அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

கனா காணும் காலங்கள் - அப்பன் அமைவது வரம்! - செல்வராகவன்

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

“அப்பா சொல்வது தான் வேதம்” இதுபோல் யாருக்கெல்லாம் அமையும்...!

கனா காணும் காலங்கள் - 3‘காதலைச் சொல்லிடும் வழி... இதயம்!’ என எங்களுக்குக் கற்றுத் தந்தவன் சரவணன்... என் நண்பன்!திருத்தமான பையன். தெளிவாகப் பேசுவான். பிரமாதமாகப் படிப்பான். கலகலப்பாகப் பழகுவான். ‘தன்னைப் பார்க்க மாட்டானா... தன்னுடன் பேச மாட்டானா’ என எந்தப் பெண்ணும் சரவணனுக்காக ஏங்குவாள்.ப்ரகாஷ் மாதிரி சரவணனும் என் க்ளாஸ்மேட். ஆனால், அவனைப் போல இவன் கண்கள் எப்போதும் பெண்களைத் தேடாது. பேரழகியே எதிரில் வந்தாலும் இரண்டு செகண்ட் பார்த்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் போய்விடுகிற பையன்.ஒளிவு மறைவே கிடையாது சரவணனிடம். லஞ்ச் டைமில் அப்பாவுக்கே போன் செய்து, ‘‘இன்னிக்கு கிளாஸ் செம போர்ப்பா! பசங்க எல்லாரும் எஸ்கேப் ஆகறாங்க. ஏதாவது பிக்சர் போலாம்னு பிளான்’’ என்பான். பூத்தை விட்டு வெளியே வரும் போது, எங்கள் எல்லோரின் பொறாமைப் பார்வையும் அவன் மீதே இருக்கும்.

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

 ‘‘மவனே... காலேஜ் கட் அடிக்க அப்பாகிட்டயே ஐடியா கேட்கறியே... செம தில்லுடா உனக்கு!’’ என்போம்.‘‘அதில்லடா! அப்பாகிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ‘ஓ யெஸ்... என்ஜாய்!’னு சிரிப்பார். சாயங்காலம் வீட்டுக்குப் போனதும், ‘அது உன் ஃபேவரைட் சப்ஜெக்ட் ஆச்சே, ஏண்டா போரடிச்சுது?’னு விசாரிப்பார். இவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங்கா எங்க அப்பா இருக்கும்போது அவர்கிட்டே ஏன் நான் பொய் சொல்லணும்?’’ என்பான். எங்கள் பொறாமை மேலும் அதிகமாகும்.எங்கள் எல்லோரையும்விட அவனுக்கு முதல் நண்பன் அவன் அப்பாதான். அவர் மின்சார அலுவலக ஊழியர். எல்.கே.ஜி. முதல் ஹைஸ்கூல் வரை தினமும் அவர்தான் சரவணனை பள்ளியில் விடுவார். கூட்டிச் செல்வார். வழியில் அவன் வயதுக்குத் தகுந்தாற்போல் பேசிக்கொண்டே வருவார். இரவு அவன் படிக்கும்போது முன்னால் உட்கார்ந்து இருப்பார். அவன் தூங்கிவிட்டானா என்று பார்த்தபின்தான் படுக்கைக்குச் செல்வார்.சரவணனும் சளைத்தவனில்லை. அப்பாவுக்கு எது வேண்டுமோ அதைச் சரியாக செய்துவிடுவான். படிப்பா... ஓகே! கண்ணியமா... ஓகே! தன் கடமையையும் தன் மீது பெற்றோருக்குள்ள எதிர்பார்ப்புகளையும் நன்கு உணர்ந்தவன். அப்படிப்பட்ட சரவணனும் காதலில் விழுந்தான், அனுவைப் பார்த்தவுடனே!ஆனால், இரவு பகலாகக் கனவு காணவில்லை. அவள் பின்னால் தெரு நாய் போல தொடரவில்லை. ஒரு நாள், சரவணன் தன் பையிலிருந்து ஒரு குட்டி நோட் புக் எடுத்து நீட்டினான். பிரித்தாள் அனு.‘அனு பல்லவி’ என்று முதல் பக்கத்தில் பிங்க் நிறத்தில் தலைப்பு. பக்கங்கள் புரட்டப் புரட்ட, ஒரே நேரத்தில் கோடி கிடார்கள் ஒரே நரம்பைத் தடாரென மீட்டியது போல உணர்ந்தாள் அனு.குட்டி குட்டியாகக் கவிதைகள்...‘சிவப்பணு... வெள்ளையணு...என் அத்தனை அணுக்களும்சத்தம் போடுகின்றன அனு... அனு..!’‘லஞ்ச் அவரில் பகிர்ந்துண்ணும்காக்கைகளாவோம்.அனுவின் கை சாதம்...அடடா, பிரசாதம்!’‘தெய்வம் நீ ஏறியதும்தேராகி விடுகிறதுசிட்டி பஸ்!’'உளறல்களாக இருந்தாலும் அவன் உள்ளம் தெரிந்தது. அவனைப் பிடித்திருந்தது. ‘ஒரு வாரம் டைம் குடு சரவணா!’ என்றாள். ‘ஒரு மாசம்கூட எடுத்துக்கோ அனு!’ என்றான்.இரண்டே நாட்கள்... அனு தன் பிரியத்தையும் சொன்னாள். இருவரும் அடுத்தவர் அறியாமல் காதலித்தார்கள்.கடிதப் பரிமாறல்களிலேயே கல்லூரிக்குள் வளர்ந்த காதலைப் பொத்திப் பொத்தி வைத்திருந்தாலும் அதை அப்பாவிடம் சொல்லச் சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த சரவணன், ஒரு நாள் சொல்லிவிட்டான். ‘ஓ அப்படியா, இதுபத்தி நாளைக்குப் பேசலாம்’ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.‘‘எங்கப்பா எதுக்கும் இப்படி ரியாக்ட் பண்ணினதில்லை. ‘கேரி ஆன்’னு ஜாலியா சிரிப்பார்னு நினைச்சேன். ஆனா, நேத்து அவர் பேசினது கொஞ்சம் பயமா இருக்குடா!’’ என்றான் சரவணன் என்னிடம். ‘‘எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலைப் படாதே!’’ என்று மட்டும் சொல்லி அனுப்பினேன்.மறுநாள், சரவணன் பயந்த மாதிரிதான் ஆகிப்போனது. ‘‘எனக்கு உன் காதல், கத்திரிக்கா எல்லாம் பிடிக்கலை...’’ என்றவர், அனுவையும் சரவணனையும் அழைத்து, ‘‘படிக்கிற வயசுல வர்ற காதல் எதிர்காலத்தையே அழிச்சுடும். நீங்க ரெண்டுபேரும் இன்ஜினீயராகணும்னு பேரன்ட்ஸ் கனவு கண்டுட்டு இருக்கோம். நீங்க இப்படி காதலிலே இறங்கினா, அது படிப்பைத்தான் சாப்பிடும். வயசுக்கோளாறு, வாழ்க்கையைப் பாதிச்சிடக் கூடாது.எப்படியும் எல்லாருக்கும் கல்யாணம் நடக்கும். அது உங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி உங்களுக்குள்ளேயே நடந்தா எனக்கும் சந்தோஷம்தான். நல்லபடியா படிப்பை முடிங்க.நான் காதலுக்கு எதிரி இல்லே! பொறுப்புகளைத் தட்டிக் கழிச்சுட்டு பண்ற காதல்தான் தப்புங்கறேன்’’ என்று இருவரிடமும் இணையாக அமர்ந்து பேசினார். அன்று இரவு அனுவுக்கு அவர்கள் வீட்டில்தான் சாப்பாடு.

