
காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு செல்வராகவன் சொல்லும் பாடம் இது...!
‘ஐ ஹேட் யூ!’ என்று அவளது வார்த்தைகள் என்னை அடித்து நொறுக்கிக் குப்பைத் தொட்டிக்குள் கொட்டியது!பெண்களிடம் இதுதான் பிரச்னை! நாம் எவ்வளவு செய்தாலும் அதில் ஒளிந்திருக்கும் காதலைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், அவர்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தோம். என் மனம் காயப்பட்டிருந்தது. அவள் காலில் விழாத குறையாகக் கெஞ்சினேன். அழுத்தமான மௌனத்துக்குப் பிறகு... "உன்மேல எனக்கு நம்பிக்கை இல்ல!’’ என்றாள்.‘‘சினிமாவுக்குப் போனா வேற எவளையாவது தேடிட்டுப் போயிடுவே!’’ என்றாள். ‘‘என் கூட வந்திரு... நான் உனக்கு பி.பி.சி-யில வேல வாங்கித் தர்றேன்" என்றாள்.கோபம் உச்சந் தலையேறி உலுக்கியெடுத்தாலும் பொறுமையாய், ‘‘இல்ல... புரிஞ்சுக்கோ, சினிமா என் கனவு!’’ என்றேன்."அப்ப எங்கப்பாட்ட வந்து பேசு.... உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றாள். சில சமயம் பெண், ஆணாகிவிடுகிறாள். ஆண், பெண்ணாகிவிடுகிறான்.

"இப்ப முடியாது. ஒரு ரெண்டு வருஷம் டைம் கொடு... நான் என் முதல் படத்தை முடிச்சதும் இதுபத்திப் பேசுவோம்'’ - கெஞ்சிக் கேட்டேன். வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிப் போய்விட்டாள். எனக்குக் கிறுக்கு பிடித்தது. நடுத்தெருவில் கலக்கமாய் நின்றேன். நடைபாதையில் அப்படியே உட்கார்ந்தேன். பிரச்னை முடியவில்லை. அன்று இரவு அவளிடமிருந்து போன். "அவ்ளோதானே நீ! இன்னொரு ஆட்டோ பிடிச்சு என் பின்னாலயே துரத்திட்டு வருவேனு நினைச்சேன். உனக்குள்ள லவ் இல்லடா!" என்றாள். சண்டை நீடித்தது.மறு நாள் காலையில் போன் செய்தேன். என் குரல் கேட்டபோதெல்லாம் ரிசீவரை அறைந்து சாத்தினாள். என் விதியை நானே நொந்தபடி சென்னை வந்து சேர்ந்தேன். அவ்வப்போது அவள் நினைவு வரும். போன் போடுவேன். ம்ஹ¨ம்... அவள் குரலைக்கூட கேட்க முடியவில்லை.இங்கே என் தந்தையின் நெருக்குதல் அதிகமானது. "அசிஸ்டென்ட்டா திரிஞ்சது போதும். சினிமா நிறைய கத்துக்கிட்டே! படம் பண்ணு. ‘துள்ளுவதோ இளமை’ ஆரம்பிச்சிரு...’’ என்றவர், சிறு இடைவெளிக்குப் பின், ‘‘இல்லேன்னா எல்லாரும் தெருவுல நிப்போம்!" என்றார்.காதலை தூக்கியெறிந்துவிட்டு இயக்குநர் வண்டியில் ஏறினேன். காதல் வெறியை வேலையில் காண்பித்தேன். சில நேரங்களில் மனம் விரக்தியடையும். சொல்ல முடியாத வேதனைதான். விக்கி விக்கி அழுத இரவுகள் அதிகம்.இடையில் ஆறேழு வருடங்கள் கடந்த பிறகு இப்போது நான்கு மாதத்துக்கு முன்னால் போன் செய்தாள். ஒரு போலீஸ் அதிகாரியைத் திருமணம் செய்துகொண்டாளாம். "உன் வேல்யூ இப்பத்தான் புரியுது செல்வா! ச்சோ... என்கிட்ட எப்படியெல்லாம் கெஞ்சுன..? உன்னை மிஸ் பண்ணிட்டேன். இந்தாளு என்ன ரொம்பக் கேவலமா நடத்துறான்" என்றாள்.கடவுளே... வாழ்க்கையெல்லாம் ஒப்பிட்டுக் கொண்டே இருந்திருக்கிறாள்!காதலில் ஒன்றை ஒன்று ஒப்பிடக்கூடாது. ஒப்பிட ஆரம்பிப்பது நரகத்தின் கதவைத் திறப்பது மாதிரி. இருக்கிற நிம்மதியும் போய்விடும்."உன்னப் பாக்கணும் போல இருக்கு... மீட் பண்ணலாமா செல்வா?" என்றாள்."