Published:Updated:

மாங்கனி வண்டியும், கீச்கீச் குருவிகளும்!

மாங்கனி வண்டியும், கீச்கீச் குருவிகளும்!
பிரீமியம் ஸ்டோரி
மாங்கனி வண்டியும், கீச்கீச் குருவிகளும்!

கே.ஆர்.ராஜமாணிக்கம், ஓவியம்: வேலு

மாங்கனி வண்டியும், கீச்கீச் குருவிகளும்!

கே.ஆர்.ராஜமாணிக்கம், ஓவியம்: வேலு

Published:Updated:
மாங்கனி வண்டியும், கீச்கீச் குருவிகளும்!
பிரீமியம் ஸ்டோரி
மாங்கனி வண்டியும், கீச்கீச் குருவிகளும்!

மாங்கனி, ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு போகிறாள். அவள் படிக்கும் பள்ளிக்கூடம், இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காலையில் அப்பா வேலைக்குப் போகும்போது சைக்கிளில் கொண்டுபோய் விட்டுவிடுவார். மாலையில் தன்னைவிட இரண்டு வகுப்பு கூடுதலாகப் படிக்கும் தோழி அன்புச்செல்வியுடன் வீட்டுக்கு வந்துவிடுவாள்.

இரண்டு பக்கமும் வயல்கள். இடையே உள்ள சிறிய மண் ரோட்டில்தான் செல்ல வேண்டும். பல மாணவர்கள் நடந்தும் போவார்கள். பக்கத்து தெருவில் இருக்கும் சைக்கிள் கடையில், பழகுவதற்கென்றே குட்டிக் குட்டி சைக்கிள்கள் இருக்கும். பள்ளிக்கு லீவு விடும்போதெல்லாம், அங்கேதான் வாடகைக்கு சைக்கிள் எடுத்து, ஓட்டிப் பழகுவாள். மாங்கனிக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்ததே அன்புச்செல்விதான்.

மாங்கனி, அப்பாவிடம் சைக்கிள் கேட்டபோது, ‘‘நீ முதல்ல ஓட்ட கத்துக்க. அப்புறம் சொந்தமா வாங்கித் தரேன்’’ என்றார். அதனால், எப்படியாவது சைக்கிள் கற்பதில் தீவிரமானாள். கை, கால்களில் நிறைய அடிபட்டு, ஒருவழியாக ஐந்தாம் வகுப்பு அரைப் பரீட்சை லீவில் முடிந்துவிட்டது பயிற்சி.

சொன்னபடியே கூடைவைத்த புதிய சைக்கிளை வாங்கிக்கொடுத்தார் அப்பா. ‘‘ரொம்ப ரொம்ப தேங்ஸ் அப்பா...’’ என அப்பாவை கட்டிப்பிடித்துத் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள் மாங்கனி. அந்த சைக்கிளில் அம்மாவின் சேமிப்புப் பணமும் சேர்ந்திருந்தது.

புதிய சைக்கிளை ஓட்டுவதற்கு இந்த ரோடு சரியில்லை என்று கவலைப்பட்டாள் மாங்கனி. ‘இந்த ஊருக்கு நல்ல ரோடு எப்போதான் போடுவாங்களோ’ என நினைத்தவாறு தூங்கியவள் கனவிலும்...

அம்மாவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வேகமாக ஓட்டுகிறாள். அவளுடன் படிக்கும் அந்த ஊர் பிள்ளைகள் அவளைப் பின்தொடர்கிறார்கள். ஆனால், அவர்களால் மாங்கனியைப் பிடிக்க முடியவில்லை.  அடுத்து வந்த கனவில் அன்புச்செல்வி, ‘நான் கோயிலுக்குப் போக உன் சைக்கிளைக் கொடு’ என்கிறாள்.

‘‘இது புது சைக்கிள், நான் தர மாட்டேன்’ என்று மறுத்துவிடுகிறாள் மாங்கனி. அவள் கோபித்துக்கொண்டு செல்ல, கண் விழித்துக்கொண்ட மாங்கனி, ‘அன்பு கேட்டால் கொடுக்கத்தான் வேண்டும்’ என நினைத்துக்கொண்டாள்.

மாங்கனி வண்டியும், கீச்கீச் குருவிகளும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில், தேவையில்லாமல் சைக்கிளை எடுக்கக் கூடாது என்று வீட்டின் எரவாணத்தை (தாழ்வாரம்) ஒட்டிய கொட்டகையில் பூட்டி வைத்துவிட்டாள். ஆனால், பள்ளி திறந்த பிறகும் நடந்தேசென்றது அம்மாவுக்குப் புதிராக இருந்தது.

ஒருநாள் கடைத்தெருவில் பார்த்த வகுப்பு டீச்சர், ‘‘மாங்கனி இப்போதெல்லாம் வகுப்பில்  பேசிக்கொண்டே இருக்கிறாள்’ எனப் புகார் தெரிவித்தார்.

மறுநாள் காலை, ‘‘சைக்கிளில் போறதில்லையாமே என்ன பிரச்னை?’’ என அப்பா கேட்டதற்கு, ‘‘மழை பெய்ஞ்சு ரோடு சேராயிருக்கு. புது சைக்கிளாச்சே...’’ என்றாள்.

‘‘பழைய துணி எடுத்துட்டு வா. சைக்கிளை தொடைக்கலாம்’’ என்றபடி அப்பா எழுந்தார்.

‘‘அப்பா... அப்பா... சைக்கிளை எடுக்க வேணாம். சைக்கிள் கூடைக்குள்ளே சிட்டுக்குருவி கூடு கட்டி, முட்டை விட்டிருக்குப்பா்’’ எனச் சொல்ல, அப்பா திகைத்து நின்றார்.

விடுமுறை முடிந்து பள்ளிக்குப் போவதற்காக மாங்கனி சைக்கிளை எடுத்தபோது, இரண்டு சிட்டுக்குருவிகள் கூடைக்குள்ளிருந்து பறந்தன. கூடைக்குள் போட்டுவைத்திருந்த அட்டைப் பெட்டிக்குள் தேங்காய் நார்கள், தலையணைப் பஞ்சு, நூல்போல மெல்லியதாக பச்சைத் தென்னை ஓலைகள் எனப் பலவற்றைக் கண்டாள்.

சில நாள் கழித்து, இளம் பச்சை நிறத்தில் இரண்டு முட்டைகளும் வெள்ளையில் சாம்பல் புள்ளிகளுடன் மூன்று முட்டைகளும் இருந்தன. சிட்டுக்குருவி எப்போது குஞ்சு பொரிக்கும்? அவற்றின் வண்ணம் எப்படியிருக்கும் என எந்நேரமும் மனம் எண்ணிக்கொண்டிருந்தது. குருவிகளின் வாழ்க்கை பற்றி நூலகப் புத்தகத்தில் படித்ததை,  தோழிகளிடம் பகிர்ந்ததையே, வீணாகப் பேசுவதாக நினைத்த டீச்சர் கண்டித்ததுடன் அடித்தும்விட்டார்.

இப்போதுதான் அப்பா, அம்மாவுக்கே இந்த விஷயம் தெரியும். மகளின் அன்பை எண்ணி நெகிழ்ச்சியுடன் அணைத்துகொண்டனர்.

மாங்கனி வண்டியும், கீச்கீச் குருவிகளும்!

இரண்டு வாரங்கள் கடந்தநிலையில், குஞ்சுகள் வெளிவந்திருந்தன. வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருந்தன. மெல்லிய ‘கீச் கீச்’களை ஒலித்தன.

அடுத்த நாள்... தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு. ‘அவரும் சிட்டுக்குருவி வளர்க்கக்கூடாது என்பாரோ’ என்று நினைத்தவாறு சென்றாள் மாங்கனி.

‘‘மாங்கனிக்கு என் பாராட்டுகள்’’ என்று தலைமையாசிரியர் அவளை இன்முகத்துடன் வரவேற்றது, வகுப்பு டீச்சருக்கு வியப்பாக இருந்தது. ‘‘என்ன டீச்சர் அப்படி பார்க்கிறீங்க? நூலகம் நடத்திய கட்டுரைப் போட்டியில், மாங்கனி எழுதிய ‘சிட்டுக்கள் நம் உறவுகள்’ என்கிற கட்டுரை முதல் பரிசு வாங்கியிருக்காம். நூலக தினத்தில் மாவட்ட கலெக்டர் பரிசு வழங்கப்போறதா தகவல்’’ என்றார்.

‘‘ரொம்ப நன்றி சார்’’ என்றாள் மாங்கனி உற்சாகமாக. வீட்டுக்குப் போனதும், குருவிக்கூட்டை நோக்கி விரைந்தாள். கூடு காலியாக இருந்தது. சிட்டுக்கள், கூட்டைவிட்டுப் பறந்துவிட்டன. வெளியே நோட்டமிட்டபோது, அருகே இருந்த சிறிய மரத்தின் கிளையில் அமர்ந்து, ‘கீச்...கீச்...கீச்’ என்ற குருவிகளின் ஓசை, சிறு மணிகள் கோத்த சலங்கையாக காதுகளையும் மனத்தையும் நிறைத்தது.

மறுநாள், புது சைக்கிளில் சிட்டாகப் பறந்தாள், பரிசு வாங்க.