சினிமா
Published:Updated:

“மோடியை எதிர்ப்பதே எடப்பாடியை எதிர்ப்பதுதான்!”

கோவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கோவன்

மக்கள் கலை இலக்கியக்கழகம் மற்றும் அதன் துணை அமைப்புகளை வழிநடத்துவது எங்கள் அரசியல் தலைமைக்குழு.

கோவன் - முற்போக்கு இசையின் முகம். போகுமிடமெல்லாம் புரட்சிப்பாடல்கள் விதைத்துச் செல்லும் வசந்தத்தின் இடிமுழக்கம். முற்போக்கு வட்டாரங்களில் அறியப்பட்ட கோவனை வெகுமக்களும் அறியவைத்தது அவரது ‘மூடு டாஸ்மாக்கை’, ‘ஊருக்கு ஊரு சாராயம்’ பாடல்களும், ஜெயலலிதா அரசு அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததும். 37 ஆண்டுகளாக கோவன் இயங்கிவந்த மக்கள் கலை இலக்கியக்கழகத்தில் முரண்பாடுகள். சிலர் வெளியேறியிருக்கிறார்கள். சிலர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, ம.க.இ.க. பொதுச்செயலாளர் மருதையனே வெளியேறிய நிலையில் மருதையனுடன் பல முன்னணித்தோழர்கள் இயங்கும் அணியில் இப்போது இருக்கிறார் கோவன். டாஸ்மாக் வழக்கு தொடர்பாக சென்னை வந்தவரைச் சந்தித்தேன்.

``கோவன் என்றதும் நினைவுக்கு வரும் சொற்றொடர் ‘ம.க.இ.க மையக்கலைக்குழு.’ ஆனால் அந்த அமைப்புக்குள் ஏராளம் பிரச்னைகள். என்ன நடக்கிறது?’’

“மக்கள் கலை இலக்கியக்கழகம் மற்றும் அதன் துணை அமைப்புகளை வழிநடத்துவது எங்கள் அரசியல் தலைமைக்குழு. அந்தக் குழுவில் இருக்கும் தோழர்கள் ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு உரிய இலக்கணத்தை மீறியிருக்கிறார்கள் என்று தோழர்கள் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். இதை மோதல் என்று சொல்வதைவிட உட்கட்சிப்போராட்டம் என்று சொல்லலாம், நோயை எதிர்க்கும் வெள்ளை அணுக்களின் போராட்டத்தைப்போல. அதன் விளைவுதான் மருதையன் போன்றவர்கள் வெளியேறுவது. எங்கள் மையக் கலைக்குழுவிலேயே ஒரு பாடலைத் தயார் செய்யும்போது ஆயிரம் கருத்துவேறுபாடுகள் வரும். எனவே இந்தப் போராட்டங்களை ஆரோக்கியமானதாகத்தான் பார்க்கிறேன். தவறுகளைச் சரிசெய்வதற்கான போராட்டம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன்.”

“தேர்தல் புறக்கணிப்பு, புதிய ஜனநாயகப் புரட்சி என்ற வேலைத்திட்டத்துடன் இயங்கிவந்தீர்கள். இனி அதில் மாற்றமிருக்குமா?”

“இப்போதைக்குத் தேர்தல் பங்கேற்பு இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. நாங்கள் பிரச்னைகளின் அடிப்படையில் தேர்தல் கட்சிகளுடனும் இணைந்து இயங்குகிறோம்; போராடுகிறோம். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்கூட அ.தி.மு.க, பா.ஜ.க தவிர்த்த மற்ற கட்சிகளுடன் இணைந்து போராடினோம். தேர்தல் கட்சிகள் என்றாலும் சரி, தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள் என்றாலும் சரி, இன்று இந்திய மக்களுக்கான ஆபத்து காவி பாசிசம்தான் என்பதை உணர்ந்திருக்கிறோம்.”

 “மோடியை எதிர்ப்பதே எடப்பாடியை எதிர்ப்பதுதான்!”

