Published:Updated:

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 9

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 9
பிரீமியம் ஸ்டோரி
News
சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 9

ரீவைண்டு

தபால் குழந்தைகள்!

1913-ம் ஆண்டு அமெரிக்காவில் தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. என்ன வேண்டுமானாலும் அனுப்பலாம் என்றதும் அமெரிக்கர்களும் என்னென்னமோ அனுப்பினார்கள். கோழி, நாய், முட்டை, சவப்பெட்டி என்று தபால்காரர்கள் பலவற்றையும் சுமந்து போக வேண்டியதிருந்தது.

ஓஹியோவைச் சேர்ந்த ஜெஸ்ஸி தம்பதியினர் தங்கள் குழந்தையைக் கொண்டு வந்தனர். ‘இந்தக் குழந்தையை அவனது பாட்டி வீட்டில் சேர்த்துவிடுங்கள்’ என்று கொடுத்தனர். தபால் ஊழியர்கள் கொஞ்சம் அதிர்ந்தாலும், சரி என்று 10 பவுண்ட் எடையுள்ள அந்தக் குழந்தையை வாங்கி அதன் சட்டையில் தபால் முத்திரை குத்தினர். 15 சென்ட் குழந்தையை அனுப்பச் செலவு. 50$ இன்ஸூரன்ஸ் தொகை. குழந்தையைக் கொண்டுசென்று பாட்டி கையில் கொடுத்தார்களா அல்லது பாட்டி வீட்டில் லெட்டர் பாக்ஸில் போட்டார்களா என்பது குறித்த தகவல் இல்லை.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 9

அதன் பின்பு 720 மைல் தொலைவுக்கு அப்பாலுள்ள ஓர் உறவினர் வீட்டுக்கு 6 வயதுப் பெண் குழந்தை ஒன்று அனுப்பப்பட்டதாகவும் தகவல் உண்டு. டெலிவரி செய்ய வேண்டிய தபால்களோடும் குழந்தைகளோடும் போஸ்ட்மேன்கள் அங்கே அப்போது திரிந்து கொண்டிருந்தனர். ரயிலில்கூட தபால்மூட்டைகளோடு குழந்தைகளும் அனுப்பப்பட்டனர். இப்படி அனுப்பப்பட்ட மே என்ற குழந்தையின் கதையைச் சொல்லும் Mailing May என்ற புத்தகம் பிரபலமான ஒன்று.

இப்படி அனுப்பப்படும் குழந்தைகள் காணாமல் போய்விட்டால் பெரிய பிரச்னை ஆகிவிடுமே. 1914-ல் தலைமைத் தபால் அதிகாரி, ‘யாரும் இனி மனிதர்களை அஞ்சலாக அனுப்பக் கூடாது’ என்று உத்தரவு போட்டார். அதற்குப் பின்பு குழந்தைகள் மீது தபால் முத்திரை குத்தப்படவில்லை.

அய்யய்யோ கிரிக்கெட்!

1900 ஆண்டு பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போதுதான் அங்கே ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி அறிமுகப் படுத்தப்பட்டது. இங்கிலாந்து மட்டும் ஆர்வமாகப் பெயர் கொடுத்தது. அதற்கு எதிராக ஆட யாராவது வேண்டுமே. அதற்காக ஒலிம்பிக் போட்டியை நடத்திய பிரான்ஸ் சும்மா கலந்து கொண்டது. வேறு வழியில்லாமல் ‘நடத்தித் தொலைப்போம்’ என்று கடுப்போடு இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றை ஆரம்பித்தார்கள்.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 9

ஆகஸ்ட் 19, 1900. டேவோன் அண்டு சோமர்செட் வாண்டரெர்ஸ் என்ற பிரிட்டன் கிளப் அணியும் பிரெஞ்ச் அத்லெடிக் கிளப் யூனியன் அணியும் மோதின. (அதில் பிரெஞ்சு கிளப் அணியில் இடம்பெற்றிருந்த பலர், இங்கிலாந்திலிருந்து அங்கே குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) முதல் இன்னிங்ஸில் பேட் பிடித்த பிரிட்டன் கிளப், 117 ரன்கள் எடுத்தது. அதெல்லாம் சுலபமா எடுத்துடலாம் என்று அலட்சியமாகக் களமிறங்கிய பிரெஞ்சு கிளப் அணி, 78 ரன்களில் சுருண்டது. இரண்டாவது நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் பிரிட்டன் கிளப் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து நம்பிக்கையுடன் டிக்ளேர் செய்தது. 185 ரன்கள் டார்கெட். வெற்றியே லட்சியம், டிரா நிச்சயம் என்று நெஞ்சு நிமிர்த்தி களமிறங்கிய பிரெஞ்சு கிளப் அணியின் விக்கெட்டுகளை எதிரணியினர் வீறுகொண்டு வீழ்த்த ஆரம்பித்தனர்.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 9



இன்னும் கொஞ்ச நேரம் தாக்குப் பிடித்தால் ஆட்ட நேரம் முடிந்துவிடும். டிரா செய்துவிடலாம் என்று முக்கி முக்கி ஆடிய பிரெஞ்சு கிளப் அணி, ஆட்டம் முடிய ஐந்து நிமிடம் இருக்கும்போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டு இன்னிங்ஸிலும் பிரெஞ்சு கிளப் அணியில் தலா ஐந்து பேர் டக்-அவுட் ஆகியிருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் ஒருவர்கூட இரண்டு இலக்க ரன்னைத் தொடவில்லை என்ற சாதனையும் முக்கியமானது.

இருந்தாலும் பிரெஞ்சு கிளப் அணியினரது சந்தோஷத்துக்குக் குறைவில்லை. தோற்றாலும் வெண்கலக் கிண்ணமோ, கேடயமோ ஏதாவது நிச்சயம் கிடைக்கும். வரலாற்றிலும் இடம் உண்டு என்ற நினைப்பே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

இப்படியாக ஒலிம்பிக்கின் முதல் கிரிக்கெட் போட்டி சுவாரசியமின்றி நடந்து முடிந்தது. அதற்கடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்க்க ஆதரவு கிடைக்கவில்லை. ஆகவே, இந்த பிரிட்டன் கிளப் – பிரெஞ்சு கிளப் ஆட்டம், ஒலிம்பிக் வரலாற்றின் ஒரே கிரிக்கெட் போட்டியும்கூட.

பலாப்பழத்தைக் கண்டுபிடித்தவர் ஜேக்!

பலாப்பழத்துக்கு ஆங்கிலத்தில் ஏன் Jack Fruit என்ற பெயர் வந்தது. ஜேக் என்பவர்தான் பலாப்பழத்தைக் கண்டுபிடித்தாரா? அல்லது அதற்குப் பெயர் வைத்தாரா? இல்லை.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 9

பலாப்பழம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இந்திய மண்ணின் பழம் என்றும் அதைச் சொல்லலாம். பதினாறாம் நூற்றாண்டில் கேரளாவுக்கு வந்த போர்ச்சுக்கீசியர்கள் பலாவைச் சுவைத்துவிட்டு, அதன் பெயரைக் கேட்டிருக்கிறார்கள். ‘சக்கைப் பழம்’ என்று கேரள மக்கள் மலையாளத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள். சக்கை என்பதை போர்ச்சுக்கீசியர்கள், Jaca Fruit என்று புரிந்துகொண்டு பதிவு செய்தார்கள். அதுவே பின்பு ஆங்கிலத்தில் மாறியபோது Jack Fruit என்று ஆனது.

ஆக, பலாவுக்கும் ஜேக்குக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

- முகில்

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி