Published:Updated:

பழங்குடியினர் கதைகள் - 4 - வீடுகளை இடிக்கவந்த பூகம்பக் கடவுள்!

பழங்குடியினர் கதைகள் - 4 - வீடுகளை இடிக்கவந்த பூகம்பக் கடவுள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பழங்குடியினர் கதைகள் - 4 - வீடுகளை இடிக்கவந்த பூகம்பக் கடவுள்!

பழங்குடியினர் கதைகள் - 4 - வீடுகளை இடிக்கவந்த பூகம்பக் கடவுள்!

நாம் வாழும் நிலத்துக்கு அடியில் இருப்பதுதான் நிலத்தடித் தகடுகள். அந்தத் தகடுகளுக்கு மேல்தான் பூமியின் அனைத்து நிலப்பகுதிகளும் அமைந்திருக்கின்றன. ஒரு நாட்டுக்கு அடியில் அந்தத் தகடுகள் இரண்டுக்கும் அதிகமாக இருந்தால் அங்கு நிலநடுக்கம் சாதாரணமாக ஏற்படும். அப்படியொரு நாடுதான் இந்தோனேஷியா. அந்த நாட்டுக்கு அடியில் இந்தோ-ஆஸ்திரேலியத் தகடு, யூரேஷியத் தகடு, பசிபிக் தகடு என்று பல நிலத்தடித் தகடுகள் ஒன்று சேர்கின்றன. அதனால் அங்கு அதிகமான பூகம்பங்கள் ஏற்படுகின்றன. அங்கு பல்லாண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள் பூகம்பத்தைக் கடவுளாக நினைத்தனர். மற்ற நாடுகளில் போல வீடுகட்டி வாழ்வது கடவுளுக்குப் பிடிக்கவில்லை என்று நினைத்தார்கள். அதனால் குகைகளிலேயே நெடுநாள்களாக வாழ்ந்தார்கள். காலப்போக்கில் பூகம்பத்தைச் சாமளிக்கும் வீடுகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.

ஆசியாவின் தெற்கே கடைசி நிலப்பகுதியாகத் தனித்திருந்தது அந்தத் தீவு. அங்கு ஓர்அம்மா மூன்று மகன்களோடு குகையில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் மூவரில் மூத்தவன் அம்மாவிடம் ஒரு சந்தேகம் கேட்டான்.

பழங்குடியினர் கதைகள் - 4 - வீடுகளை இடிக்கவந்த பூகம்பக் கடவுள்!

``அம்மா! நாம் ஏன் குகையிலேயே வாழவேண்டும்?’’ என்று கேட்டான். ‘‘ஏன், எல்லோரும் அதில்தானே வாழ்கிறார்கள்’’  என்ற அம்மா தொடர்ந்தார், ``அதற்குக் காரணம் பூகம்பக் கடவுள் தான் கண்ணா. நாம் வீடு கட்டினால் அவர் வந்து அதை இடித்துவிடுவார். அவருக்கு அது பிடிக்காது.’’
இரண்டாவது மகன் கேட்டான், ``அப்படியா! சரி நாம் அவரால் இடிக்கவே முடியாத வீடாகக் கட்டிக்கொள்ளலாம் அம்மா.’’

அம்மா, ``அப்படியொரு வீட்டை யாருக்கும் கட்டத் தெரியாதே!’’

``யாருக்கும் தெரியாதென்றால் இனிதான் நாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்,’’ என்றான் கடைக்குட்டியான மூன்றாவது மகன்.

பழங்குடியினர் கதைகள் - 4 - வீடுகளை இடிக்கவந்த பூகம்பக் கடவுள்!


அவர்கள் பூகம்பக் கடவுளால் இடிக்க முடியாத வீட்டைக் கட்டுவதென்று முடிவெடுத்தார்கள். அந்த மூன்று சகோதரர்களும் ஆளுக்கொரு வீடு கட்டத்தொடங்கினார்கள்.

மூத்த சகோதரன் உறுதியான கற்களையும், சுண்ணாம்பையும் சேகரித்தான். கற்களை அடுக்கி, சுண்ணாம்புக் கலவையைப் பூசி வீடு கட்டினான். வீடு மிக உறுதியாகவும், அவர்கள் வாழ்ந்த குகையைப் போல் பாதுகாப்பாகவும் இருந்தது. மூத்தவனுக்குப் பெருமிதம் தாங்கவில்லை.

மூத்தவன் வீடு கட்டிய விஷயம் தெரிந்து பூகம்பக் கடவுள் வந்து  நிலத்தை உலுக்கிய உலுக்களில் கற்கள் சரிந்து வீடு இடிந்து விட்டது. 

இரண்டாவது சகோதரன் மரக்குச்சிகளையும், கிளை விழுதுகளையும் வைத்து வீடு கட்டினான். ``இது மரத்தைப்போல் திடமாக நிற்கிறது. பூகம்பக் கடவுளால் ஒன்றும்...’’ தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கையில் பூகம்பம் வந்தது. மர வீடும் இடிந்து விழுந்துவிட்டது.

இருவருக்கும் ஆச்சர்யம், ``மரம் நிலத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி நிற்கிறது. ஆனால், மரவீடு ஏன் அப்படி நிற்கவில்லை!’’என்று.

கடைக்குட்டி மூங்கில் குச்சிகளையும் மெல்லிய கயிறுகளையும் வைத்து வீட்டைக் கட்டியிருந்தான். அங்கும் பூகம்பக் கடவுள் வந்தார், ``இந்த வீடு அவற்றைவிடப் பலவீனமாகத் தானிருக்கிறது,’’ என்று சொல்லிக்கொண்டே நிலநடுக்கத்தை ஏற்படுத்தினார்.

அப்போதும் வீடு ஆடியதே தவிர விழவில்லை. அடக்கமுடியாத கோபத்தோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார். முடியவில்லை. அலுத்துப்போய் பூகம்பக் கடவுளே போய்விட்டார்.

பழங்குடியினர் கதைகள் - 4 - வீடுகளை இடிக்கவந்த பூகம்பக் கடவுள்!

அண்ணன்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தம்பியிடம் ஓடினார்கள்.

``தம்பி கல்லாலான வீடு, மரத்தாலான வீடு இரண்டுமே இடிந்துவிட்டது. சாதாரண மூங்கிலால் நீ கட்டிய வீடு எப்படி இவ்வளவு உறுதியாக நின்றது?’’ என்று இரண்டாவது அண்ணன் கேட்டான்.

``அண்ணா நீங்கள் மரத்துண்டுகளைக் கயிறுகொண்டு கட்டி, அவற்றைச் சுவராக்கி வீடு கட்டியிருப்பீர்கள்!’’ என்று கேட்டான் கடைக்குட்டி.

``ஆமாம்...’’

``மரங்கள் காய்ந்தபிறகு திடமாக இறுகிவிடும். வளைந்துகொடுக்காது. அதனால்தான் பெரும் நடுக்கம் வந்ததும் அது உடைந்து வீடு இடிந்துவிட்டது’’என்றவனிடம் மூத்தவன் கேட்டான், ``அதுசரி தம்பி. நான் கற்களால் அல்லவா வீடு கட்டினேன். அது எப்படி இடிந்துவிழுந்தது.’’

``பெரியண்ணா! நீங்கள் கற்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிவைத்துக் கட்டியிருப்பீர்கள். அதனால்தான் நிலம் ஆடியதும், கற்கள் சரிந்துவிட்டது.’’

``உன் வீடு மட்டும் எப்படி இடிந்துவிழாமல் உறுதியாக நின்றது?’’என்று இருவரும் ஒரே சமயத்தில் தம்பியிடம் கேட்டார்கள்.

``மூங்கில், எவ்வளவு வேண்டுமானாலும் வளையும். நான் அதை வைத்துக் கட்டினேன். அதனால்தான் பூகம்பக் கடவுள் நிலத்தை ஆட்டியபோதெல்லாம், வீடு வளைந்து  ஆடியதே தவிர இடிந்துவிழவில்லை’’ என்று தம்பி விவரமாகச் சொன்னான்.

அன்றிலிருந்து இன்றுவரை தெற்காசியப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் அதிகமாக மூங்கில் வீடுகளிலேயே வாழ்ந்துவருகிறார்கள். பாவம் பூகம்பக் கடவுள். எத்தனை முறை வந்தாலும் அவரால் அவர்களை ஒன்றுமே செய்யமுடியவில்லை.

- கே.சுபகுணம்

 ஓவியங்கள்: ரமணன்