
உறவுகள் உணர்வுகள்
“நான் என் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி முத்தம் கொடுத்து நீண்ட நாள்கள் ஆகின்றன.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவம் பார்ப்பதில் இருக்கும் சிரமத்தைவிட மனதளவில்தான் நாங்கள் அதிகம் துவண்டு போகிறோம்” என்று வெறுமையாகப் பேசத் தொடங்கினார், மகப்பேறு மருத்துவரும் நடிகர் தனுஷின் சகோதரியுமான கார்த்திகா.

“ஒவ்வொரு நாளும் பணிமுடிந்து வீடு திரும்பும்போது, ஒருவிதமான பதற்றத்தையே எதிர்கொள்கிறது மனது. மருத்துவராக நாங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் எங்களிடமிருந்து எங்களைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கோ, அவர்களிடமிருந்து எங்களுக்கோ நோய் பரவாமல் தடுக்க முடியும்’’ - அக்கறையோடு பேசுகிறவர், எப்போதும்போலவே லாக் டௌன் நாள்களிலும் பரபரப்பான மருத்துவராக இயங்கிக்கொண்டிருக்கிறார். அந்தப் பரபரப்புக்கு இடையே நம்மிடம் பேச நேரம் ஒதுக்கியவரிடம், மருத்துவத்துறை, குழந்தைகள், அண்ணன் செல்வராகவன், தம்பி தனுஷ் எனக் கேட்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தன. கேட்டோம்.
இப்போதைய சூழ்நிலையில் உங்களை ஊக்கப் படுத்தும் விஷயம் எது?
முடிந்தளவுக்கு பாசிட்டிவ்வான விஷயங்களையே செய்கிறேன். திரைப்படங்கள் முதல் புத்தகங்கள்வரை அனைத்திலும் நம்பிக்கை சுமக்கும் கருவையே தேர்ந்தெடுக்கிறேன். முன்பு நான் அதிகம் சமைக்க மாட்டேன். இப்போது வேறு வழியில்லாததால் என் குழந்தைகளுக்குச் சமைத்துக்கொடுக்கிறேன். குழந்தைகளைத் தொடாமல் நீண்ட இடைவெளிவிட்டு அவர்களோடு விளையாடுகிறேன். எளிய உடற்பயிற்சி களை வீட்டிலிருந்தபடியே செய்கிறேன்.


உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை அதிகமோ?
ஆமாம்... ஒவ்வொரு முறையும் பிரசவம் பார்ப்பதற்கு முன்பு, தாய் வயிற்றின்மீது கைவைத்து பிரார்த்தனை செய்த பிறகுதான் என் வேலையைத் தொடங்குவேன். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதில் அதிக நம்பிக்கை எனக்கு உண்டு. அதனால்தான், வீட்டில் நடமாடும் தெய்வங்களான குழந்தைகளிடம் மற்றவர் களுக்காகப் பிரார்த்தனை செய்யச் சொல்வேன். தன்னலமற்ற பிரார்த்தனை என்பது குழந்தைகளால் மட்டுமே சாத்தியம். இந்த பாசிட்டிவ் எனர்ஜி நிச்சயம் மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை நம்புகிறேன்.
நான் மருத்துவரானது, அண்ணா நல்ல இயக்குநரானது, தம்பி வெற்றிபெற்ற நடிகரானது என அனைத்துக்குமே பின்னணியிலுள்ள பலம் அம்மாவின் வைராக்கியம்தான்.
குழந்தை வளர்ப்பில் உங்கள் ஸ்டைல்..?
பத்து வயது மகள், இரண்டரை வயது மகன், இருவருக்குமே நானும் என் கணவரும் நெருங்கிய நண்பர்கள். அடம் பிடித்தாலோ, அழுதாலோ எல்லாம் கிடைத்துவிடும் என்கிற எண்ணத்தை உடைத்து, ‘இல்லை என்றால் இல்லைதான்’ என்கிற விஷயத்தை அவர்களுக்கு மிகவும் அழுத்தமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். தோல்விகளின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, மனம் தளர்வதோ, பிறரோடு ஒப்பிட்டுப் பார்ப்பதோ நல்லதல்ல என்பதை அவர்களுக்கு எப்போதுமே எடுத்துச் சொல்வேன்.

குழந்தைகளுக்கு ஒரு விஷயம் தெரிந்தால் தானே அதற்காக அடம் பிடிப்பார்கள்... என் குழந்தைகளுக்கு ‘ஜங்க் ஃபுட்ஸ்’ என்றால் என்ன என்றே தெரியாது. குடும்பத்தோடு வெளியே சென்றாலும் முடிந்தவரை இயற்கையான உணவுகளையே ஆர்டர் செய்வோம். நாம் சொல்வதைவிட நாம் செய்வதைத்தான் குழந்தைகள் உடனடியாக உள்வாங்கிக் கொள்வார்கள்.
எங்கள் குழந்தைகளை படிப்பு, ஹோம்வொர்க், எக்ஸாம் என இயங்கும் பள்ளிகளில் சேர்க்காமல் வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொடுக்கும் ‘மான்டிஸோரி’ பள்ளியில் சேர்த்திருக்கிறேன். அவர்களுடைய பொழுதுபோக்கு நேரத்தில்கூட டி.வி பார்ப்பதில் குறைவாகவும், புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வமும் காட்டுகிறார்கள். அவர்களின் விளையாட்டுகளும் புதிர், பிரச்னைகளுக்குத் தீர்வைக் கண்டு பிடிப்பது,மூளைக்கு வேலைகொடுப்பது போன்ற ஸ்டைலில் தான் இருக்கும். நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதன் முக்கியத்துவத்தையும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
பிசியான வேலைகளுக்கிடையில் குடும்பத்துடன் இணைந்திருக்க நேரம் கிடைக்காது. சமீபத்தில் அப்படி ஏதேனும் வாய்ப்பு அமைந்ததா?
சில தனிப்பட்ட காரணங்களால் இரண்டரை வயது வரை என் மகனுக்கு மொட்டைபோட முடியவில்லை. அதோடு, தாய்மாமன்கள் மடியில் உட்காரவைத்துதான் மொட்டையடித்து காது குத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அண்ணாவும் தம்பியும் ஊரில் இருப்பதே அபூர்வம். இருவரும் ஊரில் இருக்கும்போது வீட்டில் அனைவரும் ஒன்றுகூடி முக்கியமான விஷயங்களைச் செய்துவிடுவோம். என் மகனுக்கு மொட்டை அடித்ததும் அதுபோன்று அமைந்த ஒரு நன்னாளில்தான். அண்ணா செல்வராகவன் மடியில் அமர்த்தி காது குத்தியும், தம்பி தனுஷ் மடியில் அமர்த்தி மொட்டையடித்தும் குடும்பம் முழுவதும் இணைந்து கொண்டாடிய தருணம் அது!

உங்கள் வீட்டு மருமகள்கள் பற்றி...
எங்களுடைய நாற்பதாவது வயதிலும் அண்ணா, அக்கா, தம்பி என அனைவரும் இணைந்து இருக்கிறோம் என்றால், அதற்கு முதன்மைக் காரணம்... வெளியி லிருந்து எங்கள் குடும்பத்துக்குள் வந்து இணைந் தவர்கள்தாம். கீதாஞ்சலி, ஐஸ்வர்யா, என் அக்காவின் கணவர், என் கணவர் என அவர்கள் நால்வரும் இணைந்துவிட்டால், நாங்கள் அவ்வளவுதான்!
நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளில் உள்ளோம். ஆனால், அதனால் எந்தவிதமான வேறுபாடும் மனதளவில்கூட யாருக்கும் இருந்ததில்லை. இப்போது நாங்கள் நான்கு பேர் அல்ல, எட்டு பேராகிவிட்டோம். மனைவியுடைய ஆதரவு இல்லாமல், கணவன் அவர்களுடைய குடும்பத்தோடு இணைந்து சந்தோஷமாக இருக்க முடியாது. இன்றுவரை நாங்கள் இப்படி இணைந்திருப்பதற்கு முக்கியக் காரணம், கீதாஞ்சலி மற்றும் ஐஸ்வர்யா என்றே சொல்லலாம். எங்களைப்போலத்தான் எங்களுடைய குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

அம்மா..?
சிறிய குக்கிராமத்திலிருந்து வந்தவர்தான் என் அம்மா. வீட்டிலிருந்தாலும் வேலைக்குப் போனாலும் அர்த்தமுள்ளவளாக இருக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், போராடுவதை இன்றுவரை நிறுத்தவில்லை அவர். நாங்கள் நால்வரும் வளர்ந்த பிறகு, எங்களிடமிருந்து அவர் கேட்பது எங்களுடைய நேரத்தை மட்டும்தான். நான் மருத்துவரானது, அண்ணா நல்ல இயக்குநரானது, தம்பி வெற்றிபெற்ற நடிகரானது என அனைத்துக்குமே பின்னணியிலுள்ள பலம் அம்மாவின் வைராக்கியம்தான். எத்தனையோ பேர் ஏளனமாகப் பேசியபோதும் வைராக்கியத்தோடு எங்களைத் தட்டிக்கொடுப்பவர் அவர். இரும்பு மனுஷி!

உங்கள் வீட்டு ஹீரோக்கள் பற்றி...
அப்பா இன்றும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார். ஆனால், இனி அவர் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அண்ணா, மிகப்பெரிய டிரெண்ட் செட்டர். எங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தது அண்ணாதான். ரொம்பவே வித்தியாசமானவர். தம்பி தனுஷ் செஃப் ஆக வேண்டும் என்றுதான் ஆசைப் பட்டார். ஆனால், அவர் பிறவி நடிகர் என்பதை இப்போதுதான் உணர்கிறோம். சிறு வயதிலிருந்தே அவர் ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், முழுமையாகச் செய்வார். அதுதான் அவருடைய வெற்றிக்குக் காரணம். அவர் இன்னும் நிறைய வித்தியாசமான படங்கள் பண்ண வேண்டும் என்பது என் ஆசை!