
வாழ்க்கை எவ்வளவு எளிதாக போய்விடுகிறது... காதலும் சரி... திருமணமும் சரி...!
'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?'ஒரு பெண் இறுக்கமாய் இருந்தால்... திமிர், கொஞ்சம் சிரித்துப் பேசினால்... ‘ஈஸி’ டைப். பையன்களிடம் நட்பாய் இருந்தால்... எதற்கும் துணிந்தவள். விருப்புவெறுப்புகளில் தெளிவாக நின்றால்... அடங்காப் பிடாரி. தன் வாழ்வைத் தானே தீர்மானித்தால்... ஓடுகாலி. பெண்களுக்கு சமூகம் சூட்டுகிற பெயர்களுக்கா பஞ்சம்?பெரும்பான்மையான பெண்களுக்கு இதுதான் ஆதங்கம்.சில மேலை நாட்டுப் பெண்களைப் பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். ஆணும் பெண்ணும் சமம் என்பதைத் தாண்டி, ஆணுக்கு மேலாக அவர்கள் கரமும் தரமும் ஓங்கியிருக்கும். தனியாகவே வாழ முடிகிற துணிவும் தகுதியும் இருக்கும்.ஆனால், இங்கே இந்தியாவில் கல்யாணச் சந்தை என்று வந்துவிட்டால், பெண்கள் நிலை பரிதாபம்.ஏறக்குறைய துப்பறியும் நிபுணர்களாகவே மாறி, என்னென்னவோ விசாரித்த பின்புதான் ஒரு பெண்ணை ஒப்புக்கொள்வார்கள்.ஆனால், பெரும் காமுகனுக்குக்கூட பேசாமலேயே பெண் கொடுக்கச் சம்மதிப்பார்கள்.

என்ன நான்சென்ஸ் இது!பெண்கள் எப்போதுமே பெரும் சக்தி. அனிச்சையாய் மாராப்பைச் சரிசெய்கிற விரல்கள். கண் சிமிட்டல்களையும் காத்திருப்புகளையும் தவிர்க்கிற விழிகள் என இயற்கையாகவே பெண்களிடம் எச்சரிக்கை உணர்வு அதிகம்.அவர்கள் உடலைத் தருவதற்கு முன் உள்ளத்தைத் தருபவர்கள். ஆண்கள் போல அவசரக் குடுக்கைகள் அல்ல!பெண்களின் பிரச்னையே, அவர்களின் வீடுதான். தனியாகச் செல்ல அனுமதி மறுப்பார்கள். வெளி மனிதர் வீடு வந்தால் உள்ளே ஒளிந்துகொண்டாக வேண்டும். கொட்டிக் கொட்டியே பெட்டிப் பாம்பாய் ஆக்கி விடுவார்கள். அப்படி ஒரு பெண்ணிடம், எவனோ ஒருவன் துரத்தித் துரத்தி அன்பைக் கொட்டும்போது, மாயக் கதவுகள் தகர்ந்து, அவள் குழந்தையாகி விடுகிறாள். வந்தவன் நல்லவனானால்... அவர்கள் அதன்பிறகு இனிதாக வாழ்ந்தார்கள்’ என்று சுபம் போடலாம். நாதாரி நாயாக இருந்தால், ஆரம்பிக்கும் நரகம்.பத்தாவது படிக்கும்போது ப்ரீத்திக்குக் காதல். +2 படிக்கும்போதே வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம்செய்து கொண்டாள்.‘தொலைந்து போ’ என்று பெற்றோரும் கைவிட்ட கதை அது!

அவனும் நல்லவன்தான். வயசின் வேகத்தில் வாழ்க்கை ஆரம்பத்தில் இனித்தது. ப்ரீத்திக்கு முதல் குழந்தை 18 வயதில். 20 வயதில் இன்னொன்று. 22 வயதுக்குள் வாழ்க்கையில் எல்லாம் பார்த்தாயிற்று. 24 வயதில் சலித்துப்போய், ‘ச்சீ!’ என்றாகி விட்டது.ஐயோ... ப்ரீத்தி மாதிரி எத்தனை எத்தனை பெண்கள், வாழ்க்கையில் எத்தனை தொலைக்கிறார்கள். கல்வி, ரசனை, திறமை, இளமை, நட்பு, அடையாளம் என எத்தனை இழக்கிறாய் பெண்ணே!எங்களால் கீர்த்தனாவை மறக்கவே முடியாது. கொள்ளை அழகு... பையன்கள் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். எல்லாவற்றுக்கும் புன்னகை மட்டுமே பதில்.எனக்கும் அவளைப் பிடிக்கும். அவள் கண்களில் மிதக்கும் கனவுகள் பிடிக்கும். நானும்கூடக் காதலைச் சொன்னேன். சிரித்தாள். 'இதுதான் உன் வாழ்க்கையின் லட்சியமா..?' என்றாள். நான் பதில் கிடைக்காமல் தடுமாறினேன். சிரித்துக்கொண்டே போய்விட்டாள் கீர்த்தனா. அந்த நிமிடம் எனக்கு அவமானமாக இருந்தாலும் பிறகு அதைக் கடந்து அவளுடன் நட்பைத் தொடர முடிந்தது.இப்போது நாசாவில் வேலை செய்கிறாள். 'ரொம்ப சந்தோஷமா இருக்கேன் செல்வா! எவ்வளவு நாள் கனவு... நான் ஜெயிக்கப்போறேன். இன்னும் ஒரு வருஷத்துல ப்ராஜெக்ட் லீடர் ஆயிடுவேன்' என்று மெயில் அனுப்பியிருந்தாள். கணவன் பற்றியோ, குழந்தை பற்றியோ... ம்ஹூம்!வாழ்க்கை சிலருக்கு எவ்வளவு எளிதாகப் போய்விடுகிறது!அவளுக்கும் உணர்வுகள் இல்லாமலா இருந்திருக்கும்? உணர்ச்சிகளைத் தள்ளி வைத்துப் பறந்தால் மட்டுமே, உயரம் கைகூடுகிறது.காதலா, சரி...திருமணமா? செய்து கொள்.‘கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக்கூடாது’ என்று உன் வேலையை, திறமையை, அடையாளத்தை விலையாகக் கேட்கிறானா?‘ச்சீ...போடா!’ என்று துரத்து!உன் அருமை புரிந்து உன்னை ‘இன்ச்... இன்ச்!’ ஆகக் காதலிக்க ஒருவன் கிடைப்பான். அதுவரை காத்திரு! கிடைத்தது போதும் என்று அவசரப்படாதே!

தன்னடக்கத்துக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.கறுப்பு, குள்ளம், படிப்பு, பணம் என்று எதுவுமே பிரச்னை ஆகக் கூடாது பெண்களே... மனம் மட்டும்தான் பிரதானம்!கறுப்பாக இருந்தால், உன்னை ஒருவரும் பார்க்கா விட்டால், உன்னைக் காதலிக்காவிட்டால் என்ன இப்போது?இதை ஒரு குறையாகத் துயரப் பட்டு புழுங்கும் பல பெண்களைப் பார்த்திருக்கிறேன்! இளமை கொல்லும் அந்த மூன்று வருடங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால் பின் நீதான் ராணி!இதற்கெல்லாமா தனிமைப்பட்டு போவது? உலகத்தின் பெரிய மாடல்கள் கறுப்பு நிறம்தான். முதலில் உன்னை உனக்குப் பிடிக்க வேண்டும்!செல்வி... நல்ல கறுப்பு. காலில் மெலிதான ஊனம். விந்தி விந்தி நடப்பாள். அவளே எல்லாரிடமும் வலிய வலியப் பேசுவாள். நாலு பேர் இருக்கிற இடத்தில், நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பாள்.அவளின் தோழிகள்கூட அவளை ஒரு பொருட்டாக நினைத்தது கிடையாது. திடீரென்று ஒரு நாள் விஷம் குடித்துவிட்டாள் செல்வி. காரணம்... 'கல்லூரியில் யாரும் அவளைக் கண்டு கொள்ளவில்லையாம்!'மருத்துவமனையில் போய்ப் பார்த்தோம். அவளது பெற்றோர்கள், அழுதுகொண்டே வாசலில் நின்றார்கள். 'என்ன கொற வெச்சோம் இவளுக்கு?' என்று விசும்பினார்கள். நண்பர்கள் ஆறுதல் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள்.நான் அவளைக் கூர்மையாகப் பார்த்துவிட்டுக் கேட்டேன்.''அடடா! பொழைச்சிட்டியா... கொஞ்சம் விஷம் கொண்டுவந்து தர்றேன். குடிக்கிறியா செல்வி?''
- செல்வராகவன்
(03.04.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)