Published:Updated:

`பாஸ்போர்ட் இருந்தால்தான் நான் இந்தியனா?!’ - அக்‌ஷய் குமார் வருத்தம்

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், தன் கனடா குடியுரிமையை ரத்து செய்துவிட்டு இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட் திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவராக இருந்து வருகிறார் அக்‌ஷய் குமார். சமீபகாலமாக இவர் நடிக்கும் அனைத்துப் படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்து வருகின்றன. நாட்டுப்பற்றுமிக்க பல படங்களில் நடித்துப் புகழ் பெற்ற இவருக்குத் தற்போது அதே நாட்டுப்பற்றால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்‌ஷய் குமார் வாக்களிக்கவில்லை. இதற்கு அவரிடம் கனடா நாட்டின் குடியுரிமை இருந்ததே காரணமாகக் கூறப்பட்டது. அப்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, அது தொடர்பாக விளக்கமளித்த அக்‌ஷய் குமார், “என்னிடம் கனடா குடியுரிமை இருப்பதை நான் எப்போது மறைக்கவோ, மறுக்கவோ இல்லை. அதேபோல், நான் கடந்த 7 வருடங்களாக கனடா சென்றதில்லை என்பதும் உண்மை. நான் இங்குதான் பணியாற்றுகிறேன், இந்தியாவில்தான் வரி செலுத்துகிறேன். யாருக்கும் என் நாட்டுப்பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை” என்று பேசியிருந்தார்.

ஃபோர்ப்ஸ் பொழுதுபோக்கு பிரபலங்கள் பட்டியலில் `அக்ஷய்குமார்'

இந்நிலையில், தற்போது அவர் கனடா குடியுரிமையை ரத்து செய்துவிட்டு இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, மும்பையில் பேசிய அவர், “தொடக்கத்தில் நான் நடித்த 14 படங்கள் தொடர் தோல்விகளைச் சந்தித்தன. அதனுடன் என் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன். அந்த நேரத்தில் கனடாவில் உள்ள என் நெருங்கிய நண்பர், என்னை அந்நாட்டுக் குடியுரிமை பெற்றுக் கொள்ள அங்கு வரும்படியும் நாம் இருவரும் சேர்ந்து பணி செய்யலாம் என்றும் கூறினார்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

அதேநேரத்தில் வெளியான என்னுடைய 15-வது படம் பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. அதன்பின்னர் கனடா செல்வது பற்றி நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் இல்லை. இப்போதுதான் விண்ணப்பித்துள்ளேன். பாஸ்போர்ட்டை வைத்துத்தான் நான் இந்தியன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதைக் கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது. நான், என் மனைவி, குழந்தைகள் அனைவருமே இந்தியர்கள்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளதும் சர்ச்சையாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு