
இல்லைங்க. ஜி.வி.பிரகாஷ் ஹீரோன்னு சொல்ல முடியாது.
“டைட்டிலைக் கேட்டதும் ‘இது காதல் படம்தான்’கிற முடிவுக்கு வந்திருப்பீங்க. ஆனா இது காதல் படம் இல்லை” முதல் வரியிலேயே ஆச்சர்யம் விதைக்கிறார், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பேச்சுலர்’ பட இயக்குநர் சதீஷ் செல்வகுமார்.
“பொள்ளாச்சியைச் சேர்ந்த சில பசங்க ஐடி கம்பெனியில் வேலை பார்க்க பெங்களூர் போறாங்க. அங்க நடக்கிற விஷயங்கள்தான் படம். இங்கிருந்து ஒரு அண்ணன் அங்க வேலைக்குப் போயிருப்பார். அவருடைய ரெண்டு நண்பர்களை வேலைக்குக் கூப்பிடுவார். ‘நம்ம அண்ணங்க இருக்காங்களே’ன்னு அவங்களுடைய ஜூனியர்ஸ் போவாங்க. இப்படியே நிறைய பேர் சேர்ந்து டீமா மாறிடுவாங்க. அப்படிப் போய் ஒண்ணா சேரும் பேச்சுலர்ஸ் வாழ்க்கையைத்தான் சொல்லிருக்கேன்.”

``ஜி.வி.பிரகாஷ் ஹீரோ.. ?’’
“இல்லைங்க. ஜி.வி.பிரகாஷ் ஹீரோன்னு சொல்ல முடியாது. இதுல அவரும் ஒரு கேரக்டர், அவ்ளோதான்.”
அடுத்த ஆச்சர்யத்தைக் கொடுத்துவிட்டுப் பேச்சைத் தொடர்கிறார்.
“நான் சில வருடங்கள் முன்னாடி ஒரு படம் கமிட் ஆகியிருந்தேன். அதுக்கு ஜி.வி.சாரைத்தான் மியூசிக் பண்ணக் கேட்டிருந்தேன். அதனால, அப்போவே தொடர்பு இருந்தது. நண்பர் ஒருவர்தான் ‘இந்தக் கதைக்கு ஜி.வி சரியா இருப்பார்’னு சொன்னார். எனக்கும் சரின்னு தோணுச்சு. அவர்கிட்ட கதை சொன்னதும் ஓகே சொல்லிட்டார். அவரை எப்படி வித்தியாசமா காட்டறதுன்னு சுவாரஸ்யத்துடனே வேலை செஞ்சோம். ஒரு விடலைப்பையன் முதிர்ச்சியடைந்த ஆணா மாறிக்கிட்டிருக்கிற சமயத்துல நடக்கிற விஷயங்கள்தான் அவர் கேரக்டரின் சுவாரஸ்யங்கள். அவருடைய பேச்சுலர் வாழ்க்கைக்குள்ள ஒரு பொண்ணு வர்றா. அந்தப் பொண்ணுதான் திவ்யபாரதி. நிறைய பேரை ஆடிஷன் பண்ணினோம். இவங்க தமிழ் பேசினாங்க. பக்கத்து வீட்டுப்பொண்ணு மாதிரி இருந்தாங்க. உடனே கமிட் பண்ணிட்டோம்.”
``அப்போ முனீஷ்காந்த், பக்ஸ் இவங்களுக்கெல்லாம் என்ன கேரக்டர்?’’
“முனீஷ், மாமா கேரக்டர்ல நடிச்சிருக்கார். பக்ஸ் அண்ணன்தான் முதன்முதல்ல பெங்களூருக்கு வேலைக்குப் போற சீனியர் அண்ணன். தேனி ஈஸ்வர் விகடன்ல போட்டோ எடுத்துட்டு இருந்த சமயத்துல இருந்து அவரை ஃபாலோ பண்றேன். அவர்கூட வொர்க் பண்ணணும்னு ஆசை. பக்கத்துலயே இருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன்னு தெரிஞ்சுக்கிட்டு அவ்ளோ சப்போர்ட் பண்ணினார். லைட்டே இல்லாமல் ஷூட் பண்ணினார். படம் முழுக்க கேமராவைத் தோள்ல வெச்சு ஒளிப்பதிவு பண்ணினார். எடிட்டர் என் நண்பன் ஷான் லோகேஷ். ‘ராட்சசன்’ படத்துக்காக உங்களுடைய விகடன் விருது வாங்கியிருக்கான். இப்போ நான் முதல் படம் பண்ணும்போது அவன் எடிட் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு இயக்குநரோட க்ரியேட்டிவ் ப்ராசஸ்ல தலையிடாத தயாரிப்பாளர் கிடைக்கிறது அபூர்வம். அந்தவகையில தயாரிப்பாளர் டில்லி பாபு சார் இந்தப் படத்தோட பெரிய பலம்.”
``படத்தைப் பத்திச் சொல்லிட்டீங்க. உங்களைப் பத்திச் சொல்லுங்க...’’
“சொந்த ஊர் கிணத்துக்கிடவு. சின்னச்சின்னப் படங்கள் வொர்க் பண்ணிட்டு, சசி சார்கிட்ட ‘555’-ல அசிஸ்டென்டா வேலை செஞ்சேன். அப்புறம், ஒரு படம் கமிட்டாகி அதோட ப்ரீ புரொடக்ஷன்ல கிட்டத்தட்ட பதினைந்து மாதங்கள் வொர்க் பண்ணினோம். ஆனா, அது நடக்கலை. அப்புறம், வேற ஒரு கதை பண்ணலாம்னு இறங்கிட்டேன். அதுக்கான வேலைகள்ல இருக்கும்போது ஒருநாள் டீக்கடையில நின்னு பேசிக்கிட்டிருந்தப்போ கிடைச்ச விஷயம்தான் ‘பேச்சுலர்’ படத்துக்கான விதை. உடனே இதை வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டோம்”
உற்சாகம் தெறிக்கிறது அவர் வார்த்தைகளில்.