Published:Updated:

``அப்பாவைப் பிடிக்கலைனா தவிர்த்திடுங்க... அசிங்கமா திட்டுறது கஷ்டமா இருக்கு!" - கென் கருணாஸ்

Ken
Ken

`` `இவரோட பையன் இவன். அதனாலதான் சினிமாவுக்கு ஈஸியா வந்துட்டான்'ங்கிற பேர் எனக்கு எப்பவுமே வேண்டாம். `இவனுக்கு திறமையிருந்திருக்கு அதனாலதான் இதுவரைக்கும் சினிமாவுல இருக்கான்'ங்கிற பேரை வாங்கணும்'' என்கிறார் நடிகர் கருணாஸின் சுட்டிப் பையன் கென்.

`அசுரன்' பட வாய்ப்பு எப்படி வந்தது?

Ken
Ken

அப்பாவுக்கு ரொம்ப நாளாவே வெற்றிமாறன் சார் இயக்கத்தில் நான் அறிமுகமாகணும்னு ஆசை. ஒருநாள் வெற்றிமாறன் சாரை பாக்கும்போது என்னையும் சேர்த்து கூட்டிட்டுப் போனார். அப்படிதான் எனக்கு `அசுரன்' பட வாய்ப்பு வந்தது. அவர் என்னைப் பார்த்தப்போ பத்தாவது படிச்சிட்டிருந்தேன். `தம்பி எவ்வளவு வெயிட் இருக்க'னு கேட்டார். 68னு சொன்னேன். 'தம்பி நானே உன்னைவிட கம்மிதான்... வெயிட்டைக் குறைச்சிரு'னு சொன்னார். நானும் சரிங்க சார்னு சொல்லிட்டேன். அதுக்குப் பிறகு நானும் கஷ்டப்பட்டு ஓடி, சாப்பாட்டைக் குறைச்சு 58 கிலோ வரைக்கும் வந்துட்டேன். ஒரு வருஷம் ஓடிருச்சு. 'சார் இப்போ கூப்பிடுவார் அப்போ கூப்பிடுவார்'னு நானும் வெயிட் பண்ணிட்டிருந்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் திரும்பவும் பழைய வெயிட் 68 கிலோவுக்கு வந்துட்டேன். அப்போ திடீர்னு வெற்றி சார் போன் பண்ணி, 'ரெண்டு மாசத்துல ஷூட்டிங்'னு சொன்னார். ஒரு மாசம் இடைவெளியில் திரும்பவும் ஜிம் வொர்க் அவுட், டயட் கன்ட்ரோல்னு பண்ணி 14 கிலோ வரைக்கும் குறைச்சேன். இப்படி என்னோட வெயிட்டை கம்மி பண்ணிதான் இந்தப் படத்துக்குள்ளே வந்தேன்.

உங்க அப்பா கருணாஸ் என்ன சொன்னார்?

Ken
Ken

ஒரே ஒரு வார்த்தைதான், 'என்னால வாய்ப்பு மட்டும்தான் வாங்கித் தர முடியும். அதை தக்க வெச்சுக்குறதும், இல்லாததும் உன்னோட விருப்பம்'னு சொல்லிட்டார். `முடிஞ்சா ஒல்லியாகுற வழியைப் பார்'னு போற போக்குல சொல்லிட்டுப் போயிட்டார். எனக்கும் 'அசுரன்' படத்துல நடிக்கணும்னு ஆசை வர ஆரம்பிச்சிருச்சு. ஏன்னா, 'ஆடுகளம்'தான் இதுவரைக்கும் என்னோட ஃபேவரைட் படம். வெற்றி, தனுஷ் சாரை ரொம்ப பிடிக்கும். அதனால இந்த வாய்ப்பை விட்டுறக் கூடாதுனு வெயிட்டைக் குறைச்சுப் படத்துல வந்துட்டேன். முக்கியமா, நான் சினிமாவுல நடிச்சதுக்கு என்னோட பள்ளிக்கூட டீச்சர்ஸ்க்குத்தான் நன்றி சொல்லணும். ஷூட்டிங் போயிட்டிருந்த நேரத்துல எனக்கு ப்ளஸ் டூ எக்ஸாம் நடந்துட்டு இருந்துச்சு. என்னைப் படிக்க வெச்சு நல்லபடியா எக்ஸாம் எழுத வெச்சது என்னோட டீச்சர்ஸ்தான். எப்படியோ 72 சதவிகிதம் வாங்கிட்டேன்.

வெற்றிமாறன்கூட வேலை பார்த்த அனுபவம்?

