
ரீவைண்ட்முகில்
எரியும் தாடி! பறக்கும் தொப்பி!
பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புகழுடன் விளங்கிய இங்கிலாந்தின் கடற்கொள்ளையன் பெஞ்சமின் ஹார்னிகோல்ட். கடலில் அவனது கப்பல் தெரிகிறது என்றாலே மற்ற வணிகக் கப்பல்களுக்கும், பயணிகள் கப்பல்களுக்கும் வியர்க்க ஆரம்பித்துவிடும். அவ்வளவு பயங்கரமானவன். கொடுமைக்காரன்.
கி.பி. 1717-ல், ஹோண்டுராஸ் கடற்பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றை பெஞ்சமின் தலைமையிலான கடற்கொள்ளையர்கள் சூழ்ந்துக்கொண்டார்கள். பெஞ்சமின் தலைமையில் கையில் ஆயுதங்களுடன் அந்த வணிகக் கப்பலுக்குள் கொள்ளையடிப்பதற்காகக் குதித்தார்கள். அந்த வணிகர்கள் இன்றைக்கு எத்தனை பேர் தலை உருளப்போகிறதோ என்று பயத்தில் கண்ணீர் விட ஆரம்பித்தார்கள். சிலர் கெஞ்சவும் செய்தார்கள். ‘தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள். கொன்றுவிடாதீர்கள்!’

ஆனால், பெஞ்சமின் கட்டளைப்படி, கொள்ளையர்கள் வணிகக்கப்பலில் இருந்தவர்கள் அணிந்த தொப்பிகளையெல்லாம் பறிக்க ஆரம்பித்தார்கள். ‘வேறெங்கே தொப்பிகள் இருக்கின்றன?’ என்று கேட்டு, தேடி எடுத்துக்கொண்டார்கள். வேறு செல்வங்கள் எதையும் தொடக்கூட இல்லை. யாரையும் காயப்படுத்தவில்லை. தொப்பிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் கிளம்பினார்கள்.
வணிகக் கப்பலில் இருந்தவர்கள் புரியாமல் விழிக்க, பெஞ்சமின் வில்லத்தனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னான். ‘நேற்று எல்லோரும் போதையில் எங்கள் தொப்பிகளைக் கடலுக்குள் விட்டெறிந்து விளையாடினோம். தொப்பிகள் இல்லாமல் இருந்தால் மரியாதையாக இல்லை அல்லவா. அதான், தொப்பிகளைக் கொள்ளையடிக்க மட்டும் உங்கள் கப்பலை முற்றுகையிட்டோம். நீங்கள் போகலாம்!’
அன்றைக்கு அந்த வணிகர்களுக்குத் தலைக்கு வந்த ஆபத்து தொப்பியோடு போனது.
பெஞ்சமினின் சமகாலத்தில் வாழ்ந்த, புகழ்பெற்ற இன்னொரு கடற்கொள்ளையன் பிளாக் பியர்ட். கருவென வளர்ந்து, ஆலமர விழுதுகள்போலத் தொங்கும் மீசைக்கும் தாடிக்கும் சொந்தக்காரன் என்பதால் இந்தப்பெயர். இங்கிலாந்தைச் சேர்ந்தவன். ஏகப்பட்ட கப்பல்களை மறித்து ஏகப்பட்ட செல்வங்களைக் கொள்ளையடித்தவன்.

