
மரங்களும் இல்லை; ஆற்றில் தண்ணியும் இல்லை. வண்டியில மணல் அள்ளிட்டுப் போறாங்க.
அந்தப் பள்ளியில் பூமிகா ஐந்தாவது படிக்கிறாள். படிப்பிலும் விளையாட்டிலும் படு சுட்டி. அன்று அவளது வகுப்பில் ஓவிய டீச்சர் மாலா, கிராமத்தின் இயற்கை அழகு பற்றிய ஓவியம் வரையச் சொன்னார்.
அனைவரும் கிராமத்து அழகை விதவிதமாக வரைந்து, வண்ணங்களால் அழகூட்டினார்கள். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் வாங்கிப் பார்த்து பாராட்டிய டீச்சர், பூமிகாவின் ஓவியத்தைப் பார்த்ததும் அதிர்ந்தார்.

மரங்களே இல்லாமல் வறண்ட நிலங்கள், மனிதர்களும் ஆடு மாடுகளும் தண்ணீர் இன்றி தவித்து அழுவதுபோல வரைந்திருந்தாள்.
‘‘ஏன் பூமிகா இப்படி வரைஞ்சே? கிராமத்தின் இயற்கை அழகா இது?’’ என்றார் டீச்சர்.
‘‘டீச்சர்... லீவுக்குக் கிராமத்துல இருக்கிற தாத்தா வீட்டுக்குப் போனப்ப அந்தக் கிராமமே இப்படிதான் இருந்துச்சு. மரங்களும் இல்லை; ஆற்றில் தண்ணியும் இல்லை. வண்டியில மணல் அள்ளிட்டுப் போறாங்க. ஊர்மக்கள் தாகம் போக்கிக்கவே ரொம்ப தூரம் போய்த் தண்ணீர் கொண்டுவராங்க...’’
பூமிகாவின் பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாகிவிட்டார் டீச்சர். பின்னர் கரும்பலகையில், ‘மழைநீர் காப்போம்... குடிநீரைச் சேமிப்போம்... இயற்கையைக் காக்க நம் பங்களிப்பை அளிப்போம்’ என்று எழுதினார்.

‘‘மாணவர்களே... இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு வரும் மாணவர்களாவது கற்பனையாக இல்லாமல் நிஜமாகவே பார்த்து வரையும்படி நம் சுற்றுப்புறங்கள் மாற நம்மால் இயன்றதைச் செய்ய உறுதி எடுப்போம்’’ என்றார்.