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

அவரது பேச்சை இருவருமே சரியான கோணத்தில் எடுத்துக் கொண்டது இளமைப் பருவ ஆச்சரியங்களில் ஒன்று.படிப்பு முடியும் வரை அவர்கள் கல்லூரி தவிர வேறெங்கும் சந்தித்துக் கொண்டதில்லை. அப்பா ஆசைப்பட்டபடியே சரவணன் அமெரிக்கா போனான். ஆறேழு வருடங்களுக்குப் பிறகு, அந்தக் குடும்பங்கள் சொந்தங்களாகின. இன்று அமெரிக்காவில் இருக்கிறார்கள் அனு - சரவணன்!இன்றும் அப்பா சொல்வது தான் வேதம் சரவணனுக்கு.இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த வருட எக்ஸாம் நெருங்குகிற நேரம், ‘உன் ஃபிரெண்ட்ஸை எல்லாம் க்ரூப் ஸ்டடிக்குக் கூப்பிடேன்’ என்று சரவணனின் அப்பாவே எங்களையும் கூப்பிட்டார். அவரே இரவுகளில் எங்களுக்கு அவ்வப்போது டீ தந்தார். அங்கே போய்ப் படித்ததில், தேறவே தேறாது என்று நான் நம்பிக்கை இழந்திருந்த நாலு பேப்பர்களை க்ளியர் செய்தேன். அப்படி ஒரு அப்பன் அமைவது வரம்!‘அடுத்தவன் காதலைப் பத்தியே சொல்றியே... உன் காதலைச் சொல்லுப்பா’ என்று உங்களில் சிலர் கேட்பது கேட்கிறது.என் ஒரு காதலைத்தான் ‘7-ஜி ரெயின்போ காலனி’-யில் சொல்லியிருந்தேன். ஒன்றோடு நின்றுவிடுமா காதல்?அதற்குப் பின்பும் காதல்கள் இருக்கின்றன. அதில் கலாட்டாவான, அதே சமயம் கண்றாவியான காதல் அது!‘ஆரம்பிச்சுட்டாண்டா’ என்கிறீர்களா?

- செல்வராகவன்

(13.02.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)