Ken
Ken

படத்தோட ஷூட்டிங் போது நிறைய கஷ்டப்பட்டேன். ஷூட்டிங் போறப்போ இருந்த உடல் எடையைவிட கொஞ்சம் குறைஞ்சுதான் வீட்டுக்குத் திரும்பப் போனேன். நல்ல வெயில் காலத்துல படத்தோட ஷூட்டிங் கோவில்பட்டி ஏரியாவுல நடந்தது. மலை உச்சியில்தான் ஷூட்டிங் நடக்கும். யாரும் கார்ல மலை ஏறல.. எல்லாரும் ட்ரெக்கிங் மாதிரி நடந்தே போவோம். ஆனா, ரொம்ப கஷ்டப்படுறோம்னு தெரிஞ்சா அவரே நமக்கு பிரேக் கொடுத்துருவார். உடம்பு சரியில்லனாகூட மாத்திரை கொடுத்து பக்கத்துல உட்கார வெச்சு பாத்துக்குவார். முக்கியமா, ஆர்டிஸ்ட் யாரா இருந்தாலும் ரொம்ப மதிப்பார். அவர்கிட்ட, 'உங்க படங்களெல்லாம் செம ஹிட் அடிச்சு தியேட்டரை விட்டு நீங்க வெளியவே வர முடியாதளவுக்கு ரசிகர்கள் கத்துனாங்க. இதெல்லாம் உங்களுக்கு ஜாலியா சந்தோஷமா இருந்துச்சா'னு கேட்டேன். 'இப்போ ரசிகர்கள் நமக்குக் கத்துறதுக்கு ஜாலி ஆகிட்டா.. நாளைக்கு கத்தாமா இருக்கிறப்போ சோகமாயிரும். அவங்களை கத்த வெச்சிக்கிட்டே இருக்கிறதுக்கு நம்ம வேலையைச் செய்யணும்'னு சொன்னார். உடம்பே புல்லரிச்சு போயிருச்சு. உங்க படங்களெல்லாம் இவ்வளவு வன்முறையா இருக்கே. ஏன், இப்படி யோசிக்குறீங்கனு கேட்டேன். 'நான் யோசிக்கலப்போ, எல்லாமே அப்படி அமையுது'னு சொன்னார்

நடிப்பு மேலே எப்படி ஆர்வம் வந்தது?

சின்ன வயசுல இருந்தே எனக்கு நடிப்பு ரொம்பப் பிடிக்கும். பள்ளிக் கூடத்துல நடிக்குற எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துக்குவேன். அப்புறம் என்னோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே நல்லா பாடுவாங்க. அதனால எனக்கும் பாட்டு கொஞ்சம் வரும். நானே கம்போஸ் பண்ணி கானாலாம் பாடியிருக்கேன்.

தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படியிருந்தார்?

Ken
Ken

ரொம்ப ஜாலியான மனிதர். கொஞ்சம்கூட பந்தா காட்டமாட்டார். அதே மாதிரி எங்ககூட கிரிக்கெட்லாம் விளையாடுவார். நாங்க விளையாடுற பப்ஜியில் தனுஷ் சாரையும் சேர்த்து விட்டுருவோம். அதிகமான நேரம் அவர்கூடதான் செலவழிச்சேன். 'உனக்கு பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதைச் சரியா பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்னு நினைக்குறேன். நிறைய பிரபலங்கள்கூட நடிக்கணும். பட ரிலீஸூக்குப் பிறகு தலைகனம் மட்டும் ஏறிடவே கூடாது. நான் நடிக்க வந்தப்போ நிறைய பேருக்கு என்னைப் பிடிக்கல. இதெல்லாம் தாண்டிதான் நான் வந்திருக்கேன்'னு எனக்கு அறிவுரை சொல்லியிருக்கார்.

அரசியல்வாதியா இருக்கிற அப்பா பற்றிய மீம்ஸ் வர்றப்போ அதை எப்படி எடுத்துக்குவீங்க?

நிறைய மீம்ஸ் அப்பாகிட்ட காட்டுவேன். அவரும் பார்த்துட்டு சிரிப்பார். ஆனா, இதைத்தாண்டி சிலர் தேவையில்லாம ஏதாவது செஞ்சிருப்பாங்க. அதுக்கு அப்பா, 'நம்மல பத்தி பேசுறவங்களுக்கு எந்த வேலையும் இல்லை. நம்ம வேலையை மட்டும் செஞ்சிட்டிருப்போம்'னு சொல்லுவார். ஆனா, இதைத்தாண்டி சில விஷயங்கள் நமக்கு வருத்தமா இருக்கும். 'எங்க அப்பா ரொம்ப நல்லவர். அவருக்காக நீங்க பேசணும்'னு நான் யார்கிட்டயும் போய் நிக்கல. எங்க அப்பாவை பிடிக்கலைனா தவிர்த்துட்டு போயிரலாம். அதை விட்டுட்டு அசிங்கமா திட்டுறது கஷ்டமா இருக்கு. அவருக்குனு ஒரு குடும்பம் இருக்கு. அதில் நாங்களெல்லாம் இருக்கோம். இது எங்க தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும்.

Vikatan
பின் செல்ல