Published:Updated:

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 8

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 8
பிரீமியம் ஸ்டோரி
News
சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 8

ரீவைண்டு

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 8

அதிசய எண் 129-ம், நெப்போலியனும், ஹிட்லரும்!

பிரான்ஸின் சக்கரவர்த்தியாக தன் வீரத்தால் உலகை மிரட்டிய நெப்போலியன். இரண்டாம் உலகப்போரால் உலகையே பதைபதைக்கச் செய்த ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர். வரலாற்றில் இருவருக்கிடையேயும் பல விஷயங்கள் தன்னிச்சையாக ஒன்று போல அமைந்திருப்பது வியப்பு.

நெப்போலியன், ஒரு ராணுவத் தளபதியாக உருவெடுக்கக் காரணமான பிரெஞ்சுப் புரட்சி நடந்தது 1789ல். ஹிட்லரை அரசியல் பாதையை நோக்கி நகர்த்திய ஜெர்மன் புரட்சி நடந்தது 1918ல். இரண்டுக்குமிடையேயான இடைவெளி 129 ஆண்டுகள். நெப்போலியன் பிரான்ஸின் சக்கரவர்த்தி ஆனது, 1804. ஹிட்லர் ஜெர்மனியின் சான்ஸிலர் ஆனது 1933. இரண்டுக்குமிடையேயான இடைவெளி 129 ஆண்டுகள். 1809ல் நெப்போலியன் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தார். 1938ல் ஹிட்லர் ஆஸ்திரியாவைக் கைப்பற்றி நாஜி ஜெர்மனியுடன் இணைத்துக் கொண்டார். இடைவெளி 129 ஆண்டுகள். 1812ல் நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்தார். 1941ல் ஹிட்லரின் நாஜிப்படைகள் சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறின. இடைவெளி 129 ஆண்டுகள். நெப்போலியனின் வீழ்ச்சி 1814ல் நடந்தது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் வீழ்ச்சி, 1943ல் ஆரம்பமானது. இரண்டுக்குமான இடைவெளி 129 ஆண்டுகள்.

நெப்போலியன், ஹிட்லர் என்ற இரு மாபெரும் ஆளுமைகளின் வீழ்ச்சிக்குக் காரணமும் ரஷ்யாதான் என்பதும் கூடுதல் ஒற்றுமை.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 8

அதிர்ஷ்டக்காரர் செலக்!

ஃபிரேன் செலக் – குரோஷியாவைச் சேர்ந்த இசை ஆசிரியர். ‘செத்துச் செத்து விளையாடலாமா’ என்று விதி இவரிடம் ஏழு முறை கேட்டுச் சென்றிருக்கிறது.

1962ல் செலக் தன் வாழ்வில் முதன் முதலில் விபத்தில் சிக்கினார். அவர் பயணம்செய்த ரயில், கடும் மழையில் தடம் புரண்டு ஆற்றில் விழுந்தது. செலக்குடன் பயணம்செய்த 17 பேர் இறந்தனர். யாரோ ஒருவர் கையைப் பிடித்துத் தூக்கிவிட, செலக் உயிர் தப்பினார். கை மட்டும் உடைந்து போனது. அடுத்த வருடம் ஒரு சிறிய விமானத்தில் பயணம் செய்தார் செலக். அது, அவரது முதல் விமானப் பயணம். அதற்கு மேல் விமானத்திலேயே பயணம் செய்யக் கூடாது என்று மரண பயத்தைக் காட்டிய பயணமாகவும் ஆகிப்போனது. பறந்துகொண்டிருந்த விமானம், கட்டுப்பாடு இழந்து தரையை நோக்கி விழுந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தின் பின் கதவு திறந்துகொள்ள, செலக் அதன் வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டார். விமானம் தரையில் விழுந்து நொறுங்கி, அதில் பயணம் செய்த அனைவருமே இறந்துபோயினர். செலக், வைக்கோல் குவியல்மீது விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

1966ல் ஒரு பேருந்தில் யணம் செய்தபோது, அதுவும் விபத்துக்குள்ளாகி ஆற்றில் விழுந்தது. நான்கு பேர் மூழ்கிப்போக, கஷ்டப்பட்டு நீந்திக் கரையேறினார். அதற்குப்பின், தன் சொந்தக் காரில் மட்டுமே பயணம்செய்ய முடிவெடுத்தார். 1970ல் செலக் ஓட்டிச்சென்ற கார், ஏதோ கோளாறில் தீப்பற்றிக் கொள்ள, அதன் எரிபொருள் டேங்க் வெடிக்கும் முன்பே, வெளியே குதித்து உயிர் தப்பினார். 1973ல் மீண்டும் ஒரு கார் விபத்து. ஓட்டிச்சென்ற செலக், தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். அவரது தலைமுடி முழுக்க கருகிப்போனது. 1995-ல் ஒரு பஸ் செலக் மீது மோதியது. சிறிய காயங்களுடன் எப்படியோ தப்பினார். 1996-ல் மலைப்பாதையில் கார் ஓட்டிச் சென்றார். ஓர் ஆபத்தான வளைவில் டிரக் வருவதைக் கவனிக்காமல் காரை பள்ளத்துக்குள் விட்டார். பாதாளம் நோக்கிப் பாய்ந்த காரிலிருந்து வெளியே குதித்த செலக், ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது கண் முன்பாகவே கார் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இப்படியாக, ஏழு முறை மரணத்திடம் இருந்து தப்பிய செலக்குக்கு, 2003-ல் அதிர்ஷ்டம் காத்திருந்தது. தனது 73-வது வயதில் அவருக்கு லாட்டரி டிக்கெட்டில் பரிசு  விழுந்தது (அமெரிக்க மதிப்பில் $1,110,000). இதற்குத்தான் செலக் இத்தனை விபத்துகளில் இருந்தும் தப்பியிருக்கிறார் என்று உலகம் புகழ்ந்தது. World’s Luckiest Unluciest Man – என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்தது.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 8

சமயோஜித பேச்சு..!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, நகைச்சுவையான, சமயோஜிதமான பேச்சுக்குப் புகழ்பெற்றவர். ஹாக்கிப் போட்டி ஒன்றுக்கு பரிசளிக்க வந்தார் கருணாநிதி. விளையாடிய இரண்டு அணிகளும் சமமான கோல்கள் போட்டிருக்க, வெற்றியைத் தீர்மானிக்க டாஸ் போட்டார்கள். அதில் பூ (Tails) விழுந்ததால், தலை (Heads) கேட்ட அணி தோற்றுப்போனது. பரிசளித்துவிட்டு கருணாநிதி பேசினார்.

‘இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. ‘தலை’ கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஏனென்றால் ‘தலை’ கேட்பது வன்முறை அல்லவா’ என்றார்.

- முகில்

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி