக்க அடிக்கடி போவேன். அங்க போட்டோ எடுத்து முடிச்சுட்டு, ஷூட்டிங் எப்படி நடக்குது, ஒளிப்பதிவாளர் என்னெல்லாம் பண்றார்னு வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன். போட்டோகிராபியை அடிப்படையா வெச்சுக்கிட்டு ஒளிப்பதிவு கத்துக்கலாம்னு நினைச்சு முயற்சி பண்ணினேன். முதன்முதல்ல விளம்பரப் படங்கள்தான் எடுத்தேன். அப்புறம் அப்படியே சினிமாவுக்குள்ள வந்தாச்சு.”

`` ‘கற்றது தமிழ்’, ‘வெண்ணிலா கபடிக்குழு’னு பல படங்களுக்கு ஸ்டில் ஷூட் பண்ணியிருக்கீங்க. அதுக்கு உங்களுடைய மெனக்கெடல்கள் என்னவா இருக்கும்?’’

“ ‘கற்றது தமிழ்’ பண்ணும்போது, என்ன மாதிரியான பேட்டர்ன்ல போட்டோஷூட் பண்ணலாம்னு ரெண்டு பேரும் நிறைய பேசினோம். முழுக் கதையையும் என்கிட்ட ராம் சொன்னார். அந்த கேரக்டர் என்னென்ன பண்ணுது, அதனுடைய பார்வை என்னன்னு தெரிஞ்சால்தான் அதுக்குத் தகுந்த மாதிரியான ஸ்டில் ஷூட் பண்ணமுடியும். வெறும் லைட்டிங் செட் பண்ணி போட்டோ எடுக்கிறதோட நிற்காது. கதைக்களத்துக்குள்ள நம்மளும் இருக்கணும்.”

தேனி ஈஸ்வர்
தேனி ஈஸ்வர்

``போட்டோகிராபரா இருந்த உங்களுக்கு எந்த சமயத்துல ஒளிப்பதிவாளராகிட முடியும்னு நம்பிக்கை வந்தது?’’

“ஆரம்பத்துல இருந்தே ஒளிப்பதிவாளராகணும்கிற ஆசையோட நம்பிக்கையும் அதிகமா இருந்தது. ஆனா, என்னை எப்படி நிரூபிக்கிறது, யார்கிட்ட நிரூபிக்கிறதுன்னு தெரியலை. அதனால, நிறைய ஷூட்டிங் வேடிக்கை பார்த்துக் கத்துக்கிட்டேன். ராமுடைய நண்பர் ஒருத்தர் விளம்பர ஏஜென்ஸி வெச்சிருந்தார். அவர் ஒரு விளம்பரத்தை இயக்க, நான் ஒளிப்பதிவு பண்ணினேன். நான் முதன்முதல்ல ஒளிப்பதிவு பண்ணது கோல்டு வின்னர் ஆயில் விளம்பரம்தான். அந்த இயக்குநர் வேற யாருமில்லை, திருமுருகன் காந்திதான்.”

தேனி ஈஸ்வர்
தேனி ஈஸ்வர்

`` ‘கற்றது தமிழ்’ல இருந்து இயக்குநர் ராம்கூட பயணிச்சிருக்கீங்க. ஆனா, அவருடைய ‘தரமணி’யிலதான் ஒளிப்பதிவு பண்ணியிருக்கீங்க?’’

“ ‘தங்கமீன்கள்’ நான் பண்றதா இருந்தது. அந்தச் சமயத்துல என்னுடைய முதல் படமான ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துல இருந்தேன். ‘தங்கமீன்கள்’ படத்துல நடிச்ச சாதனாவை நான்தான் டெஸ்ட் ஷூட் எடுத்துக் கொடுத்தேன்.”

`` ‘தங்கமீன்கள்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ன்னு நீங்க மிஸ் பண்ணுன படங்களைப் பார்க்கும்போது வருத்தப்பட்டதுண்டா?’’

“ ‘கும்கி’ சொல்லியிருந்தாங்க. அதுவும் பண்ண முடியாமல் போயிடுச்சு. வருத்தமாதான் இருக்கும். அதுக்கு என்ன பண்ண முடியும்? அடுத்தடுத்து நல்ல படங்கள்ல வொர்க் பண்ணணும்னு தோணும்.”

``இயக்குநர் பாலாவுக்கும் உங்களுக்குமான நட்புக்கு காரணம் தேனிதானா?’’

“பாலா சாரை முன்னாடியே தெரியும். ஒருநாள் கூப்பிட்டு படம் பண்ணணும்னு சொன்னாங்க. உடனே ஓகே சொல்லிட்டேன். முதல்ல அவர் வேறொரு கதையைப் பண்றதா இருந்தது. அப்புறம்தான், அது ‘நாச்சியார்’ படமா மாறுச்சு. ஒரு ஜாம்பவான்கூட சேர்ந்து வேலை செய்றது பெரிய பரிசுதான். ‘நாச்சியார்’ வேற மாதிரியான அனுபவத்தைக் கொடுத்தது. இப்பவும் பாலா சார்கூட பேசிக்கிட்டுதான் இருக்கேன். அவருமே அடுத்தடுத்த படங்களுக்கு என்கிட்ட பேசினார். ‘கர்ணன்’, ‘பேச்சுலர்’ல வொர்க் பண்ணிட்டு இருக்கிறதைச் சொன்னேன். ‘முடிச்சுட்டுச் சொல்லு. நாம பண்ணலாம்’னு சொல்லிருக்கார். சீக்கிரம் அவரைச் சந்திக்கணும்.”