
ஒரு பெண் வேலைக்குப் போனாலும் சரி, வீட்டிலேயே இருந்தாலும் சரி, அவளுக்கான சுதந்திரம் இங்கே இல்ல.
`Neestream’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘The Great Indian Kitchen’ திரைப்படம். சமையல்கூடம் என்னும் பலிபீடமும் குடும்பமும் மதமும் பெண்களை எப்படிச் சுரண்டி ஒடுக்குகிறது என்பதைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதற்காக அப்படத்தின் இயக்குநர் ஜியோ பேபிக்கு எட்டுத்திக்கிலுமிருந்தும் குவிகின்றன வாழ்த்துகள். அதனூடே அவருடன் ஒரு அலைபேசி உரையாடல்.

`` ‘The Great Indian Kitchen’ படத்தோட ஐடியா எங்கிருந்து வந்தது?’’
“என்னோட மனைவி வங்கித் தேர்வுகளுக்கு ரெடியாகிட்டு இருக்காங்க. அவங்க படிக்கிற வேலைகளுக்கு நடுவுலதான் சமையலும் பண்ணணும். அதனால, நான்தான் சமையலைக் கவனிச்சுக்கிட்டேன். அப்போதான், ‘சமையல் வேலை ரொம்பப் பெருசு. கொஞ்சமும் ஓய்வு இல்லாத வேலை’ன்னு தெரிய வந்தது. இதை ஏன் படமா எடுக்கக்கூடாதுன்னு தோணுச்சு. அதுக்கான டிஸ்கஷனை என் மனைவிகிட்ட இருந்தே தொடங்கினேன். சொல்லப்போனா படத்தோட க்ரியேட்டிவ் ஹெட்கூட அவங்கதான். வழக்கமான கதை சொல்லலா இல்லாம கொஞ்சம் வித்தியாசமான மேக்கிங்ல இருக்கணும்னு நான், எடிட்டர், ஒளிப்பதிவாளர் எல்லாரும் பேசி களத்துல இறங்கினோம்.’’

``படத்தோட பலம் ஹீரோயின் நிமிஷா சஜயன். அவங்களை எப்படித் தேர்வு செஞ்சீங்க?’’
“கதாநாயகியா யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிச்சவுடனே முதல்ல எங்களுக்கு நினைவுக்கு வந்த பெயர் நிமிஷாதான். கதை சொன்னதுமே ஓகே சொல்லிட்டாங்க. அவங்களும் ஹீரோ சுராஜும் ஏற்கெனவே ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ படத்துல நடிச்சவங்கங்கிறதால கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும், அதேசமயம் வேற மாதிரி கதைக்களம்ங்கிறதால ரெண்டு பேருக்குமே நடிக்கிறதுக்கான ஸ்கோப்பும் நிறைய இருக்கும்னு தோணவே, அவங்க ரெண்டு பேரையும் நடிக்கவெச்சோம்.’’

``நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான காட்சிகளைப் படமா எடுக்குறப்போ அதை மக்கள் ஏத்துப்பாங்களான்னு இயக்குநர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கும். உங்களுக்கும் இருந்ததா?’’
“நான் பார்த்த குடும்பங்கள், சந்திச்ச மனிதர்கள், கேட்ட கதைகளைத்தான் சமரசமில்லாம படமா எடுக்கணும்னு தெளிவா இருந்தேன். அப்படித்தான் எடுத்தேன். அதனாலேயே படம் பாக்குற பெரும்பாலான ரசிகர்களால, முக்கியமா பெண்களால திரையில தங்களைப் பொருத்திப் பார்த்துக்க முடியுது. இதுவரைக்கும் எந்தப் படத்தைப் பத்தியும் கருத்து சொல்லாத பெண்கள்கூட இந்தப் படத்தைப் பத்தின கருத்துகளைப் பகிர்ந்துக்குறாங்க. ஆண்களும் படம் பார்த்துட்டு ரொம்ப நெகிழ்ந்துபோய் பேசினாங்க. என் வீட்டுப் பெண்களுக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. இதெல்லாமே மக்கள் நம்ம படத்தை ஏத்துக்கிட்டாங்கங்கிறதுக்கான அறிகுறிகள்தான்.’’

``பெண்ணின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் பாலுறவு, சபரிமலை பிரச்னைனு படத்துல நீங்க பேசியிருந்த விஷயங்கள் எல்லாமே ரொம்ப கனமானவை. படமா அதை எடுக்கவும் தயாரிக்கவும் நிறைய சிரமங்கள் இருந்ததா?’’
“திருமணத்துக்குப் பிறகான பாலுறவுல கணவருக்கு இருக்கிற அதிகாரம் மனைவிக்கு இருக்குறதில்ல. பெண்கள் அவங்களோட அன்றாட வேலைகளை முடிச்சுட்டு படுக்கையறைக்கு வர்றப்போ அவங்களுக்கு இருக்குற அயர்ச்சியைப் பதிவு பண்ணணும்னு நினைச்சேன். 2007-ல அப்படித்தான் இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட்டைத் தொடங்கினேன். அதன்பின் சபரிமலை வழக்கு, கோயிலுக்குள் நுழைய முற்பட்ட பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் எல்லாம் பார்த்தப்போ அதை எல்லாம் கதைக்குள்ள கொண்டுவரணும்னு தோணுச்சு. க்ளைமாக்ஸையும் அதை நோக்கியே நகர்த்தினேன். ஸ்கிரிப்ட் முடிச்சதும், ‘இதை வெளியில இருந்து யாராவது தயாரிச்சா நிறைய சமரசங்கள் பண்ண வேண்டியதிருக்கும்’னு தோணுச்சு. அதனால என் நெருங்கிய நண்பர்களே தயாரிச்சாங்க. என் படைப்புச் சுதந்திரமும் தடைப்படல. படம் முடிஞ்சதும் ரிலீஸ் பண்ண முன்னணி ஓடிடி தளங்கள் எல்லாத்தையுமே அணுகினோம். ஆனா அவங்க எல்லாருமே படம் பார்த்துட்டு ரிலீஸ் பண்ணமுடியாதுன்னு மறுத்திட்டாங்க. அதனால்தான் ‘நீ ஸ்ட்ரீம்’ என்னும் சிறிய ஓ.டி.டி தளத்தில் வெளியானது.’’

``மலையாளத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் படம் பார்த்துட்டு எதுவும் பேசினாங்களா?’’
“இப்போவரை அப்படி யாரும் பேசல. இன்னும் சொல்லப்போனா சமூகவலைதளங்களில் நடந்த அளவு உரையாடல்கூட திரைத்துறையில் நடிக்கலை. ஆனா, படத்தோட வெற்றிக்குப் பின்னால நிறைய பெண்கள் இருக்காங்கங்கிறதுதான் எல்லாத்தையும்விட பெரிய பெருமை எங்களுக்கு!’’

``பெண்ணுக்கான சுதந்திரம் விவாகரத்து மூலமா மட்டும்தான் கிடைக்குதான்னு சில எதிர்க்கருத்துகளும் படத்துக்கு வந்ததே?’’
‘`ஒரு பெண் வேலைக்குப் போனாலும் சரி, வீட்டிலேயே இருந்தாலும் சரி, அவளுக்கான சுதந்திரம் இங்கே இல்ல. விவாகரத்து வழியா வர்ற சுதந்திரமும் கணவர்கிட்ட இருந்து மட்டும்தான். இந்தச் சமூக ஒடுக்குமுறையில் இருந்து பெண்களுக்கு விடுதலை கிடைக்கிறப்போதான் அதை முழுமையான சுதந்திரமா எடுத்துக்கமுடியும்.’’
``பெரியாரோட தாக்கம் உங்க படத்துல அதிகம் இருக்கிறமாதிரி தோணுதே?’’
‘`பெரியார் பத்தித் தெரியும். ஆனா நிறைய படிச்சதில்ல. படம் பார்த்தவங்க நிறைய பேர் ‘பெரியாரோட கொள்கைகளைப் படம் பேசுது’ன்னு பாராட்டினப்போ ரொம்பப் பெருமையா இருந்தது.’’