சினிமா
Published:Updated:

“அஜித் வேண்டாம்னு நினைக்கிறார்... அமிதாப்புக்கு பிடிச்சிருக்கு!”

ராஜீவ் மேனன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜீவ் மேனன்

கலைஞர்களுக்கு இருக்கிற மிகப்பெரிய சொத்து நேரம். ஒரு வருஷத்துல ரெண்டு, மூணு படங்கள் பண்ணணும்னு எல்லா ஒளிப்பதிவாளர்களும் முயற்சி பண்றாங்க.

ராஜீவ் மேனன்... இந்திய சினிமா உலகம் முழுக்கப் பரிச்சயமான பெயர். விளம்பரப் பட உலகில் அத்தனை வலிமை மிக்க பெயர். சினிமா, விளம்பரங்கள் எனச் சுழன்று திரியும் ஸ்டைலான வெள்ளைத்தாடி இளைஞன்.

‘சர்வம் தாள மயம்’ படத்திற்குப் பிறகு, த்ரில்லர் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார். லாக் டெளனில் இசையமைப் பாளராகவும் பாடகராகவும் அவதாரம் எடுத்து ‘கடவுளும் நானும்’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். ஹீரோக்கள் தோற்றுப் போகும் அளவிற்கு செம ஸ்டைலாக இருக்கிறார். ‘‘அழகா இருக்கீங்க சார்!’’ என்ற எனது காம்ப்ளிமென்டைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, பேசத் தொடங்கினார்.

`` ‘கடவுளும் நானும்’ ஆல்பம் இந்த லாக்டெளன்ல உருவான ஐடியாவா?’’

“ஆமா. தமிழிசை சீரிஸுக்காகச் சில பாடல்கள் எழுதியிருந்தார், கார்க்கி. இந்தப் பாடலை எனக்கு ட்யூன் பண்றதுக்காகக் கொடுத்தபோது ரொம்ப பவர்ஃபுல்லா இருந்தது. கார்க்கியும் அனில் ஸ்ரீநிவாசனும் பண்ணின ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு நான் போயிருந்தபோது, எனக்கு மியூசிக் கம்போஸ் பண்றதுல ஆர்வமிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டார். அப்படித்தான் இந்தப் பாடலுக்கு இசையமைக்கச் சொன்னார். எனக்குக் கவிதைகள், இலக்கியங்கள் மேல ஆர்வம் அதிகம். ஏதாவது படிச்சேன்னா அதை கார்க்கியுடன் டிஸ்கஸ் பண்ணுவேன். அப்படி ஒருநாள் தாயுமானவர் விருத்தம் பத்திப் பேசிட்டு இருந்தேன். ‘அது உங்களுக்குப் பிடிச்சுதுன்னா, இந்தப் பாடலும் பிடிக்கும்’னு எனக்கு அனுப்பினார். அப்படித்தான் ‘கடவுளும் நானும்’ ஆரம்பமானது. காம்போஜி ராகத்துல பண்ணிருக்கேன். நல்ல ரெஸ்பான்ஸ். கோவிட் காலத்தில எந்த கிரியேட்டிவிட்டி பண்ணினாலும் அது ஒரு கொடுப்பனை.”

ராஜீவ் மேனன்
ராஜீவ் மேனன்

``2021-க்கு என்ன ரெசல்யூஷன் எடுத்திருக்கீங்க?’’

“ நிறைய எழுதணும், அதையெல்லாம் வெளிப்படுத்தணும். ஏன்னா, நான் நிறைய எழுதுவேன். ஆனா, எல்லாத்தையும் வெளியிடாம அப்படியே வெச்சிருப்பேன். இனி அப்படி இருக்கக்கூடாதுன்னு முடிவெடுத்திருக்கேன். அதிகபட்சம் திட்டுவாங்க, சரியில்லைன்னு சொல்லுவாங்க... அவ்ளோதானே, பரவாயில்லை. வீரேந்திர சேவாக் பேட்டிங் மாதிரிதான். முதல் பந்து பவுண்டரி அல்லது அவுட் எதுனாலும் பார்த்துக்கலாம்.”

``இத்தனை வருஷ சினிமாப் பயணத்துல குறைவான படங்களில்தான் வேலை செஞ்சிருக்கீங்க. என்ன காரணம்?’’

“கலைஞர்களுக்கு இருக்கிற மிகப்பெரிய சொத்து நேரம். ஒரு வருஷத்துல ரெண்டு, மூணு படங்கள் பண்ணணும்னு எல்லா ஒளிப்பதிவாளர்களும் முயற்சி பண்றாங்க. எனக்கு அப்படியில்லை. நான் ஒரு நிர்வாகம் நடத்திக்கிட்டிருக்கேன். எனக்கு விளம்பரப் படங்கள் இயக்குறதுல நிறைய க்ளைன்ட்ஸ் இருக்காங்க. தவிர, இசை, இலக்கியம்னு எல்லாத்துலயும் ஆர்வமுண்டு. அதனால, எனக்கு நேரம் சரியா இருக்கு. நான் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணப் போனா, என் ஆபீஸ் வேலைகள் அப்படியே நின்னுடும். ஒரு கதையில அழுத்தமான நம்பிக்கை வந்தா மட்டுமே இறங்குவேன். அதுதான் காரணம்.’’

``தமிழ், இந்தின்னு நீங்க பண்ண வேண்டிய பல படங்கள் டிராப் ஆகியிருக்கு. அதெல்லாம் நடந்திருந்தால் இந்நேரம் இத்தனை படங்கள் பண்ணியிருக்கலாமேன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா?’’

“பல விஷயங்கள் நம்ம கட்டுப்பாட்டுல இல்லை. ஒரு இசையமைப்பாளருக்கு 50 ஹிட் இருக்கும். அதே சமயம், 50 பாடல்கள் வெளியாகாமலே இருந்திருக்கும். இது எல்லா கிரியேட்டர்களுக்கும் இருக்கு. நாம முடிச்சிருக்கிற வேலைக்கும் உழைச்ச வேலைக்கும் ஒரு பொருத்தமில்லாமை இருக்கு. நிறைய தயாரிப்பாளர்கள் தயாராகாமல் இந்தத் துறைக்குள்ள வந்து, ‘இந்தக் கதை அந்த ஹீரோவுக்கு சரியா இருக்குமா, இருக்காதா, அப்படியே சரியா இருந்தாலும் அந்த ஹீரோவுக்கு மார்க்கெட் மதிப்பு இருக்கா’ன்னு பல விஷயங்கள்ல குழப்பிடுறாங்க. சில நேரங்கள்ல, ஒரே ஹீரோவைத் துரத்திட்டே இருப்பாங்க. அவருக்கு மார்க்கெட் போயிடுச்சுனா, அந்தப் படம் அப்படியே நின்னுடும். இப்படிப் பல காரணங்கள் இருக்கு. அதைப் பத்திக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தால், நமக்குத்தான் இழப்பு. விதைகளை பூமியில விதைச்சா, ஒரு சில விதைகள்தான் முளைச்சு வரும். அது மாதிரிதான் நம்ம ஐடியாக்களும். அதனால, ‘இவ்ளோ படங்கள் பண்ணியிருந்தால் இவ்ளோ ஹிட் வந்திருக்கும், இவ்ளோ சம்பாதிச்சிருப்பேன்’னு எல்லாம் நான் நினைச்சதில்லை.”

“அஜித் வேண்டாம்னு நினைக்கிறார்... அமிதாப்புக்கு பிடிச்சிருக்கு!”

``நம்ம ஊர்ல விளம்பரங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போனது நீங்கதான். அந்த அனுபவங்களைச் சொல்லுங்க!’’

“நான் ஆரம்பத்துல நிறைய விளம்பரங்கள் கணக்குல எடுக்கலை. நான் கணக்குல வெச்சதிலிருந்து 800 விளம்பரங்களுக்கு மேல பண்ணியிருக்கேன். விளம்பரங்கள் எல்லாமே தினமும் நியூஸ் பேப்பர்ல வர்ற செய்தி. அன்னிக்கு ஹாட் டாபிக். ஆனா, அது இலக்கியமா மாறப் போறதில்லை. மறுநாளே பொட்டலம் கட்டப் பயன்படுத்திடுவாங்க. அது மாதிரிதான் விளம்பரங்களும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பேசப்படும். அது உருவாக்கப்படுறதுக்கு ஒரு காரணம் இருக்கு. அப்புறம், அது அவ்ளோதான். நான் கஷ்டப்பட்டு உழைக்கிறது இன்னொரு ஆளுடைய டீ, காபி விக்கிறதுக்குத்தானே ! அந்த நேரத்துல சினிமா பண்ணியிருந்தால் காலத்துக்கும் நிற்குமேன்னு சில நேரங்கள்ல யோசிச்சிருக்கேன். ஆனா, எனக்கு இது பிடிச்சிருக்கு.”

``முப்பது நொடிக்குள்ள நம்ம சொல்ல வேண்டிய கன்டன்டை சுவாரசியமா சொல்றது எவ்வளவு சவால்?’’

“கச்சிதமா ஒரு விஷயத்தைச் சொல்லணும்னா, முதல்ல தேவையில்லாத விஷயங்களை எல்லாம் வெளியே எடுத்திடணும். யாருக்கும் தெரியாத புதுப் பொருளை விக்கப்போறதில்லை. பல வருஷமா இருக்கிற அதே டீதான். அதை நாம எப்படிப் புதுசா சொல்லி விற்கிறோம்ங்கிறதுலதான் இருக்கு. வழக்கமா இருக்கிற விஷயங்களைப் புதுமைப்படுத்தி மக்களுடைய கண்களைக் கவரணும். வசனங்கள் அதிகமா இருக்கக்கூடாது. ஒளிப்பதிவுக்கும் பின்னணி இசைக்கும் ஒரு மேஜிக் நடக்கணும். இப்படிப் பல விஷயங்கள் இருக்கு. அப்படி நாம உருவாக்குற அந்த மேஜிக் கொஞ்ச வருஷம் ஓடும். அப்புறம், நம்ம ஐடியாக்களைப் புதுப்பிச்சுக்கணும். பழசாகிட் டோம்னா நம்மகிட்ட யாரும் வரமாட்டாங்க. நாம எடுத்ததைப் பார்த்து க்ளையன்ட் குறை சொல்லுவாங்க. அதை ஏத்துக்கணும். இப்போ ஓ.டி.டி தளத்துல வொர்க் பண்ணும்போது பெரிய ப்ராசஸ் இருந்தது. ‘இதை மாத்துங்க, அதை மாத்துங்க’ன்னு சொல்லும்போது டென்ஷனாகக் கூடாது. இப்படிப் பல சவால்கள் இருக்கு. அதே சமயம், அதுதான் என்னை அப்டேட்டா கிட்டே இருக்க உதவுது.’’

``டிவியில விளம்பரங்கள் வந்தால் சேனலை மாத்துறது வழக்கம். உங்க வீட்லயும் அப்படித்தானா?’’

“ஹாஹா... ஆமா. இப்போ நாம கஷ்டப்பட்டுப் படம் எடுக்குறோம். தியேட்டருக்குள்ள வந்து போனை நோண்டிக்கிட்டு, வாட்ஸப் பார்த்துக்கிட்டு மத்தவங்களையும் தொந்தரவு பண்ணிட்டு இருக்காங்க. அவங்களை நிமிஷத்துக்கு நிமிஷம் இம்ப்ரஸ் பண்ணலைன்னா இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்.”

``இந்திய சினிமாவுல இருக்கிற முன்னணி சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களை உங்க விளம்பரங்கள்ல நடிக்க வெச்சிருக்கீங்க. அந்த அனுபவங்கள்?’’

“இது எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. சுனில் கவாஸ்கர், கபில் தேவ்னு விளம்பரங்கள்ல நடிச்சாங்க. ஆனா, சச்சின் டெண்டுல்கர் வந்த பிறகுதான், அது பிரபலமாச்சு. எத்தனையோ ஸ்போர்ட்ஸ் ஸ்டார்களை விளம்பரங்களில் நடிக்க வெச்சிருக்கேன். எல்லோரும் ஆக்‌ஷன் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் டென்ஷனா இருப்பாங்க. ஆனா, எந்தவித டென்ஷனும் இல்லாமல் தன்னுடைய மேக்கப், அழகைப் பத்திக் கவலைப்படாமல் ரொம்ப கேஷுவலா இருந்த ஒரே நபர் தோனி மட்டும்தான். கிரவுண்ட்ல எல்லாப் பக்கமும் கேமரா இருக்கும். அதனால, ‘இந்த கேமரா முன்னாடி நாம இப்படி இருக்கணும்’னு ஃபீலிங்கே இருக்காது. நடிகர்களைவிட ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ் கேமரா முன்னாடி அவ்ளோ தைரியமா இருக்காங்க.”

``ஒளிப்பதிவுல புதுப்புது டெக்னாலஜிகள் வந்துகிட்டே இருக்கே?’’

“நான் போட்டோகிராபிக்குள்ள வரும்போது மெட்ராஸ்ல பத்தாயிரம் பேர்கிட்ட கேமரா இருந்திருக்கும். அதுல பெஸ்டா இருந்தா போதும். இன்னிக்கு அதே மெட்ராஸ்ல ஒரு கோடியே இருபது லட்சம் பேர் இருக்காங்க. அவங்க பயன்படுத்துற ஸ்மார்ட் போன்கள் மக்கள் தொகையைவிட அதிகம். சின்னக் குழந்தைகள், வயசானவங்க எல்லாம் கழிச்சுட்டுப் பார்த்தால் நிச்சயமா ஒரு கோடி போட்டோகிராபர்கள் இருப்பாங்க. அப்போ நம்முடைய கேமரா வொர்க் அதைவிட சூப்பரா இருக்கணும். நீட் தேர்வைவிடப் போட்டி அதிகம். செல்ஃபி எடுக்கிற ஒவ்வொருத்தரும் என்னுடைய சக போட்டியாளர்கள்.”

ராஜீவ் மேனன்
ராஜீவ் மேனன்

``அஜித் நடிச்ச ஒரே ஒரு விளம்பரத்தை இயக்குனது நீங்க. அந்த அனுபவம் பத்திச் சொல்லுங்க!’’

“அவரை நான் நடிக்கச் சொல்லிக் கேட்கலை. அந்த கம்பெனி கேட்டிருக்காங்க. அவரும் ஓகே சொல்லி வந்து நடிச்சார். எப்போவும் போல அவர் ரொம்ப கேஷுவல்தான். தனக்கான ஸ்டார் பவரைப் பயன்படுத்தி இந்த மாதிரி கமர்ஷியலா இருக்கிற விஷயங்கள் பண்ணி வர்ற வருமானம் வேண்டாம்னு நினைக்கிறார். நிறைய பேருக்கு அந்த உணர்வு உண்டு. ஆனா, அமிதாப் பச்சன் அப்படியில்லை. நிறைய விளம்பரங்கள்ல நடிச்சிருக்கிறார், நடிச்சிட்டிருக்கார். அது அவருக்குப் பிடிச்சிருக்கு.”

``கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேவை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு நினைச்சீங்களாமே?’’

“ஒரு மாற்றுத் திறனாளி பையனோடு அனில் கும்ப்ளேவுக்கு ஒரு நட்பு இருந்தது. அதைத்தான் ஒரு படத்துக்கான கதையா எழுதியிருந்தேன். ஆனா, அந்தக் கதையில சந்தோஷமான முடிவு இல்லை. அந்தப் பையன் இறந்துட்டார். அந்த விஷயத்தை சினிமாவுக்காக மாத்தி எழுதணும்னு தோணலை. ரெண்டு ட்ராஃப்ட் எழுதினேன். அப்போ மரணத்தின் விளிம்புல இருக்கிற பையனுக்கு இருக்கிற பெரிய குறிக்கோள் ஒரு ஸ்போர்ட்ஸ் ஸ்டாரை சந்திக்கிறதுதானா? அதுல என்ன மெசேஜ் சொல்லப்போறோம்னு தோணுச்சு. அதனால, அதை அப்படியே நிறுத்தியாச்சு. இப்போவும் நானும் அனில் கும்ப்ளேவும் நல்ல தொடர்புல இருக்கோம். அவருக்கும் போட்டோகிராபி மேல ஆர்வம் அதிகம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரெண்டு பேரும் காடுகளுக்குப் போய் புலிகளை போட்டோ எடுக்கிறது வழக்கம். அனில் கும்ப்ளேவுடைய அண்ணன் தினேஷ் கும்ப்ளே போட்டோகிராபர். அப்பப்போ என்னுடைய இன்ஸ்டிட்யூட்ல கெஸ்ட் லெக்சர் எடுப்பார்.”

``எம்.எஸ்.சுப்புலட்சுமியுடைய பயோபிக்கைப் படமாக்குற முயற்சியில இருந்த நீங்க, ஏன் கைவிட்டீங்க?’’

“ஆமா. எனக்கு இசை மேல ஆர்வம் அதிகம். அவங்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கலாம்னு நினைச்சு அதுக்கான கதையும் எழுதியிருந்தேன். அப்போ பெங்களூர்ல ஒருத்தர் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். அதனால தற்காலிகமா நிறுத்தி வெச்சிருந்தேன். அதுக்குள்ள ‘சர்வம் தாள மயம்’ படத்துக்கான ஐடியா வந்து வொர்க் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இப்போ ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கான கதை எழுதிட்டிருக்கேன்.”

``உங்க இன்ஸ்டிட்யூட் மூலமா பல ஒளிப்பதிவாளர்களை உருவாக்கியிருக்கீங்க. எவ்ளோ சந்தோஷமா இருக்கு?’’

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் குடும்பத்துல நிறைய பேர் ஆசிரியர்களா இருந்தாங்க. அந்த டீச்சிங் என் ஜீனுக்குள்ள இருக்குன்னு நினைக்கிறேன். எனக்கும் அது பிடிச்சிருக்கு. தமிழ் சினிமாவில் ‘காக்கா முட்டை’ மணிகண்டன், ‘முண்டாசுப்பட்டி’ ஷங்கர், ‘96’ சண்முக சுந்தரம், இப்போ ‘சூரரைப் போற்று’ பண்ணுன நிகேத் பொம்மின்னு நிறைய பேர் அந்த வரிசையில இருக்காங்க.”

``அமிதாப் பச்சன், அமீர்கான், அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்னு பாலிவுட்ல முன்னணி நடிகர்களுக்குக் கதை சொல்லியிருக்கீங்க. அந்தப் படங்கள் எல்லாம் டேக் ஆஃப் ஆகலை. அதெல்லாம் நாங்க எப்போ எதிர்பார்க்கலாம்?’’

“அது நம்ம கையில இல்லை. குறிப்பிட்ட காலத்துல ஒரு கதை வருது. அந்தக் கதையை வடிவமைச்சு முயற்சி பண்ணிட்டு இருந்தோம். அந்தக் காலம் மாறும்போது அந்தக் கதை மேல நமக்கே ஆர்வமில்லாமல் போயிடுது. நம்ம மனசுக்குள்ள இருந்துதானே கதைகள் உருவாகுது. அதுல இன்னும் நிறைய பூக்கள் பூக்கும்.”

``உங்களை இம்ப்ரஸ் பண்ணின நடிகர், ஒளிப்பதிவாளர் யார்?’’

“இமானுவேல் லுபெஸ்கியுடைய ஒளிப்பதிவு சூப்பரா இருக்கும். ‘பாதல் லோக்’ சீரிஸ்ல ஜெய்தீப் அலாவத் சூப்பரா நடிச்சிருந்தார். நம்ம ஊர்ல விஜய் சேதுபதி பிடிக்கும். ‘சூரரைப் போற்று’ படத்துல நிகேத் வொர்க் பிரமாதமா இருந்தது.”