Published:Updated:

மரணத்துக்குப் பின்னும் தொடரும் உன்னதக் காதல்! #TheBookOfLife #MovieRewind

மரணத்துக்குப் பின்னும் தொடரும் உன்னதக் காதல்! #TheBookOfLife #MovieRewind
மரணத்துக்குப் பின்னும் தொடரும் உன்னதக் காதல்! #TheBookOfLife #MovieRewind

மரணத்துக்குப் பின்னும் தொடரும் உன்னதக் காதல்! #TheBookOfLife #MovieRewind

உலகமெங்கிலும் பரவலாக உள்ள தொன்மக் கதைகளைக் கவனித்தால், தற்செயலாகப் பல ஒற்றுமைகள் இருப்பதை அறியலாம். நன்மைக்கும் தீமைக்குமான போட்டியில் எது வெல்லும் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காக, மனிதர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து, பலவிதமாக அவர்களைக் கடவுள்கள் சோதிப்பது தொடர்பான கதையாடல்கள் தமிழிலும் உண்டு. பல துன்பங்களை அனுபவித்தாலும் ஒருமுறைகூட பொய் பேசத் துணியாத அரிச்சந்திரனின் கதையை இங்கு நினைவுகூரலாம். The Book of Life அனிமேஷன் திரைப்படமும் அந்த வகையிலானதே.

மரணம் தொடர்பான ஓர் ஆண் தேவதையும், ஒரு பெண் தேவதையும் தாங்கள் ஆளும் பிரதேசத்தை வைத்துப் பந்தயம் கட்டுகின்றனர். மரியா என்கிற இளம்பெண்ணை மனப்பூர்வமாகக் காதலிக்கும் இரு ஆண்களில், யாருக்கு அவள் கிடைப்பாள் என்பதைப் பொறுத்து, அவர்களின் வெற்றி அமையும். இதற்காக, ஆளுக்கொரு இளைஞனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில், ஆண் தேவதை குறுக்கு வழியில் ஏமாற்றி வெல்ல முயல்கிறது. இதனால், மனோலோ என்கிற அப்பாவி இளைஞன் தன் உயிரை இழக்க நேர்கிறது. தன் உயிரை இழந்தாலும், காதலியை விடாப்பிடியாகத் தேடும் நெகிழ்வான பயணத்தின் மீதான கதை இது. 

அந்த மியூசியத்தைப் பார்வையிட, காவலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறார்கள் வருகிறார்கள். ‘'அய்யோ, இந்த அராத்துக்களை என்னால் சமாளிக்க முடியாது” என்று அலறுகிறார், அருங்காட்சியகத்தின் பணியில் இருக்கும் கிழவர். ‘'கவலையைவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று வருகிறாள் ஓர் இளம்பெண். மியூசியத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு ரகசிய உலகத்துக்குச் சிறுவர்களை அழைத்துச் செல்கிறாள். 

அங்குள்ள ஒரு புத்தகத்தில், இந்த உலகத்தில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து மனிதர்களைப் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. அதிலிருந்து, ஒரு சுவாரசியமான பக்கத்தைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறுவர்களுக்கு கதையாகச் சொல்கிறாள் இளம்பெண். அந்தக் கதை... 

இறந்த முன்னோர்களை நினைவுகூரும் நாளில், La Muerte என்கிற பெண் தேவதையும் Xibalba என்கிற ஆண் தேவதையும் தங்களுக்குள் பந்தயம் கட்டுகிறார்கள். இருவருமே மரணம் தொடர்பான தேவதைகள். La Muerte இறந்த பின்னரும் நினைவுகூரப்படுபவர்களின் பிரதேசத்தை ஆள்பவர். Xibalba மறக்கப்பட்டவர்களின் பிரதேசத்தை ஆள்பவர். இந்தப் பந்தயத்தில் யார் ஜெயிக்கிறாரோ, அவர் மற்றவர்களின் பிரதேசத்தையும் சேர்த்து ஆளலாம். பந்தயத்தின் பகடைக்காய்களாக இரண்டு சிறுவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 

