அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

கனா காணும் காலங்கள்! - காதல் ஒரு முறைதான் வரும் என்பதெல்லாம் சும்மா! - செல்வராகவன்

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

7G ரெயின்போ காலனி காதல் கதை நிஜத்துல வேற மாதிரி முடிஞ்சிருக்கே!

கனா காணும் காலங்கள் - 4காதல் ஒரு முறைதான் வரும் என்பதெல்லாம் சும்மா! வயசும் மனசும் கூட்டணி போடும்போதெல்லாம், அராஜக மெஜாரிட்டியுடன் காதல் ஆளுங்கட்சியாகும்!அனிதா என் முதல் காதலி. என் வாழ்வில் வானவில்லாக வந்து போன ‘ரெயின்போ காலனி’ தேவதை. காதலி போன பிறகு காலனி வாழ்க்கையும் காலி!வீடு மாறினோம். விலாசம் மாறியது. என் தந்தை இயக்குநரானார். கொஞ்சம் பெரிய வீடு இது. அங்கே எதிர்வீட்டில் இருந்தாள் ஷ்யாமளா!சிம்பிளாகச் சொன்னால் வாய் வெந்துவிடும். ஒரு முறை பார்த்தால் இரண்டு நாட்களாவது தூக்கம் கெடும். மனசு தூக்கித் தூக்கிப் போடும். உடம்பு ராட்டினம் ஆடும். அப்படி ஒரு அழகுப் பிசாசு!ஒரு மழைக்கால சாலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நனையாதபடி அவள் தன் நைட்டியை மெலிதாகத் தூக்கியபோது, தொலைந்து போனேன்.‘‘யார்றா அந்தப் பொண்ணு?’’ என்று பேச்சுவாக்கில் என் தெரு பசங்களிடம் கேட்டேன்.

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

 ‘‘பேரு ஷ்யாமளா! ப்ளஸ் டூ படிக்கிறா! இன்னும் எவனுக்கும் சிக்கலை மாப்ளே!’’ என்றார்கள்.இது போதுமே... ஸ்கூல் யூனிஃபார்மில் அவள் தெருவில் இறங்கி நடந்தால் ஏரியாவே ஃபுல் ஃபார்மில் இருக்கும். எந்நேரமும் ஒரு பாடல் ஆரம்பிக்கலாம் என்பது போல தெருவே பரபரப்பாகும்.புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. தெருவில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தோம். கண்களையும் இதயத்தையும் ஷ்யாமளா வீட்டு வாசலில் போட்டுவிட்டு சும்மா ஆடுவோம். அவள் தரிசனம் கிடைத்தால் ஒன்று சிக்ஸர்... அல்லது கிளீன்போல்டு!பந்து அவள் வீட்டுக்குள் விழுந்தால், அது சிக்ஸர் என்று அறிவித்தோம். எப்போது பந்து அந்தப்புரத்தில் விழுந்தாலும் அதை எடுத்துவர நான் தான் முதல் ஆளாக ஓடுவேன்.‘‘எடுத்துக்கோ செல்வா!’’ என்பாள். சிலசமயம் நைட்டியுடன். சிலசமயம் துப்பட்டா இல்லாத சல்வாரில். அபூர்வமாக தாவணியில். அவ்வப்போது டைட்டான டி-ஷர்ட்டில். ஆஹா, அவள் உச்சரிக்கும் போதுதான் என் பெயர் எவ்வளவு அழகு!ஒரு நிமிடம் உயிர் விலகி, ஊர்வலம் போய்விட்டு வரும்.‘‘ஹாய்... ஹலோ, குட் மார்னிங்!” என அவளிடம் சிரித்தேன். ‘‘எக்ஸாம் ஈஸியா இருந்துச்சா?’' என ஏதேதோ பேசினேன். பழக்கமானேன். இன்னும் இன்னும் நெருக்கமானேன். பேச்சுவாக்கில் ஷ்யாமளா என்னைவிட ஒரு வயது பெரியவள் என்று தெரிந்தது. அய்யோ, அப்படியா! அதனாலென்ன... டேக் இட் ஈஸி!இந்த ஏழை பக்தனுக்கும் கடவுள் கண் திறந்தான். ஒரு முறை பேச்சுப் போட்டியில் எனக்கும் பரிசு கிடைத்தது. வழங்கியவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ‘'சொல்லியிருந்தா நானும் ஃபங்ஷன் வந்திருப்பேன்ல...'’ என்றாள் ஷ்யாமளா. எனக்கு அதுதான் பரிசு!என் வீட்டுக்கு எப்போதாவது ஷ்யாமளா வருவாள். தீபாவளி சட்டையைத் தேடி போட்டுக்கொண்டு எதிரில் செல்வேன். ‘'என்ன செல்வா... எதும் ஃபங்ஷனா?’' என்பாள். ‘'இல்லல்ல... சும்மா கிரவுண்டுக்கு. விளையாட...’' என்பேன். தோள் குலுக்கிச் சிரிப்பாள். தினம் தினம் போட தீபாவளிச் சட்டை இல்லை என்னிடம்!அப்படியே பிக்கப்பாகி ஷ்யாமளா வீட்டுக்கு அடிக்கடி போக ஆரம்பித்தேன். அம்மா, அப்பா, தம்பி என்று அளவான குடும்பம். எல்லோரும் பிஸி. நிறைய நேரம் தனியாகத்தான் இருப்போம்.‘'இன்னிக்கு பேப்பர்ல ஹெட்லைன் பார்த்தியா ஷ்யாம்..?’''‘என்னவாம்?’''‘செல்வா- ஷ்யாமளா இன்று பொருட்காட்சியைச் சுற்றிப் பார்க்கிறார்கள்னு தலைப்புச் செய்தியே போட்டுட்டான்!’'

கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்
கனா காணும் காலங்கள்! - செல்வராகவன்

 ஒருகணம் புரியாமல் மறுகணம் கண்களில் பல்பு காட்டுவாள். என் தோள் தட்டிச் சிரிப்பாள். குதித்துச் சொல்வாள். ‘'அய்யோ... இதாண்டா உன்கிட்டே எனக்குப் பிடிச்சிருக்கு. சரி, இன்னிக்கு எக்ஸிபிஷன் போலாமா?’' என்பாள்.என் குடும்பத்தோடு அவளும் அவள் அம்மாவும் வருவார்கள். அவளுக்கு இணையாக நடக்கும்போது, யாரும் அறியாமல் அங்கங்கே பட்டுக் கொள்ளும். எனக்குள் தீ பற்றிக் கொள்ளும்.அவளுடன் தனியே இருக்கும் சந்தர்ப்பங்களில் யதார்த்தமாய் அவள் உடை சரியும். இயல்பாய் சரி செய்வாள். சிக்னலா..? அப்படியே சட்டென ஒரு கிஸ் அடித்தால்? எனக்குள் படபடப்பு அதிகமாகும். ‘ஏதாவது செய்டா செல்வா!’ என்று எனக்குள்ளே கதறுவேன். இந்த பயம்தான் பிடுங்கித் தின்னும்!இருந்தாலும் ஒரு சாத்தான் ஆப்பிள் தின்னச் சொல்லி என்னைத் தினம் தினம் துன்புறுத்தியது. ஆப்பிள் என்ன விலை?ஒரு பிற்பகல்... ஷ்யாமளாவின் வீட்டில் என்னையும் அவளையும் தவிர யாருமில்லை. ‘சர்த்தான்... ட்ரை பண்ணு மாமேய்!’ என்றது சாத்தான். ஏதோ எடுக்கத் திரும்பியவளை சட்டென அணைத்துவிட்டேன்... மெலிதாய், பின்பக்கமிருந்து.ஷ்யாமளா அப்படியே நின்றாள். ‘'செல்வா!’' என்று என் தோள்தொட்டு முன் பக்கமாய் இழுத்தாள். உடம்பு நடுங்க, அப்படியே அவளை மீண்டும் அணைத்தேன். சரிந்தவளின் மீது முகம் புதைத்தேன். என்னை இதமாக இறுக்கினாள். ஓரிரண்டு நிமிடங்கள் உலகம் நின்றது. அப்புறம் அடுத்தது என்ன? ஐ லவ் யூ சொல்லலாமா? உதட்டில் முத்தமிடலாமா? விக்கெட் விழுமா? நிமிர்ந்தேன்.‘'என்ன செல்வா? என்ன ப்ராப்ளம்?” என்றாள் எதுவுமே நடக்காதது போல. கலக்கமும் தயக்கமுமாய் அவளைப் பார்த்தேன். ‘‘அப்படி உட்காரு! ஃபிராங்க்கா பேசலாம். காபி சாப்பிடறியா..?” என்றாள். வெட்கம் பிடுங்கித் தின்ன, விருட்டென வெளியில் வந்தேன். அது எப்படி ஒரு ஆணின் தொடுதல் புரியாமல் போய் விடும். அல்லது புரியாதது போல் நடிக்கிறாளா?இதயம் விட்டுவிட்டுத் துடித்தது. கத்தி ஆர்ப்பாட்டம் செய்து பிரச்னை ஆக்காமல் விட்டாளே!அந்த நிம்மதி அன்று இரவு வரை தான். வெளியே சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தபோது என் வீட்டில் ஷ்யாமளா. என் உலகம் உறைந்தது. கண்கள் துடித்தன. கால்கள் துவள... அப்படியே நின்றுவிட்டேன். அவள் நேரே என்னிடம் வந்தாள்.‘'இப்பத்தான் ஆன்ட்டி சொன்னாங்க. நீ இந்த டெர்ம் சரியா மார்க்ஸ் வாங்கலியாமே?’' அப்படியே டைட் க்ளோஸ்-அப்பில் பார்த்தேன்.'‘ஏதாச்சும் டவுட்ஸ் இருந்தா, என்கிட்டே கேட்டிருக்கலாமே நீ... ம்?’'கேட்கட்டுமா? மனதுக்குள் என்னென்னவோ ஓடிற்று. அவள் ஒரு முறை என்னை உற்றுப் பார்த்தாள். ‘‘என் தம்பி வயசுடா உனக்கு. நீயும் எனக்குத் தம்பிதான். எப்ப வேணாலும் வீட்டுக்கு வா! நான் சொல்லித் தர்றேன். ஓ.கே!’' என்று போய்விட்டாள். என் அம்மா அவளைப் பெருமையாகப் பார்த்தார்.தம்பியா..? ஒற்றை வார்த்தையில் என் கனவைக் கசக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாளே!தினம் பார்க்கும்போது, "இந்தவாட்டி எத்தனை மார்க்..? எப்போ எக்ஸாம்..?'’ என்று கேட்பாள். செயற்கையாய்ச் சிரித்தபடி கடந்துவிடுவேன். ஏன் ஷ்யாமளா... என்னடி ஆச்சு? என்னை ஏன் கைவிட்டாய் என் பரதேவதையே?ஒரு வருடம்தான். அதிரவைக்கும் அந்தச் செய்தி வந்தது. எங்கள் தெருவிலேயே இருந்த ஒரு பையனுடன் ஓடிப் போய்விட்டாள் ஷ்யாமளா.நான் சிதறிப் போனேன்.ஷ்யாமளாவை இழுத்துக்கொண்டு ஓடியவன் கிட்டத்தட்ட ஒரு வெட்டி. தத்திப் பயல். பக்கத்தில் போனாலே நாறுவான். அவனோடு எப்படி இவளுக்குக் காதல் வந்தது..? தேவதைகள் முட்டாள்கள்!இனி காதலே வேண்டாம்டா சாமி!ப்ளஸ் டூவில் குறைவாக மார்க் கிடைத்தாலும் இன்ஜினீயரிங் ஸீட் கிடைத்தது. பிரசவ வைராக்கியம் மாதிரிதான் ஆகிப்போனது என் காதல் வைராக்கியமும்.காரணம் - தேவதைகள் இன்ஜினீயரிங்கும் படிக்கிறார்கள்!

- செல்வராகவன்

(20.02.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)