
ரீவைண்ட்முகில்
காலுக்கு ஒரு கல்லறை!
சான்ட்டா அன்னா, 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மெக்ஸிகோவின் முக்கியமான தளபதி. அனுபவஸ்தர். கலகம் ஒன்றில் புரட்சியாளர்களை ஒடுக்கும் பணியில் சான்ட்டா அன்னா கொஞ்சம் சறுக்கினார். அதனால், அவருக்கு வலுக்கட்டாயமாக ஓய்வளிக்கப்பட்டது. மெக்ஸிகோ அரசு, பிரான்ஸிடம் ஏகப்பட்ட கடன் வாங்கியிருந்தது. அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியது. பொறுமையிழந்த பிரான்ஸ், தனது படைகளை அனுப்பி மெக்ஸிகோவின் முக்கியமான பகுதிகளை முற்றுகையிட்டது.
பிரான்ஸ் படைகளைச் சமாளிக்க மீண்டும் தளபதி சான்ட்டா அன்னா களமிறக்கப்பட்டார். நெஞ்சை நிமிர்த்திக் களமிறங்கிய அன்னாவின் இடது காலில் பிரான்ஸின் பீரங்கிக் குண்டு ஒன்று வந்து விழுந்தது. மெக்ஸிகோ மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் முட்டிக்குக்கீழ் அன்னாவின் காலை எடுக்க வேண்டியதாயிற்று.

ஒரு கட்டத்தில் மெக்ஸிகோ அரசு, கடனைத் திருப்பிச் செலுத்துவதாகச் சொன்னதால், பிரான்ஸ் தனது படைகளை வாபஸ் வாங்கியது. ஆனால், அன்னாவால்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அய்யோ, போரில் என் அருமைக் காலை இழந்துவிட்டேனே!
தன் காலை மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தார் அன்னா. அந்த ஒற்றைக் கால், அலங்காரம் செய்யப்பட்ட வண்டி ஒன்றில் ராணுவ மரியாதையுடன் சன்டா பவுலா கல்லறைத் தோட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மதகுருமார்கள் பலரும் இணைந்து அந்தக் காலுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பலரும் அந்தக் காலின் அருமை பெருமைகளை மணிக்கணக்கில் பேசினார்கள். அந்தக் காலை புகழ்ந்து கவிஞர்கள் கவிதை பாடினார்கள். பீரங்கிகள் முழங்க, மரியாதையுடன் அந்தக் கால் பளிங்கு ஜாடி ஒன்றில் வைத்துப் புதைக்கப்பட்டது.
மரக்கட்டையாலான செயற்கைக் கால் ஒன்றுடன் நடமாடினார் அன்னா. அரசியல்வாதியாகவும் உயர்ந்தார். கூட்டத்தில் பேசும்போது, தனது செயற்கைக் காலைக் கழற்றித் தலைக்கு மேல் தூக்கி ஆட்டியபடி, ‘பார்த்தீர்களா, நான் இந்த தேசத்துக்காகக் காலையே இழந்திருக்கிறேன்!’ என்றார் உருக்கமாக. அப்படிக் காலைக் காட்டிப் பேசிப்பேசியே மெக்ஸிகோவின் அதிபர் பதவியிலும் உட்கார்ந்தார் அன்னா.
1847-ல், மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போரில் அந்த செயற்கைக் காலையும் இழந்தார் அன்னா. ஆம், அமெரிக்கர்கள் அவரது செயற்கைக் காலை உருவிக்கொண்டு கிளம்பினார்கள். இப்போது அந்த செயற்கைக்கால், அமெரிக்காவின் இல்லினோஸ் ராணுவ மியூசியத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
கூஜாவில் கங்கை நீர்!
ஜெய்ப்பூரின் மஹாராஜாவாக இருந்தவர் இரண்டாம் மாதோ சிங். அவர், கங்கை நீரைத் தவிர வேறெதையும் குடிக்க மாட்டார். வேறெதிலும் குளிக்கவும் மாட்டார். கி.பி 1902-ல், இங்கிலாந்து அரசராக ஏழாம் எட்வர்டு பதவியேற்கவிருந்த நிகழ்ச்சிக்காக, மாதோ சிங் லண்டன் செல்ல வேண்டியிருந்தது. அங்கே கங்கை நீருக்கு என்ன செய்ய முடியும்? யோசித்த மாதோ சிங், கொல்லர்களை வரவழைத்தார். மூன்று பெரிய வெள்ளி கூஜாக்களை உடனே தயாரிக்கச் சொல்லிக் கட்டளையிட்டார். ஒவ்வொன்றும் சுமார் 350 கிலோ எடையில் தயாராயின. ஒவ்வொன்றிலும் சுமார் 8000 லிட்டர் கங்கை நீர் நிரப்பப்பட்டது.

தனிக் கப்பலில் மகாராஜா பயணம் செய்ய, அதில் மூன்று மெகா வெள்ளி கூஜாக்களும் ஏற்றப்பட்டன. மாதோ சிங்கின் பயணம் சில வாரங்கள் மட்டுமே என்பதால், மூன்று கூஜாக்களின் கங்கை நீரும் முழுவதுமாகக் காலியாவதற்கு முன்பாகவே லண்டன் பயணத்திலிருந்து திரும்பிவிட்டார். அவரது பணியாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
குதிரைக்கு தூதர் பதவி!
கலிகுலா, ரோம் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திரத்திலேயே கற்பனைகளையும் தாண்டிய கொடுமைக்கார அரசராக விளங்கியவர். அவருக்கும் அன்பு இருந்தது. ஆனால், மனிதர்களை நேசிக்காமல், தான் வளர்த்த குதிரை ஒன்றின்மீது ஏகப்பட்ட அன்பைக் கொட்டினார். குதிரைக்கு அவர் வைத்த பெயர் இன்ஸிட்டேடஸ். தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டவர் கலிகுலா என்பதால், அவரது குதிரையும் புனித வாகனமாகத்தான் பார்க்கப்பட்டது. இன்ஸிட்டேடஸ் தங்குவதற்கென குட்டி மாளிகை ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அதற்குப் பணிவிடைகள் செய்வதற்கென அடிமைகளும் படை வீரர்களும் தனியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

கலிகுலா, தன்னுடன் விருந்து உண்ண இன்ஸிட்டேடஸையும் அவ்வப்போது அழைப்பார். தங்க ஆபரணங்கள் அணிந்து, விருந்துக்கு ஜம்மென்று அது வந்து நிற்கும். கலிகுலா அதற்குத் தங்கத் தட்டில் உணவு பரிமாறுவார். தங்கக் கோப்பையில் ஒயின் கொடுப்பார். தங்கம் கலந்த ஓட்ஸைத் தானே ஊட்டிவிடுவார். மறுநாள், இன்ஸிட்டேடஸ் ஏதாவது பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறதென்றால், அன்றைக்கு சுற்றுவட்டாரத்தில் யாரும் எந்தவிதச் சத்தமும் எழுப்பக் கூடாது என்பது கலிகுலாவின் கட்டளை. அதன் கவனம் சிதறிவிடக் கூடாதல்லவா.
ஒருமுறை கலிகுலாவின் ராஜ்ஜியத்தில் ‘வெளிநாட்டுத் தூதுவர்’ பதவிக்குத் திறமையான ஒருவரை நியமிக்க வேண்டியிருந்தது. யார் நியமிக்கப்படுவார் என்று பலரும் ஆர்வமுடன் காத்திருக்க, தன் குதிரைக்கு அந்தப் பதவியைக் கொடுத்து கௌரவித்தார் கலிகுலா.