Published:Updated:

அடிக்கடி ரசிகர்களுடன் சந்திப்பு - அரசியல் பாதையை நோக்கி நகர்கிறாரா விஜய்?!

ரசிகர்களுடன் முன்பு செல்ஃபி எடுத்த விஜய்
News
ரசிகர்களுடன் முன்பு செல்ஃபி எடுத்த விஜய்

நடிகர் விஜய் தனது ரசிகர்களை மீண்டும் சந்தித்திருக்கிறார். ஏற்கெனவே, அரசியல் பிரவேசத்துக்குத் தயாராகிவிட்டதாகச் செய்திகள் உலா வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Published:Updated:

அடிக்கடி ரசிகர்களுடன் சந்திப்பு - அரசியல் பாதையை நோக்கி நகர்கிறாரா விஜய்?!

நடிகர் விஜய் தனது ரசிகர்களை மீண்டும் சந்தித்திருக்கிறார். ஏற்கெனவே, அரசியல் பிரவேசத்துக்குத் தயாராகிவிட்டதாகச் செய்திகள் உலா வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ரசிகர்களுடன் முன்பு செல்ஃபி எடுத்த விஜய்
News
ரசிகர்களுடன் முன்பு செல்ஃபி எடுத்த விஜய்

சினிமாவில் ஆரம்பத்தில் சில சறுக்கல்களைச் சந்தித்த நடிகர் விஜய், பின்னாளில் தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாகப் பரிணாம வளர்ச்சி கண்டார். முன்னதாக, "என்னை தாலாட்ட வருவாளோ... நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ..."என்று பாடும் 'லவ்வர் பாய்' ஹீரோவாக வலம் வந்தார். பிறகு ஆக்‌ஷன் படங்களின் தெறிக்கவிட்டுவருகிறார். பின்னாளில், பல சீனியர் நடிகர்களுக்கு ஏற்பட்ட அரசியல் ஆசை நடிகர் விஜய்க்கும் தொற்றிக்கொண்டது என்கிறார்கள்.

இதை இளைய தளபதியாக இருந்த விஜய், தளபதியாக மாறி தனது படங்களின் மூலமாகவும் மறைமுகமாக வெளிப்படுத்தத் தொடங்கினார். இது 2013-ம் ஆண்டு வெளியான 'தலைவா' படத்தின் மூலம் அரசியல் ஆசையைத் தீவிரப்படுத்தினார் என்கிறார்கள். இதனால் அந்தப் படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல் உண்டானது.

விஜய், ஷாலினி
விஜய், ஷாலினி

முன்னதாக `புதிய கீதை’, `காவலன்’, `துப்பாக்கி’ ஆகிய படங்கள் சர்ச்சையில் சிக்கியிருந்தாலும் 'தலைவா' படம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. இதற்கு, 'டைம் டு லீட்' என்கிற டேக் லைனுடன் 'தலைவா' பட வெளியீட்டுக்கான அறிவிப்பு வந்ததுதான் காரணம் என்றார்கள். இதையடுத்து அந்தப் படத்தை வெளியிடக் கூடாது என திரையரங்குகளுக்கு மிரட்டல்கள் வந்ததாகச் செய்திகள் வெளியாகின.

பிறகு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கப் படக்குழு முயன்றது. ஆனால், அவர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் பல நாள்கள் கழித்து 'டைம் டு லீட்' என்கிற வாசகம் நீக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து, அவருக்குப் படத்தை வெளியிட உதவுமாறு கோரிக்கை வைத்து நடிகர் விஜய் காணொளி வெளியிட்ட பிறகு அந்தப் படம் வெளியானது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

பின்னர் வந்த 'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து இடம்பெற்றிருந்த வசனம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி பாஜக-வினர் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து வெளியான 'பிகில்' படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவில் பேசிய விஜய், ''யாரை, எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கே கரெக்டா உட்காரவைத்தீர்கள் என்றால், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்'' என எதிர்மறையாக அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தார்.

இதற்கு அதிமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் மீது போலீஸார் தாக்குதல்கள் நடத்த, சர்ச்சையானது. மேலும் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு விஜய் அரசியல் பேசுவதும், அதற்கு அரசியல் கட்சிகள் எதிர்வினையாற்றுவதும் வாடிக்கைதான் என்றாலும் தற்போது விஜய் தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்துவருகிறார்.

பிகில்
பிகில்

பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் ரசிகர்களை மீண்டும் சந்தித்துப் பேசி, மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். எனவேதான் இதை அரசியலுக்கு வருவதற்கான அடுத்த 'மூவ்' ஆக பலராலும் பார்க்கப்படுகிறது. முன்னதாகக் கடந்த மாதம் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இதைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் மீண்டும் ரசிகர்களைச் சந்தித்தார். இதில் செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது கறுப்பு நிற ஆடையில், புதிய ஹேர்ஸ்டைலில் வந்த அவரைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

அப்போது, "எந்தப் பிரச்னையிலும் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிக்கக் கூடாது. அடுத்த முதல்வர் என வர்ணித்து போஸ்டர் ஓட்டக் கூடாது. மக்கள் நலப் பணிகளைத் தீவிரமாகச் செய்ய வேண்டும். அதற்குத் தேவையான உதவிகள் செய்து தரப்படும். அனைத்துப் பகுதிகளிலும் இயக்கத்தை பலப்படுத்த வேண்டும்.

விஜய்
விஜய்

குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தற்போது நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்த்த நிர்வாகிகளின் எண்ணவோட்டத்தையும் நேரடியாகக் கேட்டு அறிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், "தமிழக அரசியல் ஏற்கெனவே 'ஹவுஸ்ஃபுல்' ஆக இருக்கிறது. ரஜினி தனது அரசியல் வருகையை ரத்துசெய்துவிட்டுச் சென்றது விஜய் போன்றவர்களுக்கு ஒரு பாடம். அவ்வளவு பெரிய நடிகரே ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். உடல்நிலையைக் காரணமாகச் சொன்னாலும், நினைத்ததுபோல் நடக்காது என்று தோன்றியதுதான் காரணம்.

பிரியன்
பிரியன்

உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெறுவது பெரிய விஷயம் இல்லை. அவர் அரசியலுக்கு வந்தால் பெரிய அளவுக்கு வெற்றி கிடைப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. `வாரிசு’ படத்தில் இருக்கும் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துவிட்டார்கள். உதயநிதி தற்போது இருக்கும் நிலையில் யாருடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க மாட்டார். விஜய்யின் நோக்கம் படம் ஓட வேண்டும். அதேநேரத்தில் விஜய்யும் யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டார்" என்றார்.