அத்தியாயம் 1
Published:Updated:

காதல் படிக்கட்டுகள் - பாரதிராஜா!

Kadhal Padikattugal - Bharatiraja
பிரீமியம் ஸ்டோரி
News
Kadhal Padikattugal - Bharatiraja

நான் மயிலை நேசித்தேன்; குயிலை நேசித்தேன், ஒரு புறாவை மணந்தேன்.

காதல் படிக்கட்டுகளா? இல்லை, நான் இங்கே முரண்படுகிறேன். படிக்கட்டுகளென்றால் எண்ணி எண்ணி எட்டுவைக்க வேண்டும். எண்ணி எண்ணி எட்டுவைப்பது கணிதம். காதல் - தென்றலைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பறக்கின்ற பறவை. இன்னும் சொல்லப்போனால், சிறகு முளைத்த மென்மையான இதயக் குஞ்சு.

அது தத்தித் தத்தி உற்சாகக் கிறக்கத்தில் உயரப் பறந்து காதல் தேசத்துக் கண்ணாடிக் கோட்டைகளை உடைக்கிற பறவை. உடைத்துவிட்டால் உல்லாசம்தான். பறந்து பறந்து, முட்டி விழுந்து சிறகுகள் இழந்து ரத்தம் கசிய, இதயம் கனத்துப்போய் பறக்க முடியாமல் தவிக்கும்போது, அது கனவுக் குதிரைகளின் சவாரியை நாடுகிறது.

அந்த கனவுப் பிரதேசத்துப் பஞ்ச கல்யாணி யதார்த்த பூமியில் காலடி பதித்து புதைந்து ஓடமுடியாமல், சிக்குண்ட கால்களை விடுவிக்கத் திணரும்போது, நம்மையும் குப்புறத் தள்ளி யதார்த்தத்தில் அமிழ்த்திவிடுகிறது.யதார்த்தத்தில் நான். என்னுள் ஏற்கெனவே வாழ்ந்து பின்னர் ஒவ்வொரு காலகட்டத்து மாற்றங்களிலும் என்னோடு உடன்படமுடியாமல் கழன்றுகொண்டு சென்றுவிட்ட இரண்டு ஜீவன்கள் பதித்த ஆறாத மனச்சுவடுகள் மட்டும் பொக்கிஷமாக இன்னும் என் இதயத்தில் இருக்கின்றன.

இந்த இதயநிலாவில் முதலில் தடம்பதித்துச் சென்ற ஆர்ம்ஸ்ட்ராங், பால்யாண்டியன். பஞ்ச கல்யாணியில் சவாரி செய்து குப்புற விழுந்து தடம்பதித்துச் சென்றவன் சின்னச்சாமி . யதார்த்தத்தில் இன்னும் தேடுதலோடு ஊர்ந்து கொண்டிருப்பவன், பாரதிராஜா.

Kadhal Padikattugal - Bharatiraja
Kadhal Padikattugal - Bharatiraja

முதலில் சொன்ன பால்யாண்டிக்கும் ஒரு காதல். அது காதலா? அதைப் பின்னர் யோசிப்போம். அந்த முதல் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு எப்போது சிறகு முளைத்தது? அது பறந்தது எவ்வளவு காலம்? பின்னர் அது சிறகொடிந்தது எப்படி?

பாவம் பால்யாண்டியன்!

பின்னர் சிறகுகளும் குதிரைகளும் தேவைப்படாமல் அவனுக்கு அவனே சுமையாகவும் சிலநேரங்களில் பலருக்குச் சுமையாகவும் சிறகுகளும் குதிரைகளும் கால்களும் இல்லாமல்... உணரும்போது-நடந்தவையெல்லாம் பொய்யாய்... கனவாய்... மாயையாய்த்தெரிகிறது.

எது நிஜம்?

எது பொய்?

எதுவும் நிஜமல்ல.

பொய்யை நிஜமென்று நாம் நம்பவேண்டும்.

அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் இந்தப் பிரபஞ்சமும் அவனும் பிரகாசமாக இருக்கமுடிகிறது. இங்கே அவன் நானாகிறேன். நான் நிஜமே. காதல் நிஜமே.

இந்தப் பிரபஞ்சத்தில் முதல் காதல் தீபத்தை யார் ஏற்றியிருப்பார்? அந்த முதல் காதல் எப்படிப் பிறந்திருக்கும்?

கோடானுகோடி ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஒரு ஜீவன் முதன்முதலாக இந்தப் பூமியை நேசிக்க ஆரம்பித்ததோ... எந்த ஒரு மனிதன் முதன்முதலாக சூரியனில் குளித்து, சந்திரனில் நடந்து, நட்சத்திரப்பூக்களைப் பறித்துக் கண்ணிமைகளுக்குள் பூட்டி வைத்துக்கொண்டுஆராய்ச்சிக்கு இடமளிக்காமல் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடினானோ... எவன் ஒருவன் காற்றையும் நீரையும் நெருப்பையும் காடு மலைகளையும் கடல்களையும் கடல்வாழ் ஜீவராசிகளையும் மரம், செடி, கொடி, பூ, காய் கனிகளையும் நேசித்தானோ...

எவன் ஒருவன் விலங்குகளையும் பறவைகளையும் பூச்சிகளையும் புழுக்களையும்கூட பூஜித்தானோ... எவன் ஒருவன் மனிதர்களையும் அதற்கும் மேலாகத் தன்னையும் நேசித்தானோ அவனுக்குத்தான் முதல் காதல், உதயமாகியிருக்க வேண்டும்.

காதல் இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சம் அழகாக இருந்திருக்காது. விஞ்ஞானக் கண்களுக்கு மட்டும்தான் இந்தப் பூமி-பூகோளம். காதலுக்கு இந்தப் பிரபஞ்சம் - பூக்கோளம்.

பூமிக்குள் ஆயிரம் இருக்கலாம். அது ஆராய்ச்சிக்கு உட்பட்டது. காதலுக்குள்ளும் ஆயிரம் இருக்கலாம். இது ஆராயப்படக்கூடாதது.

தென்றலால் தோலுரிக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகளின் அணுத்திவலைகளைத் தாங்கி தென்றல் உலா வரும்போது அது நம் மேனி தொட்டால் ஒரு சிலிர்ப்பு தோன்றுமே...

தேகம் முழுதும் மின்சாரம் பாய்ந்த ரோமாஞ்சலி ஏற்படுமே... அந்த உணர்வை ஆராய்ச்சியா பண்ணிப் பார்க்கமுடியும்?காதலை உணரவேண்டும். ஆராயக்கூடாது.

நான் உணர்ந்த நேரம் என் இதயக் குஞ்சுக்கு சிறகு முளைக்க வேண்டாமா என்று ஆருடம் பார்த்த வேளை! ஆஹா... ஆஹா... அது என்ன அந்த அல்லிநகரத்து ராஜகோபுர வீதிகளில் ஒரு குட்டி மயில்! ராஜகோபுரமா, அதுவும் அல்லிநகரத்திலா?! (குட்டிச் சுவர்களைக்கூட ராஜகோபுரமாக்கியது குட்டிமயில்தானோ)அது என்ன அது... அந்த மயில் தன் கழுத்தை ஒருபுறமாகத் திருப்பி என் கண்ணிமையில் ஒரு மின்னலைப் பாய்ச்சிவிட்டு நடந்து போனதா... பறந்து போனதா... இல்லை, மாயமாய் மறைந்து போனதா?

ஜென்ம ஜென்மமாக தேடியலைந்த ஒன்றை நான் பார்த்துவிட்டேனா எனக்காகவே படைக்கப்பட்ட ஒன்று இந்த மார்கழித் திங்களில் மயிலாக வந்ததா..? கொஞ்சம் நான் என்னை உகப்பிவிட்டுக்கொண்டு நிதானத்துக்கு வருகிறேன்.

தேடுகிறேன்... தேதிகள் நடந்தன... வாரங்கள் நகர்ந்தன. தேடுதல் நிற்கவில்லை. கடைசியில் கண்டுபிடித்துவிட்டேன்.`பக்கத்துத் தெருவுதான்' பலவாரங்கள் கழித்து கண்டுபிடித்த மர்மம். கண்டுபிடிப்புக்குப் பின்னால் பால்பாண்டிக்கு இந்த ஊர் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

பிறப்பு அல்லிநகரத்தில்... வளர்ப்பு தேனியில்... பன்னிரண்டு வயது வரை. தேனியில், சற்று வசதியாக வாழ்ந்துவந்தோம். என் தந்தை, பொருளாதார இடிபாடுகளில் நொறுங்கி விழு, நெஞ்சுக் கூட்டுக்குள் என் மூன்று சகோதரிகளையும், மூன்று சகோதரர்களையும் என்னையும் என் தாயையும் பத்திரமாகக் காப்பாற்றிக்கொண்டு, நான் பிறந்த அல்லிநகரத்தில் என் தாத்தா கருப்பத்தேவர் வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தபோது, அந்த வயதில் திடீரென்று இருட்டுக்குள் விழுந்ததுபோல் இருந்தேன்.

மின்சாரத்திலிருந்து மண்ணெண்ணெய்க்குள் விழுந்திருக்கிறேன். பள்ளிக்கூட வாசலுக்குப் பதிலாக அதிகமாக மிதித்த இடம் ரேஷன்கடை வாசல். அறுநூறு, எழுநூறு வீடுகளும் இனம் மறந்து, மொழி மறந்து, ஜாதிகளைத் துடைத்துவிட்டு ஒரே குடும்பம் போல் உறவுப்பாலம் அமைத்துக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை.

கசாப்புக் கடை கர்த்தா ராவுத்தர் என்னை `மாப்ளே' என்று அழைக்கும்போதும், மண்டையன் ஆசாரி மகன் நடராசு என்னை `மச்சான்' என்று விளிக்கும்போதும், வடக்குத்தெரு பெரியநாயக்கர் என்னை `மருமகனே' என்று கூப்பிடும்போதும், எனக்கு வருமே ஒரு கோபம்... அன்னியோன்னியம் புரியாத சின்னப் பையன்தானே அப்போது.

சின்னப் பையனா... அப்படியென்றால் சிறகு முளைக்கும் முன்பே பறந்தது எப்படி? நான் எங்கே பறந்தேன்... என் இதயக்குஞ்சல்லவா..!

இரண்டு வருடங்களாகச் சலித்துப் போன அந்த அல்லி நகரம். சுவர்க்க பூமியாக எப்படி மாறியிருக்கிறது! இப்போது நான் யார்? பல்துலக்கக்கூட பஞ்சாங்கம் பார்க்கும் பால்யாண்டியனா? சித்திரா பவுர்ணமிக்கும் தைப்பொங்கலுக்கும் தீபாவளிக்கும் `ஆட்டோரல்’ சத்தம் கேட்டு இட்லி தோசை சாப்பிடவேண்டுமென்கிற ஆசையில், அதிகாலையில் எழுந்து பல் துலக்கியதாகப் பாவனை செய்ததைத் தவிர படு சோம்பேறியான இந்தப் பால்யாண்டியனுக்குப் பல்துலக்கும் ஆசை வந்துவிட்டது!

அரையணாவை சண்டை போட்டு வாங்கி, செல்லம் சேசப்புக்குச் செலவழிக்கிறேன். கக்குப் பிடித்த சட்டை ட்ரவுசர் சுகாதாரமடைகிறது. இப்போதெல்லாம் அழுக்குத் தேய்த்துக் குளிக்க ஆரம்பித்துவிட்டேன். நகங்கள் வெட்டிக் கொள்கிறேன். மூக்குச்சளி வெளியே வர அனுமதிப்பதில்லை. முகத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க நினைக்கும் பருக்களின் அடையாளங்களில் என்னை நானே அங்கீகரித்துக் கொள்கிறேன்.

மாற்றம்... எல்லாம் மாற்றம்! புத்தகம் இனிக்கிறது, பாடம் பிடிக்கவில்லை. பள்ளிக்கூடம் பிடிக்கிறது, வாத்தியார் பிடிக்கவில்லை. ஊர் பிடிக்கிறது, மக்கள் பிடிக்கவில்லை. பின் யார் பிடிக்கிறது..? மயில்... மயில்... மயில்!

இரவு மட்டும் தூங்குகிறது. இமைகள் மூடவில்லை. இரவு விழிக்கத் துவங்குகிற நேரத்தில் இமைகள் கெஞ்சுகின்றன. எங்கோ ஒரு நாதாங்கிச் சத்தம் எழுப்பிவிட்டு விடுகிறது. அது வடக்குத் தெருவிலிருந்து வருகித சங்கீதம். என் மயில் எழுந்த பிறகு, எனக்குத் தூக்கம் வருமா என்ன..? எட்டரை மணிக்குப் பிறகே விழிக்கத் துவங்கிய என் உலகம், இப்போதெல்லாம் ஆறரை மணிக்கெல்லாம் ஆரம்பமாகிவிடுகிறதே!

குளிப்பதற்கு ஊருக்கு வெளியே நாய்னா நாயக்கர் கிணற்றுக்குப் போக வேண்டும். வீட்டில் கோவணம் கட்டிக் குளிப்பது இனி எனக்கு ஆகாதே! எழுந்து ட்ரவுசரை மாட்டிக்கொண்டு அதற்கு மேலாக என் அப்பனின் வேட்டியைச் சுற்றிக்கொண்டு நான் கிளம்பும்போது, ``எலேய்... டவுசரைப் போட்டு மேல வேட்டி கேக்குதோ உனக்கு? திடீர்னு பெரிய மனுஷனாயிட்டியளோ..." என் அம்மாவின் சிறப்புரை ஆரம்பிக்க... ``ஆமா. பெரிய மனுஷனாயிட்டேன்!" - நினைத்ததெல்லாம் சொல்லிவிட முடியுமா இப்போது? சீக்கிரமாக வெளியேறி விடுகிறேன்.

வடக்குத் தெரு கடந்து நடந்து போகப் போகிற நினைப்பே எனக்குள் சந்தோஷம் ஊற்றுகிறதே... மேல் துண்டை தோளுக்கும் கழுத்துக்குமாய் மாலை போட்டுக் கொண்டு நடக்கிறேன். வருகிறது, வடக்குத் தெரு!

என் இதயத்தை அந்த வாசலில் தெளித்துவிட்டுப் போனால், எப்படியும் மயில் அதன் மேல் கோலமிட்டுத்தானே ஆகவேண்டும். வாசலை நெருங்குகிறேன். என் மூச்சின் வெப்பத்தில் இதயம் கனிந்து வாசலில் தெறித்து விழுகிறது. நிம்மதி. தாண்டி பத்தடிகூட நடந்திருக்க மாட்டேன். மறுபடி நாதாங்கிச் சத்தம். திரும்பிப் பார்க்கிறேன். என் பார்வையில் அந்தக் காட்சி.

என்ன இது... என் இதயத்தைத் தெளித்த அந்த வாசலில் சாணியையா... வேண்டாமென்று கையசைக்க நினைக்கிறேன். சாணியை வைத்த அந்த பூங்கரம் கூடவே அவளையொத்த நிறத்தில் ஒரு பூவையும் வைக்கிறதே மஞ்சளாய் ஒரு பூசணிப்பூ!என் நெஞ்சுக்குள் கண்ணாடி வளையல்கள் சத்தம்... இல்லையில்லை, அவள் கைகளில்! பூவை வைத்துவிட்டு அந்தப் பூங்கரம் நிமிரும்போது, இடதுகையில் கேசம் ஒதுக்கித் தலை தூக்கி வீதியில் ஒரு பார்வை! அந்தப் பார்வை எனக்கா... என்னைத் தெரிந்து விட்டதா... நான் ஒரு சின்னப்புள்ளியாகவாவது... ஐயோ என் மயில் பறந்து விட்டது.

நான் நின்ற, திரும்பிப் பார்த்த நொடிப் பொழுதில் இந்த நிலம் ஏன் நடுங்குகிறது... நிலத்தில் நின்ற நான் ஏன் நடுங்குகிறேன்... மூச்சை உள்வாங்கி நிதானத்தில் வருவதற்குள், அத்தக் கத்திரிப்பூ போட்ட சீட்டித் துணிக்குள்ளும் சிவப்புத் தாவணிக்குள்ளும் வளைந்தும் குழைந்தும் நின்ற அந்த மஞ்சள்கிழங்கு மின்னலாய், மாயையாய் மறைந்தது எங்கே?

நான் எங்கே... என் பாதங்கள் எங்கே... என்ன இது ஒரு மஞ்சள் மேகக் கூட்டமே என்னை ஊருக்கு வெளியே இழுத்து வருகிறது. ஊருக்கு மேற்கே உள்ள மலைத்தொடர் பச்சை நிறம் மாற்றி மஞ்சளுக்கு எப்படி மாறியது?

நொண்டி வீரன் குளம் முழுவதும் மாரியம்மன் குடமுழுக்குக்காக மஞ்சள் கரைக்கப்பட்டுவிட்டதா... இதென்ன அதிசயம்?!

*****

Kadhal Padikattugal - Bharatiraja
Kadhal Padikattugal - Bharatiraja

இந்தச் சம்பங்கிப் பூ மரங்களுக்கெல்லாம் கொலுசு போட்டுவிட்டது யார்..?

ஆலமரத்துக்குப் பின்னலிட்டது யார்..?

அரசமரத்துக்கு மஞ்சளிட்டது யார்?

பன்னீர் மரத்துக்கு ஜிமிக்கிப் போட்டது யார்?

வாழைக்குருத்துக்கெல்லாம் வளையல் போட்டுவிட்டது யார்?

கோபாலசாமி கோயில் கோபுர நர்த்தனம் சிலைகளுக்கெல்லாம் பாவாடை தாவணி போட்டுவிட்டது யார்..?

வீரம் மிகுந்த வீரப்ப அய்யனார் சிலைக்குமா தாவணி..?

தலையணை எங்கோ கிடக்கிறது. கம்பளி சுருண்டு கால்மாட்டில் கிடக்க, விட்டத்தில் ஒரு கரிச்சட்டி என்னைப் பார்த்துச் சிரிக்க...

``பொழுது சாயலை... எருமை... அதுக்குள்ள என்னடா படுக்கை..?"

"ம். படுத்தாப்ல தூக்கம் வருதாக்கும்..."

"தூக்கம் வர்லேன்னா, எதுனா புஸ்தகத்தை எடுத்து வெச்சுப் படிரா... மோட்டையே மொறைச்சுப் பாத்துக்கிட்டுகெடந்தா..." - அம்மா எரிச்சலோடு திட்டுகிறாள். நல்லவேளை, என் அப்பன் இதைப் பார்க்கவில்லை.

இதென்ன அவஸ்தை... இதென்ன வேதனை!

இப்போதெல்லாம் மயிலின் மாடவீதியைப் பஞ்சாயத்துத் துப்புரவாளர் கூட்டுவது நின்றுபோய், என் வேஷ்டிக்கரைகள்தான் சுத்தப்படுத்துகின்றன (என் அப்பனின் வேஷ்டியை அத்துமீறி உடுத்தியதற்காக நான் வாங்கிய அடி, உதைகளை இங்கே சொல்லப்போவதில்லை. அவரின் நியாயம் எனக்கு அநியாயமாகத் தெரிந்த வயது. அதனால் அதை விமரிசிக்க மாட்டேன்!).

அல்லிநகரத்திலிருந்து தேனிக்கு வழக்கம்போல் பள்ளிக்கூடப்பயணம். அந்த இரண்டு மைல் பயணம் இப்போதெல்லாம் விநாடிகளில் முடிகிறதே! எல்லோரும்தான் நடக்கிறோம். ஆனால், எனக்குத் தெரிந்ததெல்லாம் அளவான எண்ணெய் படித்த கேசம், நேர்வகிடு நெற்றியில் என் இதயம், திருத்தமான பாவாடை சட்டை தாவணி மட்டுமே! ம்... யோகக்காரத் துணிகள்! செல்லக் கொஞ்சலில் ஜிமிக்கிகள், சித்திரக் கால்களில் மணிமுத்துக்கொலுசுகள். இடதுகையில் தூக்குச்சட்டி, வலதுதோளில் புத்தகப் பை, பக்கவாட்டில் தோழிகள்... பதிந்துபோன கல்வெட்டுக் காட்சிகள்!

இரண்டு மைலுக்கும் சோளக்காட்டுக்கிடையே நடக்கவேண்டும், வழியில் ஒரு பூங்கா. அதிகாலையிலேயே கிளம்பி, அங்கே போய்க் காத்திருப்பேன். மயில் வருவது பார்த்ததும், தற்செயலாக அப்போதுதான் வருவது போல, நாசூக்காக நடக்க ஆரம்பிப்பேன். அங்கு சின்னதாய்ச் சிரிப்பு சத்தம் கேட்டாலும், ``என்னைப் பற்றித்தான் ஏதோ சம்பாஷணை..." என்று பெருமிதம் கொள்கிற புத்தி!

மயிலும் பாவாடை, தாவணி போட்டுக் கொள்ளுமா..?

பள்ளிக்கூடத்தில் ஒரு மயில் வந்து பாடம் படிக்குமா..?

தூக்குச்சட்டி சோறு மயிலுக்கும் தேவைப்படுகிறதா..? என்னடா இது!

பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் புதிதாக பால்பாண்டியன் தினமும் ஆஜர்! `மயில் படிப்பில் நெம்பர் ஒன்!' - யாரோ சொல்லக் கேள்வி. அடடா... என் பைகளில் சோம்பல் முறித்துக் கொண்டிருந்த புத்தகங்கள் சுறுசுறுப்பாகின. வாத்தியாரின் சட்டாம்பிள்ளைகளுக்கு முட்டி போட்டு நிற்கும் பழக்கத்துக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கக்காரணம்... மயில்!

ஆனாலும் மயிலே, நீயோ கோபுரத்து உச்சியில்... நானோ, அதிசயித்து அண்ணாந்து பார்க்கும் அரைக்கோவணம். நான் சோளக்கூழைக் கும்பாவில் வைத்துக்குடித்தால், நீ வெள்ளித்தாம்பாளத்தில் சம்பாச்சோறு சாப்பிடும் ஏற்றத்தாழ்வு.

இந்த ஏற்றத்தாழ்வையெல்லாம் தூக்கியெறிய வேண்டும் என்று என் முற்போக்குச் சிந்தனைகளின் பரமபத விளையாட்டு. அதிலும்கூட, ஏணிப்படிகளில் மட்டுமே நம்பிக்கை.

நாய்னா நாயக்கர் தோட்டத்துக் கிணற்றுப் படிகளில் நின்று குளிக்கவே தொடை நடுங்கியவன், மேல்திட்டுகளிலிருந்து தலைகீழாகச் `சொர்க்' அடிக்கிறேன்... உன் நினைப்பில் கொஞ்சம் சிரிக்க, லயம் புரண்டு வயிற்றில் அடி... வலிக்கவில்லையே!

கதை எழுதுகிறேன். கவிதை கிறுக்குகிறேன். ஒவியம் வரையவும் ஆரம்பமாகிவிட்டது. உன் நினைப்புக்கே இத்தனை விசைச் சக்தியா!

நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன். இன்று இந்த விலாசம் தாங்கிய மரம், ஒரு செடியாக இருந்த காலத்தில் எவ்வளவு உரமாக இருந்திருக்கிறாய்!

காடாத் துணியை மொத்தமாக வாங்கி, மூன்று சட்டையாகக் கிழித்துத் தைத்து டயர்செருப்பு ஒன்றைப் புதிதாகச் செய்து மாட்டிக்கொண்டு (கூலி - ஒரு படி சோளம்)... இப்படி உனக்காக என்னையே இன்னும் இன்னும் புதிதாகத் தயாரிக்கிறேன். என்னை எனக்கே பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

ஏதேதோ புதிய பரிமாணங்கள் எனக்குள்ளே தோன்ற ஆரம்பிக்கிறது. வளர்ச்சி புரிகிறது. ஆனால், கண்ணாடியைப் பார்த்தால் அது பொய் சொல்கிறதே... நான் இன்னும் வயதுக்கு வரவில்லையா..? அதற்கும் வழி பிறந்தது. இறந்துபட்ட தீக்குச்சிகளின் மரணத்தில் மூக்குக்குக் கீழே பூனைமயிர்கள் நிறம் மாறிப் பிரசவித்தன. நான் கதாநாயகனாகிறேன்.

என் கற்பனைகளும் கனவுகளும் கலந்த காலச்சக்கரத்தின் வேகத்தில், தேதிகளும் மாதங்களும் வருடங்களும் விபத்துக்குள்ளான விவரங்கள் குறிக்கப்படுமுன்னே பத்தாம் வகுப்புக்குக் குடிபோகிறேன். மயிலுக்கு ஒன்பதாம் வகுப்பு.

சிம்மக்குரலோன் நடிகர் திலகம், என் நாவில் அமர்ந்துகொண்டு நகர மறுத்த காலம். ஆசிரியர் வரலாற்றுப் பாடம் வாசிக்கச் சொன்னால், உச்சரிப்பிலேயே விஷமம் செய்த வயது. இந்தப் போக்கைத் தட்டிக் கேட்ட தமிழ் வாத்தியார் ராமலிங்கம், ஒருநாள் தட்டியும் கொடுத்தார். கூடவே தைரியமும் தத்தார். பலன் - பள்ளி நாடகத்தில் நான் நாயகன்.

இறுக்கமான கோட்-சூட் போட்டு, முகமெல்லாம் பவுடர் அப்பி, புருவத்துக்கும் மீசைக்கும் கண்மை தடவி, தண்ணீர் போட்டுத் தலையைச் சுருள்சுருளாக்கி மேடைக்குள் நுழைகிறேன். திரை விலகுகிறது.

மாணவர்கள் பள்ளி ஆண்டுவிழாவை மாணவிகளும் பார்க்க வந்திருந்தனர். அதோ அங்கே அந்தக் கூட்டத்தில் எங்கேயோ என் மயில் என்னுள்ளே பொங்கும் பிரவாகமாக, பிரளயமாக ரத்தநாளங்கள் புதிய பாஷை பேச... குரலுக்கு மெருகேற்றி அசைவுகளுக்கு உயிர்கொடுத்து என் பாவங்களை மொழிபெயர்க்கிறேன். (இந்தப் பழைய பால்பாண்டிதான் பின்னாளில் பாரதிராஜா என்று அழைக்கப்படுகிறான்)அன்று நிகழ்ச்சியில் தட்டிய ஓசைகளும் பாராட்டுக்களும் வசமிழக்கச்செய்கிறது. பறக்கிறது இதயக்குஞ்சு. எங்கே என் மயில்... பறந்தா போய் விடும்... பார்த்துவிடலாம். என்னுடைய ஒப்பனையும் ஒய்யார நடிப்பும் பார்த்த மயிலுக்கு மிக அருகே போய் தனியே ஒரு தரிசனம் தந்துவிடுவோம் என்று விரைகிறேன்.

சின்னச்சின்னக் கும்பல்களாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துச்சொல்லும் சக நண்பர்களுக்கு அர்த்தமில்லாத இளிப்பைத் தந்துவிட்டுக் கிட்டத்தட்ட ஒடுகிறேன்.

நிலா வெளிச்சம்!கண்களைப் பிடுங்கி எறிகிறேன். ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றன. கண்களின் மேல் கோபம். மனதுக்கு இணையான வேகத்தில் உடம்பை இழத்துக்கொண்டு ஓடி... ஆஹா, பத்தடி தாரத்தில் தோழிகளுடன். நான் பார்த்துவிட்டேன். சுவாரஸ்யமாய் சிரித்துக்கொண்டு போகிறார்களே... பேசிக்கொண்டு... `ஓ... என்னைப்பற்றி ஏதாவதா?'அவசரமாய் காதைத் திருகி எறிகிறேன். சனியன் பிடித்த காது செவிடாய் திரும்பி வர மறுபடியும் கோபம்.அதோ பட்டறை மேடு. தோழிகள் பிரிகிறார்கள். மூக்கனாசாரி தெரு தாண்டி இருவர் பிரிய தனித்த மயில். என் நாடக பேண்ட் பாக்கெட்டில் கைவிடுகிறேன். ஆறுமாதமாக நோட்டுப்புத்தகத்திலும் உள்ளங்கை வியர்வையிலும் நனைந்தும் காய்ந்தும் கசங்கியும்கூட என் உள்ளக்கிடக்கையைப் பத்திரமாகத் தாங்கிநிற்கும் கடிதம். கடிதத்தை எடுக்கிறேன்.

ஒற்றைச் சந்தை தாண்டும்முன்... கோனார் வீட்டுக் கொல்லைப்புறத்து வழியாகக் குறுக்குச் சந்தில் போய், குத்துக்கல் மறைவிலிருந்து கடிதத்தைப் போட்டால் மயிலின் பார்வையில் படும்.  அதன்பின். பயமாக இருக்கிறது. கதாநாயகன் பயப்படலாமா... மறைவில் நான் கைகள் நடுங்கக் கடிதத்தைத் தூக்கியெறிகிறேன். கால் கொலுசு கட்டியம் கூறிவருகிறது. இதயத்தை இறுக்கிப் பிடிக்கிறேன். ஓட்டமும் நடையுமாக ஒயிலாக அந்த மயில். `நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்' என்ற வரிகள் மட்டும்தான் படித்தாயா மயிலே..? `நிலத்தில்' என்ற அடுத்த ஒற்றை வார்த்தை படித்திருந்தால் அதை பார்த்திருப்பாயே... பரவாயில்லை. ஆனால் அந்தப் பாதங்கள்... கடவுளே, கண்களைக் கால்களில் வைத்திருக்கக் கூடாதா? பரவாயில்லை, என் இதயத்தில்தானே உன் பாதங்கள். அன்று அதை அப்படித்தான் எடுத்துக்கொண்டேன். அந்த இரவை நான் தூங்கவிடவில்லை!வீரப்ப அய்யனார் கோயிலுக்குப் பொங்கல் வைக்கப் போயிருந்தபோது குடும்பத்துடன் வந்திருந்தாயே. "வாங்க தம்பி. பொங்க வாங்கிக்கங்க." என்று அன்னியோன்னியத்துடன்  உன் அம்மா அழைத்தபோது நான் உன் பார்வையில் படவேயில்லையா!

லட்சுமி டாக்கீஸில் `செங்கோட்டைச் சிங்கம்' பார்க்க நானும் நீயும் வந்தோம். நான் தனியே... நீ உன் உறவுகளோடு. முழுசாய் மூணுமணிநேரம் அந்த கொட்டகையில் அத்தனை ஜனங்களுக்கு மத்தியில் நீயும் நானும் குடியிருந்தது உனக்குத் தெரியாமலே போனதேன் மயிலே..?

நான் நாகரிகமானவனாகிவிட்டேன் என்பதைக் காட்ட, கிணற்றுக் குளியலுக்குக் கிளம்பும் முன்பே வீட்டிலேயே சோப்பு போட்டு முகம் கழுவி, தலை சீவி, பவுடர் போட்டு, பல் தேய்க்கும் பிரஷ், சோப்பு டப்பா, குற்றாலத்துண்டு என்று டயர்செருப்பு பதிக்க உன் ஒரு பார்வைக்காக உன் வாசல் கடந்து நடந்ததெல்லாம் நீ உண்மையாகவே உணரவேயில்லையா..?

கடைசியில்... உள்ளத்தை நான் உன்னிடம் பகிர்ந்துகொண்டது போலவும் அதை நீ அங்கீகரித்தது போலவும் பக்கத்து பெஞ்சுகளிடமும் மாலை நேர மைதான மரநிழல்களிலும் போலிக்கர்வத்துடன் பொய்யாய் நான் புலம்பித்தீர்த்த விஷயங்கள் மட்டும் உன் காதுகளுக்கு எட்டியிருக்குமோ...

இரவு விழித்துக்கொண்டே பகலுக்குத் தாவிய காலையில், அந்த ராஜவீதியில் வேஷ்டிகட்டி துப்புரவுப் பணிக்கு வருகிறேன். அதோ வாசலில் இதயம் தெளிக்கப் போகிறேன்.

அதென்ன, அது வழக்கத்துக்கு மாறாக நான் வருவதற்கு முன்னாலேயே வாசல் தெளித்துக் கோலம் போட ஆரம்பித்துவிட்டது! என் காலடியோசை மயிலை நிமிர வைக்கிறது. இல்லாத ஒன்றைக் கீழே தவறவிட்டு எடுப்பதாகப் பாவனையாய் குனிந்து நிமிர்கிறேன். மயில் என்னைப் பார்க்கிறது. இத்தனை வருடங்களில் முதல்முறையாக நேருக்கு நேர்!என் கண்கள் ஃபோகஸ் ஆக மறுக்க, தடுமாறுகிறது நடை. மயில் மெள்ள எழுந்துசென்று வாசல் நிலையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறது. எனக்காகவா..? நிற்பது நீ தானா மயிலே.

கீழே விழுந்து தரையில் தத்துகிற என் பார்வையை மறுபடியும் கண்ணுக்கு எடுத்துவந்து நிலைவாசலைப் பார்க்கிறேன். மயிலின் பார்வை அப்படியே...

ஒரு கணம்... ஒரே கணம். அது என்ன ஒரு ருத்ரம் அந்தக் கண்களில்!கண்கள் சுருங்க, கோபத்தின் அனல் முகமெல்லாம் பரவி நிற்க, அக்கினியைக் காறி உமிழ்ந்து என் முகவாசலில் தெறித்துவிட்டு மின்னலாய் மறைந்து, இடியாய் கதவை அறைந்து சாத்த பொடிப்பொடியாகிப் போனேனப்பா...

கட்டடங்கள் நொறுங்கிப் பார்த்திருக்கிறேன். கண்ணாடிகள் நொறுங்கிப் பார்த்திருக்கிறேன். ரத்தமும் சதையுமாய் ஊறி வளர்ந்த உடம்பு, உடைந்து நொறுங்கி பொடிப்பொடியாகிப் போனதை அன்றுதானே உணர்ந்தேன். பொடியனாகிப் போனேன்.

இந்த இடத்தில் என்னால் எழுத முடியவில்லை. எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும்.

அதலபாதாளத்தில் கிடந்தான் பால்பாண்டி. சிறகுகள் இழந்து... ரத்தம் கசிந்து... இதயம் கனத்துப்போய்... பறக்க முடியாமல் கிடந்தான் பால்பாண்டி.

இது காதல்தானா..?

ஒருதலைக் காதல்.

அவன் மட்டுமே கற்பனையாகப்பாவித்துக் கொண்டால்அதற்கு யார் பொறுப்பு..?

சிறகுகள் முறிந்து விட்டாலும், காலங்காலமாய் இந்தக் கற்பனைத் தேருக்கு முடுக்கிவிட்ட விசையாக இருந்தது முதல்காதல்.

முதல் காதலா... அப்படியென்றால் இரண்டாவது மூன்றாவது என்றெல்லாம் உண்டா என்ன..?

பழைய பால்பாண்டிக்கு மயில். நம்ம சின்னசாமிக்கு குயில்!

*****

Kadhal Padikattugal - Bharatiraja
Kadhal Padikattugal - Bharatiraja

ஏழு வருடங்களாக என்னுள்ளே தீட்டி வந்த சித்திரத்தை அந்த அரை விநாடியில் அழித்துப் போட்டுவிட்டுப் போனது மயில். வெறுமையாகிப் போனேன். எல்லாமே இழந்தது போல புலம்பித் திரிந்தேன் சில காலம்.

அழித்தது அவள்தானே... போகட்டும் - அந்த ஏழு வருடங்களும் என்னுள்ளே அவள் வாழ்ந்தாளே... அதை யார், எதுகொண்டு, எப்படி அழிக்க முடியும்? அந்தத் தேவராகத்தை எந்தக் கரம் நிறுத்தமுடியும்?

காலச்சக்கரம் கல்தடுக்கித் தடம் புரள்கிறது. பொருளாதார ரயில் சின்னச்சாமியைக் கல்லூரிக்கு ஏற்றிச் செல்ல மறுக்கிறது. சந்தோஷம்! பெஞ்சு தேய்க்கும் தீய பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி.

விலங்குகளாகத் தெரிந்த வாத்தியார்களிடமிருந்து விடுதலை.தொடர்ந்தது தேடுதல்... (வேலை) + கல்கி + அகிலன் + நா.பா. இவர்களோடுதான் எப்போதும் சம்பாஷணை. அதோடு கதை, கவிதை, நாடகம் எழுதுதல். பிற்பாடு அதனை அரங்கேற்றி நடித்தல் என்று பொழுதுகள் போயின. `சினிமால நடிக்கப் போகணும். நீ ஜெயிக்கப் பொறந்தவன்டா' - இது மட்டும்தான் சின்னச்சாமிக்கு மனப்பாடமான மனசுவரி,``ஊரு ஒலகத்துல ஒனக்கு எட்டுக்குத்துக்கு இளையவனெல்லாம் பட்டாளத்துக்குப் போய்ட்டாங்க. லீவுல அவிங்க வந்து போற அழகென்ன... எருமைக்கு இன்னும் எத்தனை காலந்தேன் கஞ்சி ஊத்தறது... ஏண்டா சோத்துக்கு உப்பு போட்டுத்தான திங்கிறே?"தார்க்குச்சிகளின் குத்தல்கள்!

ரணம் வடியக் கிளம்பிவிட்டேன். கொசு ஒழிப்புத் திட்டத்தில் வீட்டுக்கு வீடு கட்டம் வரைந்து மலேரியாவை ஒழிக்க வந்த கடவுள் என்று கையெழுத்துப் போடுகிற வேலை!

பள்ளிக்கூடப் புத்தகப்பையைத் தூக்கத் தயங்கியவன், மாத்திரைப் பையைச் சுமந்தபடி மைல்கணக்கில் நடக்கிறேன். கறுப்புத்துரைக்குத் தலையில் தொப்பி.

ஆண்டிபட்டி, கீரைப்போத்தம்பட்டி, கண்டமனூர், பொம்மிநாயக்கன்பட்டி, ராஜதானி, ஏத்தக்கோயில், கொத்தப்பட்டி, குரும்பப்பட்டி என்று பட்டியலிட்ட பதினெட்டுப் பட்டிகளுக்கும் சின்னச்சாமிதான் `பெரியசாமி'!

செம்மண் புழுதிகளில் நிறம் மாறுகிறேன். பாலைவனமாய்க்காட்சியளித்த அந்தப் பட்டியிலும் ஒருநாள் புயல் மையம் கொண்டது. சூறாவளி சுழற்றியடிக்கிறது. சுருண்டோடுகிறேன். என்ன ஆனது எனக்கு? சுனைநீர் முகத்தில் தெளிக்கப்பட விழித்துப் பார்க்கிறேன். என்ன இது என்னையே நான் கண்ணாடியில் பார்க்கிறேனா. நான் அழகாகிப் போனேனா... அதுவும் பெண்ணாகிப் போனேனா..!

அறிமுகம் செய்துகொண்ட பிறகுதான், அதுவும் என்னைப் போலவே என்று புரிந்தது - இறக்கைகள் இழந்த ஒரு குயில்!என் படங்களில் பெரிய சூட்கேஸ்களைத் தூக்கிக்கொண்டு டவுனிலிருந்து கிராமத்துக்குள் நுழைபவர்களெல்லாம் இந்த `சின்னச்சாமி - குயில்' இருவரின் இனிமையான நகல்கள்தான்!

அந்த அறிமுகம் என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. எந்த நாகரிக வாசனையும் எட்டியிராத கிராமம் கொத்தபட்டி.

நானாவது அல்லிநகரத்துப் பிரஜை. ஆனால், குயிலோ கொடைக்கானல் பறவை. அந்தக் கிராமத்தில் அரசாங்கத்தின் சேவகர்களாக இருவேறு பணிகளில் இருந்தோம். இருவரும் தனித்தனியே வீடுபிடித்துத் தங்கியிருந்தோம்.

சினிமாக் கனவு நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போனாலும் சென்னை மட்டும் என் கனவுக்குள் வர மறுத்தது. காரணம் சென்னை எனக்குத் தெரியாது.

குயில் கொஞ்சகாலம் சென்னையில் வேலை பார்த்த சேதி தெரியவந்தது. அந்த நகரத்தைப் பற்றி அது விவரித்த ஒவ்வொரு தகவலும் சின்னச்சாமியின் கனவுக்குத் தீனியானது.

அந்தக் குக்கிராமத்தில் வாரப் பத்திரிகைகளை வாங்கிப் படித்தது அவர்கள் மட்டுமே. தனக்குத் தெரிந்த நாவல்களையெல்லாம் குயிலுக்குக் கொண்டு வந்து தந்தான்.

குதிரைக்குளம்படி ஓசைகளோடு கதைகள் தினமும் சொன்னான். பதிலுக்குச் சில ஆங்கிலப் புத்தகங்களைக் குயில் தந்தபோது சின்னச்சாமியின் குட்டு வெளிப்பட்டது.

குயில் டீச்சரானதும்... சின்னச்சாமி ஆங்கிலம் படிக்கலானான். புளியமரமெல்லாம் புளியன் ட்ரீயானது. யாரைப் பார்த்தாலும் ஹலோ சொன்னான். பஸ் கண்டக்டர் சில்லறை தந்தால் `தாங்க்ஸ்' என்றான். கிராமத்துத் தேநீர்க் கடையில் `பை தி பை ஒரு டீ' என்று கேட்க ஆரம்பித்தான்.குரும்பப்பட்டி ஓட்டலில் சின்னச்சாமியின் நாற்பது ருபாய் பாக்கியைக் குயில் அடைத்தபோதுதான் அவன் திகைத்துப் போனான்.

``சாப்பிடறதுக்காக மூணு மைல் எதுக்கு நடந்து போறிங்க. இங்கே நான்தான் சமைக்கிறேன்ல. இனிமே இங்கேயே சாப்பிடலாம்" உரிமையோடு குயில் சொல்ல, குரும்பப்பட்டி ஓட்டலுக்கு `குட்பை' சொல்லியாகிவிட்டது. ஆண்டிபட்டிச் சந்தையில் அவன் வாங்கிப் போட்டு வந்த `பாண்ட்' ஊருக்கே அதிசயமாக... குயில் மட்டும் கேலியாய்ச்சிரித்தது.

மதுரைக்குச் சம்பளம் வாங்கப்போகும்போது சின்னச்சாமிக்கு அளவெடுத்து பாண்ட்-சட்டையை நாகரிகப்படுத்தியது குயில். "உங்களுக்கு இந்த ஹேர்ஸ்டைல் நல்லாயில்லே. பின்னால தாக்கிவாரி கிருதாவைக் கொஞ்சம் குறைச்சா ஸ்டைலாயிருக்குமே!" திருத்தங்கள் ஏற்கப்பட்டன. திடீரென சின்னச்சாமி அழகாகிப் போனான்.

ஊருக்குள்ளே அரசல்புரசலாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். குயிலுக்கு அவன் `சின்ன வாத்தியார்'. சின்னச்சாமிக்கு அவள் `டீச்சர்'.

நிலா வெளிச்சத்தில் இருவரும் கால்வலிக்கும்வரை பேசிக்கொண்டே நடந்ததையெல்லாம் ஊர் பார்த்தது.

பெரியகுளத்துக்கு முதல்நாள் மாலையில் கிளம்பிப் போனவர்கள் `களத்தூர் கண்ணம்மா' பார்த்துவிட்டு அங்கேயே ஆபீஸில் தங்கி அடுத்தநாள் காலை ஊர் திரும்பும்போது சில பெரிய மனுஷன்கள் அவசரமாக முளைத்தார்கள். `பஞ்சாயத்து'க்குவேலை வந்தது.ஊரிலிருந்து குயிலின் அப்பா வந்தார். ``இங்கே யாரு சின்ன வாத்தியாருங்கறது..."- என்றார். கைகளைப் பிடித்துக்கொண்டார். குயில் ஊருக்குப் போய்விட்டுத்திரும்பியதும் சொன்னது. ``எனக்குக் கல்யாணம் பேசியிருக்காங்க சின்ன வாத்தியாரே. வேலையை ரிலைன் பண்ணச் சொல்லிட்டாங்க. நாளைக்குக் கிளம்பறேன்.." என்ற நிமிடத்தில்தான் சின்னச்சாமி விக்கித்துப் போனான்!

அந்த உறவுக்கு அப்போதுவரை அவர்கள் பெயரிட்டதில்லை. ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் அப்பாவோடு கிளம்பும்போது கசங்கிய ஒரு காகிதத்தைக் கையில் திணித்தது. 'எந்தன் வாழ்வில் துன்ப நிலை சூழ்ந்ததே... துயர் வந்து எனை அழைக்க நேர்ந்ததே... வானில் மேகம் நிறை நிறைந்து காணுதே... இடி மின்னல் வரத் தோணுதே...' முற்றுப் பெறாத கவிதையாகப் பறந்தது குயில்.  தபாலில் அழைப்பு வந்தது. அந்த கல்யாணத்துக்குச் சின்னச்சாமியும் போயிருந்தான். பிறகு சின்னச்சாமியும் வேலையை எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறினான். ஒரு ட்ரங்குப் பெட்டியில் நாலைந்து செட் துணிகளையும் நெஞ்சு நிறைய மென்சோகத்துடனும் உடம்பில் ரத்தமாக ஊறிய நம்பிக்கை வெறியுடனும் ரயிலேறினான் சென்னைக்கு.

மயிலோடு அவன் கொண்டது ஒருதலைக்காதலென்றால் குயிலோடு கொண்டதற்குப் பெயர் என்ன? பெயரில்லாத உறவு! பஞ்சகல்யாணிக்குதிரையின் கற்பனைக் கால்களும் ஒடிந்துபோயின. சின்னச்சாமி கொஞ்சநாள் சிதைந்து போய்த் திரிந்தான்.

எனக்குத் திருமணமானது. நான் மயிலை நேசித்தேன்; குயிலை நேசித்தேன், ஒரு புறாவை மணந்தேன்.பால்பாண்டி... சின்னச்சாமி... இப்போது பாரதிராஜா!

அத்தனை வருடப் போராட்டத்துக்குப் பிறகு, வாழ்க்கையில் எனக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது திருமண வாழ்க்கை. அந்தப் பிடிப்பு ஒர் உந்துசக்தியாக என்னைச் செலுத்தியது. என் மனைவிக்கு இதோ இங்கே நான் எழுதியதையெல்லாம் சொன்னேன். `மயிலு... குயிலு' என்று நான் சொல்லச் சொல்லக் கேட்டுச் சிரித்துக்கொண்டாள். என் குடும்பம் இரண்டு பிள்ளைகளோடு இனிதாக நகர்கிறது.

நினைத்துப் பார்த்தால் ஒன்று புரிகிறது. பெண் சிநேகிதம் என் காலத்தில் பெரிய விஷயம். அதுதான் என்னை மாதிரி எவ்வளவு பேரைக் காதலுக்குள் கவிழ்த்திருக்கக்கூடும்!

முப்பது வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் மறுபடியும் மயிலைப் பார்த்தேன். வெவ்வேறு சூழலில்... வெவ்வேறு உலகங்களில்... அது வேறுவிதமான சந்திப்பு. முகம் பார்க்க்க முடியாமல் நான் நிலம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். தளர்ந்திருந்தது மயில்.

ஆனால், அங்கேயிருந்தவன் பாரதிராஜா. பழைய பால்பாண்டி இல்லையே. ஓரிரு நிமிடங்களே அந்தச் சந்திப்பு நீடித்தது. அதை இப்போது நினைத்தாலும் என் நெஞ்சுக்கூடு அதிர்கிறது.

அதற்குப் பிறகு நான் குயிலைப் பார்க்கவேயில்லை. ஏதாவது ஒரு பஸ் ஸ்டாண்டில், பஜார் நெரிசலில், ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில்... எப்படியாவது என் குயில் எதிர்ப்படாதா என்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறேன்.

முகம் காட்ட மறுக்கிற குயிலின் முகவரி தேடி மனசு, மத்துக்குள் சிக்கிய தயிராகத் தத்தளிக்கிறது.காலம் எல்லாக் காயங்களுக்கும் மருந்து போடும்!

காதல்தான் என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. நான் கண்ட கனவுகளைத்தான் - அந்த மென்மையான நினைவுகளைத்தான் நான் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

பதினாறு வயதினிலே சப்பாணி... வேறு யாரும் அல்ல... அவன் நானேதான்.

அலைகள் ஓய்வதில்லை ஆயிரம் தாமரை மொட்டுக்களும் அந்திமந்தாரைச் சோழிகளும் என்னுடையதே. கடலோரக் கவிதைகளின் வலம்புரிச்சங்கும் வேதம்புதிது கைக்குட்டையும் என் கனவே.

கரித்துணியோ, மயிலிறகோ, புல்லாங்குழலோ... நரைத்த தலைமுடியோ, ரயில்பெட்டி வாசகங்களோ, கொலுசு பாஷையோ, புத்தகத் தூதோ, எல்லாமே... எல்லாமே என் மனசின் மொழிபெயர்ப்புகள்தானே!

இத்தனைக்குப் பிறகும் வருகிறது அந்தக் கேள்வி.காதல் நிஜமா... பொய்யா..?

இப்போதும் எனக்கு அது நிச்சயமாகத் தெரியாது. ஆனால், காதல் ஒரு மகா சக்தி!

காதலை எவரும் வெற்றி கொண்டதில்லை; காதல் யாரையும் தோற்கடித்ததும் இல்லை!

எங்கேனும் ஒரு மூலையில் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்... ஏனெனில், அது ஒரு ஜீவராகம்!

ஒன்றே ஒன்றுதான்!

எனக்கு மரணம் சம்பவிக்கிற நிமிடங்களில்... என்னருகே ஆறேழு முகங்கள் இருக்கவேண்டும் என்று எனக்கொரு ஆசை உண்டு!மயிலே... குயிலே... வருவீர்களா அப்போது?! 

சந்திப்பு : ரா.கண்ணன்

(02.06.1996, 05.06.1996 மற்றும் 09.06.1996 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்களில் இருந்து...)