அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

கதை கேட்டுவிட்டு, செல்வாவை அலைக்கழித்த அந்த ஹீரோ யாரா இருக்கும்?!

சினிமா உலகில் எப்படியோ ஐந்தாறு வருடங்கள் கடந்துவிட்டேன். இன்று ஜில்லிடும் ஏ.சி.காரில் உலவுகிறேன். கொஞ்சம் சந்தோஷமாகவே இருக்கிறேன். ஆனாலும், என் ஜன்னலுக்கு வெளியே நடமாடுகிற மனிதர்களைப் பார்த்தால், ஏனோ பொறாமை எட்டிப் பார்க்கிறது.பைக்கின் முன்னால் ஒட்டிக்கொண்டு ஒரு குட்டிக் குழந்தை... பின்னால் கட்டிக்கொண்டு காதோரம் ரகசியம் பேசும் மனைவி... குஷியாகக் காற்றில் பறக்கும் கணவன்... ம், கொடுத்து வைத்தவர்கள்!காலையில் ஆபீஸ் போய், மாலையில் வீடு திரும்பி, குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடி, குடும்பத்துடன் சாப்பிட்டு, டி.வி. பார்த்து பத்து மணிக்கெல்லாம் படுக்கைக்குப் போகிறவர்கள் பாக்கியசாலிகள்!

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

 எங்களின் உலகம் வேறு! நாங்கள் சில நேரம் மாதக் கணக்கில் ஒழுங்காகத் தூங்குவதில்லை. சாப்பிடுவதில்லை. எந்நேரமும் பதற்றம். ஏதேதோ ஓட்டம். சினிமா ஒரு காடு. அடர்ந்து இருள் படர்ந்து கிடக்கும் காடு. இரவும் பகலும் விழித்திருந்து வெறித்தனமாக இரை தேடினால் மட்டுமே உயிர் வாழ முடிகிற பிராணிகள் நாங்கள்!படிப்பை முடித்து எந்த வேலைக்கும் போகாமல் 'இனி சினிமாதான் என் வாழ்க்கை!' என்று வீட்டில் ஒரு வருடம் உட்கார்ந்திருந்தேன். என் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் அது.எங்கிருந்தோ ஒரு துணிச்சல்... சினிமாத் தேடலுடன் கிளம்பினேன். தினமும் தெருத்தெருவாக ஒவ்வொரு சினிமா கம்பெனியாகச் சுற்றுவேன். ''நான் இவருடைய அஸிஸ்டென்ட். தயாரிப்பாளரைப் பார்த்துக் கதை சொல்ல முடியுமா?'' என்பேன். எல்லா இடத்திலும் எப்பொழுதும் ஒரே பதில்தான் வரும்... ''ஒரு ஆறு மாசம் கழிச்சு வந்து பாருப்பா!''வெளியில் வந்தால், தெருவில் நாலு பேர் நிற்பார்கள். ‘‘என்ன?’’ என்றால், ‘‘தயாரிப்பாளர் இந்த வழியாத்தானே ஆபீஸுக்குள்ள போவார்!'' என்றான் ஒருவன். ‘‘அதனால..?’’ என்றேன் ஒரு டீ வாங்கித் தந்துவிட்டு.அவன் கண்களில் கொஞ்சம் உயிர் வந்தது. பைத்தியக்காரன் போல் பார்த்தான். ‘'தினமும் விஷ் பண்ணுவோம்... ஒரு ஆறு மாசம் கழிச்சு அவரே யாரை யாவது உள்ள கூப்பிடுவாரு...’' என்றான். எனக்கு மயக்கமே வந்தது. '‘வேற வழி இல்லையா?'’ என்றேன். ''நீ நகரு... என் இடத்துல வேற எவனோ நிக்குறான்'' என்று விலக்கினான். இப்படி தினமும் ஒரு தினுசான அனுபவம். சினிமா ஓங்கி அறையும். கன்னத்தைப் பிடித்துக் கொண்டு வீடு திரும்புவேன்.

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

இதோ இரண்டு வருடத்தில் நான் ஒரு குட்டி மணிரத்னம்... நான்கு வருடத்தில் அடுத்த ஸ்பீல்பெர்க் என விழித்துக்கொண்டே கனவு கண்டிருக்கிறேன். இரண்டு மாதங்கள் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அங்கே பத்துப் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக, சிலர் இன்னும் உதவியாளர்களாகவே இருப்பதைப் பார்த்ததும், ''எங்கே நம் விதியும் இப்படியே முடிந்து விடுமோ?'' என்று பயந்து வேகமாக வெளியேறிவிட்டேன். ஒரு தொழிற்சாலையில் அடைபட்டுக் கிடக்கக் கூடாது என்பதற்காகத்தானே நான் இன்ஜினீயர் வேலைக்கே போகாமலிருந்தேன்!எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வரும். 'சில வருடங்களில் நானும் இதுபோல் ஆகிவிடுவேனா?' பயம் வயிற்றைப் பிசையும். சோறு இறங்காது. தந்தை என் வேதனை பார்த்து, '‘நானே தயாரிக்கிறேன்... ஏதாவது கதை இருந்தா சொல்லு!'’ என்றார். சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு ஹீரோவிடம் கதை சொல்ல, கஷ்டப்பட்டு நேரம் வாங்கித் தந்தார். கதை சொன்னதும், கண்ணீருடன் என்னை கட்டிப்பிடித்த ஹீரோ, ''எனக்கு இதை அப்படியே எடுத்துக் கொடுப்பா!'’ என்றார்.மடமடவென்று வேலைகள் ஆரம்பமாயின. ‘‘எல்லாவற்றையும் என்னைக் கேட்டுத் தான் செய்ய வேண்டும்’’ என்றார் ஹீரோ. செய்தேன். ஹீரோயினாக ஒரு மும்பை அழகியைக் காட்டி, ‘‘கேளுங்கள்’’ என்றார். ஒரு மாதம் மும்பையில் அலைந்து அந்த ஹீரோயினைப் பார்த்தேன். அவர் கதை கேட்கும் முன் '‘சம்பளம் இவ்வளவு இருந்தால் மட்டும் பேசலாம்’’ என்று ஒரு தொகை சொன்னார்.

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

எனக்குத் தலை சுற்றியது. பின்னே... சம்பளமாக என் படத்தின் பட்ஜெட்டை அல்லவா கேட்டார்! ஹீரோவுக்கு போன் செய்தால், அரை மனதோடு, ‘‘அப்படியா... சரி, புதுமுகம் பாருங்க!’’ என்றார். கிடைத்த போட்டோக்களை அள்ளிக்கொண்டு போய், அவரிடம் காட்டினேன்.‘'யாருமே சரியாயில்லையே!'’ என்றார். '‘என்ன செய்யலாம்?'’ என்றேன். ‘'பார்க்கலாம்... நான் அவசரமா வெளியே போறேன்...’’ என்று நகர்ந்து விட்டார்.ஒரு ஆறு மாதம் அவர் பின்னாலேயே அலைந்தேன். அவர் ஷூட்டிங்கில் இருக்கிற இடமெல்லாம் போனேன். ஒரு நல்ல நாளில், ''இந்த ஸ்கிரிப்ட் உங்களால சரியா ஹேண்டில் பண்ணமுடியுமானு தெரியலை... ஸாரி!” என்றார்.எனக்கு இன்றைக்கும் அவர் மேல் கோபமே இல்லை. அவருக்கு அப்போது என்ன பிரச்னையோ? ஆனால், என்னை அவ்வளவு அலைக்கழித்ததுதான் வருத்தம்!நொறுங்கிப்போய் திரும்பி வந்தேன். இனிமேல் என்ன இருக்கிறது என்று நொந்து போன வேளையில் எனக்குக் கை கொடுத்துத் தூக்கிவிட்டவர்கள் இருவர்.அவர்கள் நடிகர் முரளியும், விக்ரமும்!

- செல்வராகவன்

(17.04.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)