இந்த ஜென்மத்தில் வேண்டாம்" என்றேன். காதலைப் பற்றி ஒரு பெரிய உண்மை புரிந்தது. அனுபவமும் பயிற்சியும் இருந்தால்தான் எந்த விஷயத்திலும் எக்ஸ்பர்ட் ஆக முடியும். காதலும் அது போலத்தான்.முதல் சில காதல்கள் பயிற்சிக்குதான். இன்று என்னை ஒரு பெண் காதலித்தால் அவளை மிக சந்தோஷமாக வைத்துக் கொள்ள அந்த அனுபவங்கள் உதவும். காதல் தோல்விகள், ஒருவகையில் சந்தோஷப் படிக்கட்டுகள்தான்!கைகூப்பிக் கேட்கிறேன். தயவுசெய்து பெண்களை சாதாரணமாக எடை போடா தீர்கள். அவர்கள் நம்மை விட பல மடங்கு புத்திசாலிகள்.தன்னிடம் அன்பாகப் பழகி, அசத்துகிற பையனைப் பார்த்து ‘ஐ லவ் யூ!’ என்று சொன்னால் அங்கேயே முழு சந்தோஷமும் அடைந்துவிட முடியாது. 'நீ பரிசீலனையில் இருக்கிறாய்' என்பதுதான் அதற்கு அர்த்தம்.நீ யார்? நீ எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்கிறாய்? உன் படிப்பு என்ன? என்ன வேலைக்குப் போவாய்? உன் பார்வை மற்ற பெண்களையும் பார்க்கிறதா? அவளின் தாய் தந்தையை மதிக்கிறாயா? என ஒவ்வொன்றையும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கவனிப்பார்கள்.

காதல் என்பது ஆரம்பம். செக்ஸ் என்பது 5 நிமிடம். திருமணம் 60 நாள். வாழ்க்கை 60 வருடம்.ஆண்கள் 5 நிமிடத்தையே பெரும்பாலும் நினைத்துக்கொண்டு இருக்க, பெண்கள் 60 வருடத்தையே நினைக்கிறார்கள். இருவர் மீதும் தவறில்லை. ஆண்டவன் படைப்பு அப்படி!ஆனால், காதலைவிட பெண்களை விட பரம சந்தோஷம் ஒன்று உண்டு. பார்க்கும் தொழில் மனதுக்குப் பிடித்துவிட்டால் வேலை செய்யும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கம்!இதோ... மனதெல்லாம் நிம்மதி பரவி கண்கள் செருக... ஒரு போதையுடன் சினிமாவில் என்னால் வேலை செய்ய முடிகிறது.இச்சை வராமல் இருக்காது. தாகமெடுத்தால் தண்ணீர் தேடு. தாகம் தீர்ந்ததா... வேலையைப் பார். கொச்சையாக இருந்தாலும் இதுதான் சத்தியம்!தூரத்தில் தெரியும் உன் லட்சியப் புள்ளியை நோக்கிப் போய்க்கொண்டே இரு... புள்ளியைத் தொட்டுவிட்டால் மற்றதெல்லாம் தானாய் வரும்!உறவில் எனக்கு ஒரு பெண்ணிருந்தாள். நான் இன்ஜினீயரிங் படிக்கிறேன் என்றதும் கண்ணோடு கண் பார்த்தாள். அவர்கள் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் விழுந்து விழுந்து கவனித்தாள். அவள் தாய் என்னை ‘மருமகனே!’ என்பார். நான் சினிமா என்றேன். அவர் 'மகனே' என்றார்.தாயும் மகளும் வீடுதேடி வந்து கல்யாணப் பத்திரிகை வைத்தார்கள்.இன்று என் காதுபடவே "ம்... செல்வாவுக்குக் குடுத்திருந்தா என் பொண்ணு எப்படியிருந்திருப்பா?" என்கிறார் அந்தத் தாய்.இதுதான் உலகம்! இதேபோல் பல பெண்களைத் தவறவிட்ட ஆண்களையும் பார்த்திருக்கிறேன். நானும் கூட!அப்படியானால் காதல், திருமணம் இதெல்லாம் சும்மாவா?சத்தியமாக இல்லை!கணவன் கண்ணசைத்தாலே புரிந்துகொள்கிற மனைவிகள் இருக்கிறார்கள். காதலன் காலைப் பக்தியுடன் சுற்றும் காதலிகளும் இருக்கிறார்கள்.அது சரி, பெண்ணை வசியம் செய்வது அவ்வளவு கடினமா என்ன?ச்சேச்சே... ரொம்ப சுலபம்! அந்த டெக்னிக்கை...
- செல்வராகவன்
(13.03.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)