அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

கனா காணும் காலங்கள் - ஒன்...டூ...த்ரீ... காதல்! - செல்வராகவன்

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

எத்தனை காதல்கள் வந்து போனாலும், புதிதாக ஒரு பெண் வந்தால் பூ பூக்கும்..!

ல்லூரிக்குப் போன புதிதிலேயே தெரிந்துவிட்டது - என்னால் நாட்டின் நம்பர் ஒன் இன்ஜினீயர் ஆக முடியாது!அந்த வயதில் அந்தத் தெளிவாவது அவசியம்.நம்மால் எது முடியும், எது முடியாது என்று தெரியாமல்தான் நம்மில் பல பேர் வாழ்க்கையைத் தொலைக்கிறோம். நமக்குள் என்ன திறமை இருக்கிறது என்று நமக்கே தெரியாவிட்டால், உலகத்தில் என்ன செய்ய முடியும் நம்மால்?ஏறக்குறைய இரண்டு மாதங்கள் யோசித்து, 'இனி சினிமா!' என்று முடிவெடுத்தேன். 'கதை எழுத வரும்' என்று நம்பினேன். சினிமாவில் பாதிப்பேர் பெரிதாகப் படித்தவர்கள் இல்லை என்று கேள்விப்பட்டதும், மனதுக்குள் ஊற்று பெருக்கெடுத்தது. இரண்டாம் வருடத்துடன் இன்ஜினீயரிங் போதும் என்று முடிவெடுத்தேன்.'பளார் பளார்' என இரண்டு முறை அறைந்தார் அப்பா. அம்மாவோ, பூஜையறையினில் கடவுள் முன் அழுதார். வேறு வழியின்றி மீதி இரண்டு வருடங்களை தியேட்டரும் கல்லூரியுமாக முடித்தேன்.

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

'எக்கேடாவது கெட்டுப் போ' என்று என் தந்தை தண்ணி தெளித்துவிட்டார். கோடம்பாக்கத்தில் என் போராட்டத்தை ஆரம்பித்தேன்.என் 'தண்டச்சோறு' வாழ்க்கை தொடங்கியது. பகலில் தெருத்தெருவாகப் படம் பண்ண (ஒரு தன்னம்பிக்கைதான்!) முயற்சிப்பதும், இரவில் தந்தையுடன் சண்டையுமாக வாழ்க்கை ஓடியது. டெல்லிக் குளிர் வாட்டி வதைத்த ஒரு திரைப்பட விழாவில் அவளைப் பார்த்தேன். மொழி தெரியாத படத்தை முழி பிதுங்கப் பார்த்துக்கொண்டு இருந்த நான் கொட்டாவி விட்டபடி திரும்பினால்... பக்கத்தில் அவள்! அந்த அரை இருட்டில் சிகரெட் லைட்டர் ஜோதி போல ஜொலித்தாள். மாநிறம் தான். சுருள்சுருளாக நெளியும் கேசம். ஏதோ சுகந்த வாசம். ஜீன்ஸ், டி-ஷர்ட் அவள் அளவுகளையும் அழகையும் பிரமாதமாக எடுத்துக்காட்டியது. அவளை மீண்டும் மீண்டும் பார்த்தேன்.எத்தனை காதல்கள் வந்து போனாலும், புதிதாக ஒரு பெண் வந்தால் பூ பூக்கும் வாசம்!திரையின் வெளிச்சத்தில் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஒவ்வொரு விதமாக அழகாய் இருந்தாள். விளக்குகள் எரிந்தபோது, அவள் பேரழகி எனத் தெரியவந்தது.கலைந்து நகர்கையில் (வேண்டுமென்றே!) அவள் காலில் மிதித்தேன். 'ஓவ்' என அலறினாள். கலவரமாகத் திரும்பினேன். ஓவராகப் பதறினேன். 'இருட்ல சரியா தெரியலை' என்றேன். என் பிரச்னை எனக்கு! தயவுசெய்து மன்னியுங்கள் என ஏராளமான முறை கெஞ்சினேன். ஐடியா வொர்க் அவுட் ஆயிடுத்து! சிறிது தூரம் அவள் கூடவே நடந்தேன். வழியில் காபி ஷாப் இருந்தது."என்கூட ஒரு காபி சாப்பிட முடியுமா?""என்ன... காலை மிதிச்சதுக்கு காபியா?""ம்... காலை மிதிக்கலைனாலும் காபி சாப்பிடக் கூப்பிட்டிருப்பேன்!"முதல் முறையாகப் புன்னகைத்தாள். ஏதேதோ பேசினோம். அத்தனையும் ஆங்கிலத்தில்!அவள் ஒரு ஜர்னலிஸ்ட். அதுவும் இங்கிலீஷ் ஞானி. உலக சினிமாவை அலசிப் பிழிந்து உதறிக் காயப்போடுகிற அசைன்மென்ட். பேசப் பேச, இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது புரிந்தது. காதலில், முதலில் கண்ணுக்குத் தெரிவது ஒற்றுமைகள்தானே?அந்த ஒரு மணி நேரம் அவளை நன்கு சிரிக்க வைத்தேன். அப்புறமென்ன? தினமும் சினிமா அவளுடன்தான்! இரண்டாவது நாளில் தோள்கள் உராய்ந்தது. ‘‘ஹேய்ய் யூ!’ எனச் செல்லமாகக் குட்டினாள். தோள் தட்டினாள். கூட்டத்தில் விரல்கள் பற்றினேன். பகலில் நேரிலும் இரவெல்லாம் போனிலும் பேசினோம்.ஐந்தாவது நாளில் வில்லெடுத்து மெள்ள ஒரு அம்பு விட்டேன். 'உன்னைப் போல் ஒரு தோழி என் வாழ்க்கையில் வந்தால் அது வரம். வரம் நிச்சயம் வரும்' என்று கவிதை மாதிரி சொன்னேன். மறுநாளே அவள் 'உன்னைப் பிரிந்தால் என்னவோ போலிருக்கிறது' என்றாள்.இது... இதைத்தானே எதிர் பார்த்தேன். மறுநாள் ஒரு திருநாள். ரோஜாவுடன் காதல் சொன்னேன். பூவைப் போலவே பூத்தது அவள் முகம். அப்பாடா... என் காதலைச் சொன்னதும், முதன் முதலாக ஒரு பெண்ணின் முகத்தில் சந்தோஷம் பார்த்தேன்.

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

 "சரியா வருமா?" என்றாள்."என்ன... லைஃப் ஃபுல்லா உன்கூட இங்கிலீஷ்ல பேசணும். அதுதான் கஷ்டம்!" என்றேன். மெலிதாகச் சிரித்தபடி, "ஐ டூ லவ் யூ செல்வா!" என்றாள்.உள்ளுக்குள் பறந்தேன். முதல் முறையாக ஒரு பெண்ணை அணைத்துக்கொண்டு தலைநகர வீதிகளில் நடந்தேன். விழா முடிந்தது. விடைபெற மனமில்லை. இரண்டு நாட்கள் டெல்லியைச் சுற்றினோம் காசெல்லாம் கரைந்தது. 'ஊருக்குப் போகிறேன்' என்றேன். கொஞ்சம் கண்ணீரும் நிறைய முத்தங்களுமாக வழியனுப்பினாள்.சென்னை வந்தேன். கனவு போய், நினைவு சுட்டது. சினிமா என் மூளைக்குள் டிரம்ஸ் அடித்தது. பின்னே? வாழ்க்கையை அல்லவா அடகு வைத்திருக்கிறேன். வெறி பிடித்தாற்போல் வேலையில் மூழ்கினேன்.தினமும் போனில் காதல் பேசுவோம். மாதக் கடைசியில் பில்லைப் பார்த்து, 'ஏண்டா... நீ சோறுதான திங்கிறே?' என்றார் அப்பா.ஒரு மாதத்தில் அவளே என்னைப் பார்க்க வந்தாள். சென்னையைச் சுற்றினோம். அவள்தான் செலவழித்தாள். ஒரு நெருக்கமான நேரத்தில், அவளின் ‘இறந்த காலம்’ சொன்னாள். அவளது பழைய காதலன் என்னென்ன டார்ச்சர்கள் செய்தான் என்று விவரித்தாள்.'நாம் எப்படி இருந்தாலும், வருபவள் கன்னி கழியாமல் வரவேண்டும்' என்பதுதானே எல்லா ஆண்களின் குணமும். உள்ளே ஏமாற்றம் உணர்ந்தாலும், 'நமக்கும் இது மூன்றாவது காதல்தானே!' என்று தேற்றிக்கொண்டேன். 'நானிருக்கிறேன்!' என்று நம்பிக்கை தந்து அனுப்பி வைத்தேன்.இப்படியே கழிந்தது ஒரு வருடம். அடிக்கடி சென்னை வந்துவிடுவாள். நான் டெல்லி போகவே இல்லை. சிகரெட்டுக்கே கையேந்துகிற செல்வராகவன் வேறு என்ன செய்வான்?அவளோ மாதம் நாற்பதாயிரம் சம்பாதிக்கிற பெண். இருந்தும் புரிந்துகொண்டாள். என் மீதான காதல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. ஒரு சில மாதங்களில் என் மீது வெறிகொண்ட பிராணி போல பேரன்பு கொண்டாள்.தூரம்! காதலின் மிகப் பெரிய எதிரி இதுதான். நான் என் வேலையின் சலிப்பை அவ்வப்போது அவள் மீது காண்பித்தேன். நான் அவளை விட்டுப் போகிறேன் என்று அவளுக்குத் தோன்றியது. ஆயிரமாயிரம் சண்டைகள் ஆரம்பமாயின.தினமும் இருபது தடவை போன் செய்து, நான் எங்கே யாருடனிருக்கிறேன் என்று சோதனை செய்தாள் (பாழாய்ப் போன மொபைல்!). இங்கு வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டு இருந்த எனக்குள் எரிச்சல் பரவியது.

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

 என் போனில் தற்செயலாக ஒரு பெண் குரல் கேட்டால், அவர்களின் ஜாதகம் என்னவென்று குடைந்தாள். நேரில் ஒருமுறை சண்டை போடும்போது, சில்வர் தட்டை எடுத்து வீசினாள். என் நெற்றி கிழிந்து ரத்தம் வந்தது. உடைந்து கதறினாள். 'என் காதலைப் புரிந்துகொள்ள மாட்டாயா?' என்று அழுதபடி எழுந்து போனாள்.ஒரு நாள் திடீரென போன் செய்து, 'உன் தொழில் பிடிக்கவில்லை. விட்டு விடு... நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்!' என்றாள்.'முடியாது...' என்றேன். மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள். 'உன் காதலே வேண்டாம், போடி!' என்று கோபத்தில் கத்தினேன்.ஆண்டவா! அடுத்த நொடி என் வாழ்க்கையிலேயே மிக வேதனையான தருணம். எங்கேயோ ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் போனில் இருந்தவள், தன் கையை பிளேடால் அறுத்துக்கொண்டு அலறினாள்.என்ன இனிமை என நான் நேசித்த குரல்... என்ன இளமை என நான் கொண்டாடிய அழகு... எல்லாம் விலகி நிற்க, என் காதோரம் அவள் அலறல் சப்தம். குலை நடுங்கிப் போனேன். என் நண்பன் ஒருவனின் நம்பர் தேடி, விஷயத்தைச் சொல்லி அவள் வீட்டுக்கு ஓடுமாறு கெஞ்சினேன். அவன், அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.இங்கே எங்கள் வீடு ஜப்திக்குப் போன நேரம் அது. ஊரெல்லாம் அலைந்து, இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு நானும் டெல்லிக்கு ஓடினேன். ஆஸ்பத்திரியில் அவள் பக்கத்திலேயே இரண்டு நாள் உட்கார்ந்திருந்தேன். கண் விழித்து என்னைப் பார்த்தவள் சொன்ன முதல் வார்த்தை...‘‘ஐ ஹேட் யூ!’’

- செல்வராகவன்

(06.03.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)