“ஒருபுறம் தேர்தல் கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்துக் கிட்டத்தட்ட மாநிலக்கட்சிகள் அளவுக்குச் சுருங்கிவிட்டன. தமிழகத்தில் இயங்கும் மார்க்சிய லெனினியக் குழுக்களிலேயே ஓரளவு அமைப்பு பலமுள்ள ம.க.இ.க. போன்ற அமைப்புகளிலும் பிளவுகள். கம்யூனிசத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும்?”

“கம்யூனிசத்தின் எதிர்காலம் கம்யூனிஸ்ட்களை மட்டும் நம்பியில்லை. அது புறநிலையையும் சார்ந்தது. பொதுவுடைமைக் கட்சிகளிலும் அதன் அரசுகளிலும் சில தவறுகள் இருக்கலாம். டாடா கம்பெனிக்கு ஆதரவாக சிங்கூர், நந்திகிராமில் போராடும் மக்கள்மீதே அடக்குமுறையை ஏவிவிட்டது கம்யூனிஸ்ட் கட்சி அரசுதான். நீங்கள் சொல்வதுபோல் மா-லெ அமைப்புகளிலும் உட்கட்சிப்போராட்டங்கள். ஆனால் புறநிலையில் முதலாளித்துவம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறதே? தேக்கமும் வீக்கமும் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகிறது. ஒருபுறம் மோட்டார் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வாங்க ஆளில்லை. இன்னொருபுறம் இரவு உணவில்லாமல் உறங்கச்செல்பவர்கள் கோடிக்கணக்கான பேர். முதலாளிகள் பிரச்னைகளையே முதலாளித்துவம் தீர்க்கவில்லையே? அங்கெல்லாம் கம்யூனிசத்துக்கு ஆதரவான போராட்டங்கள் நடக்கின்றனவே! டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் துலிப் மலர்களைப்போல செங்கொடிகளை ஏந்தி வருகிறார்களே?”

“டாஸ்மாக் எதிர்ப்புப் பாடல்களுக்காக நீங்கள் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்தபோது தோழர்களுடன் தி.மு,க. தலைவர் கருணாநிதியைச் சென்று சந்தித்தீர்கள். தேர்தல் கட்சிகளைக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள் கருணாநிதியைச் சந்தித்தது சர்ச்சையானதே?”

“என் கைதுக்குக் கண்டனம் தெரிவித்து கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்டதால் நன்றி தெரிவிக்கப்போனோம். அவரை மட்டுமல்ல, விஜயகாந்த் போன்றவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தோம். எமர்ஜென்சி கொண்டுவந்த கட்சிதான். ஆனால் அந்த காங்கிரஸின் அப்போதைய தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும் சந்தித்து நன்றி தெரிவித்தோம். காங்கிரஸ்காரர்கள் சிலரே, ‘கோவன் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கடுமையாக விமர்சித்துப் பாடியிருக்கிறார். அவரை விடுதலை செய்யச் சொல்லலாமா?’ என்று இளங்கோவனிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் ‘நம் கட்சியை விமர்சித்தாலும் அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறு’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.”

“முதுமை காரணமாக அவர் செயலிழப்பதற்கு முன்பு சந்தித்தவர்களில் நீங்களும் ஒருவர். கருணாநிதி உங்களிடம் என்ன பேசினார்?”

“அப்போதே அவரால் அதிகம் பேச முடியாத நிலை. ‘உங்கள் ஊர் என்ன?’ என்று விசாரித்தார். ‘குடவாசல்’ என்றேன். ‘நான் பக்கத்து ஊர்தான். திருவாரூர்’ என்றார். ‘ஐயா அது தெரியும்யா’ என்றேன். நன்னிலம் நடராசனைப் பற்றி, குடவாசல் தி.மு.க நிர்வாகிகளைப் பற்றியெல்லாம் விசாரித்தார். அடிப்படையில் எங்கள் குடும்பம் தி.மு.க குடும்பம் என்பதால் தி.மு.க பொதுக்கூட்டங்களுக்குச் செல்வதும் முருகுபாண்டியன் கலைநிகழ்ச்சி, முரசொலி முகிலன் கலைநிகழ்ச்சி போன்றவை அந்தக் கூட்டங்களில் நடப்பதும் வழக்கம். கலைஞரின் நினைவாற்றலைப் பற்றி மற்றவர்கள் சொல்வது உண்மைதான். அந்தநிலையிலும் எங்கள் ஊரைச் சேர்ந்த பழைய தி.மு.க நிர்வாகிகளைப் பற்றி அவர் பேசினார்.”

“1991-96 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தை ‘இருண்ட காலம்’ என்று வர்ணித்துப் பாடி ஒலிப்பேழை வெளியிட்டீர்கள். டாஸ்மாக் எதிர்த்துப் பாடிக் கைதானதும் அதே ஜெயலலிதா ஆட்சியில்தான். பொதுவாக ம.க.இ.க-வினருக்கு கருணாநிதி, தி.மு.க. மீது ஒரு சாப்ட் கார்னர் உண்டு என்றும், ஜெயலலிதாவை மட்டும் அரசியல் எதிரியாகப் பார்க்கிறார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறதே?”

“தி.மு.க ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் கடுமையாக விமர்சித்திருக்கிறோம். ஆனால் அதற்காக தி.மு.க-வின் சமூகநீதி செயற்பாட்டையோ கலைஞர் ஆட்சியில் நடந்த ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்’ போன்ற முயற்சிகளையோ மறுத்துவிட முடியுமா? ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவில்லையே தவிர 69% இட ஒதுக்கீட்டுக்கு 9வது அட்டவணை சட்டப்பாதுகாப்பு கொடுத்ததை வரவேற்றோம். ஆனால் பொதுவாக ஜெயலலிதா திராவிட இயக்கத்தின் தலைவியாக இருந்தாலும் அதன் அடிப்படைகளுக்கு எதிராகவே செயற்பட்டார்.”

“கருணாநிதி, ஜெயலலிதா என்னும் இரண்டு தலைவர்களைப் பற்றியும் விமர்சித்துப் பாடல்கள் பாடியிருக்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து இதுவரை பாடவில்லையே?”

“(சிரிக்கிறார்) நடப்பது எடப்பாடி ஆட்சியாக இருந்தால் அவரைப் பற்றிப் பாடலாம். இது பி.ஜே.பி-யின் ஆட்சி என்பது எங்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே தெரியுமே? ஜெயலலிதாமீது எங்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் ஜி.எஸ்.டி, நதிநீர்ப்பிரச்னைகள் ஆகியவற்றில் மாநில உரிமைகளை விட்டுத்தராமலாவது இருந்தார். ஜி.எஸ்.டி, நீட், ரத யாத்திரை, ரபேல் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து நாங்கள் பாடும் பாடல்கள் பா.ஜ.க. எதிர்ப்பு பாடல்கள். அவற்றை எடப்பாடி எதிர்ப்பாகவும் எடுத்துக்கொள்ளலாம்”

“இடதுசாரிகளும் முற்போக்குச்சக்திகளும் எவ்வளவு விமர்சித்தாலும் மோடிக்கு மக்கள் ஆதரவு இருக்கத்தானே செய்கிறது? பீகார் தேர்தல் முடிவுகள்கூட அதற்கான உதாரணம்தானே?”

“மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருப்பதன் அடையாளம்தான் மோடிக்குக் கிடைக்கும் ஆதரவு. இணையதளங்களில் பா.ஜ.க. ஐ.டி விங் பரப்பும் பொய்களை நம்பி ஏமாறுபவர்கள் பலர். அமித் ஷா போன்றவர்களின் மக்களைப் பிளவுபடுத்தும் தந்திரங்களை அவர்களே சாணக்கியத் தந்திரம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இன்னொருபுறம் சீனாவால் ஆபத்து, பாகிஸ்தானால் ஆபத்து என்று மோடி காட்டும் பூச்சாண்டிக்கு மயங்குபவர்கள் சிலர். ஆனால் இந்த மாயை நீண்ட நாள்கள் நீடிக்காது. பா.ஜ.க. ஆளும் அரியானா போன்ற மாநில விவசாயிகளும் டெல்லியில் மோடி அரசை எதிர்த்துப் போராடுகிறார்களே!”

 “மோடியை எதிர்ப்பதே எடப்பாடியை எதிர்ப்பதுதான்!”

“ ‘பெரியார் மண்ணான தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்’ என்று முழக்கம் வைத்தீர்கள். ஆனால் தமிழக பா.ஜ.க-வில் பல பிரபலங்கள் சேர்கிறார்கள். வேல் யாத்திரை போன்றவற்றால் பா.ஜ.க. தமிழகத்தில் வளர்வதான பிம்பம் உருவாகியிருக்கிறதே?”

“பிம்பம் மட்டும்தான் இருக்கிறது. ரெய்டுக்கு பயந்து, கைதுக்கு பயந்து, அல்லது தனிப்பட்ட ஆதாயத்துக்காக சில பிரபலங்கள் சேர்வதாலேயே தமிழகத்தில் பா.ஜ.க வளர்கிறது என்று அர்த்தமில்லை.”

“ரஜினியின் அரசியல் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அவர் வரும்போதே அர்ஜுனமூர்த்தி என்ற பா.ஜ.க.காரருடன்தானே வருகிறார்! அவர் இதுவரை எந்த மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார், போராடியிருக்கிறார்? நீட் முதல் விவசாயிகள் போராட்டம் வரை அவர் கருத்து என்ன? ஸ்டெர்லைட்டில் போராடும் மக்களைச் சமூகவிரோதிகள் என்றவர் அவர். காலையில் நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக ஓலா காரில் நானும் தோழர் காளியப்பனும் சென்றோம். ‘ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்குவதாகச் சொல்லியிருக்கிறாரே’ என்று சொன்னதற்கு, ‘எந்த ஜனவரியில்னு சொல்லியிருக்காரா?’ என்று அந்த ஓலா டிரைவர் கேட்டார். ரஜினியைப் பற்றி மக்களுக்குப் புரிதல் இருக்கு. வரட்டும், பார்ப்போம்.”

“எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறந்தபோது அவருக்கு அஞ்சலி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தீர்கள். நீங்கள் வெகுஜன சினிமாப் பாடகருக்கு அஞ்சலி செலுத்தியது ஆச்சர்யம்தான்!”

“நான் எஸ்.பி.பி-யிடம் நிறைய விஷயங்களை எடுத்திருக்கிறேன். குறிப்பாகப் பாடலில் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்ற விஷயத்தை. அந்த அடிப்படையில்தான் நான் அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். மற்றபடி அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லி செவ்வணக்கமா செலுத்தினேன்? இளையராஜா இசையிலும் நான் நிறைய கற்றிருக்கிறேன். ஒரு ரசிகனாக அதை உள்வாங்கியிருக்கிறேன். அவர் முற்போக்கானவர் கிடையாது. ஆனால் மகத்தான இசையமைப்பாளர் இல்லையா? எஸ்.பி.பி, இளையராஜா முதல் ‘புரட்சி ஒரு கிசுகிசுப்பைப்போல் பரவுகிறது’ என்று பாடிய அமெரிக்கப்பாடகர் டிரேசி சாப்மன் வரை பலரிடமிருந்தும் நான் கற்றிருக்கிறேன்.”

கொரோனா மற்றும் உட்கட்சிப்போராட்டங்களால் புதிதாகப் பாடல்கள் உருவாகவில்லை என்ற வருத்தம் கோவனுக்கு. டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்று ஆர்வம் காட்டும் கோவன் கொரோனா ஊரடங்கு பற்றிப் பாடத்தொடங்குகிறார்.

“கொரோனாவால் சாவதா, கோரப்பசியால் சாவதா?

சட்டம் போட்டால் ஊரடங்கும், பசியடங்குமா?

கை தட்டினாலே நிவாரணம் வந்து சேருமா?”

கோவனின் குரல் இழைந்து உயரும்போது, புலம்பெயர் தொழிலாளர்களின் துயரச் சித்திரம் கண்முன் விரிகிறது.