கொள்ளையடிக்க ஒரு கப்பலில் குதிக்கும்போதோ எதிரியுடன் மோதக் களத்தில் குதிக்கும்போதோ, வளர்ந்து தொங்கும் தன் மீசை, தாடி நுனியில் நெருப்பைப் பற்ற வைப்பான். அந்த நெருப்பின் மத்தியில் அவன் முகத்தைப் பார்க்க பயங்கரமாக இருக்கும். அதோடு கர்ஜிக்க எதிரில் இருப்பவர்கள் மிரண்டு பணிந்துவிடுவார்கள். இதுதான் அவனது பயமுறுத்தும் தந்திரம். அவன் மீசைக்குத் தீ வைத்தான் என்பது பொய். அதனுள் ஒளித்து வைத்திருந்த சிறிய மெழுகுவர்த்தியைக் கொளுத்தியே பயமுறுத்தினான் என்று சிலர் சொல்வார்கள்.
இன்னொரு புகழ்பெற்ற பொய்யும் உண்டு. பிளாக் பியர்ட் கொல்லப்பட்ட பிறகு, கடலில் வீசப்பட்ட உடல், அவனது கப்பலை மூன்று முறை சுற்றி வந்ததாம்!
ஸாரி நோ வார்..!
கி.பி. 1866 ஆஸ்திரிய-பிரெஷ்யப் போர் அல்லது ஜெர்மனி ஒன்றிணைப்புக்கான போர் நடைபெற்றது. ஆஸ்திரியாவின் தலைமையின்கீழ், அதன் ஆதரவு ஜெர்மானியச் சிற்றரசுகள் ஒன்றிணைந்து களமிறங்கின. இன்னொரு பக்கம் பிரஷ்யா, தன் ஆதரவு ஜெர்மானியச் சிற்றரசுகளோடு கைகோர்த்துக் களமிறங்கியது. பிரஷ்யாவுக்கு இத்தாலியின் படைபலமும் ஆதரவு கிடைத்ததால் ஏழு வாரங்கள் நடைபெற்ற போரில் அதுவே வெற்றி பெற்றது.
லீக்கின்ஸ்டைன் (Liechtenstein) என்ற உலகின் மிகச்சிறிய நாடுகளுள் ஒன்று. ஆஸ்திரியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் அமைந்தது. ஆஸ்திரியாவுடன் நல்லுறவிலிருந்த இந்த நாடும் ஆஸ்திரிய-பிரெஷ்யப் போருக்காக தனது ராணுவத்தை அனுப்பி வைத்தது. அந்தப் படையில் 80 பேர் இருந்தார்கள். வெறும் 80 பேர்தான். அவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. போருக்குச் செல்லுங்கள். ஆயுதங்களை எல்லாம் உபயோகிக்கக் கூடாது. யாரையும் தாக்கவெல்லாம் கூடாது. அமைதியாகச் சென்றுவிட்டு, சமர்த்தாகத் திரும்பி வந்துவிடுங்கள்.
போர் முடிந்தததும் அவர்களும் டூர் போய்விட்டுத் திரும்புவதுபோல ஜாலியாக வந்து சேர்ந்தனர். ஆனால், 81 பேராக. வழியில் அவர்கள் சந்தித்த இத்தாலியர் ஒருவர், பலருடனும் நண்பராகிவிட, அவரையும் தங்களுடனேயே அழைத்துக்கொண்டு வந்துவிட்டனர்.

1868-ல் லீக்கின்ஸ்டைனின் அந்தச் சிறிய ராணுவமும் கலைக்கப்பட்டது. இனி எந்தப் போரிலும் லீக்கின்ஸ்டைன் பங்குபெறாது என்று அறிவிக்கப்பட்டது. முதல், இரண்டாம் உலகப்போர்களில்கூட அந்தக்குட்டி நாடு நடுநிலையே வகித்தது. இப்போதுகூட லீக்கின்ஸ்டைனுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் எல்லையில் வேலிகள்கூடக் கிடையாது. இரு நாட்டவர்களும் பாஸ்போர்ட் இன்றி அங்கும் இங்கும் போய்வரலாம்.
2007 லீக்கின்ஸ்டைன் எல்லைப்பகுதியில் ஆயுதங்களோடு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த சுவிட்சர்லாந்து ராணுவ வீரர்கள் 170 பேர், இரவில் பனியும் குளிரும் அதிகமாக இருந்ததால் தெரியாமல் எல்லை தாண்டிப் போய்விட்டனர். ஆனால், இப்படி எல்லை தாண்டுவது அந்நாட்டுடன் போர் தொடுக்கிறோம் என்று அறிவிப்பது போன்றது. என்னது ராணுவமே இல்லாத ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதா?
ஆனால், சுவிட்சர்லாந்தும் நடுநிலையான நாடே. லீக்கின்ஸ்டைன் தரப்பிலிருந்து சுவிட்சர்லாந்து தரப்பினருக்கு போன் செய்து கேட்டனர். ‘என்ன சார், போர் எதுவும் தொடுக்கப் போறீங்களா?’
சுவிட்சர்லாந்து தரப்பினர் சிரித்தபடியே பதில் சொன்னார்கள். ‘தெரியாம நடந்திருச்சு. மன்னிச்சுக்கோங்க.’
ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி