Published:Updated:

``ஷூட்டிங் டைம்ல சிநேகா மேடம் கர்ப்பமா இருந்தாங்க... நான் ரொம்ப சிரமப்பட்டேன்!"- துரை செந்தில்குமார்

Durai senthil kumar with dhanush
Durai senthil kumar with dhanush

`அது ஒரு கனாக்காலம்’ படத்துல தனுஷ் சார் நடிச்சப்போ, நான் உதவி இயக்குநரா இருந்தேன். அதுக்கப்புறம் வெற்றி மாறன் சார்கிட்டே வேலைபார்த்தபோதும், தனுஷ் சாருடனான நட்புறவு தொடர்ந்துச்சு. அந்த நட்புதான் அவரோடு தொடர்ந்து நான் படங்கள் பண்றதுக்கான காரணம்.

`கொடி’ படத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷை வைத்து, `பட்டாஸ்’ படத்தை இயக்கியிருக்கும் துரை செந்தில்குமாரை சந்தித்துப் பேசினோம்.

உங்களுடைய முதல் இரண்டு படங்களையும் தனுஷுடைய தயாரிப்பில் பண்ணுனீங்க. அடுத்து இரண்டு படங்களில், அவரை இயக்கியிருக்கீங்க. தனுஷோடு மட்டுமே பயணிக்க என்ன காரணம்..?

dhanush
dhanush

``நான் உதவி இயக்குநரா இருந்த சமயத்திலேயே தனுஷ் சாரோடு நல்ல பழக்கம் இருந்துச்சு. பாலு மகேந்திரா சாரோட `அது ஒரு கனாக்காலம்’ படத்துல தனுஷ் சார் நடிச்சப்போ, நான் உதவி இயக்குநரா இருந்தேன். அதுக்கப்புறம் வெற்றி மாறன் சார்கிட்டே வேலைபார்த்தபோதும், தனுஷ் சாருடனான நட்புறவு தொடர்ந்துச்சு. அந்த நட்புதான் அவரோடு தொடர்ந்து நான் படங்கள் பண்றதுக்கான காரணம். அதுமட்டுமல்லாமல், அவர் என் மேல வெச்சிருக்கிற நம்பிக்கை; நான் அவர் மேல வெச்சிருக்கிற மரியாதை, ஒரு கேரக்டரை கண் முன்னாடி கொண்டுவர்றதுக்கு அவர் படுற மெனக்கெடல்கள்னு பல காரணங்கள் இந்தத் தொடர்பயணத்துக்குப் பின்னால் அடங்கியிருக்கு.’’

`வடசென்னை’, `அசுரன்’ படங்களில் தனுஷ் லுக்ல நிறைய முதிர்ச்சி தெரிஞ்சது . ஆனால், `பட்டாஸ்’ படத்தில் அவருடைய பழைய துள்ளலான நடிப்பைப் பார்க்க முடிஞ்சது. எந்தளவுக்கு அதை என்ஜாய் பண்ணி நடிச்சார்..?

dhanush
dhanush

``ரொம்பவே என்ஜாய் பண்ணுனார். `அசுரன்’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்போதான், `பட்டாஸ்’ ஷூட்டிங்கும் நடந்துச்சு. `அங்க ரொம்ப சீரியஸா நடிச்சுட்டு, இங்க ஜாலியா நடிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’னு தனுஷ் சாரே அடிக்கடி சொல்லிட்டு இருந்தார்.’’

`பட்டாஸ்’ படத்தில் பேசியிருக்கும் `அடிமுறை’ என்கிற தற்காப்புக்கலை உங்களுக்கு எப்போ அறிமுகமாச்சு?

``கிக் பாக்ஸிங்கை மையமா வெச்சு, வெற்றி மாறன் சார் கதை எழுத, நான் அந்தப் படத்தை இயக்குறதாகத்தான் முதலில் ஆரம்பிச்சோம். கிக் பாக்ஸிங்கைப் பற்றி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சப்போதான், களரிக்கும் முன்னாடி அடிமுறைனு ஒரு தற்காப்புக்கலை இருந்தது தெரிய வந்துச்சு. அடிமுறையை கன்னியாகுமரியில் இன்னும் கத்துக்கிட்டுதான் இருக்காங்க. அவங்களை சந்திச்சு பல விஷயங்களை கேட்டுத்தான் இந்தக் கதையை எழுதுனேன். அவங்க சொன்ன எல்லா விஷயங்களையும் என்னால இந்தப் படத்துக்குள்ள கொண்டு வர முடியலை. ஒரு கமர்ஷியல் படத்துல, மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களோடு சேர்த்து, எவ்வளவு விஷயங்களைக் கொடுக்க முடியுமோ அதை மட்டுமே கதைக்குள்ள சேர்த்துக்கிட்டேன். தனுஷ் சாரும் அடிமுறையைப் பற்றிச் சொன்னதும், ரொம்பவே ஆர்வமாகிட்டார். `கிக் பாக்ஸிங் வேணாம். இதை மட்டுமே வெச்சு படம் பண்ணலாம்’னு சொன்னார். அதுக்கப்பறம் கதையை டெவலப் பண்ணுனேன்.’’

`புதுப்பேட்டை’ படத்துக்குப் பிறகு தனுஷும் - சினேகாவும் சேர்ந்து நடிச்சிருக்காங்க; இந்த காம்போவை எப்படி திரும்ப கொண்டுவந்தீங்க?

dhanush and sneha
dhanush and sneha

``படத்துல சினேகா மேடத்தின் கேரக்டர், தனுஷ் சார் கூடவே படம் முழுக்க வரும். இந்தக் கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு நாங்க பல நாள்கள் யோசிச்சிருக்கோம். நான் சில பெயர்களைச் சொன்னேன்; தனுஷ் சார் சில பெயர்களைச் சொன்னார். ஆனால், சரியான ஆள் செட்டாகவே இல்லை. ஒரு நாள் டிஸ்கஷனில் சினேகா மேடமோட பெயரைச் சொன்னாங்க. நான் உடனே தனுஷ் சாருக்கு மெசேஜ் அனுப்புனேன். அவர் `சூப்பர்’னு ரிப்ளே பண்ணுனார். அப்பறம் சினேகா மேடம்கிட்ட கதை சொன்னேன். படத்துல அம்மா கேரக்டரும் இருக்கிறதுனால, முதலில் யோசிச்சாங்க. அப்புறம், அடுத்த நாளே கால் பண்ணி ஓகே சொல்லிட்டாங்க. அவங்களோட மெனக்கெடலும் இந்தப் படத்துக்கு ரொம்பவே முக்கியம்.

முதலில் நாங்க ப்ளாஷ்பேக் போர்ஷனைத்தான் ஷூட் பண்ணினோம். அப்போ எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அடிமுறையை ஈசியா கத்துக்கிட்டாங்க. சண்டை போடுற காட்சிகளையும் ரொம்ப நல்லா பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம் சென்னையில ஷூட் பண்ற டைம், அவங்க கர்ப்பமா இருந்தாங்க. `அவங்களை எப்படி வேலை வாங்குறது'னு மனதளவில் நான் ரொம்ப சிரமப்பட்டேன். அவங்களும் அந்த நிலைமையில நைட் ஷூட், ஃபைட் சீன் எடுக்கும் போதெல்லாம் ரொம்பவே சிரமப்பட்டாங்க. இருந்தாலும், எங்களுக்காக அதை முடிச்சுக் கொடுத்தாங்க.’’

சிவகார்த்திகேயன் கரியரின் தொடக்கத்தில் அவரை வைத்து இரண்டு படங்கள் இயக்கியிருக்கீங்க. மீண்டும் அவரோடு இணைந்து படம் பண்றதுக்கான ஐடியா இருக்கா; அவரோட வளர்ச்சியைப் பார்க்கும்போது எப்படி இருக்கு..?

``சிவகார்த்திகேயனோட இந்த வளர்ச்சி ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நம்மளோடு பயணித்த நண்பர், இன்னைக்கு ஒரு பெரிய ஸ்டாரா இருக்கிறது பெருமைதானே. அந்த வளர்ச்சிக்கான எல்லா தகுதியும் உடையவர், சிவா. நாங்க ரெண்டு பேரும் இப்போ வரைக்கும் நல்ல நட்புலதான் இருக்கோம். அடுத்த படத்துக்கான சரியான நேரம் வரும்போது கண்டிப்பாக பண்ணுவோம்.’’

அடுத்த கட்டுரைக்கு