பொது அறிவு
Published:Updated:

சுட்டி குட்டிக் கதைகள்

சுட்டி குட்டிக் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி குட்டிக் கதைகள்

கோயில் திருவிழாவில் ராட்டினத்தைப் பார்த்து உற்சாகமான தருண், ‘‘அப்பா, ராட்டினத்துல சுத்தலாம்ப்பா’’ என்றான்.

ராட்டினம்

கோயில் திருவிழாவில் ராட்டினத்தைப் பார்த்து உற்சாகமான தருண், ‘‘அப்பா, ராட்டினத்துல சுத்தலாம்ப்பா’’ என்றான்.

‘‘நீ போய் சுற்று. இந்தா காசு’’ என்று 20 ரூபாயைக் கொடுத்த அப்பா, அம்மாவுடன் வேறு பொருள்கள் வாங்குவதில் கவனமானார்.

சற்று நேரத்தில் உற்சாகத்துடன் திரும்பி வந்தான் தருண். ‘‘என்னடா சுத்தினியா... மிச்சம் எங்கே?’’ என்று கேட்டார் அம்மா.

‘‘சரியா போச்சும்மா’’ என்றான்.

சுட்டி குட்டிக் கதைகள்

அப்பா திடுக்கிட்டார். ‘‘தருண், அந்தப் பக்கமா கிராஸ் பண்ணி வந்தப்போ, 10 ரூபாய்னு சொல்றது காதுல விழுந்துச்சு. மறந்துட்டு வந்து பொய் சொல்றியா?’’ என்றார்.

தயங்கிய தருண், ‘‘இ... இல்லேப்பா... ஒரு பையன் தனியா நின்னு ஆசையா பார்த்துட்டிருந்தான். அவனையும் சேர்த்து கூட்டிட்டுப் போனேன்’’ என்றான்.

‘‘நல்ல விஷயம் செஞ்சிருக்கே... அதுக்கு ஏன் மாத்தி சொல்றே? இந்தா, இன்னொரு முறையும் சுத்தலாம்’’ என்று தட்டிக்கொடுத்தார் அப்பா.

- இரா.இரமணன், செம்பட்டி

வல்லவன் ஆயுதம்

‘‘அரவிந்த், நகம் வெட்டச் சொல்லி நேத்தே சொன்னேனில்லே, இன்னும் ஏன் வெட்டலை?’’

இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கோபமாகக் கேட்டார் அம்மா.

நான்காம் வகுப்புப் படிக்கும் அரவிந்த், ‘‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னு மிஸ் சொல்லியிருக்காங்க. அதான், நகங்களை வெட்டாமல் வெச்சிருக்கேன்’’ என்றான் அரவிந்த்.

சுட்டி குட்டிக் கதைகள்

அம்மாவுக்குக் குழப்பம், ‘‘அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? யாருடனாவது சண்டை வந்தால், நகத்தால் கீறலாம்னு வெச்சிருக்கியா என்ன...’’ என்றார் பதற்றமாக.

‘‘இல்லேம்மா... நீ பிஸ்கெட் டப்பாவை டைட்டா மூடி வெச்சுடறே. எனக்கு திறக்கறதுக்குக் கஷ்டமாக இருக்கு. இனிமே நகங்களைப் பயன்படுத்தி ஈஸியா திறக்கலாம்லே’’ என்றான் அரவிந்த்.

அவன் குறும்பில் சிரித்த அம்மா, ‘‘இனிமே டைட்டா மூடலை. முதல்ல, நகங்களை வெட்டு’’ என்று அரவிந்த் தலையைக் கோதிவிட்டார்.

- பவன் பிரசாத், சென்னை-117

சக்சஸ் கனவு

தூங்கி எழுந்ததும் ஓடிவந்த அமுதன், பாட்டியின் கழுத்தை செல்லமாகச் சுற்றிக்கொண்டு, ‘‘பாட்டி... அதிகாலை கனவு பலிக்கும்னு சொல்வியே’’ என்றான்.

‘‘ஆமாம்... அதுக்கு என்ன?’’ என்று கேட்டார் பாட்டி.

‘‘இன்னிக்கு நீ எனக்கு 10 ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுக்கிற மாதிரி கனவு வந்துச்சு. எப்போ வாங்கித் தரே?’’ என்று கேட்டான்.

சுட்டி குட்டிக் கதைகள்

‘இன்னிக்கு லீவு நாள்னு தெரிஞ்சு திட்டம் போடறியா’ என்று நினைத்துக்கொண்ட பாட்டி தொடர்ந்தார்...

‘‘எனக்கும் ஒரு கனவு வந்துச்சே... ஒரேயடியா அவ்வளவு ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதுன்னு ஒன்பது ஐஸ்க்ரீம்களைத் திருப்பிக் கொடுத்துட்டேன்’’ என்றார்.

‘‘ஓகே... என் பிளான் சக்சஸ்! அப்போ, ஒண்ணு வாங்கிக்கொடுங்க’’ என்று துள்ளினான் அமுதன்.

- வே.சாரா, வேலூர்

வாழ்த்துகள்

‘தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா’

‘நன்றி திவ்யா குட்டி’

‘இந்தாங்க சாக்லேட்!’

‘வாவ்... தேங்க்யூ!’

சுட்டி குட்டிக் கதைகள்

‘அப்படியே முத்தமும்’

‘சூப்பர்... சூப்பர்... இந்தா திவ்யா குட்டி என்னோட முத்தமும் ஐஸ்க்ரீமும்!’

‘ஹா... ஹா... முத்தத்துக்கு இந்த எமோஜி இல்லேப்பா, இது வரணும்’ என்று வாட்ஸ் அப்பில் மாற்றி அனுப்பினாள் திவ்யா.

- சி.கார்த்திகேயன், சாத்தூர்