
மேஜிக்... மிரட்டல்... மிர்த்திலேஷ்!
“ஸ்டூடன்ட்ஸ்... பாடம் நடத்துவதற்கு முன்னாடி ஒரு மேஜிக் பார்க்கலாமா?” என்று டீச்சர் கேட்டதும், மாணவர்களிடம் உற்சாகம். மிரித்திலேஷ் சிரித்த முகத்துடன் வந்து, காலியான பெட்டியைக் காட்டிவிட்டு, மேஜிக்கில் 500 ரூபாய் நோட்டு எடுக்கிறார்.
சென்னை, மேல் அயனம்பாக்கம், வேலம்மாள் வித்யாலயா பள்ளியில்தான் இந்த உற்சாகம். அதே பள்ளியின் 7-ம் வகுப்பு மிர்த்திலேஷ், மேஜிக்கில் சாதனை படைத்து வருகிறார்.
“சின்ன வயசிலேருந்தே மேஜிக் பிடிக்கும். மேஜிக் மேன் அருண் மாஸ்டரிடம் கத்துக்க ஆரம்பிச்சேன். மைண்ட் ரீடிங்கும் பழகினேன். இப்போ அதைச் செய்துபார்ப்போமா?” என்றபடி, தன் கையிலிருந்து சீட்டுக்கட்டிலிருந்து, ஒரு சீட்டை எடுக்கச் சொன்னார்.மறைத்து எடுத்தும், மூன்று கேள்விகளைக் கேட்டு, அந்தக் கார்டை மிகச்சரியாக டைமண்ட் 2 எனக் கண்டுபிடித்துவிட்டார்.
6 வயதாக இருக்கும்போதே, 3 நிமிடத்தில் 19 மேஜிக் டிரிக் செய்து, ‘தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்டு யங்கஸ்ட் மெஜிஷியன்’ என முத்திரைப் பதித்தவர். இந்த ஆண்டு, தாய்லாந்தில் நடந்த சர்வதேச மேஜிக் எக்ஸ்ட்ராவென்ஸா போட்டியின் மென்டலிசம் பிரிவில், வெள்ளிப் பதக்கம் தட்டிவந்திருக்கிறார்.

“தாய்லாந்தில் நிறைய மேஜிக்ஸ் பார்த்தேன். ஜேம்ஸ் பாண்ட் வேஷம் போட்ட ஒருவர், கையில் உள்ள துப்பாக்கியையே மறையவெச்சார்” என்கிற மிர்த்திலேஷ் கண்கள் விரிகின்றன.
பயிற்சியாளர் அருண் லோகநாதன், “மேஜிக் செய்றதைப் போலவே, எப்படிச் செய்தோம்னு யாருக்கும் சொல்லாமல் இருப்பதும் முக்கியம். மிர்த்திலேஷ், சின்ன வயசிலிருந்து அந்த பிராமிஸை மீறவே இல்லை’’ என்கிறார் பெருமையாக.
“ ‘பசங்க 2’ படத்தில் மேஜிக் செய்யும் பையனாகவே நடித்தான். ‘சீம ராஜா’ படத்துக்கான டிவி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனிடம் மேஜிக் செய்துகாட்டி அசத்தினான்’’ என்கிறார் அப்பா தன்ராஜ்.
மேஜிக் மட்டுமின்றி, செஸ், யோகாவிலும் வெற்றிகளால் மாயாஜாலம் செய்றார் மிர்த்திலேஷ்!
- விஷ்ணுபுரம் சரவணன், படங்கள்: ப.சரவணக்குமார்