நடிகை காஜல் அகர்வால், அழகு சாதன நிறுவனம் ஒன்றை புதியதாகத் தொடங்கியுள்ளார். சிறப்பு விருந்தினராக தன் கணவரை அழைத்து இந்த நிறுவனத்தைத் தொடங்கிய தகவலை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

பிரபல நடிகை காஜல் அகர்வால், கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு, நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு தற்போது ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் `இந்தியன் - 2' திரைப்படத்தில் காஜல் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடித்து வரும் அதேவேளையில், காஜல் அகர்வால் தற்போது புதிதாக பிசினஸிலும் இறங்கியுள்ளார். `காஜல் பை காஜல்’ என்ற பெயரில் அழகு சாதனப் பொருள் விற்பனையை, அவர் தொடங்கி இருக்கிறார்.
இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சிக்கு தன் கணவர் கவுதமையே சிறப்பு விருந்தினராக அழைத்து, பிசினஸ் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். தொடக்க விழா நிகழ்வின்போது, கணவரைக் கட்டியணைத்து லிப் லாக் முத்தம் கொடுத்து, தனது மகிழ்ச்சியை காஜல் வெளிப்படுத்தினார்.
இது குறித்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காஜல், `கணவரின் ஐடியாவில்தான் இந்த அழகு சாதன பிசினஸ் யோசனையே உருவானது. என் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் என்றுமே துணையாக இருக்கும் கிச்சுலுவுக்கு நன்றிகள்' என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நடிகை காஜலின் இந்தப் புதிய முயற்சி வெற்றியடைய வேண்டுமென்று நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.