
பெண் என்பவள் பெரும் சக்தி... அதனால் தான் பத்தினி சாபம் பலித்தது!
ஒரு பெண் மனதில் இடம் பிடிக்க என்ன வேண்டும்?அழகு, அறிவு, பணம், பதவி... இவை எல்லாவற்றையும்விட அவசியமான ஒன்று உண்டு. அதன் பெயர் உண்மை!ஒரு பெண் உன் மேல் பைத்தியமாகச் சுற்ற வேண்டுமா? உன்னை வாழ்க்கை முழுக்க உண்மையாக நேசிக்க வேண்டுமா?‘அட, நடக்கிற காரியமா ஏதாவது சொல்லுப்பா?’ என்கிறீர்களா!நடக்கும், இதெல்லாமே நடக்கும். எப்போது?வயசின் வேகத்தில் எதிர்ப்படுகிற எல்லாப் பெண்களையும் துரத்துவது, சும்மா டைம்பாஸ்க்கு விரட்டுவது, அவ்வப்போது பஸ்ஸிலும், பைக்கிலும், அபூர்வமாக தியேட்டரிலும் உரசிக்கொள்ளத் தேடுவது, இரண்டு மூன்று பெண்களை ஒரே நேரத்தில் பராமரிப்பது, 'சும்மா தொட்டுட்டு விட்டுரலாம்' எனத் திட்டம் போட்டுத் திரிவது... இது எதுவும் காதல் இல்லை... அசிங்கம்! ஒருநாள் இவையெல்லாம் உன்னையே அசிங்கப்படுத்திவிடும். இப்படித் திரிந்தால் வாழ்க்கையில் உனக்கு வந்து சேர்வதும் அப்படிப்பட்டதாகவே வாய்க்கும்.

காதலில் உண்மை வேண்டும் என்று எனக்குப் புரியவைத்த கதைகள் பல உண்டு. நெகட்டிவ்வான உதாரணமாக இருந்தான் என் நண்பன் குமார். அப்போது அவனுக்கு வயசு 21. இஞ்ச் இஞ்ச்சாக இளமைத் திமிர் தாண்டவமாடும் வயசு. எப்படிப்பட்ட புதுசையும் பழசாக்கிவிடுகிற பயங்கரவாதி.எந்தப் பெண் எதிரே வந்து நின்றாலும், அவன் பார்வை மிகச் சரியாக தவறாகத்தான் போகும். வாசிக்கிற புத்தகம், பார்க்கிற படம், சுற்றுகிற இடம் என எல்லாமே இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குள்ளாகும் செயல்கள். வீட்டில் அவனுக்குத் தனி அறை. தாராளமான சுதந்திரம்.அவனுக்கு ஒரே ஒரு தங்கை. தங்கையின் தோழிகள் அடிக்கடி வீடு வந்துபோவார்கள். அப்படி யார் வந்தாலும் அவனும் இருப்பான். சிரிக்கச் சிரிக்கப் பேசுவான்.தங்கையின் ஒரு தோழியின் பெயர் மாலினி. ஒரு முறை பார்த்தால் மறுமுறை பார்க்கத் தூண்டும் அழகு. ‘குனிந்த தலை நிமிராத பெண்’ என்பார்களே... அதற்கு உதாரணம் மாலினி.அவன் வாழ்வில் இன்னொரு சாகச பயணம் துவங்கியது. களம் இறங்கினான். கலகல பேச்சால் ஈர்த்தான். அவள் அவனைப் பிரமிப்புடன் பார்த்தாள். இரண்டு வார்த்தைகள் பேசத் தயங்குபவள், அவன் பேச்சைக் கண்டு மயங்கிப்போனாள்.அவன் வழக்கமாக எல்லாப் பெண்களிடமும் சொல்லும் அதே அம்பை எடுத்தான். 'ஐ லவ் யூ' என்றான். பாவம் மாலினி... அவள் அதை அப்படியே நம்பினாள்.நான் மாலினியைப் பார்த்திருக்கிறேன். கலர் கோழிக்குஞ்சு போல இருப்பாள். எதிரில் ஒருவர் வந்தாலே இரண்டு அடி விலகி நடக்கிற சின்னப் பெண்.விதி விளையாடியது. தயங்கித் தயங்கி ஒரு நாள் அவளும் அவனுக்கு ‘லவ் யூ’ சொன்னாள்.இரண்டே மாதங்களில், அவன் அவளைப் பலவந்தப்படுத்தி முத்த மிட்டான். பயந்து போனாலும், பாவி மகள் அப்போதே தன்னை அவனது மனைவியாக உணரத் தொடங்கினாள். விடுவானா வில்லன்? அதையே சாக்காக்கி, அவளைப் பாடாய்ப் படுத்தினான்."எனக்கு என்னமோ உன் மேல நம்பிக்கையில்லை மாலு... நாளைக்கு உங்க அம்மா\அப்பா சொல்றாங்கனு வேற யாரையாவது நீ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா..?" என்றான். அவள் துடித்துப்போனாள்."அப்பன்னா... எனக்கு உன்மேல நம்பிக்கை வரணும்னா, நீ இப்பவே..!" என்று கரெக்ட்டாகக் கார்னர் பண்ணினான். அவள் கலங்கி நின்றாள்."இதோ பாரு... எனக்கு எப்பவும் டென்ஷனா இருக்கு. சரியா படிக்கக் கூட முடியலை. இப்போ அது மட்டும் ஆகிப்போச்சுன்னா நீ என்னைத்தானே கல்யாணம் பண்ணியாகணும்... நீ எனக்குனு ஆகிட்டா, அந்த நிம்மதியிலேயே நான் ஒழுங்கா படிப்பேன் மாலு!"விதவிதமான தருணங்களில், வசீகரமான வசனங்களில் பேச ஆரம்பித்தான். அவள் மறுத்துவிட்டுப் போய்விட்டாள். இவன் அந்த நிமிடத்திலிருந்து அவளை ஒதுக்க ஆரம்பித்தான். "அப்ப என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல... அதானே அர்த்தம். ஓகே... அப்போ இந்த லவ்வே வேணாம்" என்றான். அவள் பயந்துபோனாள். முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு வேறுவழி இல்லாது அவனிடம் வந்தாள்.ஒரு மாதம்... தோழியுடன்கம்பைண்ட் ஸ்டடி என்று தினம்தினம் இவன் வீட்டிலேயே தங்கினாள். வீடு அடங்கியதும், நள்ளிரவில் அவளைத் தன் அறைக்கு வரச் சொல்வான். ஏமாற்றி ஏமாற்றியே வேட்டையாடினான். எல்லாம் முடிந்தது.

அடுத்த மாதம்... ‘பரீட்சை’ என்று காரணம் சொல்லி அவளைப் பர்ப்பதையே தவிர்த்தான். தேர்வுகள் முடிந்ததும் அவள் ஓடி வந்தாள்.வானம் பார்த்தபடி, உதடு பிதுக்கிய படி, சாத்தான் குரலில் பேச ஆரம்பித்தான் அவன். "இல்ல மாலு... நான் உனக்கு சரியான ஆள் இல்ல. எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ். என்னால ஒரே ஒரு பொண்ணு கூட மட்டுமே வாழ முடியாது. நான் கொஞ்சம் ஃப்ரீக் அவுட். ப்ளீஸ்... புரிஞ்சுக்கோ."அவள் உடைந்து சுக்குநூறானாள். எவ்வளவோ கெஞ்சினாள். கதறி அழுதாள். கண்ணீர் கொட்டினாள். அவன் அதையே வேறு வேறு வார்த்தைகளால் சொல்ல ஆரம்பித்தான்.‘'பாரு... உன்னோட நான் இருந்தப்போ எனக்கு வேற பொண்ணு ஞாபகம்தான் வரும்.... என்ன பண்ணச் சொல்றே? நான் அப்படித்தான்!"தினம்தினம் வீட்டுக்கு வந்து கெஞ்சுவாள். யாருக்கும் தெரியாமல் அழுவாள். கடைசியில்தான் அவளுக்குப் புரிந்தது... அவன் தன்னைக் காதலிக்கவே இல்லை என்பது!எனக்கு அந்த நிமிடம் இன்னும் நினைவிருக்கிறது. நாங்கள் கும்பலாக இருந்தபோது அவள் வந்தாள். எங்களுடன் நின்றிருந்த அவனை உற்றுப் பார்த்தாள். முழுசாக ஒரு நிமிடம்... ‘‘நீ நல்லாவே இருக்கமாட்டேடா!" வெடித்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி போய்விட்டாள்.ஆறேழு மாதங்களுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து அவள் மீண்டாள். படிப்பை முடித்தாள். திருமணம் செய்துகொண்டாள். அவளது கணவனிடம் எல்லாம் சொன்னாளாம்."உன்னோட 'பாஸ்ட்' பத்தி எனக்கு கவலை இல்லை. நம்மோட ஃபியூச்சர் பத்திப் பேசுவோம்." ஒரே வரியில் முடித்துவிட்டானாம். பின்னர் கேட்டுத் தெரிந்த கதை இது!இன்று மாலினி சென்னையில்தான் இருக்கிறாள். மிகப் பெரிய ஆர்க்கிடெக்ட். ஆனால் குமார்? பத்தினி சாபம் பலித்தது!வீதி தோறும் விளையாட்டுப்பிள்ளையாகத் திரிந்த குமாரும் ஆசை ஆசையாய் ஒரு திருமணம் செய்தான். ஆனால், அதற்குப் பிறகும் குமார் எந்தவிதத்திலும் மாறவே இல்லை. விதி ஒரு கொடூர சவுக்கை சுருட்டி வைத்துக் காத்திருந்தது அவனுக்குத் தெரியாது. திடீரென வீட்டுக்குத் திரும்பியவன் யாரோ ஒருவனைத் தன் மனைவியுடன், தன் பெட்ரூமிலேயே பார்த்தான்.கடவுளே... இன்னும் அவர்கள் தம்பதிகளாகவே வாழ்கிறார்கள்... பெயரளவில். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!வாழ்க்கை மாதிரி ஒரு வாத்தியார் கிடைக்க மாட்டார்!தெளிவான ஆணுக்கு நிச்சயம் அற்புதமான ஒரு பெண் கிடைப்பாள் என்பதை இன்னும் நான் நம்புகிறேன்!நமக்கும் நாய்க்கும் அட்லீஸ்ட் இந்த வித்தியாசமாவது வேண்டும்தானே!பெண் என்பவள் பெரும் சக்தி. ஒரு துளி அன்பு காட்டினால் அவள் கடலாய்ப் பொங்குவாள்.கடலுக்குக் குளிரவைக்கவும் தெரியும். கொந்தளித்துச் சுற்றிச் சுழற்றிச் சூறையாடவும் தெரியும்.சரி, உண்மை மட்டும் போதுமா காதலுக்கு..? இன்னமும் இருக்கிறது. அதுபற்றி...
- செல்வராகவன்
(20.03.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)