அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

`` 'துள்ளுவதோ இளமை' என் கனவுப் படம் இல்லை..!

'எப்போ ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்?'‘காதல் கொண்டேன்’ கதையை நான் சொன்னதும், நடிகர் முரளி என்னிடம் கேட்டது, இன்றைக்கும் நினைவிருக்கிறது. என் உள்ளே புது ரத்தம் பாய்ச்சிய வார்த்தைகள்!நினைத்ததெல்லாம் நடந்துவிடுமா என்ன? பாடல் பதிவு செய்தோம். புகைப்படங்கள் எடுத்தோம். பத்திரிகைகளில் விளம்பரங்கள் வந்தன. ஆனால், அந்த என் கனவு அதற்கு மேல் வளரவில்லை!என்னென்னவோ காரணங்கள். பக்கங்கள் போதாது.என் தந்தை 'நீ பறப்பதற்கு ஆசைப்படுகிறாய்' என்றார். நான் பறந்துகொண்டேதான் இருந்தேன். கீழே இறங்கினால் தானே ஆசைப்பட!ஆனால், என்றைக்கும் எனக்கு முரளியின் சிரித்த முகம் நினைவிருக்கும். 'காதல் கொண்டேன்' படம் வந்ததும், அதைப் பார்த்துவிட்டு ‘தனியரு மனுஷனா போராடி ஜெயிச்சுட்டீங்க செல்வா..! உங்க குடும்பத்தைத் தூக்கி நிறுத்திட்டீங்க!' என்றார். வார்த்தைகளின் கனம் தாங்காமல் எனக்குக் கண்ணீர் முட்டியது.

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

‘சேது’ ஹிட்டான சமயம். நடிகர் விக்ரமைப் பார்த்து கதை சொன்னேன். அசந்துபோய்ப் பார்த்தார். ‘பிரமாதமா இருக்கு. நிச்சயமா நாம பண்ணலாம்!’ என்று இடைப்பட்ட காலத்தில் எனக்கு நம்பிக்கை தந்த இன்னொரு நல்லவர்.மூன்று தயாரிப்பாளர்களிடம் என்னைப் பற்றிச் சொன்னார். போய்ப் பார்த்தேன். ‘நல்லா இருக்கு.. கொஞ்ச நாள் கழிச்சு வந்து பாருங்க!’ ‘ஓகே'தான். ஆனா, நான் ரிஸ்க் எடுக்க முடியாது!’ என்று பதில்கள் வர... நொறுங்கிப் போனேன். விக்ரம் தட்டிக் கொடுத்தார். ‘சோர்ந்துடாதீங்க... வாய்ப்பு வரும்! உங்களை இந்த இண்டஸ்ட்ரி நிச்சயமா மிஸ் பண்ணாது செல்வா!’ என்ற அவரது வார்த்தைகள், என் நரம்புகளில் உற்சாக மின்சாரம் பாய்ச்சின.'காதல் கொண்டேன்' கதையைச் சுமந்து தெருத் தெருவாக அலைந்தபோது, என் விதி இப்படியெல்லாம் மாறும் என்று சத்தியமாக நான் நினைத்ததில்லை.என் குடும்பத்தினர் யாரையும் என்னால் நேராகப் பார்த்துப் பேச முடியாது. யார் என்ன பேசினாலும், நான் தண்டமாக இருக்கிறேன் என்று குத்திக்காட்டுவது போல் இருந்தது! அப்போதெல்லாம், கடவுள் என் முன்னால் வந்து எனக்கு எதிரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி பேசிவிட்டுப் போவார்.உண்மையைத்தான் சொல்கிறேன். எனக்கு அப்படித் தெரிந்தது. நான் அவரிடம் அழுவேன். சம்பந்தமே இல்லாமல் மூன்று நாட்கள் அவரையே நினைத்துக்கொண்டு பட்டினி இருந்ததைச் சொல்வேன். ‘ஏன், என்னைப் போட்டு இப்படிப் படுத்தி எடுக்கிறே?’ என்று திட்டுவேன். மானசீகமாகக் கோபித்துக்கொள்வேன்!இதோ, ஒரு வாரத்துக்கு முன்பு திருப்பதி சந்நிதியில் அவரைப் பார்த்து மெய்யுருகி நின்றபோதுதான் புரிந்தது... அவர் முகத்தில் மெலிதான கேலிப் புன்னகை!எனக்கு உண்மை சுட்டது. 'கேட்டதெல்லாம் கொடுத்த பிறகும், மறுபடி வந்து பிச்சை எடுக்கிறாயே!'' கண்களால் பேசினார். பதில் சொல்லத் தெரியாமல் நன்றியுடன் வெளியே வந்தேன்.'துள்ளுவதோ இளமை' என்று படம். நான் கடவுளுடன் பேசிக்கொண்டு இருந்த காலத்தில் என் தந்தை எடுத்த படம். பாதிக்கு மேல் வளர்ந்து நின்றிருந்தது. ஒரு நாள் எனக்குப் போட்டுக் காண்பித்தார். படத்தில் எனக்குக் காட்சிகள் புரியவில்லை. கவலையுடன் அப்பாவைப் பார்த்தேன். அவரது வலி புரிந்தாலும், ‘எனக்குப் பிடிக்கலை!’ என்றேன். எடிட்டரும் உதவியாளர்களும் ஆமோதித்தனர். 'என்ன செய்யலாம்?' என்றார் அப்பா. விழி பிதுங்கிய யோசனைக்குப் பிறகு, 'நீயே செய்றியாடா?' என்றார். என்ன தோன்றியதோ... ‘சரி!’ என்றேன்.வேலையில் இறங்கினேன். அதுவரை எடுத்திருந்த மொத்தப் படத்தையும் தூர வைத்துவிட்டு, புதிதாக எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்பாவுக்கு அதில் வருத்தம். ஆனாலும், மறைத்துக் கொண்டு தோள் கொடுத்துத் தாங்கினார்.அந்தப் படத்தில் ஏற்கெனவே நடித்த பெண்ணிடமே மீண்டும் கால்ஷீட் கேட்டோம். 'உங்களை மாதிரி உப்புமா கம்பெனிக்கு எல்லாம் இனிமே அவ நடிக்க மாட்டா... அவ தெலுங்குல பயங்கர பிஸி! இனிமே எனக்கு போன் பண்ணித் தொந்தரவு பண்ணாதீங்க!' என்று ஏழெட்டுக் கெட்ட வார்த்தைகள் சொல்லி யாரோ போனை வைத்தார்கள்.அந்தப் பெண்ணின் தந்தையிடம் போன் செய்தால், 'நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரணுமா? மரியாதையாகப் போய்விடுங்கள். இல்லை என்றால் கோர்ட்டில் கேஸ் போடுவேன்!' என்றார்.

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

அப்போதிருந்த பொருளாதாரச் சிரமங்களுக்கு நடுவே, இன்னொரு புது ஹீரோயின் தேடுவது எவரெஸ்ட்டில் ஏறுவதற்குச் சமமாக இருந்தது. என் கேமராமேன் அர்விந்த் யோசனைப்படி, பெங்களூர் தெருக்களில் தேடி ஷெரீனைக் கண்டுபிடித்தோம். திட்டமிட்டபடி படத்தை முடித்தோம்.'துள்ளுவதோ இளமை' என் கனவுப் படம் இல்லை. என் மனதில் ஓடிய உலக சினிமா இல்லை. ஆனாலும், அது ஒரு வாய்ப்பு... முதல் வாய்ப்பு!என் அப்பா கேட்டவுடன், ‘என் கதையைத்தான் முதலில் எடுப்பேன்!’ என்று அடம் பிடிக்காமல், ‘சரி’ என்று சொன்ன அந்த ஒரு சிறிய பதில்தான், என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. எவ்வளவு சிறிய வாய்ப்பிருந்தாலும், அதில் முன்னேற்றத்துக்கு ஒரு துளி தென்பட்டாலும் சம்மதித்து, சவாலை ஏற்பது உத்தமம்!இன்றைய இளைஞர்களிடம் எனக்குப் புரியாதது இதுதான். எத்தனையோ சின்னச் சின்ன நல்ல வாய்ப்புகளையெல்லாம் கோட்டை விட்டுவிட்டு, வாழ்க்கையெல்லாம் புலம்பியபடி திரியும் எத்தனையோ இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். காற்றிலே ஒரு நூல் பறந்து வந்தாலும், அதைப் பிடித்து முன்னுக்கு வர மாட்டேன் என்று வறட்டுக் கௌரவம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை... 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்று சொல்லி வைத்த முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை!இப்படி அட்வைஸ் சொல்கிற அளவுக்கு நான் பெரியவன் இல்லை. அது எனக்கும் தெளிவாகத் தெரியும். ஆனாலும் காதல், கனவு, வாழ்க்கை பற்றிய என் வாழ்க்கைப் பாடங்கள் உங்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற ஆசையில்தான் எழுதினேன்... ‘கனா காணும் காலங்கள்!’இதோ, என் அடுத்த படம் ‘புதுப்பேட்டை’ என்னை இழுக்கிறது. தூக்கமில்லா இரவுகள் காத்திருக்கின்றன. அடுத்த தேர்வுக்குத் தயாராகிறேன்!இன்னும் இன்னும் சொல்லத் துடித்த விஷயங்கள் நெஞ்சுக்குள் நிற்கின்றன. பகிர்ந்துகொள்ளப் பக்கங்கள் தந்த விகடனுக்கு நன்றி. அழுத்தமான கைகுலுக்கலுடன் விடைபெறுகிறேன்.இன்னொரு பயணத்தில், இன்னொரு தருணத்தில் சந்திப்போம்!

- செல்வராகவன்

(24.04.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)