Published:Updated:

கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை

கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை

கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை

கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை

கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை

Published:Updated:
கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை

முதன் 11 வயது நவீனகாலச் சிறுவன். கணிப்பொறி என்ற அந்தக் கறுப்புப் பெட்டியின் ஒளித்திரைக்குள் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டே இருப்பான். அவனுக்கு எல்லாமும் அதுவே.

அவன், கால் வலிக்க ஓடி, உடல் வியர்க்க விளையாட வேண்டுமென்று அவனது பாட்டிக்கு ஆசை. அப்போதுதானே ஆரோக்கியமாக வளரமுடியும். ஆனால், கணினியும் ஆண்ட்ராய்டு கைபேசியுமாக இருக்கிறான் அமுதன்.

இப்படித்தான் ஒரு நாள் தன் கணினியில் எதையோ மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தான். அங்கே வந்த பாட்டி,  “அமுதா,  என்ன இடுப்பு ஒடஞ்சவனாட்டம் உட்கார்ந்திருக்கே’’ எனக் கேட்டார்.
“பாட்டி, எனக்கு புராஜெக்ட் கொடுத்திருக்காங்க. அதைச் செய்யவிடுங்க’’ என்றான்.

“என்ன புராஜெக்ட்?” - பாட்டி.

“நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்கள் எப்படியிருக்கு என்னென்ன செய்யுதுன்னு எழுதணும்’’ - அமுதன்.

பாட்டிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “ஏண்டாப்பா... நம்மைச் சுற்றி இருக்குறதை கம்ப்யூட்டர்ல தேடணுமா? வெளிய வா காட்டறேன்’’ என்றார்.

கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை

“அய்யோ... ஏன் பாட்டி தொந்தரவு பண்றீங்க. நம்மைச் சுற்றி அப்படியென்ன இருந்துடப்போகுது. ஆடு, மாடு, நாய், காக்கா... அதை வெளியே வந்துதான் தெரிஞ்சுக்கணுமா? இணையத்துல இல்லாததா? பேசாமப் போங்க பாட்டி” எனப் பாட்டியை விரட்டிவிட்டு வேலையைத் தொடர்ந்தான் அமுதன்.

‘என்னைச் சுற்றியுள்ள உயிரினங்கள்’ என்று கூகுள் தேடுபொறியில் அடித்துவிட்டு, சாப்பிட ஏதாவது கிடைக்குமா எனச் சமையலறைக்குப் போனான்.

பாட்டி செய்துவைத்திருந்த முறுக்குகளை எடுத்துக்கொண்டு திரும்பிவந்து கதவைத் திறந்ததும், சடசடவென றெக்கைகளை அடித்துக்கொண்டு வௌவால்கள் பறந்தன. அலறியடித்துக் கீழே விழுந்த அமுதனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்தச் சலசலப்புக்குப் பிறகு, உள்ளிருந்து ‘கீச்... கீச்... க்றீச்... க்றீச்... குக்கூ...’ ஒலிகள் கேட்டன. அமுதன்  அறைக்குள் எட்டிப் பார்த்தான். பறவைகள், அணில்கள், கீரிப்பிள்ளைகள், வௌவால்கள் எனப் பலவும் அறைக்குள் நிரம்பியிருந்தன.

‘இது என் அறைதானா? இதெல்லாம் எப்படி இங்கே வந்திருக்கும்?’ என ஒரே குழப்பமாக, “பாட்டி... பாட்டி...” எனக் கூச்சலிட்டான்.

அறைக்குள் வந்து பார்த்த பாட்டிக்குப் புரிந்துவிட்டது. “நம்மைச் சுத்தியிருக்கும் உயிரினங்கள் பற்றி நீ கூகுளில் அடிச்சது உயிரோடு வந்துட்டிருக்கு’’ என்றார்.

“என்னது கூகுள்தான் அனுப்பிச்சா? ஒரு நிமிஷம்...” என்ற அமுதன், ஆந்தை அமர்ந்திருந்த கணினியின் எழுத்துப்பலகைக்கு அருகிலிருந்த மௌஸை மெதுவாக அசைத்தான்.

கணினித் திரை ஒளிர்ந்து, ‘நீங்கள் கேட்டபடியே உங்களைச் சுற்றி வாழும் உயிரினங்களை அனுப்பியாயிற்று. இனி, அவை உங்கள் பொறுப்பு” என்றது.

பாட்டியும் அமுதனும் உறைந்துபோய் நின்றார்கள். “இப்போ என்ன பாட்டி பண்றது?”

“என்னை ஏன் கேட்கறே? கூகுள் உன்னத்தானே பார்த்துக்கச் சொல்லுச்சு’’  என்றபடி நழுவப் பார்த்த பாட்டியின் கையைப் பிடித்த அமுதன்.

“பாட்டி, இப்படிச் சொன்னா நான் என்ன செய்வேன்’’ என்று கெஞ்சினான்.

அவற்றைப் பார்த்துக்கொள்ள பாட்டி சம்மதிக்கவே இல்லை. அனைத்தும் அமுதனின் பொறுப்பானது. அனைத்தையும் வீட்டுத் தோட்டத்தில் கொண்டுபோய் விட்டான். தினமும் அவற்றை கவனித்துக்கொள்ள ஆரம்பித்தான். பாட்டியும் ஒவ்வோர் உயிரினம் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.

ஒருமுறை 21 செ.மீ உயரத்தில், உருண்டையான முகத்துடன் குண்டாக இருந்த ஓர் ஆந்தையைப் பார்த்து, “பாட்டி, இதை நான் பார்த்ததே இல்லையே. கூகுள் இதைக் காட்டியிருக்கே!” என்றான்.

“இது புள்ளி ஆந்தை அமுதா. புல்வெளிகளைச் சுத்தியிருக்கும் மரங்களில் பாக்கலாம். பூச்சி, புழுக்களைச் சாப்பிட்டு வாழும். இரவு நேரத்தில்தான் வெளியே சுற்றும். நீ ராத்திரியில் தூங்கிடுவே. அதான் பார்த்ததில்லை” என்றார் பாட்டி.

“பாட்டி, தலைகீழா தொங்குதே அதெல்லாம் வௌவால்கள்தானே? சினிமாவில் காட்டற மாதிரி ரத்தம் குடிக்குமா” எனக் கேட்டான்.

சிரித்த பாட்டி, “அந்த மாதிரி ரத்தம் குடிக்கும் வௌவால்கள் நம் நாட்டில் கிடையாது. இவை பழங்களை மட்டுமே சாப்பிடுற சைவப் பிராணிகள்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை

கீரிப்பிள்ளை, அணில்கள், தவிட்டுக் குருவி, தேன்சிட்டு, நாரைகள், புள்ளி ஆந்தை, கூகை, பழந்தின்னி வௌவால்கள் எனப் பல்வற்றின் மீதான அமுதனின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது.

விடுமுறை முடிந்து பள்ளிக்குச் சென்றான்.  ‘நான் பார்த்த உயிரினங்கள்’ என்ற தலைப்பில் அவற்றைப் பற்றிப் பேசினான். அன்று மாலை வீட்டுவந்த அமுதன், நேராகத் தோட்டத்துக்குச் சென்றான். ஆந்தைகள், வௌவால்கள், பறவைகள், கீரிப்பிள்ளைகள் என்று எதையுமே காணோம். ஒன்றிரண்டு அணில்களும், சில சிட்டுக்குருவிகளுமே திரிந்துகொண்டிருந்தன.

வீட்டுக்குள் ஓடிய அமுதன், “பாட்டி கூகுள் கொடுத்த பறவைங்கள் எங்கே போச்சு?” எனக் கவலையுடன் கேட்டான்.

“மதியமே  எங்கயோ போயிடுச்சு. கூகுள்கிட்ட நீ என்ன கேட்டே? புராஜெட்டுக்காக உன்னைச் சுற்றியிருக்கும் உயிரினங்கள் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு.   அந்த வேலை முடிஞ்சதும் போயிருச்சு. நீ நிஜமாகவே அவற்றை நேசிச்சுப் பார்த்துக்க நினைச்சா அவை திரும்ப வரும். நீ கொஞ்சம் தேடினாலே போதும்’’ என்றார் பாட்டி.

அன்றிலிருந்து அமுதன் கணினி,  கைபேசியிடம் மொத்த நேரத்தையும் வீணாக்குவதில்லை. புதுப்புது உயிரினங்களைத் தேடிப் பயணிக்கத் தொடங்கினான். அவன் நண்பர்களும் சேர்ந்துகொண்டனர். மிகச் சீக்கிரமே அவனைச் சுற்றி உயிரினங்கள் உற்சாகமாக உலாவின.

அமுதன் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையைத் தேடிப் பயணித்துக் கொண்டேயிருக்கிறான்.

- கே.சுபகுணம், ஓவியம்: ரமணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism