ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காகப் பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த யூடியூப் தொடரில் இயக்குநர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் எனப் பன்முகத்திறமை கொண்ட தங்கர் பச்சானைச் சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலிலிருந்து...
அழகி மாதிரி ஒரு ஹிட்டை அடுத்து எப்போ எதிர்பார்க்கலாம்?
அழகி மக்கள் கிட்ட வர்றதுக்கு முன்னாடி ஒரு தோல்விப் படம் தான். அந்தப் படத்துக்கு முதலீடு செய்ய யாரும் வரவில்லை. வாங்குவதற்கும் யாருமே வரவில்லை. மக்களிடம் இறுதியில் வந்தபின் தான் அது வெற்றிப்படமாக மாறியது. ஒருவன் தேவையில்லாத படத்துக்குத்தான் நிறைய செலவு பண்ணுவான். எப்ப ஒருத்தன் ஒரு படத்துக்கு பல கோடி செலவு பண்றானோ, அப்பவே அந்தப் படத்துல ஒன்னும் இல்லங்கிறதைத் தெரிஞ்சிக்கணும். நல்ல கருத்தாக்கங்கள் உடைய படத்துக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. குறைந்த முதலீட்டில் நிறைய கருத்தாக்கங்களை வைத்து எடுக்கின்ற படங்கள்தான் இந்த சமுதாயத்தை மாற்றும். ஆனா, அதுக்கு இங்க இடமில்ல. அழகி மாதிரி நிறைய கதைகள் என்கிட்ட இருக்கு. அதை எடுக்க எனக்கு பெரிய முதலீடு எல்லாம் தேவையில்லை. வெறும் சினிமா மட்டும் போதும்.
நாசர், ரகுவரன், நீங்கள் என அனைவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தீர்கள். அப்போது கல்லூரியில் படிக்கும்போது சுவையான அனுபவங்கள் ஏதேனும் நடந்ததுண்டா?
நாசர் என்னோட ஜூனியர். அவன் கல்லூரிக்கு வரும்போது ஜிப்பா போட்டு வருவான். எனக்கு அப்பனு பாத்து எந்த ஜூனியரும் ராக் பண்ணக் கிடைக்கல. இவன பாத்தோனே, "என்ன ஜிப்பாலா போட்ருக்க. பெரிய படிப்பாளியா நீ?" னு ஒரு அதட்டு அதட்டுனேன். அவன் பயந்துட்டான். ரகுவரன் என் செட். இதே மாதிரி அவனையும் ஒரு நாள் ராக் பண்ணேன். கடைசில க்ளாஸுக்கு வரும்போது தான் அவன் கண்டுபிடிச்சான் நாங்க ரெண்டு பேரும் ஒரே க்ளாஸுனு. போன வாரம்கூட இதைப் பத்தி நாசரும் நானும் பேசிட்டு இருந்தோம்.
இளையராஜாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களில் நீங்களும் ஒருவர். சமீபத்தில் அவர் பிரதமர் மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டு எழுதியது மிகவும் சர்ச்சைக்குள்ளானது. அதுகுறித்து உங்கள் பார்வை என்ன?
இளையராஜா பத்தி யாராவது ஏதாவது சொன்னா எனக்கு கோவம் வரும். அவரை இன்னிக்கு திட்ற எல்லாரும் அவர் எழுதின முன்னுரையைப் படிச்சிருக்காங்களா? அதைப் பற்றி பேசாமல், அப்படியே கண்டுக்காம விட்டிருந்தால் அது இவ்வளவு தூரம் வந்திருக்காது. அது அவரோட கருத்து. அவர் என்ன வேணா சொல்வாரு. ஆனா, இளையராஜாவுக்கு புகழ்வது பிடிக்காது. அதனால மோடியை புகழணும் என்ற நோக்கத்தோடு அவர் அதை எழுதியிருப்பார்னு எனக்குத் தோணல. அவர் என்ன எழுதியிருக்காருனு படிக்காம என்னால இதைப் பற்றி சொல்ல முடியாது.
இப்போது வந்திருக்கும் தொழில்நுட்பக் கருவிகள் குடும்ப உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
இன்னைக்கு மனிதர்கள் கருவிகளோட மட்டும்தான் உரையாடுகிறார்கள். யார்கிட்டயோ சண்ட போட்டுட்டு இருக்கானு பாத்தா, கைபேசி கிட்ட சண்ட போட்டுட்டு இருக்கான். இன்னைக்கு நாம டென்ஷன் ஸ்டெரஸ்ன்னு சொல்றதெல்லாம், இது வந்ததுக்கு அப்பறம்தான் வந்துச்சு. இந்தத் தொழில்நுட்ப புரட்சி எப்படி உறவுகளை கெடுத்தது என்று ஒரு கதை வச்சிருக்கேன். அதை 'தொலைந்து போனவர்கள்' என்று கூடிய சீக்கிரம் எடுப்பேன்.
அடுத்து ஏதாவது படங்கள் வர வாய்ப்புண்டா?
அடுத்து ஒரு இலக்கியத்தை தழுவி ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். இப்பதான் வைரமுத்து அண்ணன், தாமரை, சினேகன் எல்லாரையும் சந்திச்சிட்டு வந்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் விரும்பிய மாதிரி, என்னைப் புரிந்து கொள்ளக்கூடிய நடிகர்கள் கிடைச்சிருக்காங்க.