கட்டுரைகள்
Published:Updated:

லெகோ ராஜ்ஜியம்

லெகோ ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
லெகோ ராஜ்ஜியம்

லெகோ ராஜ்ஜியம்

லெகோ விளையாட்டுப் பொருள்களை மையமாகவைத்து வந்திருக்கும் நான்காவது படம்... முதல் படமான ‘தி லெகோ மூவி'யின் நேரடித் தொடர்ச்சியாக வந்திருக்கிறது, ‘தி லெகோ மூவி 2: தி செகண்ட் பார்ட்'.

தி லெகோ மூவி 2: தி செகண்ட் பார்ட்

ஃபின் என்ற சிறுவனின் விளையாட்டு உலகில், அவனது கற்பனையில் 5 வருடங்கள் கழித்து நடக்கிறது இந்தக் கதை. ஃபின்னுக்கு லெகோ ப்ரிக்குகள் என்றால், அவன் தங்கை பியாங்காவுக்கு உருவத்தில் பெரிதான, விளையாட ஏதுவான ‘ட்யூப்லோ' வகை ப்ரிக்குகள் மூலம் செய்யப்பட்ட பொம்மைகள். ஃபின்னின் லெகோ உலகில் ஏலியன்களின் தொடர் தாக்குதலால், ப்ரிக்ஸ்பர்க் நகரம் அழிந்தேபோகிறது. ஒன்றுக்கும் உதவாத நிலத்தில் மிகவும் கஷ்டமான வாழ்க்கையை அந்த மக்கள் வாழ்கிறார்கள்.

லெகோ ராஜ்ஜியம்

அப்போது ட்யூப்லோ ஆர்மியின் ஜெனரல், சிஸ்டர் கேலக்சியில் நடக்கும் திருமண விழாவுக்கு ப்ரிக்ஸ்பர்க் தலைவர்களை அழைத்துப்போக வருகிறார். பேட்மேன், எம்மட்டின் கேர்ள் ஃப்ரெண்ட் லூசி என்கிற வைல்டு ஸ்டெய்ல் உள்ளிட்ட சிலர் சிஸ்டர் கேலக்ஸிக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர். அவர்களைக் காப்பாற்ற முதல் பாகத்தின் நாயகனான எம்மட் பின்தொடர்கிறான்.

சிஸ்டர் கேலக்ஸியின் ராணி தனக்குத் தீய எண்ணங்கள் எதுவும் கிடையாது என்றும், தனக்கும் பேட்மேனுக்கும் நடக்கப்போகும் திருமணத்துக்கு எல்லோரும் வாழ்த்த வேண்டும் என்றும் விரும்புகிறாள். வந்தவர்களை தன் வழிக்குக் கொண்டுவர, அவர்களுக்கு மியூசிக் தெரபி அளிக்கிறாள். இதனிடையே எம்மட்டை விபத்திலிருந்து காப்பாற்றும் ரெக்ஸ், தன் டைனோசர் படையுடன் எம்மட்டுக்கு உதவ எத்தனிக்கிறான். இந்த ரெக்ஸ் என்ற அடாவடி ஆள், எம்மட்டின் எதிர்கால வெர்சன் என்று எம்மட்டுக்குப் புரிகிறது. சிஸ்டர் கேலக்ஸி ராணியின் நிஜமான விருப்பம் எந்தவித தீய எண்ணங்களும் இல்லாதது என்று லூசிக்குப் புரிகிறது.

ஆனால், இதெல்லாம் மிகத் தாமதமாகத்தான் தெரிகிறது. பேட்மேன் உள்ளிட்டவர்களைக் காப்பாற்ற ஏற்கெனவே அதிரடி  திட்டம் ஒன்றைப்   போட்டுவிட்டார்கள். அந்தத் திட்டத்தை நிறுத்தி, நிஜ எதிரியான ரெக்ஸை சரிக்கட்ட வேண்டும். பிறகு? வழக்கம்போல சுபம்தான்!

நிஜ உலகின் கதை

சரி, நிஜ உலகில் கதைச் சொல்லிகளான ஃபின்னும் பியாங்காவும் இதில் என்ன செய்கிறார்கள்? பியாங்காவுக்கு தன் அண்ணனுடன் லெகோ விளையாட்டு விளையாட ஆசை.

லெகோ ராஜ்ஜியம்

ஆனால், பியாங்கா தன் லெகோ பொருள்களை எடுத்துச்செல்ல வந்தவள் என்றே ஃபின் நினைக்கிறான். இதனால்தான் இத்தனை குழப்பங்களும். ஃபின்னின் லெகோ உலகின் கதையும், மேல் மாடியில் பியாங்கா கட்டமைக்கும் சிஸ்டர் கேலக்ஸி கதையும் ஒன்றுக்கொன்று குறுக்கீடுவதுதான் மொத்தப் படமும். இறுதியில் தன் தங்கையின் பாசத்தை உணரும் ஃபின், அவளுடன் ஒன்றாக விளையாட ஆரம்பிக்கிறான். 

என்ன ஸ்பெஷல்?

முதல் பாகத்தைப் போலவே இதிலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், DC காமிக்ஸின் பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர்வுமன், க்ரீன் லேன்டர்ன் என அனைவரும் வருகிறார்கள். லெகோ பேட்மேன் நக்கல், நையாண்டியாக கலாய்க்கிறான். எம்மட்டுக்கு வாய்ஸ் கொடுத்திருப்பது,  ‘ஜூராசிக் வேர்ல்டு’ புகழ், க்ரிஸ் பிராட். அவரின் இன்னொரு வெர்ஷனுக்கு ரெக்ஸ் என்று பெயரிட்டு டைனோசர் படைகளுடன் வருவதுபோல காட்டியிருக்கின்றனர். சென்ற பாகம் போலவே எண்ணற்ற பாடல்கள் கதையோடு ஒன்றி வருகின்றன.

நிஜ உலகில் நடக்கும் அரசியல் காமெடிகள், சிறுமி என்றால் இப்படிதான், அவளுக்கான பொம்மைகள் இது மட்டும்தான் போன்ற எழுதப்படாத விதிகளைக் கிண்டல் செய்வது, எல்லோரையும் ஒரே தராசில் வைத்து அணுகக்கூடாது, நல்லவன், கெட்டவன் என்ற வரையறைகளை நாமே வகுத்துக்கொள்ள கூடாது எனப் பல நல்ல விஷயங்களைப் பேசுகிறது படம். 

- ர.சீனிவாசன்