சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கபடதாரி - சினிமா விமர்சனம்

சிபி சத்யராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
சிபி சத்யராஜ்

அப்படியே தரவிறக்கியிருக்காமல் கொஞ்சம் தன் பங்கு தந்திரங்களையும் கலந்திருந்தால் கவர்ந்திருப்பார் இந்த ‘கபடதாரி.’

புதைந்துபோன உடல்களோடு தன் காக்கிச்சட்டைக் கனவுகளையும் மீட்டெடுக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் போராட்டமே இந்த ‘கபடதாரி.’

போக்குவரத்து எஸ்.ஐ-யாகப் பணியாற்றும் சிபி சத்யராஜுக்கு சட்டம் ஒழுங்குத் துறையில் பணியாற்றவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. ஆனால் சீனியர்கள் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கி றார்கள். மேம்பாலம் அமைக்கும் பணியின்போது சில எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட, அவை புதைக்கப்பட்டு 40 ஆண்டு களுக்கும் மேல் ஆகியிருக்கலாம் எனக் கண்டுபிடிக்கிறார்கள். சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கு மாற இந்த வழக்கு ஒரு நுழைவுச் சீட்டாய் இருக்கும் என நினைக்கும் சிபி உண்மைகளைத் தோண்டியெடுக்க முயல்கிறார். தோண்டத் தோண்ட அப்புதைகுழி உண்டாக்கும் அதிர்வுகள் பெரிய அளவில் வெடிக்க... அதன் விளைவுகள்தான் கதை.

சிபி சத்யராஜ்
சிபி சத்யராஜ்

சிபி சத்யராஜ், முகத்தில் கேள்விகளைத் தேக்கிவைத்து விடைதேடும் கதாபாத் திரத்துக்கு நல்ல பொருத்தம். ஆனால் மற்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டும் இடத்தில் சறுக்குகிறார். அவருக்கும் சேர்த்து ஜெயப்பிரகாஷ் நடித்துத்தள்ள, அது நிறையவே உறுத்துகிறது. சம்பத் மைத்ரேயா நிலையும் அதுவே. நாசர் மட்டுமே படத்தில் இயல்பாய்த் தெரிகிறார். நந்திதாவும் படத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பக்குழுவில் கவனிக்க வைப்பது சைமன் கிங்கும் அவரின் பின்னணி இசையும் மட்டும்தான். காட்சிக்குக் காட்சி கன்னட கவாலுதாரியின் சாயல் தெரிவதால் இராசாமதியின் ஒளிப்பதிவு மங்கி மறைகிறது.

ரீமேக்கில் இரண்டு வகை. முதலாவது, மையக்கருவை மட்டுமே வைத்துக் கொண்டு தன் ஸ்டைலில் ஒரு படைப்பாளி படம் பண்ணுவது. இரண்டாவது, கார்பன் பேப்பரை வைத்தது போல அப்படியே எடுப்பது. ‘கபடதாரி’ இதில் இரண்டாவது வகை. படத்தின் கன்னட வெர்ஷனைப் பார்க்கா தவர்களை முதல்பாதி பரபரப்பாய்த் தக்கவைத்தாலும் ட்விஸ்ட் வெளிப்பட்ட பின்னான இரண்டாம்பாதி லேசாக பொறுமையை சோதிக்கவே செய்கிறது.

கபடதாரி - சினிமா விமர்சனம்

திரைக்கதைத் தழுவலில் தனஞ்செயன் - ஜான் மகேந்திரனின் பங்கு புதிதாக என்ன இருந்தது என்பது கேள்விக்குறி. குறைந்தபட்சம் வசனங்களிலும் காட்சிகளிலும் தென்படும் செயற்கைத் தனத்தையாவது குறைத்தி ருக்கலாம். தன் தவற்றை மறைக்கத் தேடித்தேடி வேட்டையாடும் வில்லன் அத்தனைக்கும் சாட்சியான ஒருவரை மட்டும் 40 ஆண்டுகள் விட்டு வைத்திருப்பது போன்ற லாஜிக் குறைபாடுகளைக் களைந்திருக்கலாம்.

அப்படியே தரவிறக்கியிருக்காமல் கொஞ்சம் தன் பங்கு தந்திரங்களையும் கலந்திருந்தால் கவர்ந்திருப்பார் இந்த ‘கபடதாரி.’