(ஒரு முன் குறிப்பு: காதலைப் பற்றி நியாயமாக ஒரு புத்தகமே எழுதலாம். ஒரு கட்டுரைக்குள் ஆயிரத்தில் ஒரு பங்காக என் கருத்துகளைச் சுருக்கி வரைந்திருக்கிறேன்.)
வார இதழ் தொடர்கதைகளிலும் ஸெல்லுலாய்ட் சித்திரங்களிலும் மட்டுமே அதிகப் புழக்கத்தில் இருந்த இந்தக் காதல் இப்போது வைரஸ் வேகத்தில் பரவிவிட்டது.
`பக்கத்தூர்ல நாடாரு பொண்ணு இல்லே, அது எவனையோ லவ் பண்ணிட்டு வூட்ல சொல்லாம ஓடிப் போயிடுச்சாம். தெரியுமா?' என்று பேசினோம். பிறகு பக்கத்தூரு நாடாரு நம்மூரு கோனாராகி... நம்ம தெரு செட்டியாராகி... அடுத்த வீட்டு அம்புஜம் வரைக்கும் வந்து, இப்போது நம் வீட்டு வாசலிலும் தயாராகக் காத்திருக்கிறது - சந்தர்ப்பம் என்னும் கதவு திறப்பதற்காக.`அதோ போறாரே அவரு காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவர்' என்று எப்போதோ, யாரையோ சுட்டிக்காட்டிய நிலை மாறிவிட்டது. `லவ் மாரேஜ் செய்துகிட்ட நாலு பேரு சொல்லுங்க' என்று இந்த நிமிடம் உங்களைக் கேட்டால், இரண்டாம் வாய்ப்பாடு போல கடகடவென்று சொல்வீர்கள். உண்டா, இல்லையா?`காதலிப்போர் எண்ணிக்கை இருபது வருடங்களுக்குமுன் - இப்போது' என்று ஒரு சர்வே எடுத்து கிராஃப் வரைந்தால் அந்தக் கோடு கிட்டத்தட்ட செங்குத்துக் கோடாக இருக்கும். (அவசியம் என்றால் சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்பவர்களைச் சாட்சிகளாக அழைத்து நிரூபிக்க இயலும்.)
என் (திருமணமான) நண்பன் ஒருவன் கேட்டான் : `அதெப்படி இவ்வளவு சுலபமா லவ் பண்றாங்க? ஆக்சுவலா எனக்கு யாரையாவது காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. ஆனா, அப்படிச் சந்தர்ப்பம் எதுவும் அமையவே இல்லை. நல்ல பிள்ளையா வீட்ல பார்த்த பொண்ணைக் கட்டிக்கிட்டேன். சந்தோசமாத்தான் இருக்கேன். ஆனா, இன்னிக்கும்கூட என் வாழ்க்கைல ஒரு காதல் அனுபவம் இல்லாமல் போச்சேன்னு ஒரு ஏக்கம் இருக்குதுப்பா.
'யோசித்துப் பார்த்தால்... காதலை அனுபவித்து உணர்ந்தவர்களின் சதவிகிதம் குறைவுதான். அதை ஏக்கமாக, கனவாக, கற்பனையாக உணர்ந்தவர்களின் சதவிகிதம்தான் அதிகம். நாம் அனுபவிக்காததைக் கற்பனைக் காதலர்கள் அனுபவிப்பதால்தான் காதல் காட்சிகள், பாடல்கள், கதைகள், கவிதைகள் எல்லாம் அமோகமாக ரசிக்கப்படுகின்றன.

காதல் என்றால் என்ன?காதலை நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் விளையாட்டு என்று ரசாயனமாக அலசுவதில் எனக்கு இஷ்டமில்லை. அது உண்மைதான் என்றாலும், காதலை உணர்வுப்பூர்வமாகவே அணுக ஆசை. காதல்! இந்த மூன்றெழுத்து வார்த்தைக்குள்ளேயே ஒரு சின்ன போதை ஒளிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இளமையின் அடையாளக் குறிப்புகளில் ஒன்று. தானாகத் ததும்பும் மன ஊற்று. வாழ்வின் ஒரு வசீகரமான பகுதி. `ஓர் அப்பா தன் மகன் மேல் வைக்கும் அன்பும் ஒரு காதலே.
ஒரு மகன் தன் படிப்பின்மேல் வைக்கும் ஈடுபாடும் ஒரு காதலே' என்று இந்தக் `காதல்' வார்த்தையை எல்லா உணர்வுகளுக்கும் பொருந்திப் பேசுவதில் எனக்குச் சம்மதமில்லை. நேசம், பாசம், அன்பு, ஆசை, ஆர்வம், பக்தி, கவர்ச்சி, ஈடுபாடு... என்று பிறகு ஆயிரம் வார்த்தைகள் எதற்காக? காதல் - தனித்துவமான, பிரத்யேக உணர்வு.
காதல் பெரும்பாலும் இளமையோடுதான் சம்பந்தப்பட்டது. வயதான பிறகு வந்தால் அது முதியோர் கல்வி மாதிரி முதியோர் காதல் என்று முத்திரை குத்தி விதிவிலக்குப் பிரிவில் சேர்த்து விடலாம்.`No body Loves a Fairy, When she is forty' என்கிறார் ஆர்தர் ஹென்லி. அதாவது... ஒரு தேவதையாக இருந்தாலும், அவளுக்கு வயது நாற்பதென்றால் யாரும் காதலிக்க மாட்டார்களாம். தேவதைக்கே அந்தக் கதி என்றால்... மானிடருக்கு? (இன்றைக்கு ஓர் இளைஞனின் அறையில் ஊர்மிளாவின் படம்தான் ஒட்டப்பட்டிருக்கிறதே ஒழிய, ஹேமமாலினி அல்ல. இளைஞியின் அறையில் அமிதாப்பச்சன் அல்ல, அமீர்கான்!)
அடுத்து... காதல் என்பது கட்டடம் கட்டுவதுபோல திட்டம் போட்டு ஆரம்பிக்கிற விஷயம் இல்லை. அது இயற்கையாய் நிகழும் ஒரு விஷயம். எந்த நாளில் எந்தத் திசையில் வானவில் தோன்றும் என்று எந்த ஜோதிடமும் கணிக்க முடியாது. தோட்டத்தில் லட்சம் மலர்கள். இந்தப் பூவில் உட்காரலாம் என்று தீர்மானித்துக் கொண்டு புறப்படுகிறதா ஒரு தேனீ? இல்லை, அது அமர்ந்த பூதான் `வெல்கம்' என்று போர்டு பிடித்து அழைத்ததா? பூமிக்கு அடியில் எங்கும் தண்ணீர்தான். ஆனால், ஏதோ ஓர் இடத்தில்தான் ஊற்று முளைக்கிறது. சுஜாதாவின் வஸந்த் பாஷையில் சொன்னால்ல் `இதுக்கெல்லாம் மச்சம் வேணும் பாஸ்!'
காதல் என்பது இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உரிய பருவத்தில் சமையலாகி விடுகிறது. சிலருக்கு மட்டும் அதைப் பரிமாற பார்ட்னர் அமைகிறது. இத்தனாம் தேதி என் பிறந்த நாள் என்று சொல்லலாம். இத்தனாம் தேதி எனக்கு மீசை வந்தது என்று யாராவது சொல்ல முடியுமா? ராத்திரி பூராவும் டார்ச் அடித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு மொட்டு மலராகிற துல்லிய விநாடியை யாராலும் சொல்ல முடியாது. ஓர் அமைதியான வளர்ச்சி அது. அப்படித்தான் வாலிபத்தில் மனதுக்குள் காதல் வருவதும் வளர்வதும்.

புராண மாந்தர்கள் கண்ணோடு கண் நோக்கி இன்ஸ்டண்ட் டீ மாதிரி உடனே காதலிக்கலாம். நடைமுறையில் அதெல்லாம் சாத்தியமில்லை.
காதல் ஏற்படுவதற்கான காரணங்களை தெய்வீகம், புனிதம் போன்ற வார்த்தைகளைத் தூக்கிப் பரணில் வைத்து விட்டு பிராக்டிகலாக அலசிப் பார்த்தால், புற அழகின் ஈர்ப்பு முதல் பாய்ண்ட். (ச்சே! அவ என்ன ஓர் அழகு தெரியுமா? யப்பா! எப்படிக் கம்பீரமா இருக்கார் தெரியுமா?)
ரசனைகளின் ஒற்றுமை இரண்டாவது பாய்ண்ட். (அட! உங்களுக்கும் கர்நாடிக் மியூசிக் பிடிக்குமா? எனக்கும் கிரிக்கெட் பார்க்கறதில இன்ட்ரெஸ்ட்)அப்புறம் குணக் கவர்ச்சி, (எவ்வளவு ஸாஃப்டா பேசறார் தெரியுமா? என் ஆள்கிட்ட எனக்குப் பிடிச்சதே அவளோட தைரியம்தான்ப்பா!)
இதையெல்லாம்விட இன்னொரு முக்கிய காரணம் வாய்ப்பு அல்லது சந்தர்ப்பம். (ரெண்டு பேரும் ஒரே இடத்தில கம்ப்யூட்டர் கத்துக்கிட்டோம். அதனால அடிக்கடி பார்க்க, பழக முடிஞ்சது. ரெண்டு பேருக்கும் பக்கத்துப் பக்கத்து வீடு, ரெண்டு பேரும் ஒரே பஸ்லதான் போகணும்.)
காதலில் காமம் என்பது ஒரு கட்டாயப் பகுதி. பத்தடி தள்ளி நின்று கிரிக்கெட்தான் விளையாடலாம். காதல் செய்ய முடியாது. ஆனால், ஒரு நாகரிக எல்லை கண்டிப்பாகத் தேவை என்பது என் கருத்து.
மாணவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது `ஒரு தனி மாணவனுக்கு எதிர்ப்புக் குணமோ, வெளிப்பாடோ அதிகம் இருப்பதில்லை. அதுவே பத்து பேராகச் சேரும்போது தனி தைரியம் வந்து விடுகிறது. இந்தப் பையன் இப்படிச் சொல்வானா என்று எதிர்பார்க்கவே முடியாதவன் எல்லாம் வன்முறையில் ஈடுபட்டதை நான் பார்த்திருக்கிறேன்' என்று ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த மாதிரி இந்தக் கால காதல் ஜோடிகளுக்குத் தனி தைரியம் வந்திருக்கிறது. தனி மனிதக் கூச்சம், நளினம், நாகரிகம் எல்லாவற்றையும் உதிர்க்கத் துணிந்து `நாங்கள் காதலர்கள் தெரியுமா?' என்று வெளிப்படுத்திக்கொள்ளும் இச்சையில் எல்லை மீறி நடந்துகொள்கிறார்கள். பொது இடங்களில் இவர்கள் இப்போதெல்லாம் முதலிரவு மட்டும்தான் நடத்துவதில்லை. பார்க்கிறவர்கள்தான் நெளிய வேண்டியிருக்கிறது (பெருமூச்சும் விட வேண்டியிருக்கிறது). இந்தக் காதல் என்கிற சமாசாரம் மட்டும் இல்லையென்றால் இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையே மந்தமாகியிருக்குமோ?பட்டிமன்ற வாதமாகக் காதலை ஆதரித்து... யோசித்துப் பார்த்தால்... அது ஜாதி, மதத்தை உடைக்கிறது. வரதட்சணைக்கு வெடி வைக்கிறது. ஜாதகம், ஜோசியம் போன்ற நம்பிக்கைகளைத் தகர்க்கிறது என்றெல்லாம் அடுக்குவார்கள். எனக்கு இதையெல்லாம் தாண்டி தம்பதிக்குள் ஏற்படுகிற புரிந்துகொள்ளல்தான் பெரிய விஷயமாகப் படுகிறது.
பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணத்தில் ஆயிரம் பொருத்தங்கள் பார்த்தாலும், மனப்பொருத்தம் என்பதில் மட்டும் ஒரு ரிஸ்க் ஃபாக்டர் இருக்கவே செய்கிறது. ஒரு பியூன் வேலைக்குச் சேர்ப்பதென்றாலும் அவன் குணம் எப்படி என்று யோசிக்கிறோம். வாழ்க்கை பூராவும் கூட வரப்போகிற துணையை மற்றவர்கள் சொல்லும் அபிப்ராயங்களின் அடிப்படையில்தான் முடிவு செய்கிறோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான அவகாசமோ, வாய்ப்போ இல்லாமல் போவதால்தான் பலருக்குக் குடும்ப வாழ்க்கை சிக்கலாகி விடுகிறது. விவகாரத்துக்கு வருகிற தம்பதிகளில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் ரொம்ப ரொம்ப அபூர்வமாகத்தான் பார்க்க முடியும் என்கிறார் என் வக்கீல் நண்பர் ஒருவர்.
காதலின் மிகப் பெரிய ப்ளஸ் பாய்ண்ட்டாக நான் கருதுவது இந்த ஒருவருக்கொருவர் சரியாகப் புரிந்துகொள்ள முடிகிற வாய்ப்பைதான்.
ஆனால்... இன்றைக்கு எத்தனை பேர் காதலை சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. எதிரினக் கவர்ச்சிக்கும் பாலியல் மோகத்துக்கும் `காதல்' என்று பெயர் சூட்டிச் சிலர் குழப்பிக்கொள்கிறார்களோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.
ஜஸ்ட் லைக் தட் காதலிப்பவர்களை நான் மதிக்கத் தயாராய் இல்லை. காதலில் ஒரு பக்குவம் தேவை. தீவிரம் தேவை. இவள்தான்/இவர்தான் என் வாழ்க்கைத் துணை என்கிற மன உறுதி தேவை. அப்படியில்லாமல் பெரியவர்கள் சம்மதித்தால் கல்யாணம் இல்லையென்றால், `எங்கிருந்தாலும் வாழ்க!' என்று இருந்தால் அது காதல் இல்லை, வெறும் காதல் ஒத்திகை!

எப்படிக் காதலிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதோ, அதே மாதிரி காதலை அங்கீகரிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என்பது என் கருத்து. தன் மகனோ, மகளோ மனதார நேசிக்கும் துணை தகுதியுள்ள தேர்வாக இருந்தால் வெட்டியாக எதிர்ப்பது குறைந்துள்ளது. (எதிர்த்தால் லெடடர் எழுதி வைத்துவிட்டு அல்லது அதுகூட எழுதாமல் ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதையும் விரக்தியில் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதையும்... பெற்றோர்களுக்குக் காலம் அனுபவப் படங்களாகக் கற்றுக்கொடுத்திருப்பதும் ஒரு முக்கிய காரணம்.)

காதலைப் பற்றிய என் சொந்த அனுபவம் பற்றிச் சொல்லாவிட்டால், அது இந்தக் கட்டுரைக்குச் செய்யும் துரோகம் அல்லவா?
என் நண்பன் குறிப்பிட்டதைப் போல காதல் அனுபவ ஏக்கம்தான் எனக்கும் இருந்தது. அதற்காக `wanted a young, cute, lover' என்று விளம்பரமா கொடுக்க முடியும்? தானாக நிகழ வேண்டிய ஒன்றல்லவா அது.ஆனால், எனக்குக் கல்யாணம் நிச்சயமானபோது. நிச்சய தினத்துக்கும் திருமண தினத்துக்கும் நடுவில் முழுதாக எழுபது நாட்கள்! அநத எழுபது நாட்களும் என் வாழ்வில் மறக்கவே முடியாத இனிமையான காதல் நாட்கள்!
மனசுக்குள் ஜூரம் அடித்த நாட்கள்! தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் மிதந்து நடந்த நாட்கள்! கனவுகளுக்காகவே உறங்கின நாட்கள்! உலகமே பச்சைப் பசுமையாய் தெரிந்த நாட்கள்!
இவள் என்னவள். எனக்கென நிச்சயிக்கப் பெற்றவள். உரிமையானவள், என் வாழ்வின் துணை என்று தீர்மானமாக உணர்ந்து, பெரியவர்களின் லைசென்ஸோடு நிகழ்ந்த `Arranged Love' அது! யாரும் பார்த்து வீட்டில் சொல்லி விடுவார்களோ என்கிற பயமோ, திருட்டுத்தனமோ இல்லாத காதல் அது!
இந்தவகை அனுமதிக்கப்பட்ட காதலில் த்ரில் கொஞ்சம் கம்மிதான் என்றாலும், இது வேறுவகை த்ரில். எத்தனை கடிதங்கள்! (பினாத்தல்கள்?) ஆறுபக்கம், ஏழு பக்கத்துக்கு என்னதான் எழுதிக் கொண்டோம் என்று இப்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. (பத்திரப்படுத்தி வைத்த அவற்றை பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு சுவாரசியமாய் படித்துப் பார்க்க ஆர்வம் ஏற்படுத்தி, அதனால் சில மணி நேரங்கள் `அந்த' நாட்களுக்குச் சென்றுவரச் செய்தமைக்காக ஜூ.வி. ஆசிரியருக்கு நன்றி.)
தேடித்தேடி லவ் கார்டுகள் வாங்கியதும் காஸெட், லிப்ஸ்டிக், கீ செயின், டேப்ரிக்கார்டர் என்று பரிசுப்பொருட்கள் கொடுத்துக் கொண்டதும் ரகசியமாக டெலிபோனில் பேசிக்கொண்டதும்... சிலிர்ப்பூட்டிய தினங்கள்.
காதலில் கொஞ்சம் அசட்டுத்தனமும் பைத்தியக்காரத்தனமும் சேர்ந்து கொள்ளத்தான் செய்கின்றன என்பதை அப்போது உணர முடியவில்லை. இப்போது தள்ளி நின்று யோசிக்கும்போது உணர முடிகிறது. நிச்சயமாக காதல் தித்திப்பானது சுகமானது. சுவாரசியமானது. புத்தியை வீழ்த்தக்கூடியது. ஆனால், காதல் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதிதானே ஒழிய, அதுவே வாழ்க்கை அல்ல. இதைப் பரிபூரணமாக உணர்ந்தால் காதலில் ஏற்படும் ஏமாற்றங்களைச் சுலபமாக ஏற்க முடியும்.
`காதலர்கள் தோற்று, காதல் ஜெயிக்கிற காவியக் காதல் நமக்கு வேண்டாம்' என்று ஒரு புதுக்கவிஞன் எழுதியது நினைவுக்கு வருகிறது. ஏற்கெனவே `ஐ லவ் யூ' சொல்லி முழுமூச்சாகக் காதலித்துக் கொண்டிருப்பவர்களே, ஆல் தி பெஸ்ட். ஒரே ஒரு சின்ஸியர் வார்த்தை! திருமணத்துக்கு முன்பாக கண்டிப்பாக எல்லை தாண்டாதீர்கள். இனிமேல் `ஐ லவ் யூ' சொல்லிக் கொள்ளப் போகிற நாளைய காதலர்களுக்கு ஓர் அக்கறையான வார்த்தை: அவசரப்படாதீர்கள். முதலில் நட்பு ரீதியில் பழகுங்கள்.
உங்கள் Proposed Love Partner குணங்களை, ரசனைகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். எதிர்காலம், முன்னேற்றம், விளைவுகள், எதிர்நோக்க வேண்டிய பிரச்னைகள் என்று எல்லாம் யோசியுங்கள். பிறகு தீர்மானியுங்கள். தீர்மானித்த பிறகு உறுதியாய் இருங்கள்.
அப்புறம் இந்தக் காதல்... (`அட போதும்ப்பா!' என்று சில முணுமுணுப்புகள் கேட்பதால்) எங்கே அந்த முற்றுப்புள்ளி?
(ஒரு பின் குறிப்பு: இதுவரை நான் எல்லா வகையான கதைகளையும் எழுதி வந்தாலும், இன்றுவரை முதல் தடவையாகச் சந்திக்கும் வாசகன்/கி சொல்வது `எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல் விகடன்ல நீங்க எழுதின `தொட்டால் தொடரும்' தான் சார்' அது ஒரு காதல் கதை என்பதறிக.)