மனோலோ மற்றும் ஜோகுயின் ஆகிய அந்தச் சிறுவர்களின் தோழிதான், மரியா. இருவருக்கும் மரியாவின் மீது நேசமும் அதுசார்ந்த போட்டியும் உண்டு. பன்றிக்குட்டிகளை விடுதலை செய்யும் நோக்கில் சிறுவயதில், மரியா செய்யும் குறும்பு ஒன்றினால் ஸ்பெயினுக்கு அனுப்பிவைக்கப்படுகிறாள். மனோலா அவளுக்கு ஒரு பன்றிக்குட்டியை நினைவுப் பரிசாக அளிக்கிறான். ‘உன் இதயம் சொல்கிறபடி எதையும் செய்’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட கிட்டாரைப் பரிசாக வழங்குகிறாள் மரியா. ‘'வெளியூர் செல்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டுமா என்ன, எனக்கு இந்த விஷயம் தெரியாதே” என்று விழிக்கிறான் ஜோகுயின். 

ஜோகுயினின் தந்தை ஒரு சிறந்த போர் வீரராக இருந்தவர். எனவே, அவனும் அதுபோன்ற வீரனாக இருப்பான் என்று ஊர் நம்புகிறது. அதை நிரூபிப்பதுபோல, எவரையும் வெல்லும் திறமை பெற்றவனாக இருக்கிறான் ஜோகுயின். ஆனால், இதன் பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது. ஆண் தேவதையான Xibalba, இவனுக்குச் சக்தியுள்ள பதக்கம் ஒன்றை ரகசியமாக வழங்கியிருக்கிறது. இதை அணிந்திருக்கும் வரையில் இவனுக்கு மரணமே கிடையாது. 

மனோலா ஓர் இசைப் பைத்தியமாக இருக்கிறான். பொழுது பூராவும் கிட்டாரும் கையுமாக திரிகிறான். அவர்களது குடும்பம் பாரம்பரியாக, காளைச் சண்டை வீரர்களின் பின்னணி கொண்டது. எனவே, அவனுடைய தந்தை காளைச் சண்டைப் போட்டியில் ஈடுபட வற்புறுத்துகிறார். வேறு வழியில்லாத மனோலா அதைப் பயில்கிறான். 

மரியா இளம்பெண்ணாக வளர்ந்து ஊருக்குத் திரும்பும் நாள். முதன்முதலாக ஊர்மக்கள் முன்னிலையில் காளைச் சண்டையில் ஈடுபடுகிறான் மனோலா. தன்னை நோக்கி முரட்டுத்தனமாக ஓடிவரும் காளையை, அவன் திறமையாக கையாண்டாலும், பாரம்பரிய முறைப்படி இறுதியில் காளையைக் கொல்ல மறுத்துவிடுகிறான். அவனது குடும்பத்தார் அதற்காக அவனைத் திட்டுகிறார்கள். ஆனால், அவனுடைய நற்பண்பு மரியாவைக் கவர்ந்துவிடுகிறது. 

ஜோகுயின் சிறந்த வீரனாக இருப்பதால், அவனுக்கு மரியாவைத் திருமணம் செய்துதர விரும்புகிறார் மரியாவின் தந்தை. ‘கொள்ளைக்காரர்களிடமிருந்து அவனால்தான் இந்த ஊரைக் காப்பாற்ற முடியும். தயவுசெய்து ஒப்புக்கொள்” என்று மரியாவுக்கு நெருக்கடி தருகிறார். 

தன் காதலி, நண்பனைத் திருமணம் செய்யப்போகும் தகவலை அறியும் மனோலா வருத்தம் அடைகிறான். அவளுடைய வீட்டுக்கு முன்னால் சென்று, தன் இசைத்திறமையைக் காட்டுகிறான். அவனது பிரியத்தால் நெகிழும் மரியா, காதலை ஏற்க முடிவெடுக்கிறாள். 

அதேநேரம், தான் பந்தயத்தில் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சும் ஆண் தேவதை, ஒரு பாம்பை அனுப்பி மரியாவைக் கொல்கிறது. மரியா இறந்துபோனதை அறியும் மனோலா, துயரம் தாங்காமல் தானும் அதே பாம்பினால் கடி வாங்கி இறக்கிறான். இதன்மூலம் வான் உலகத்தில் மரியாவுடன் இணைந்திருக்க முடியும் என்பது அவன் நோக்கம். 

ஆனால், அங்கே மரியா இல்லை. இதற்குப் பின்னாலும் ஆண் தேவதையின் சூழ்ச்சி இருக்கிறது. பாம்பிடம் ஒருமுறை கடிபட்டதால், ஜோகுயினிடம் உள்ள பதக்கத்தின்மூலம் அவள் உயிர் பெறுகிறாள். ஆனால், இரண்டு முறை கடிபட்ட மனோலா, இறந்துவிடுகிறான். இதை அறிந்த மரியா, வேறு வழியின்றி ஜோகுயினைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள். மேலுலகத்தில் தன் முன்னோர்களின் மூலம் இந்தச் சதியை அறியும் மனோலா, எப்படியாவது மனிதர்களின் உலகத்துக்குச் சென்று மரியாவை கைப்பற்ற உறுதியெடுக்கிறான். 

அந்தப் பயணம் சாத்தியமானதா? இறுதியில் மரியா யாரைத் திருமணம் செய்கிறாள்? கொள்ளைக்காரர்களால் அவர்களின் ஊருக்கு ஆபத்து ஏற்பட்டதா என்பதையும் அறிய, 'தி புக் ஆஃப் லைஃப்' உலகத்துக்குச் சென்று பாருங்கள்!

‘சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்காக, கோல்டன் குளோப்’ உள்ளிட்டு பல திரைவிழாக்களில் ‘நாமினேட் ஆகியிருந்த இதன் உருவாக்கத்தைப் பற்றி பிரதானமாக சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு பிரேமிலும் நம்மை வசீகரிக்க வைக்கும் வண்ணங்கள் இறைந்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் பிரமிக்க வைக்கும் அழகியல் உணர்வுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

மிக குறிப்பாக மனோலா பூமிக்குத் திரும்பும் காட்சி வியப்பில் ஆழத்தும் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேல் உலகில் தன் தாயையும் முன்னோர்களையும் மனோலா காணும் காட்சி நெகிழ்வானது. உயிர் காக்கும் பதக்கத்தை ரகசியமாக வழங்கி, பந்தயத்தில் குறுக்குவழியில் வெற்றிபெற்ற ஆண் தேவதையை, பெண் தேவதை பழிவாங்கும் காட்சி நகைப்புக்குரியது. 

சிக்கலையும் குழப்பத்தையும் மனோலா உணரும் ஒவ்வொரு முறையும் மரியாவால் பரிசாக வழங்கப்பட்ட கிட்டாரில் ‘Always play from the heart’ என்கிற வாசகம் பலமுறை அவனை வழிநடத்துகிறது. தன்னுடைய குடும்பம் காளைச்சண்டையிடும் வீரத்தின் பாரம்பர்யத்தைக் கொண்டது என்றாலும் இசையை நோக்கியே அவனது விருப்பம் இருக்கிறது. ஆனால் தன்னுடைய தந்தையின் கட்டாயத்தால் குழப்பமடைகிறான். என்றாலும் ஒரு கட்டத்தில் இசையின் மூலம் பகைவரையும் வெற்றி கொள்ள முடியும் என்பதை அவன் நிரூபிப்பது சிறப்பு. 

மாயப் பதக்கத்தின் மூலம் கிடைக்கும்  ஜோகுயினின் வெற்றியும் வீரமும் தற்காலிகமானதாக இருக்க, மனோலாவின் உண்மையான வெற்றியும் துணிச்சலும் ஊர் மக்களைக் கவர்வதில் நீதியிருக்கிறது. இதே நேர்மை மரியாவையும் கவர்வதில் வியப்பில்லை. தன் காதலியைக் கரம் பற்ற, மரண உலகத்திலிருந்து திரும்ப மனோலா செய்யும் சாகசங்களும் போராட்டங்களும் காதலின் உன்னதத்தைக் கூறுகின்றன.

Gustavo Santaolalla-ன் இசையில் அனைத்துப் பாடல்களுமே அருமையாக இருக்கின்றன. குறிப்பாக, மரியாவின் வீட்டின் முன்னால் மனோலா உருக்கமாகப் பாடும் ‘I Love You Too Much’ பாடல் சிறப்பு. 

Jorge R. Gutierrez அற்புதமாக இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை குழந்தைகளுடன் இணைந்து களிக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு