படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சக நடிகர் ஷீசன் முகமது கான் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் துனிஷா சர்மாவின் மரணம் தொடர்பாகப் பலரும் பேசிவரும் நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்களை மேம்படுத்த வேண்டும் என அவர் அரசுக்குக் கோரிக்கையும் விடுத்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய கங்கனா ரணாவத், துனிஷா சர்மாவின் மரணத்தைப் பொறுத்தவரை, "அவர் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் அதனால் இது தற்கொலை அல்ல கொலை.

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், கிருஷ்ணர் திரௌபதிக்காக எழுந்தருளியது போல, ராமர் சீதைக்காக ஒரு நிலைப்பாட்டை எடுத்தது போல, பாலிகமி (ஒன்றுக்கும் மேற்பட்டோரைத் திருமணம் செய்துகொள்வது) மற்றும் ஆசிட் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரணதண்டனையை விதிக்க வேண்டும். இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்களை மேம்படுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.