Election bannerElection banner
Published:Updated:

``சீரியல்ல நீங்க ரசிக்குற குழந்தையின் வாய்ஸ் என்னோடது!''- டப்பிங்கில் அசத்தும் பொன்னி

``சீரியல்ல நீங்க ரசிக்குற குழந்தையின் வாய்ஸ் என்னோடது!''- டப்பிங்கில் அசத்தும் பொன்னி
``சீரியல்ல நீங்க ரசிக்குற குழந்தையின் வாய்ஸ் என்னோடது!''- டப்பிங்கில் அசத்தும் பொன்னி

"`வம்சம்' சீரியலில் பொன்னியின் வாய்ஸ் ஹிட். உடனே, அடுத்தடுத்து `கல்யாணபரிசு', `'பிரியமானவளே', `சுமங்கலி', `நிறம்மாறாத பூக்கள்', `மகாலட்சுமி', `லட்சுமி ஸ்டோர்ஸ்' போன்ற சீரியல்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு வந்துச்சு."

"என்னுடைய குரலை டிவியில் கேட்டு இருக்கீங்களா அக்கா?" என மழலை கொஞ்ச பேசுகிறாள் ஆறு வயதுச் சிறுமி பொன்னி நாச்சியார். சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்ஸ் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட்டான பொன்னியுடன் ஒரு கலகல சாட்!

``என்னோட அப்பா ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். வீட்டில் நாங்க டி.வி பார்க்கும் போது ஆடியோவை நிறுத்திட்டு, அந்த டயலாக்கை அப்பா பேசி காண்பிப்பாங்க. அதே மாதிரி டோரா, புஜ்ஜி கேரக்டருக்கு நானும் வாய்ஸ் கொடுக்க டிரை பண்ணுவேன். அப்பா சீரியலுக்கு டப்பிங் பேசும்போது நானும் போவேன். அப்பா எப்படி ஏற்ற இறக்கங்களோடு பேசுறாங்கன்னு பார்த்துட்டே இருப்பேன். அப்புறம் நானும் அதுமாதிரியே பேசி பார்ப்பேன். இப்படிதான் எனக்கு டப்பிங் ஆர்வம் வந்துச்சு!" என அப்பாவைப் பார்த்து பொன்னி கண்ணடிக்க, பேச ஆரம்பித்தார் அகரன் வெங்கட்.

``எனக்கு தமிழ்னா உயிர். வீடு தமிழ்ப் புத்தகத்தால நிறைஞ்சிருக்கும்னா பார்த்துக்கோங்க. என் பொண்ணுக்கு அவளோட ரெண்டு வயசிலிருந்தே திருக்குறள், பாரதியார் பாடல்கள் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். ஒரு முறை சொல்லிக் கொடுக்கிறதை அதே ஏற்ற இறக்கங்களோட சொல்லும் கூர்மை பொன்னிக்கு இருந்துச்சு. சில சமயம் பாடல் வரிகளின் அர்த்தத்தை மட்டும் சொல்லிக்கொடுத்தா போதும், அந்தப் பாடலை எப்படிப் பாடுனா நல்லா இருக்கும்னு அவளே பாடி காட்டுவா. தமிழ் உச்சரிப்புகளை ரொம்ப சரியா உச்சரிப்பா. பள்ளி விடுமுறை நாள்களில், நான் டப்பிங் பேசுற இடத்துக்கு கூட்டிட்டுப் போவேன். நான் பேசுறதை கவனிச்சுட்டே இருந்துட்டு, வீட்ல அவங்க அம்மாகிட்ட அதை அப்படியே பேசிக் காண்பிப்பா. `வம்சம்' சீரியலில் நடிச்ச குழந்தைக்கு டப்பிங் பேசுற வாய்ப்பு வந்துச்சு. அப்போ பொன்னிக்கு மூணு வயசுதான். ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கம் இருந்தது. அவளோட ஆர்வத்துக்காக ஓகே சொன்னேன்.

குழந்தைகள் இயல்பா பேசுறதுக்கும்... டப்பிங் பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. வீடியோவில் என்ன முகபாவனை இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி வாய்ஸ்ல ஏற்ற இறக்கத்தை கொண்டு வந்து பேசணும். சின்னச் சின்ன விஷயத்தில்கூட கவனமா இருக்கணும். அவளுக்கு டப்பிங்ல உள்ள அடிப்படையைப் பற்றிச் சொல்லிக்கொடுத்தேன். மைக் முன்னாடி அவ நிக்கிற அந்த முதல் நாள்ல எனக்கு வந்த படபடப்பு இருக்கே... ஆனா, நாங்க எதிர்பார்க்காதபடி கொடுத்த டயலாக்கை ஒரே டேக்கில் பேசி அங்க இருந்த எல்லாரையும்  ஆச்சர்யப்படுத்திட்டா பொன்னி. முதல் முயற்சியிலேயே வீடியோவுக்கும் வாய்ஸ்க்கும் சூப்பரா பொருந்திப்போச்சுனா பார்த்துக்கோங்க.

`வம்சம்' சீரியலில் பொன்னியின் வாய்ஸ் ஹிட். உடனே, அடுத்தடுத்து `கல்யாணபரிசு', `'பிரியமானவளே', `சுமங்கலி', `நிறம்மாறாத பூக்கள்', `மகாலட்சுமி', `லட்சுமி ஸ்டோர்ஸ்' போன்ற சீரியல்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு வந்துச்சு. அவளும் ஆர்வமாக இருந்ததால் நாங்களும் தடுக்கல. மேடம் இப்போ டப்பிங்கில் ரொம்ப பிஸி"என்ற தன் அப்பாவை நிறுத்திப் பேச ஆரம்பிக்கிறார் பொன்னி.

``ஸ்கூல் முடிந்து வந்ததும் படிக்க வேண்டியதையெல்லாம் படிச்சு முடிச்சுட்டு டப்பிங் பேச ரெடி ஆகிருவேன். திரும்பி வந்து ஹோம்வொர்க் எழுதுவேன். அக்கா, ஒண்ணு தெரியுமா... என்னோட க்ளாஸில் நான்தான் டாப்பர். ஒரு நாள் கூட படிக்கிறதுக்கு லீவ் விட்டது கிடையாது அக்கா. அதுமட்டுமல்ல என்னோட அம்மாகிட்ட டெய்லி பரதமும் கத்துக்கிறேன். என்னோட நாட்டியத்தைச் சீக்கிரம் அரங்கேற்றம் பண்ணணும்ங்கிறதுதான் என்னோட இப்போதைய ஆசை. நான் டப்பிங் பேசுகிறதைப் பார்த்துட்டு என்னோட மூணு வயசு தங்கிச்சியும் இப்ப டப்பிங் பேச டிரை பண்றா. சீக்கிரம் அவளுக்கும் கத்துக்கொடுக்கப் போறேன்" எனச் சொல்லும் பொன்னியின் முகத்தில் குழந்தைக்கே உரிய பெருமிதம் பொங்குகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு