Published:Updated:

குறி தப்பிய திட்டம்

ஷெர்லக் ஷேமர், ஓவியங்கள்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி

து பழைய காலத்தில் நடந்த ஒரு சம்பவம். சுந்தரம் ஒரு பெரிய நிறுவனத்தில் கேஷியராக இருந்தார். நிறுவனக் கட்டடத்தின் பணப் பெட்டி இருக்கும் அறைக்கு அருகிலேயே குடும்பத்துடன் வசித்துக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த நிறுவனம் சுந்தரத்தை முழுமையாக நம்பியது. எனவேதான், நிறுவனத்துக்குள்ளேயே இடம் கொடுத்திருந்தது. இரவுக் காவலரும் அங்கில்லை. சுந்தரமும் பல ஆண்டுகளாக உழைத்து, விசுவாசி என்று பெயர் வாங்கியிருந்தார். அத்தகைய சுந்தரம், ஒரு திட்டம் தீட்டினார்.

குறி தப்பிய திட்டம்

ஒரு வார இறுதி. வெள்ளிக்கிழமை மாலை, தன் மனைவியையும் மகன் சுரேஷ் மற்றும் மகள் சுருதியையும் அவர்களின் பாட்டி வீட்டுக்கு, விடுமுறையை சந்தோஷமாகக் கழித்துவிட்டு வருமாறு அனுப்பிவைத்தார்.

மறுநாள் விடுமுறையின் மாலை நேரம்... அலுவலகத்தின் பணப் பெட்டியிலிருந்து 1 லட்சத்து 50,000 ரூபாயை எடுத்துக்கொண்டார். அந்த ஊரில் இருந்த பிரபலமான சூதாட்ட விடுதிக்குப் போனார். வெறி கொண்டவரைப் போல் சூதாட்டத்தில் ஈடுபட்டார். திரும்பத் திரும்ப தோல்வியே கிடைத்தது. தான் கொண்டுசென்ற பணம் அனைத்தையும் இழந்துவிட்டார்.

எப்படியும் இரு மடங்காகச் சம்பாதித்து திருப்பி வைத்துவிடலாம் என்று நினைத்திருந்தார். ஒருவேளை, தோற்றுவிட்டாலும் கவலையே இல்லை.

குறி தப்பிய திட்டம்

காரணம், ஏற்கெனவே மனதில் ஒரு திட்டத்தினை வகுத்திருந்தார் சுந்தரம். அதைச் செயல்படுத்துவது என முடிவுசெய்தார்.

இரவு வீடு (அலுவலகம்) திரும்பியவர், சரக்குப் பகுதியில் இருந்த ஒரு சிறு கடப்பாரையால் பணப் பெட்டகத்தை உடைத்தார். பிறகு, மேசை இழுப்பறைகளில் இருந்தவற்றை எல்லாம் இழுத்துக் கீழே இறைத்தார்.

அலமாரிகளில் வைத்திருந்த  குறிப்பேடுகளையும் சரித்துப் போட்டார். பீரோவில் இருந்த பொருள்களை எடுத்து தரையில் வீசினார். தொலைபேசியை இணைத்திருந்த ஒயரைப் பிடுங்கி எறிந்தார்.

இதையெல்லாம் கையுறைகள் அணிந்து செய்தார் சுந்தரம். தவிர, முன்னமேயே ஒரு ஜோடி காலணிகளைத் தயாரித்து வைத்திருந்தார். அவர் காலுக்குப் பொருந்தாத அளவில் பெரியதாக இருந்த காலணிகள். அவற்றை அணிந்துகொண்டார்.

காலணிகளின் அடிப்பகுதிகள் அழுத்தம் திருத்தமாக, சுவடுகளை ஏற்படுத்தக் கூடியனவாக இருந்தன. எல்லா விளக்குகளையும் அணைத்தார். தோட்டத்தை நோக்கிப் போனார். அங்கே அங்கும் இங்குமாக நடந்து, சுவடுகளை ஏற்படுத்தினார். பிறகு, ஜன்னல் கதவு ஒன்றை உடைத்து, அந்தக் காலணிகளை அணிந்த நிலையிலேயே, ஜன்னலின் வழியாக வீட்டுக்குள் புகுந்தார். வழியெல்லாம் தோட்டத்தில் மிதித்த மண்ணோடு கூடிய காலடித் தடங்கள் பதிந்தன.

ஏற்கெனவே உடைத்திருந்த பணப் பெட்டகம் வரை நடந்துபோனார். சகதியும் காலடிச் சுவடும் அங்கே பதிந்தன. அவை, போதுமான அளவுக்கு இருக்கின்றனவா என உறுதி செய்துகொண்டார்.

வந்த வழியே திரும்பிப் போனார். காலணிகளைக் கழற்றிவிட்டு, சாக்ஸ் காலோடு திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்தார். உள்ளிருந்து ஒரு கூர்மையான கத்தியை எடுத்து, காலணிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கினார். மிகச் சிறிய துண்டுகள். அவற்றை, வெஸ்டர்ன் டாய்லெட்டில் போட்டு தண்ணீரை இழுத்துவிட்டார். அத்தனை துண்டுகளும் தண்ணீருடன் சுழன்று சுழன்று சென்று மறைந்தன.

இவ்வளவும் நடந்து முடிய, இரவு 11 மணி ஆகிவிட்டது. சுந்தரம் முதல் தளத்துக்குப் போனார். இரவு உடை அணிந்துகொண்டு தன் படுக்கையில் படுத்தார். மீண்டும் எழுந்து படுக்கையின் அருகில் இருந்த மேசையைத் திறந்து, தன் கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டார்.

வெறும் கால்களில் நடந்து கீழே இறங்கிச் சென்றார். படிக்கட்டைப் பார்த்து மூன்று முறை சுட்டார். 120 விநாடிகள் கழித்து, படிக்கட்டிலிருந்து ஹால் பக்கமாகப் பார்த்து இரண்டு முறை சுட்டார். இப்போது மணி 11:08.

குறி தப்பிய திட்டம்

துப்பாக்கிச் சத்தம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கேட்டிருக்கும் என நினைத்தார். தான் அணிந்திருந்த உடைகளைக் கசக்கிக்கொண்டார். வாஷ்பேசின் அருகே சென்று, கையில் தண்ணீரைப் பிடித்து தன் உடம்பில் முன்னும் பின்னுமாகத் தெளித்துக்கொண்டார்.

அவர் எதிர்பார்த்தது போலவே நடந்தது. 11 மணி 17 நிமிடங்கள் என்று கடிகாரம் சொன்னபோது, போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி கேட்டது. பக்கத்து வீட்டுக்காரர்கள் தகவல் அளித்துள்ளனர். சில நிமிடங்களில் மூன்று காவல் அதிகாரிகள், சமையலறைக் கதவு வழியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.

போலீஸ் விசாரணையில் சுந்தரம் சொன்ன தகவல்களைத் தொகுத்தால் கீழ்க்கண்ட மாதிரி அமையும்.

“என்னால் நிறைய விவரங்கள் கொடுக்க முடியவில்லை. ஏதோ சத்தம் கேட்டு விழித்தேன். தொடர்ந்து தரைத் தளத்தில் சத்தம் கேட்டது. என் கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டேன். கீழே இறங்கி வந்தேன். பாதி இறங்கும்போதே, ஒரு நிழல் உருவத்தைப் பார்த்தேன்.

‘அப்படியே நில். இல்லை என்றால் சுடுவேன்’ என்று கத்தினேன். ஆனால், அந்த உருவம் கொஞ்சமும் பதற்றப்படவிலை. என்னை நோக்கிச் சுட ஆரம்பித்தது. மூன்று முறை சுட்டது. உஷாராகி பதுங்கிய நான், பதிலுக்கு இரண்டு முறை அந்த உருவத்தைப் பார்த்துச் சுட்டேன். அந்த உருவம், சமையலறைக்குள் நுழைந்து, சமையலறைக் கதவு வழியாகவே மறைந்துவிட்டது. போலீஸைக் கூப்பிட போன் செய்யப் போனால், அது துண்டிக்கப்பட்டிருந்தது. பணப் பெட்டகம் உடைக்கப்பட்டிருந்தது. பதற்றத்துடன் கணக்குப் பார்த்தேன். 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், 10 லட்சம் பெறுமானமுள்ள பத்திரங்களும் திருட்டுப் போயிருப்பதைப் பார்த்தேன்.”

மேற்கண்ட வாக்குமூலத்தை தடுமாற்றமின்றி சொல்லிவிட்டு, அதை எழுதியும் கொடுத்தார் சுந்தரம்.

தடயவியல் நிபுணர், காவல் அதிகாரியின் அருகில் வந்தார். “சார், குற்றவாளி சமையலறை வழியாக நுழைந்திருக்கிறான். காலடித் தடங்களைச் சேகரித்துக்கொண்டோம். சில கைரேகைகளும் உள்ளன. அவை குடும்பத்தாரின் கைரேகைகளைத் தாண்டி இருக்கிறதா என்பதை இனிமேல்தான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

காவல் அதிகாரி தலையாட்டிக்கொண்டார்.  தடய அறிவியல் நிபுணர், சுவரில் பதிந்திருந்த தோட்டாக்களைத் தோண்டி எடுப்பதில் ஈடுபட்டார். சுமார் 12 மணி 45 நிமிடத்துக்குப் புறப்பட்டு அவர் போய்விட்டார்.

மறுநாள், ஞாயிறு காலை 11 மணிக்கு மறுபடியும் வந்தார் காவல் அதிகாரி.

“கிளம்புங்க. போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சு உங்க சேட்டைகளைப் பத்தி விசாரிக்கணும்” என்றார். அவர் குரலில் கடுமை இருந்தது.

‘அடடா... எங்கே தவறு செய்தோம்’ என்று யோசிக்க ஆரம்பித்தார் சுந்தரம்.

அவரது திட்டத்தில் ஏற்பட்ட தப்பை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

குறி தப்பிய திட்டம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு