Published:Updated:

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 10

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 10
பிரீமியம் ஸ்டோரி
News
சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 10

ரீவைண்டு

தொப்பியால் நடந்த கலாட்டா!

அவர் பெயர் ஜான் ஹெதெரிங்டன். பிரிட்டனைச் சேர்ந்தவர். அங்கே, துணிகள் தைக்கத் தேவையான பட்டன், ஊசி, ரிப்பன் போன்ற பொருள்களை வியாபாரம் செய்து வந்தார். ஜான், தான் அணிவதற்கென பட்டுத்துணியால் பளபளவென ஒளிரும்படி நல்ல உயரமான வட்டத் தொப்பி (Top Hat) ஒன்றைத் தயாரித்தார். அதுவரை அப்படிப்பட்ட உயரமான தொப்பி யாரிடமும் கிடையாது. யாரும் பார்த்ததும் கிடையாது.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 10

1797, ஜனவரி 15. ஜான் அந்தத் தொப்பியை முதல்முறையாக அணிந்துகொண்டு நெஞ்சை நிமிர்த்தி சாலையில் நடந்தார். எல்லோரும் ஆச்சர்யப்படுவார்கள் என்று நினைத்தார். ஆனால், அந்த பளபள தொப்பியைப் பார்த்த பெண்கள் பயந்து அலறினார்கள். அங்கிருந்த சிறுவர்கள், சிறுமியர் எல்லாம் பூதத்தையோ, பூச்சாண்டியையோ பார்த்ததுபோல மிரட்சியுடன் தங்கள் பெற்றோர்களைக் கட்டிக்கொண்டார்கள். தெருவில் திரிந்த சில நாய்கள், தொப்பி ஜானைப் பார்த்து மிரண்டு ஓடின, கோபத்துடன் குரைத்தன. மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓட ஆரம்பித்ததில் ஒரு சிறுவன் கீழே விழுந்தான். அவனது வலது கை எலும்பு முறிந்தது.

ஜான், குற்றவாளியாக விசாரிக்கப்பட்டார். ஊருக்குள் மக்களை மிரட்டும்படி தொப்பி அணிந்ததாலும், அமைதியைக் குலைக்கும்படி நடந்துகொண்டதாலும், ‘இனிமேல் இதுபோல செய்யக்கூடாது’ என்று ஜானை எச்சரித்தனர். அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பாவம் ஜான், அவரால் அதற்குப்பின் அந்தத் தொப்பியை அணியமுடியவில்லை. ஆனால், பிற்காலத்தில் ராஜ குடும்பத்தினராலும், பல்வேறு முக்கியத் தலைவர்களாலும் விரும்பி அணியப்பட்ட உயரமான தொப்பியை அறிமுகப்படுத்தியவர் ஜான் தான் என்பது வரலாறு.

உருளைக்கிழங்கு திருடர்கள்

அண்டோனே-அகஸ்டின் பர்மெண்டிர், பிரான்ஸைச் சேர்ந்தவர். ராணுவத்தில் மருந்துகள் தயாரித்துக் கொடுக்கும் பணியில் இருந்தவர். கி.பி. 1756-63-களில் நடந்த போரில் கைதியாக பிரஷ்யாவின் சிறையில் மாட்டிக் கொண்டார் பர்மெண்டிர். அங்கு, அவருக்கு உருளைக்கிழங்குதான் உணவாக வழங்கப்பட்டது.

பர்மெண்டிர் உருளையைப் பார்த்து பயந்தார். அவர் மட்டுமல்ல,  பிரெஞ்சுக்காரர்கள் எல்லோருமே உருளைக்கிழங்கு சாப்பிட்டால் தொழுநோய் வரும் என்றே நம்பினர். பிரான்ஸின் பாராளுமன்றமே உருளை விவசாயத்துக்குத் தடை விதித்திருந்தது. பர்மெண்டிர், சிறையில் வேறு உணவு இல்லாமல்,  பசிக்கு உருளையையே தின்று உயிர் வாழ்ந்தார். அதன் சுவை அவருக்குப் பிடித்துப்போனது. உடலுக்கு நல்ல சக்தி கிடைத்தது. தொழுநோயோ, வேறு எந்த நோயுமோ வரவில்லை.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 10

போரின் முடிவில் விடுதலையாகி பிரான்ஸுக்குச் சென்ற பர்மெண்டிர், உருளையின் சிறப்புகளை தம் மக்களுக்குப் புரியவைக்க வேண்டுமென்று விரும்பினார். அதற்காக ஆய்வுகள் செய்து, உருளைக்கிழங்கு நன்மை தரக்கூடியதே. அதைச் சாப்பிட்டால் நோய்கள் வராது. ஏகப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு அது என்று அரசர் 16 - ஆம் லூயியிடம் நிரூபித்தார். அதன்பிறகு, பிரான்ஸ் பாராளுமன்றம் உருளை விவசாயம் செய்ய மக்களை அனுமதித்தது.

ஆனால், பிரெஞ்சுக் காரர்களுக்கு உருளை மீதான பயம் போகவில்லை. எனவே பர்மெண்டிர் மாற்று வழி ஒன்றை யோசித்தார். அரசரிடம் தன் திட்டத்தைச் சொன்னார். அரசர், பர்மெண்டிருக்கு பல ஏக்கர் நிலத்தைப் பரிசாகக் கொடுத்தார். அதில் உருளை விவசாயம் செய்தார். அந்த நிலத்துக்கு இரவும் பகலும் ராணுவ வீரர்கள் காவலுக்கு இருந்தனர். ‘மதிப்புமிக்க ஏதோ ஒன்றை பர்மெண்டிர் விளைவித்துள்ளார்’ என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். இரவோடு இரவாக அதைத் திருடிப் போகவும் வந்தார்கள். ‘யாரையும் பிடிக்க வேண்டாம். கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்’ என்று பர்மெண்டிர் வீரர்களிடம் ரகசியமாகச் சொல்லிவைத்திருந்தார்.

இப்படியாக, திருடுபோன உருளைச் செடிகளும் கிழங்குகளும் மதிப்புமிக்க ஒன்றாக பிரான்ஸ் விவசாயிகளிடம் பரவியது. பிரான்ஸ் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக உருளையின் சுவைக்கு அடிமையாக ஆரம்பித்தனர். இப்படித் தந்திரமாக உருளையின் புகழ் பரப்பிய பர்மெண்டிரின் பெயரில் ஏகப்பட்ட உருளைக்கிழங்கு உணவுகள் இன்றைக்கு பிரான்ஸில் பிரபலமாக உள்ளன.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 10

அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் போட்டி!

கி.பி. 1904- ல், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரத்தில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது. அதில் கயிறு இழுக்கும் போட்டியும் இருந்தது. பங்குபெற்ற அணிகள் மொத்தம் ஆறு.  கிரீஸ், தென் ஆப்பிரிக்கா, அப்புறம் அமெரிக்காவிலேயே நான்கு அணிகள் (மில்வாக்கி கிளப், நியூயார்க் கிளப், செயின்ட் லூயிஸ் 1 & 2). ஆறும் கயிறு இழுத்தன. அமெரிக்க அணிகள், கிரீஸ், தென் ஆப்பிரிக்க அணிகளை அலேக்காக இழுத்துப் போட்டு, அவற்றை முதல் சுற்றிலேயே வீட்டுக்கு அனுப்பின. முதல் அரையிறுதியில் அமெரிக்காவும் அமெரிக்காவும் மோதின. இரண்டாவது அரையிறுதியில், அமெரிக்காவும் அமெரிக்காவும் மோதின. அவ்விரண்டில் ஜெயித்த அமெரிக்காவும் அமெரிக்காவும் இறுதிப் போட்டியில் மோதி, அதில் ஓர் அமெரிக்க அணி (மில்வாக்கி கிளப்) வென்றது.

தங்கம், வெள்ளி, வெண்கலம் எல்லாம் அமெரிக்காவுக்கே.

- முகில்

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 10

தெரியுமா?

* ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் ‘என் சரிதம்’