Published:Updated:

தாயக்கட்டை... சிவாஜி படம்... கிச்சன் கலாட்டா... எப்படி இருந்த சுட்டிகள் இப்படி ஆகிட்டாங்க!

சமையல், பழைமையின் ரசனை என்பதையெல்லாம் தாண்டி குழந்தை பராமரிப்பு வரை அசத்த ஆரம்பித்துவிட்டார்கள் நம்ம சுட்டிகள்.

``என்னப்பா எல்லா வீட்டிலிருந்தும் சலங்கை சத்தம் கேட்குது?''

``அது சலங்கை சத்தம் இல்லே முருகேசா... தாயக்கட்டை''

இது, `சந்திரமுகி' படத்தின் காட்சியைவைத்து உலாவும் லேட்டஸ்ட் மீம். அந்தச் சலங்கை சத்தத்தில் பாட்டிகளுடன் சேர்ந்து அதிகம் இடம்பெறுவது பேரன், பேத்திகளே.

பின்னே, `தோ கிலோமீட்டர்... தோ கிலோமீட்டர்' மாதிரி, ஊரடங்கு தொடர்ந்துட்டே போனால் வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு என்னதான் செய்யறதாம்? கிராப்ஃட், டிராயிங், பாட்டு, டான்ஸ் எல்லாம் முதல் ரெண்டு வாரத்திலேயே அலுக்க அலுக்க செய்தாச்சு. கலர் பென்சில், ஸ்கெட்ச், பேப்பர் எல்லாம் காலியாயிடுச்சு. `இனி என்ன?' என்கிற கேள்வி வந்ததும், வீட்டில் இருக்கிற பாட்டிகள் பக்கம் பார்வை திரும்பி இருக்கு. எதையாவது புதுசு புதுசா செய்துட்டே இருக்கிறதுதானே குழந்தைகளின் குணம். ``உன்கிட்ட என்ன இருக்கு?' எனக் கேட்டிருக்காங்க.

kids
kids

``வாங்க அருணாச்சலங்களா... நீங்க வருவீங்கன்னு தெரியும்''னு பாட்டிகளும் இத்தனை நாளா பூட்டிவெச்சிருந்த நம்ம ஊர் ஜூமான்ஸி ரகசியப் பெட்டியைத் திறந்து விட்டிருக்காங்க. விளைவு... ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், அவென்சர்ஸ் எனத் திரிந்த பிள்ளைகள் எல்லாம் இப்போ தாயம், பழம், வெட்டு எனப் பழையதைப் புதுசாக்கி உலாவ ஆரம்பிச்சுட்டாங்க. `அலுப்பா இருக்கு. கொஞ்ச நேரம் தூங்கப்போறேன்' எனப் பாட்டிகளே சொன்னாலும் பிள்ளைகள் விடறதா இல்லே. இதோடு மட்டும் நிறுத்திக்கிறாங்களா?

`பேச்சு பேச்சாதான் இருக்கணும்' என்பதுபோல, `விளையாட்டு ஹாலோடு இருக்கணும். கோடு தாண்டி கிச்சனுக்குள்ளே நுழையக் கூடாது' என்ற கட்டளையையும் தூக்கிப் போட்டு பல நாள்கள் ஆயிடுச்சு. இப்போ பல வீடுகளில் கிச்சனில் குட்டீஸ் ராஜ்ஜியம்தான். யூடியூப் பார்த்து டல்கோனா காபியில் ஆரம்பிச்சவங்க, விதவிதமான கேக் வரைக்கும் போயாச்சு. இந்த கிச்சன் விஷயத்தில், உப்புமாவின் நியூ வெர்சன் மாதிரி ஆகிப்போன ஒன்று... ஃப்ரன்ச் ஃப்ரை.

``அது ரொம்ப ஈஸி அங்கிள். உருளைக்கிழங்கை ஸ்லைஸ் பண்ணி, உப்புத் தண்ணியில ஊறவெச்சு எடுத்துக்கணும். அப்புறமா...'' என்று எல்லா வீடுகளிலும் ஒரு செப் தாமு உருவாக்கிவிட்டார்கள்.

இதுவரைக்கும் ஃப்ரன்ச் ஃப்ரை செய்யாத வீடு எது? கை தூக்குங்க பார்க்கலாம்.

roja
roja

``இது ஒரு பக்கம்ன்னா, `இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக எனச் சொல்லிட்டிருந்தவங்க எல்லாம் பழைய படங்களைப் போட ஆரம்பிச்சுட்டாங்க. முன்னாடி என்றைக்காவது ஒருநாள் அந்தப் படங்கள் டிவியில் ஓடினாலே பாய்ஞ்சு வந்து சேனலை மாத்தற பசங்க, இப்போ அதையும் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. என் பொண்ணு ரோஜா, இப்போ சிவாஜி, எம்.ஜி.ஆர் என பிளாக் அண்டு ஒயிட் படங்களின் ரசிகையா மாறிட்டா. ராத்திரியில் முழுப் படத்தையும் பார்த்துட்டுதான் தூங்கப்போறா'' என்கிறார் கவிஞர் ஜான் சுந்தர்.

இன்னும் கொஞ்ச நாள் போனால், பல வீடுகளிலும் சிவாஜி, எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி போன்றவர்களுக்குக் குட்டி ரசிகர் மன்றங்கள் உருவாகி இருந்தா ஆச்சர்யப்படறதுக்கில்லே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அதோடு, பாரம்பர்ய விஷயங்கள் மேலே ரொம்பவும் ஆர்வம் வந்திருக்கு. என் அம்மாகிட்ட பழைய வாழ்க்கை முறைகள், சம்பவங்கள் பற்றி நிறைய நேரம் பேசி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கா ரோஜா. கீரையை மத்துல கடையறதை பேத்திக்குப் பாட்டி சொல்லிக்கொடுக்க, டேப்லட்ல எப்படி படம் பார்க்கணும்னு பாட்டிக்குப் பேத்தி சொல்லிக்கொடுத்திருக்கா'' என்கிறார் ஜான் சுந்தர்.

சமையல், பழைமையின் ரசனை என்பதையெல்லாம் தாண்டி குழந்தை பராமரிப்பு வரை அசத்த ஆரம்பித்துவிட்டார்கள் நம்ம சுட்டிகள்.

uday, udit
uday, udit

``எனக்கு உதய் ஆதித்யா, உதித் ஆதித்யா என ட்வின்ஸ் பசங்க இருக்காங்க. சமீபத்துலதான் பெண் குழந்தை பிறந்தது. என் கணவர் இப்போ வியட்நாம்ல இருக்கார். லாக்டெளன் ஆரம்பிச்ச பிறகு என் பசங்கதான், குழந்தைக்கும் எனக்கும் எல்லாமே செய்யறது. நான் எப்படிச் சமைக்கணும்னு டிப்ஸ் மட்டும் சொல்லிடுவேன். காலையில பிரேக் பாஸ்ட், மதியம் லன்ச் எனப் பசங்களே செய்துடுவாங்க. ஒருமுறை குழந்தையைக் குளிப்பாட்ட சொல்லிக்கொடுத்ததிலிருந்து, தங்கச்சியை அவங்களே குளிப்பாட்ட ஆரம்பிச்சுட்டாங்க. தங்கச்சிக்கு டிரெஸ் மாத்திவிடறது, அவளுக்காக வீட்டுல இருக்கிற தையல் மிஷினில் கர்ச்சீப் தைச்சு கொடுக்கிறதுன்னு பாச வெள்ளம் நான்ஸ்டாப்பாக பாய்ஞ்சு ஓடிட்டிருக்கு'' என்கிறார், சென்னையைச் சேர்ந்த ரம்யா அறிவழகன்.

ஆக, இந்த லாக்டெளன் காலம் முடிந்து பள்ளிக்குப் போகும் நம்ம வீட்டு பிள்ளைகளின் உணவு நேரத்துப் பேச்சாக என்னவெல்லாம் இருக்கும்?

``கத்தரிக்காய் பொரியலில் இவ்வளவு எண்ணெய் விடக்கூடாது. கொஞ்சமா எண்ணெய் விட்டு...''

``என்ன இருந்தாலும் `அன்பே வா' படத்தைவிட, `எங்க வீட்டு பிள்ளை' படம் அவ்வளவு சூப்பர் இல்லை.''

அடடா... கற்பனை செஞ்சு பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு